இலவணங்கள்
கறியுப்பு :- இதற்கு வமனத்தை உண்டாக்கல், விரேசனத்தை யுண்டாக்கல், வீக்கத்தை கரைத்தல், கிருமிகளைக் கொல்லுதல் முதலிய செய்கைகள் உண்டு. இதனை முறைப்படி மருந்தாகச்செய்து அருந்திவர பசியின்மை, அசீரணம், குன்மம் முதலிய பிணிகள் குணமாகும். இதில் 4-5 வராகனெடை நீரில் கரைத்து குடிக்க பேதியாகும். சுமார் 1-பலம் உப்பை தூள் செய்து சம சீதோஷ்ணமுள்ள ஒரு டம்பளர் ஜலத்தில் கரைத்து குடிக்க வாந்தியாகும். இத்தகைய வமனசிகிச்சைகள் சில நஞ்சுப்பொருட்களைத் தின்றவர்களுக்கு வழங்க உதவும். உப்பைக் கரைத்த ஜலத்தை ஆசனவழியில் பீச்ச கிருமிகள் செத்து வெளிப்படும். இச்சலத்தைக் கொண்டு சொறி, சிரங்கு விரணங்களையும் கழுவிவர விரைவில் ஆறும். உப்புத் தூளைக் கொண்டு பல் தேய்த்துவர பல், ஈறு இவைகளின் நோய்கள் குணமாகும். உப்பை நீர் விட்டரைத்து அடிபட்ட வீக்கங்களுக்கு பற்றிட வீக்கங்கள் கரையும்.
கல்லுப்பு :- இதற்கும் வீக்கத்தை கரைத்தல், கிருமிகளைக் கொல்லுதல், மலத்தைப் போக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதை முறைப்படி மருந்தாக செய்து அருந்த பித்தம், குன்மம் முதலியன குணமாகும். இதனுடைய குணமும் ஏறக்குறைய கறியுப்பை யொத்திரிக்கும். இதை தனியாக வழங்குவதில்லை. பெரும்பாலும் பற்ப செந்தூரமாகவோ அல்லது இதர மருந்துகளுடன்
கூட்டியோ வழங்கப்படும்.
இந்துப்பு :- இதற்கு பேதியாக்கும் செய்கையுண்டு. இதனால் மலபந்தம், குன்மம் முதலய பிணிகள் தீரும். இதனைப் பெரும்பாலும் விரேசனத்திற்காகப் பயன்படுத்தப்படும். இதில் சுமார் 2-முதல் 4-வராகனெடை நீரில் கலந்துகொடுக்க இரண்டு மூன்று முறை பேதியாகும். சூரத்து நிலாவாரை, சுக்கு, கடுக்காய் பிஞ்சு ரோஜா மொக்கு, சோம்பு, கொட்டை தீராட்சை இவைகள் சேர்ந்த குடிநீரில் இந்துப்பைச் சேர்த்துக்கொடுக்க நன்கு பேதியாகும். இதனால் மலக்கட்டு, சுரம், வயிற்றுவலி, பித்தத் தலைவலி, நீர்க் கோவை பித்தாதிக்கம் முதலியன குணமாகும்.
வெடியுப்பு :- இதற்கு முக்கியமாக சிறுநீரை பெருக்கல், வியர்வை யுண்டாக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் நீர்கட்டு, சோபை, மகோதரம், குன்மம் முதலியன குணமாகும். ஏழாங்காய்ச்சல் வெடியுப்பு அல்லது முறைப்படி சுத்திசெய்த வெடியுப்பைப் பொடித்து வேளைக்கு 4-5 குன்றி எடை வீதம் தினம் 2-3
வேளையாக நீராகாரம்(கழுநீர்), சோம்புக் குடிநீர் முதலியவற்றில் போட்டுக் கொடுத்துவர வெள்ளை, வெட்டை, நீர்சுருக்கு, சோபை, சுரக்கொதிப்பு முதலியன சாந்தப்படும். வெடியுப்பு பலம் 4, நவாச்சாரம் பலம் 4, இவைகளை நன்கு பொடித்து 2 1/2 ஆழாக்கு ஜலத்
தில் கரைத்து வைத்துக்கொண்டு இதில் ஓர் துணித்துண்டை நனைத்து, நோயுடன் கூடிய கீல்களின் வீக்கம், அடிபட்ட வீக்கம் அண்ட வீக்கம், தலைவலி, முதலியவைகளுக்கு முறையே அவ்வவ் விடங்களில் மேலுக்கு போட்டு, சீலை உலர உலர திரவத்தை விட்டு வர விரைவில் அவ்விடங்களிலுள்ள விரணம், வலி, வீக்கம் முதலியன யாவுங் குணமாகும்.
நவாச்சாரம் :- இதற்கு சிறுநீரைப் பெருக்குஞ் செய்கையுண்டு. இதனால் கல்லடைப்பு, பெருவயிறு, வயிற்றுவலி, வாத நோய் முதலியன குணமாகும். நவாச்சாரத்தைப் பொடித்து ஓர் மண்ணோட்டிலிட்டு அடுப்பிலேற்றிச் சிறு தீயில் சிறிது லேசாக வறுத்து ஈரம் உலர்ந்த பதத்தில் எடுத்து அரைத்து வைத்துக் கொண்டு இதில் வேளைக்கு 3 அல்லது 4 குன்றி எடை வீதம் தினம் இரு வேளையாக நீர்முள்ளி, நெருஞ்சில், சுரைக்கொடி, மூக்காட்டை, சோம்பு முதலியன சேர்ந்தக் குடிநீருடன் சேர்த்துக் கொடுத்துவர நீரடைப்பு, கல்லடைப்பு, சோபை, மகோதரம் முதலியன குணமா கும். மற்றும் இதனை வாதத்தை சமனப்படுத்தும் குடுநீருடன் சேர்த்துக் கொடுத்துவர வாதரோகங்கள் குணமாகும்.
பூநீறு :- இதற்கு சிறு நீரை பெருக்கல், விரேசனமாக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் குன்மம், சூலை, வயிற்றுவலி, முதலியன குணமாகும். ஆனால் இதை தனியாக வழங்குவதில்லை. குன்ம குடோரி முதலிய மருந்துகளில் சேர்த்து வழங்குவதுண்டு.
வளையலுப்பு :- இதற்கு அற்பமாக சிறு நீரை பெருக்கும் செய்கையும், வயிற்றிலுள்ள வாய்வை அகற்றும் செய்கையும் உண்டு. இதனால் பித்தவாய்வு, வயிற்றுவலி, குன்மம், பீலிக நோய் முதலியனகுணமாகும். இதையும் தனியாக வழங்குவதில்லை. குன்மம் முதலிய நோய்கட்கு வழங்கப்படும், சூரணம், மெழுகு முதலிய மருந்துகளில் சேர்த்து வழங்கு வதுண்டு.
அன்னபேதி :- இதற்கு துவற்ப்புச்சுவையினால் மலத்தை கட்டல், விரணத்தை ஆற்றல், பலத்தை தருதல், முதலிய செய்கைகளும் கிருமி நாசினி செய்கையும், இரத்த விரித்தி செய்கையும் உண்டு. இதனால் பேதி, பாண்டு, சோபை, ஈரல் கட்டி, முதலியன குணமாகும். இதனை செந்தூரித்து உள்ளுக்குள் கொடுத்து வர மேற்கூறிய நோய்கள் குணமாகும். இதனை நீர் விட்டரைத்து ஆசனம் வெளித்தள்ளல் முதலியவைகட்கு மேலுக்கு போட சுருங்கி உள்ளுக்குள் போவதுடன் அதில் விரணம் இருப்பின் விரைவில் ஆறும்.
அப்பளகாரம் :- இதற்கு வயிற்றிலுள்ள வாய்வை அகற்றும் செய்கையும் உண்டு. இதனால் பித்தவாய்வு, வயிற்றுவலி, குன்மம், குடல் சூலை, வாதநோய் முதலியன குணமாகும். இதை சுத்திசெய்து திரிகடிபிரமாணம் பழச்சாற்றுடன் தினம் 1 வேளையாக காலையில் 3 நாள் மாதாந்திர சமயத்தில் கொடுத்துவர பெண்களுக்கு காணப்படும் சூதக வயிற்றுவலி குணமாகும்.
கந்தியுப்பு :- இதற்கு வயிற்றிலுள்ள வாய்வை அகற்றும் செய்கையும் உண்டு. இதனால் வயிற்றுவலி, குன்மம், பீலிக நோய், சூலை முதலியனகுணமாகும். கந்தியுப்புடன் இரண்டு பங்கு சோம்பு சூரணஞ்செய்து வேளைக்கு 1/2 தோலா வீதம் தினம் 2 வேளை நீரில்லாவது சோம்புக ்குடிநீரிலாவது கொடுத்துவர குன்மம், சூலை, ஈரல் கட்டி, வீக்கம் முதலியன குணமாகும்.
கடல்நூரை :- இதனால் நேந்திர நோய், செவிநோய், சிரங்கு முதலியன குணமாகும். இதை பன்னீர் விட்டரைத்து கோடைக்கொப்புளம் முதலியவைகட்கு மேலுக்கு பூச குணமாகும்.
படிகாரம் :- இதற்கு துவற்ப்புச்சுவையினால் மலத்தை கட்டல், விரணத்தை ஆற்றல், இரத்தப்போக்கை தடுத்தல் முதலிய செய்கைககள் உண்டு . இதனால் பேதி, சீதபேதி, ரத்தபேதி, உட்சூடு விரணம் முதலியன குணமாகும். படிகாரத்தைப் பொடித்து நசிய மிட நாசியினின்று ரத்தம் வடிதல் நிற்கும். இதைப் பற்பொடி களில் சேர்த்து வழங்க பல்லில் ரத்தம் சீழ்வடிதல் முதலியன குணமாகும். வேலம்பட்டைக் குடிநீருடன் சிறிது படிகாரத் தூளைச்
சேர்த்துக் கரைத்து வாய்கொப்பளிக்க வாய் ரணம், ரசதோஷம் முதலியவற்றால் ஏற்பட்ட வாய் ரணம் முதலியன குணமாகும். இதைப் பொரித்து அரைத்து வைத்துக்கொண்டு இதில் வேளைக்கு 5-குன்றி எடை வீதம் தனியாகவாவது அல்லது சமன் காசிக்கட்டிச் சூரணத்துடன் சேர்த்தாவது தினம் 2-3 வேளை வீதம் கொடுத்துவர சீதபேதி, ரத்தபேதி, பெருன்பாடு முதலியன குணமாகும். பொரித்த படிகாரத்தை வேளைக்கு 2-3 குன்றி வீதம் தினம் இரு வேளை வெண்ணெயில் கொடுத்துவர வெள்ளை, வெட்டைச்சூடு, நீர் சுருக்கு, உஷ்ண வயிற்றுவலி முதலியன குணமாகும்.
வெங்காரம் :- இதற்கு அற்ப மூத்திரப்பெருக்கி செய்கையும் ருதுவை யுண்டாக்குஞ் செய்கையும் உண்டு. இதனால் சொறி சிரங்கு, புண், குன்மம், மூத்திரகிரிச்சரம், கபாதிக்கம், இரத்தமூலம், வாதம் முதலியன குணமாகும். இதைப் பொடித்து ஓர் புதுச்சட்டியிலிட்டு அடுப்பிலேற்றி எரித்துவர பூத்துவரும். நன்றாக பூத்தபின்பு கீழிறக்கி ஆறவைத்து கல்வத்திலிட்டு நன்கு அரைத்து வைத்துக்கொள்க. இதில் வேளைக்கு 2-3 எடை குன்றி வீதம் தினம் இரு வேளையாக வெண்ணெயில் கொடுத்துவர நீர்சுருக்கு, வயிற்றுவலி, உஷ்ண இருமல் முதலியன குணமாகும். இதில் 5 முதல் 10 குன்றி எடை இளநீர் சோம்புக் குடிநீர் முதலியவற்றில் கொடுக்க நீர்க்கட்டு குணமாகும். பொரித்த வெங்காரத்தை தேன்விட்டுக்
குழைத்து நா, உதடு, தொண்டை முதலிய விடங்களில் காணும் விரணங்களுக்கு பூசிவர விரைவில் ஆறும். பொரித்த வெங்காரத்தை தேங்காயெண்ணெய் விட்டுக் குழைத்து சொறி சிரங்கு விரணங்கட்குப் பூசிவர விரைவில் ஆறும்.
சீவப் பொருட்கள்
அம்பர் :- இதனால் சுக்கிலவிருத்தி, தேஜசு, உற்சாகம் உண்டாகும். புண் கரப்பான் இவைகள் ஆறும். இதனை பெரும்பாலும் தாதுவிருத்திக்குரிய மாத்திரை லேகியம் முதலியவைகளில் சேர்த்து வழங்குவதுண்டு.
அரக்கு :- இதனால் குட்டம், குன்மம், ரத்தபித்தம், எலும்புருக்கி, விரணம், வாதம், சன்னிபாதம், கபாதிக்கம் முதலியன குணமாகும். கொம்பரக்கை முறைப்படி சுத்திசெய்து பொடித்து வைத்துக்கொண்டு வேளைக்கு 3 1/2 முதல் 5 குன்றி எடை தக்க அனு பானங்களில் கொடுத்துவர ரத்தபித்தம், பெரும்பாடு, நாட்பட்ட அதிசாரம், அதி ஸ்தூலரொகம் முதலியன குணமாகும்.
ஆமையோடு : - இதனால் குழந்தைகட்கு காணப்படும் மாந்த சுரம், பேதி, மூலம், தேகவெப்பம், கட்டி முதலியன குணமாகும். ஆமை ஓட்டை சுத்தி செய்து சிறிது துண்டுகளாக நறுக்கி ஆடாதோடை அல்லது ஊந்தாமணியிலை கற்கத்தினிடையே வைத்து அகலில் அடக்கி சீலைமண் செய்து 50-60 வறட்டியில் புடமிட ஓடுகள் வெந்து வெளுத்திருக்கும். இதைப் பொடித்து கல்வத்திலிட்டு கவசம் செய்து அதே சாற்றில் மீண்டும் அரைத்து வில்லை செய்து உலர்த்தி அகலில்லடக்கி மீண்டும் ஒரு புடமிட்டெடுக்க அல்லது பற்பமாகும். இதை அரைத்து வைத்துக்கொண்டு வேளைக்கு 1-2 குன்றி எடை நெய், வெண்ணெய், அல்லது தங்கானுபானங்களுடன் கொடுத்துவர சீதபேதி, ரத்தபேதி, ரத்தமூலம், ரத்தபித்த நோய்கள், அசீரணபேதி உஷ்ண இருமல் முதலியன குணமாகும்.
மான்கொம்பு :- இதனால் மார்புவலி, கண்ணோய், அஸ்திமேகம் வெட்டை முதலியன குணமாகும். இதை சந்தணக்கல்லில் உரைத்து மார்பில் மேற் பூச மார்புவலி குணமாகும். மான்கொம்புகளை சிறிது துண்டுகளாக நறுக்கி சுத்திசெய்து அகத்தியிலை கற்கத்தினிடையே வைத்து சீலைமண் செய்து புடமிட்டெடுக்க பற்பமாகும். பற்பமாகவிடில் குமரிச்சாறு விட்டரைத்து வில்லை செய்துஉலர்த்தி அகலில்லடக்கி மீண்டும் ஒரு புடமிட்டெடுக்க அல்லதுபற்பமாகும். இதை அரைத்து வைத்துக்கொண்டு வேளைக்கு 1-2 குன்றி எடை நெய், வெண்ணெய், அல்லது தங்கானுபானங்களுடன் கொடுத்துவர வெள்ளை வெட்டை பித்த எரிச்சல் உஷ்ண இருமல் மார்புவலி, இடுப்புவலி முதலியன குணமாகும். 1-2 குன்றி எடை மான்கொம்பு பற்பத்துடன் 1-2 குன்றி எடை பொரித்த வெங்காரமும் சேர்த்து திரிகடிபிரமாணம் திரிகடிச்சூரணத்தில் கலந்து தினம் 2 வேளை வீதம் கொடுத்துவர இருமல் , கஷ்டசுவாசம், மார்புவலி, கை, கால் அசதி, உடல்காங்கை முதலியன குணமாகும்.
கஸ்தூரி :- இது சுரம், ஜன்னி,இசிவு, கபம், தலை நோய் இவைகளைப் போக்கும். நாகவிருத்தி, வன்மை உற்ச்சாகம், தேகசுவசியம் இவைகளை உண்டாக்கும். இதில் 1/4-1/2 குன்றி எடை ஆடாதோடை சுரசத்துடன் சேர்த்து கொடுக்க கபக்கட்டு, சுவாசகாசம், சீதளம் முதலியன குணமாகும். சீதளம் வராமல் இருக்கும் பொருட்டும் மற்றும் சுரம்,கபநோய்கள், விஷபேதி முதலியவற்றில் காணும் அனுபானங்களில் 1/2 குன்றி எடை வீடம் வழங்குவதுண்டு.இரண்டு வராகனெடை கஸ்தூரியுடன் குங்குமப்பூ, கோரோசனம், கிராம்பு, வால்மிளகு, ஏலம், கற்பூரம், சாதிக்காய், சாதிப்பத்திரி, மிளகு, திப்பிலிவகைக்கு ஒரு வராகனெடை வீதம் சேர்த்து கிராம்பு குடிநீர் விட்டு ஒரு ஜாமம் அரைத்து மெழுகு பதத்தில் பயறளவு மாத்திரைகளாகச் செய்து நிழலிலுலர்த்தி வைத்துகொண்டு குழந்தைகட்கு ஒரு மாத்திரையாகவும், பெரியவர்கட்கு 2-3 மாத்திரைகளாகவும் தினம் இரு வேளை வீதம் தாய்ப்பால், தேன் அல்லது தக்க அனு பானங்களில் கொடுத்துவர சுரம், ஜன்னி, ஜலதோஷம், கபக்கட்டு,
தலைவலி முதலியன குணமாகும்.
கோரோசனை :- இதனால் பித்தகோபம், வாதபித்தம், மேக வெட்டை, குழந்தைகட்கு காணும் மாந்தம், சிலேஷ்மாதிக்கம், மசூரிகை புண் முதலியன குணமாகும். இதில் 1/8 குன்றி எடை முலைப்பால், தேன், ஆடாதோடை துளசி சுரசம், வெற்றிச்சாறு, முதலிய அனுபானங்களில் குழந்தைகட்குக் கொடுக்க கபக்கட்டு, கக்கிருமல், மாந்தபேதி, கபமாந்தம், பித்தசுரம் முதலியவைகளை குணமாக்கும். இதை இரண்டொருதுளி அண்டத்தைலத்துடன் சேர்த்து வழங்க மாந்தம், இசிவு, வலி, வாய்வு முதலியன குணமாகும். கோரோசனை, சண்பகப்பூ, அதிமதுரம், கோஷ்டம், ஏலம், சகஸ்திர பேதி, மாசிப்பத்திரி, வெட்டிவேர், விலாமிச்சவேர், வகைக்கு வராகனெடை 1 இவைகளை கல்வத்திலிட்டு மாசிப்பத்திரி சாறுவிட்டு ஒரு ஜாமம் அரைத்து உளுந்தளவு மாத்திரைகள் செய்து நிழலி லுலர்த்தி குழந்தைகட்கு வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தினம் 2-3 வேளை முலைப்பால், இஞ்சிச் சாறு துளசிச்சாறு, மாசிப்பத்திரிச்சாறு முதலிய அனுபானங்களில் கொடுத்துவர சுரம், ஜலுப்பு, கபம், இருமல், மாந்தம், பேதி, பல நிறமாகக் கழிதல் தோஷம் முதலியன குணமாகும்.
நண்டுக்குழிநீர் :- இதனால் வாந்தி, விக்கல், தேக வெப்பம், எரிவு முதலியன குணமாகும். வயல்களில் நண்டுகள் இருக்கும் குழியில் உள்ள சலத்தை வடிக்கட்டி வேளைக்கு 1-2 அவுன்சு வீதம் கொடுத்துவர வாந்தி, விக்கல் தீரும்.
கோழிமுட்டை :- இது வாததோஷம், கபப்பிணி, விரணம் இவைகளை நீக்கும். சுக்கிலத்தையும், பலத்தையும் பெருக்கும். இதை அரைவேக்காட்டுடன் சமைத்து சிறிது மிளகுதூள் சேர்த்து சாப்பிட்டுவர உடலுக்கு பலத்தையும் இந்திரிய புஷ்டியையும் உண்டாக்கும். முட்டை வெண்கருவை ஜலத்தில் கலந்து கொடுக்க இரசம், வீரம், பூரம், துருசு, பாஷாணம் முதலிய கொடிய சரக்குகளின் நஞ்சுக்குணம் முறிவதுடன் அதனால் ஏற்பட்ட விரணம் முதலியவைகளும் ஆறும். முட்டை வெண்கருவுடன் சமன் எருக்கம்பால் சேர்த்து அதில் சிறிது வீரமும் சேர்க்க அண்ட எருக்கு ஜெயநீராகும். இது மருந்துகளை நீற்ற பயன்படும். தேவையான அளவு முட்டைகளை அவித்து, அதனிலுள்ள மஞ்சட் கருவைமட்டும் எடுத்து ஓர் கடாயிலிட்டு அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து கரண்டி கொண்டு தேய்த்து வர கருவானது தீய்ந்து கருத்து புகையுடன் தைலங் கக்கும் . அந்தத்தருணம் கீழிறங்கி அழுத்திப்பிழிய தைலம் கிடைக்கும். இதில் 2-3 துளி வீதம் குழந்தைகட்கு தனியாகவாவது அல்லது கரோஜன மாத்திரைகளில் கூட்டியாவது ,தாய்ப்பாலில் கொடுக்க மாந்தம், இசிவு, வாய்வு, கபக்கட்டு, முதலியன குணமாகும். பெரியவர்களுக்கு 5-6 துளி வீதம் நாவில் தடவி வர நாவைப்பற்றிய நோய் குணமாகும்.
தேன் :- இவற்றினால் பித்தம் வாந்தி கபநோய்கள் இரத்தத்திலுள்ள குற்றங்கள் முதலியன குணமாகும். இதற்க்கு முக்குற்றத்தையும் போக்கும் குண்முடையதால் இது மருந்துகளுக்கு முக்கிய அனுபானமாக ஏற்ப்பட்டுள்ளது. இதில்1-2 தேக்கரண்டிவீதம் நீருடன் கலந்து அருந்து வர மலமூத்திரங்களை சரிவர வெளிப்படுத்தி பசிதீபனத்தை உண்டாக்குவதுடன் இரத்தத்திலுள்ள குற்றங்களையும் நீக்கும்.
தேன் மெழுகு :- இதனால் பாரிசவாசம், வீக்கம், வாதநோய், கபநோய், சுக்கில நஷ்டம், தேள்விஷம், பைசாசம், குட்டம், ஆகதுகவிரணம் துஷ்டவிரணம் முதலியன குணமாகும். இதை விஷேசமாக புற சிகிச்சைகளுக்கே பயன்படுத்தப்படும். இதில் வெள்ளைக்குங்கிலியில் 4 வராகனெடை பொடித்துப்போட்டு கிளரி அரைத்து களிம்பு போல் வைத்துக்கொண்டு இதை சீலையில் தடவி புண், விரணம் முதலியவைகளுக்கு மேலுக்குப்பூசி வர விரைவில் குணமாகும். இன்னும் இம் மெழுகைக் கொண்டு மெழுகுத்தைலம் செய்வதுண்டு. இது பாரிசவாதம் முதல் சகலவாத நோய்கட்கும் மேற்பிரயோகமாக வழங்கப்படும் ஓர் சிறந்த மருந்தாகும்.
சங்கு :- இதனால் ரத்தபித்தம், வாததோஷம், இசிவு, கபம் முளைகட்டி, விழிநோய், முதலியன குணமாகும். தீபனமுண்டாகும் இதை உரைத்து கண்கட்டி முதலியவைகளுக்கு பூசுவதுண்டு.இதைசுத்திசெய்து கீழ்காய் நெல்லி கற்கத்துடன் சேர்த்து சீலை மண்
செய்து புடமிட பற்பமாகும். சரிவராவிடில் கீழ்காய் நெல்லி சாறு விட்டரைத்து வில்லை செய்துலர்த்தி அகலிலடக்கி மீண்டுமொரு புடமிட பற்ப்பமாகும். இதில் 2-3 குன்றி எடை கீழ்காய் நெல்லி கற்கத்துடன் அனுபானித்து 3 நாள் உப்பில்லா பத்தியத்துடன் வழங்க காமாலை தீரும். இப்பற்பத்தில் 1-2 குன்றி எடை வீதம் ஆடாதோடை சுரசத்தில் கொடுக்க கபக்கட்டு, இருமல், இரைப்பு முதலியவைகளும்,திரிகடுகு சூரணத்துடன் கொடுக்க குன்மம், சூலை, வாயு, முதலியவைகளும் குணமாகும்.
முத்து :- இதனால் அஸ்திசுரம், சிலேஷ்மம், விழிநோய், வீரிய நாசம், பலவீனம், இளைப்பு, அக்கினிகீட விஷம் முதலியன குணமாகும். இதை முறைப்படி பற்பம்செய்து வழங்க மேற்கண்ட பிணிகள் தீரும். இருதயத்திற்கு பலத்தையும், சுக்கில விருத்தியையும் தைரியத்தையும் தரும்.
முத்துச் சிப்பி :- இதனால் இருமல், ஈளை, காசம், க்ஷயம், மேகக்கட்டி முதலியன குணமாகும். இதனை சுத்திசெய்து பொடித்துக் கல்வத்திலிட்டு ஆடாதோடை, துளசி, கண்டங்கத்திரி இம்மூன்றின் சாறுஞ் சமனெடையாகக் கலந்து விட்டு இரண்டு ஜாமம் அரைத்து வில்லை செய்துலர்த்தி அகலிலடக்கிச் சீலைமண்செய்து 40-50 விரட்டியில் புலமிட பற்பமாகும். இதில் குன்றி எடை வீதம் தினம் இரு வேளையாக அருந்திவர மேற்கூறிய பிணிகள் தீரும். இதை ஆடாதோடை மணப்பாகு, கண்டங்கத்திரிலேகியம், தாளிசாதிசூரணம், முதலிய ஏதேனும் ஓர் அனுபானத்துடன் அருந்திவர விசேஷ
பலனைத் தரும்.
பவனம் :- இதனால் சுரதோஷம், ஈளை, காசம், கபக்கட்டு, தாகம், அழலை, நீர்சுருக்கு, பேதி, விந்துநட்டம் முதலியன குணமாகும். எலுமிச்சம்பழச்சாற்றில் ஊறவைத்து கழுவி சுத்தம் செய்த பவளத்தை குப்பைமேனி இலைக் கற்கத்தினிடையே வைத்து அகலி லடக்கிச் சீலைமண்செய்து 50-60 வறட்டியில் புடமிட பற்பமாகும். நிறம் சரிவர இல்லாவிடில் மீண்டும் மேனிச்சாறு விட்டரைத்து வில்லை செய்துலர்த்தி அகலிடக்கி சீலைமண்செய்து முன்போல் புடமிட பற்பமாகும். அரைத்து வைத்துகொள்க. இதில் வேளைக்கு குன்றி எடை வீதம் தினம் இரு வேளை நெய், பால் அல்லது தக்க அனுபானங்களுடன் கொடுத்துவர இருமல், ஈளை, கபக்கட்டு, கபசுரம், பேதி முதலியன குணமாகும்.
நத்தை :- இதனால் மூலநோய், மலாசயப் பிணிகள் முதலியன தீரும். தேவையான அளவு நத்தைகளை ஓர் சிறு குடுவையிலிட்டு வாய்மூடிச் சீலைசெய்து புடமிட பற்பமாகும். இதில் 1-2 குன்றி எடை வெண்ணெயில் அருந்திவர சீதபேதி, இரத்த மூலம், மூலச்சூடு முதலியன குணமாகும். நத்தை சதையை சமைத்துண்ண மூலம் குணமாகும்.
பூநாகம் :- இதனால் தாகம், சன்னிபாதம், ஊருஸ்தம்பவாதம், வலி, இசிவு, கபநோய் முதலியன குணமாகும். பூநாகமென்ற நாக்குப்பூச்சியை மோரிலிட்டு கழுவி எடுக்க சுத்தியாகும். இத்துடன் சிறிது ஏலரிசி சேர்த்து அரைத்தெடுக்க கற்கம் பாக்களவு வீதம் கொடுத்துவர வலி, இசிவு முதலியன குணமாகும். பூநாகத்துடன் நொச்சியிலை சேர்த்தரைத்து நல்லெண்ணெய்யில் கலந்து தைல பதமாக காய்ச்சி முடித்தைலமாக,வழங்க மண்டை குடைச்சல் கழுத்து நரம்பு இசிவு, சீதள்த்தினால் ஏற்ப்பட்ட தலைவலி, தலைபாரம் முதலியன குணமாகும்.
புற்றாஞ்சோறு :- இதனால் நீரிழிவு, மதுமேகம், தாகம் முதலியன குணமாகும். காது பலப்படும். இதனை நன்கு சூரணித்து வஸ்திராயஞ் செய்து வைத்து கொள்க. இதில் வேளைக்கு 5 குன்றி எடை வீதம் சேர்த்து கலந்து 2 வேளை வீதம் பால் அல்லது மோரில் கலந்து அருந்தி வர
நீரிழிவு மதுமேகம், தாகம், கிரகணி, முதலியன குணமாகும்.
பலகறை :- இதனால் விஷசுரம்,மந்தம், கிரகணி, சூலை, கபம், கபவாதப்பிணிகள் முதலியன குணமாகும். தேவையான அளவு பலகறை களை, பழச்சாற்றில் வைத்து கழுவியுலர்த்த சுத்தியாகும். பிறகு இதை பொரித்து கல்வத்திலிட்டு பழச்சாற்றில் அரைத்து வில்லை செய்து உலர்த்தி அகலில்லடக்கி சீலைமண் செய்து புடமிட பற்பமாகும். இதில் 1/2 குன்றி எடை வீதம் தேனில் அருந்த சுரம், பித்தாதிக்கம், ஈரல்களில் ஏற்ப்படும் வீக்கம், தாகம், பேதி, சூதகவாயு, வயிற்றுவலி, குன்மம்,இருமல் கபம், முதலியன குணமாகும். இதை திரிகடிப்பிரமாண சூரணத்துடன் அருந்த சூதகவாயு, , வயிற்றுவலி, குன்மம்,இருமல் முதலியன குணமாகும் இத்துடன் பொரித்த வெங்காரம் சேர்த்து அருந்தி வர நீர்ச்சுருக்கு
உடல்காங்கை, பித்தஎரிச்சல், முதலியன குணமாகும்.
பால்வகை
முலைப்பால் :-இது திரிதோஷம், சுரசன்னி தோஷம் வெப்பம் ஆகிய இவைகளைப் போக்கும். அஞ்சனத்திற்கும் மருந்தின் அனுபானத்திற்கும் போட்டுவைக்க சுரசன்னி தோஷங்கள் நீங்கும். இத்துடன் சமன் இஞ்சிச்சாறும் , நல்லெண்ணெய்யும் சேர்த்து தைலபதமாக காய்ச்சி சிரசிற்கிட்டு ஸ்தானம் செய்ய சீதளத்தினால் உண்டான தலைவலி கழுத்து நரம்பு இசிவு, நீர்பீனசம் குணமாகும். இன்னும் லிங்கம் இரசசெந்தூரம், முதலிய மருந்துகளை சுத்திசெய்வதற்கும், குழந்தைகட்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு அனுபானமாகவும் உபயோகப்படும்.
பசுவின்பால் :- இது பாலர், கிழவர்,சுரம், சூலைமேகம், முதலிய நோயுள்ளவர்கள், பலயீனர், மெலிந்தவர், முதலியவர்களுக்குச் சிறந்தது. இதனால் உடலுக்கு பலம் ஏற்படும். மற்றும் இரத்த பித்தம், க்ஷயம், மதுமேகம் முதலிய நோயாளர்கட்கு சிறந்த உணவாகும். இதுவும் மருந்துகளுக்கு அனுபானமாக வழங்கப்படுவதுடன், கர்கம், லேகியம், கிருதம், தைலம், முதலியவைகளில் விசேஷமாக சேர்க்கப்படும்.
எருமைப்பால் :- இதனால் பலம் ஏற்படும். ஆனால் திமிர், வாயு, மந்தம் முதலியவைகளை உண்டாக்கும். மருந்தின் குணத்தைக் கெடுக்கும்.
வெள்ளாட்டுப் பால் :- இதனால் வாதபித்த தொந்தம், சுவாசரோகம், சீதபேதி, கபதோஷம், விரணம், வாதவீக்கம், சோபை முதலியன குணமாகும். நல்ல பசியையும், பலத்தையும் தரும். இது பொதுவாக கபரோகிகட்கும், சிறப்பாக க்ஷய நோயினருக்கும் சிறந்தது.
தயிர் மோர் வகை
கடைந்து வெண்ணெய் எடுக்காத தயிருக்கு கோலம் அல்லது ஏட்டுதயிர் என்று பெயர். இது பித்தத்தையும், வாதத்தையும் தணிக்கும். ஜலம் விடாமல் கடைந்து வெண்ணெய் எடுத்த மோருக்கு மதிதமென்று பெயர். இது பித்தத்தையும், வாதத்தையும் தணிக்கும். தயிருக்கு சமன் சலம் சேர்த்துக் கடைந்து வெண்ணெய் எடுத்த மோருக்கு தண்விதமென்று பெயர். இது கபத்தை தணிக்கும். தயிருடன் நாவில் ஒரு பாகம் நீர் சேர்த்து கடைந்தெடுக்க மோருக்கு தக்கிறமென்று பெயர். இதுவே மிகவும் உத்தம்மானது. இதனால் திரிதோஷமும் சமனப்படும். மற்றும் மாந்தக் கினி, அரோசகம், அசீரணம் முதலிய நோய்களைப் போக்கி தேகாரோக்கியத்தைத் தரும். புளிப்பு மோரில் சிறிது இந்துப்பு சேர்த்து அருந்த வாதநோய்கள் குணமாகும். மோரில் சர்க்கரை கலந்து குடிக்க பித்த சம்பந்தமான பிணிகள் குணமாகும். மோரில் திரி கடுகு சூரணத்துடன் சிறிது இந்துப்பும் சேர்த்து வழங்க கபநோய் கள் குணமாகும்.
சாதாரணமாக தயிரைவிட மோரே சிறந்த உணவாகும். தினசரி உணவின் இருதியில் மோரைச் சேர்த்துவர உடலின் சூட்டைத் தணிப்பதுடன் மலசலக்கட்டை நீக்கி உடலை ஆரோக்கிய நிலையில் வைக்கும். இன்னும் இது வயிற்றுவலி, குன்மம், சோகை, காமாலை, பேதி, தாகம், அசீரணம், பித்தாதிக்கம், பாண்டு முதலிய ரோகங்களை உடையவர்களுக்கு சிறந்த பத்திய உணவாகும். பசுவின் மோர் தீபனத்தையும், புத்தியையும் உண்டாக்கும். திரிதோஷங்களையும் போக்கும். எருமையின் மோர் கபம், சோபை இவைகளை உண்டாக்கும். கடினமானது. ஆகையால் இது பத்தியத்திற்குதவாது. வெள்ளாட்டு மோர் திரிதோஷங்களைப் போக்கும். மற்றும் குன்மம், மூலம், பாண்டு, சோபை, கிரகணி முதலிய நோய் கட்கும் சிறந்தது.
வெண்ணெய்
இதில் பசுவின் வெண்ணெயே சிறந்தது. இதனால் கண்ணோய், பிரமேகரோகைம், உட்சூடு முதலியன குணமாகும். தீபாக்கினியும் பலமும் உண்டாகும். இது சிலாசது முதலிய உஷ்ணத்தைத் தணிக்கும் மருந்துகளை வழங்க சிறந்த அனுபானமாகக் கையாளப்படும். இத்துடன் சர்க்கரை சேர்த்து அருந்துதலுக்கு பலத்தை தருவதுடன் உடலின் வெட்டை சூட்டையும், பித்தத்தையும் தணிக்கும். இது கஷயரோகிகட்கு சிறந்ததாகும். இன்னும் இது கண்ணோய்க்குச் செய்யப்படும் மருந்துகளில் சேரும்.
நெய்
பசுவின் நெய்யே சிறந்தது. இது பத்தியங்கட்கு விசேஷமாக வழங்கப்படும். இதனால் அதிசுட்கரோகம், பித்தாதிக்கம், வாந்தி, பிரமேகம், இருமல், எலும்புறுக்கி, மூலநோய் முதலியன குணமாகும் இதனைச் சாதாரணமாக தினசரி அன்னத்துடன் அருந்திவர உடலின் உஷ்ணத்தை தணிப்பதுடன், கொழுப்புகளை வரவொட்டாமல் தடுக்கும். இன்னும் இது மருந்துகளுக்கு அனுபானமாகவும், லேகியம், கிருதம், முதலிய மருந்துகள் செய்வதற்கும் பயன்படும்.
மூத்திரம்
பொதுவாக பசு, எருமை, வெள்ளாடு இவைகளின் மூத்திரத் தால் பாண்டு, சோபை, காமாலை, வீக்கம், மகோதரம், குன்மம், முதலிய பிணிகள் போம். இவற்றுள் கோமூத்திரம் விசேஷமாக பயன்படுத்தப்படும் கோமூத்திரத்தை தனியாகவாவது அல்லது சில கியாழங்களுடனாவது சேர்த்து வழங்க மேற்கூறிய பிணிகள் நீங்கும். இது மண்டூரம், நாபி முதலிய சரக்குகளை சுத்திசெய்ய பயன்படும். கழுதை மூத்திரத்தால் உஷ்ணம் கிருமிநோய், விரணம், கிரந்தி, மேகம், குட்டம், கஷயம், சில்விஷம், அபஸ்மாரம், பாலரோகம் முதலியன குணமாகும். இதனை விசேஷமாக மேகநோய்கட்கு வழங்கப்படும் தைலம் முதலியவைகளில் சேர்த்து செய்வதுண்டு.
நன்றி
ReplyDelete