குல தெய்வ வழிபாடு - 9
9
குலதெய்வங்கள் நகர மற்றும் கிராமப்புறங்களில் ஆலயங்கள் பல்வேறு பெயர்களில் அதாவது கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள், சிறு ஆலயங்கள் போன்றவை மரத்தின் அடிகளில், நதி மற்றும் ஆற்றுப் பகுதி போன்ற இடங்களில் இருந்தன என்றாலும் அந்த தெய்வங்களும், தேவதைகளும் ஒரே தெய்வத்தில் இருந்து அனுப்பப்பட்டவையே. அவை சில குறிப்பிட்ட காரணங்களுக்காக சில இடங்களுக்கு அனுப்பப்பட்டவை. அவை அனைத்தும் ஒரே அளவிலான சக்திகளைக் கொண்டவை. அவை அனைத்துமே தம்மை ஆராதிக்கும் பக்தர்களின் வேண்டுகோட்களை மூல இடத்துக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து அவர்களுக்கு அருள் கிடைக்க வழி செய்பவை என்பதையெல்லாம் முன் பாகங்களில் விளக்கி உள்ளேன்.ஒரு விதத்தில் பார்த்தால் அவை அனைத்துமே குறிப்பிட்ட தெய்வங்களின் நாடி நரம்புகள் என்று கூடக் கூறலாம். எப்படி ஒரு மனித உடம்பில் நரம்புகள் ஒன்றுடன் ஒன்று கலந்து ரத்தத்தை செலுத்தி உயிர் தருகிறதோ, எப்படி மனித உடலில் உள்ள எலும்புகள் இணைந்து செயல் திறனை தருகின்றனவோ அப்படித்தான் தெய்வங்களின் பல்வேறு அவதாரங்களும், கணங்களும் ஒன்று சேர்ந்து உள்ள அமைப்பே தெய்வ அமைப்பாகும்.
அது போலவேதான் மூலக் கடவுள் தன்னுடைய சக்தியை கோடிக்கணக்கான அணுக்களாக மாற்றி பல்வேறு காரணங்களுக்காக பல இடங்களிலும் அனுப்பி இருக்கிறார்கள். அவை அனைத்தும் கலந்ததே ஒரு தெய்வம் ஆகும். ஆகவே தெய்வங்களில் மூல தெய்வம், அவதார தெய்வம், கிராம தெய்வம் என்ற வேறுபாட்டைக் காண்பது தவறாகும். தன்னுடைய இந்த அணுக்களைக் கொண்ட தெய்வம் இன்னின்னவற்றைக் காத்து வரவேண்டும், அதில் மற்றவர்கள் தலையிடக் கூடாது என்பதான கட்டளையுடன் அவை அனுப்பப்படுவதினால் அவற்றை வழிபட்டு வந்திருந்த சந்ததியினர் அவற்றை விட்டு விலகினால், உதாசீனப்படுத்தினால் சொல்லொண்ணாத் துயரங்கள் ஏற்படுகிறது. இதுவே குல தெய்வ வழிபாட்டின் தத்துவம் ஆகும்.
ஒவ்வொரு குல தெய்வமும் குடியிருக்கும் ஆலயத்தையும், வழிபாட்டுத் தலங்களையும் சுற்றி மறைந்து விட்ட பல சித்தர்களும் முனிவர்களும் தேவகணங்களாக மாறியிருந்து மனிதர்களின் கண்களுக்குப் புலப்படாமல் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். அது போல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த இடத்தில் சில ரிஷி முனிவர்கள் தவம் செய்து கொண்டு இருப்பார்கள். அவர்களது உடல் அழிந்திருந்தாலும், அவை அங்கு தவத்தில் இருக்கும். அவர்களுடன் முன்னோர்களில் தெய்வ கணங்களாகி விட்டவர்களும் அங்கிருப்பார்கள். அவர்களும் மற்றவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் அனைவரும் அங்குள்ள தெய்வத்துக்கும், தேவதைகளுக்கும் பரிவார கணங்களாக இருக்குமாறு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளவர்கள். இப்படியாக அந்த இடத்தை சுற்றிக் கொண்டே இருக்கும் அவர்கள் அந்த தெய்வத்தை ஏற்றுக் கொண்டு அங்கு வழிபட வந்துள்ள பக்தர்களுக்கு ஆசிகளை அளித்தபடி இருக்க பக்தர்களின் கர்ம வினைகள் விலகத் துவங்கும்.
கர்ம வினைகள் என்பதற்கு உருவம் உண்டா? அவை எப்படி மனிதர்களைத் தொடர்கின்றன? அவற்றுக்கு அளவு கோல் உள்ளதா?
ஒவ்வொரு மனிதரும் தத்தம் வாழ்க்கையில் பல விதங்களில் பாவங்களை செய்தவாறு இருக்கும்போது அவர்களுக்கு ஏற்ப்படும் ஒவ்வொரு பாவமும் கர்மாவும் சிறிய சிறிய அணுக்களாகி அவரவர் உடலுக்குள் அமர்ந்து கொள்வதினால் லட்ஷக்கணக்கில் அவரவர் உடலில் கர்மாக்களின் அணுக்கள் அமர்ந்துவிடும். அவை வெளியேறும்வரை வாழ்க்கையில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் தடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.
மனிதர்களுக்குள்ளே தீய மற்றும்
நல்ல அணுக்களிடையே நிகழும் போர்
அணுக்கள் என்பதை இறைஜீவன்கள் என்பார்கள். அந்த இரண்டு வித அணுக்களும் மனித எண்ணங்களில் கலந்து விடுவதினால் பாவ அணுக்களை சுமப்பவர்களினால் நல்ல எண்ணங்களை நினைக்க முடியாமல் தீய அணுக்கள் தடை போடுகின்றன. அது அவர்களை மேலும் மேலும் பாபங்களை செய்யத் தூண்டும். அதனால்தான் அந்த தீய எண்ணங்கள் கொண்ட அணுக்களை அகற்றி நல்ல எண்ணங்களைக் கொண்ட அணுக்களை சுமக்க வைக்க ஒவ்வொருவருக்கும் பக்தி, தியானம், யோகா மற்றும் ஆலய வழிபாடு போன்றவற்றை நிர்ணயித்து உள்ளார்கள்.
தர்ம காரியங்களை செய்யாதவர்களின் பாபங்கள் எப்படி விலகுகின்றன? பாவ அணுக்களை சுமந்து கொண்டு செல்லும் பக்தர்கள் பொதுவாக ஆலயங்களுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை மனதார வழிபடும்போது அங்குள்ள தெய்வங்கள் தமது சக்தியினால் பக்தர்களிடம் உள்ள தீய அணுக்களில் ஓரளவு பாவ அணுக்களை வதம் செய்கின்றன. அதனால் தற்காலிகமாக சென்று வழிபடுபவர்களின் மனம் அமைதி அடைகிறது. ஆனால் பூரண அமைதி கிட்டுவதில்லை. அதே சமயத்தில் அந்த வழிபாட்டு தலங்களில் உள்ள தெய்வங்களினால் அவரவருக்கு பூர்வ வினையினால் ஏற்ப்பட்டிருந்த தீய அணுக்களை அழிக்க முடியாது. அதற்காக உள்ளவை அவர்களின் குல தெய்வங்கள். அவற்றை குல தெய்வங்களினால் மட்டுமே செய்ய இயலும்.
மேலே கூறியுள்ளபடி அவரவர் குல தெய்வ ஆலயத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்யும்போது அங்கு கண்களுக்குத் தெரியாமல் உலவிக் கொண்டு இருக்கும் அந்த குல தெய்வத்தின் பரிவார தேவதைகள் மற்றும் சித்தர்களும், அந்தந்த பரம்பரையினரின் இறந்து போன, பாபங்கள் அகன்று தேவ கணமாகிவிட்டிருந்த முன்னோர்களும் அந்த பக்தர்களின் பாவ அணுக்களை தம்மிடம் கிரகித்துக் கொண்டு அவர்களுக்கு நிகழும் தீமைகளைக் குறைக்கும் விதத்தில் தம்மிடம் உள்ள நல்ல அணுக்களை அவர்களுக்குள் செலுத்துகின்றன. அந்த பரிவார கணங்களுக்கும் சித்தர்களுக்கும் ஒவ்வொரு நாளும் இத்தனை இத்தனை பாவ அணுக்களை தம்முள் கிரகித்துக் கொண்டு அவற்றை மீண்டும் நல்ல அணுக்களாக்க மாற்ற இயலும் என்ற சக்தி இருக்கும். அது அவர்களுக்கு தெய்வம் கொடுத்துள்ள வரம்.
ஆகவேதான் ஒருவர் எத்தனை முறை குல தெய்வ ஆலயத்துக்கு சென்று வழிபடுவார்களோ அத்தனைமுறையும் அங்கு கண்களுக்குத் தெரியாமல் சுற்றிக் கொண்டு இருக்கும் அந்தந்த பரம்பரையின் தெய்வ ஆத்மாக்களும், சித்தர்களும் அவர்களிடம் உள்ள பாவ அணுக்களை கிரகித்துக் கொண்டு தம்மிடம் உள்ள நன்மை தரும் அணுக்களை அவர்களுக்குள் அனுப்பி வைப்பதினால், பாவ அணுக்கள் அவர்களிடம் இருந்து குறையத் துவங்கி, நன்மை தரும் அணுக்கள் அவர்கள் உடலில் புகுந்து கொள்ள அவர்களது வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும், வாழ்வில் வளமும் அதிகமாகும். அதனால்தான் குல தெய்வ வழிபாடு முக்கியம் என்பார்கள்.
அப்படி என்றால் மற்ற ஆலயங்களில் சென்று வழிபடும் பக்தர்களுடைய பாபங்கள் அகலுவதில்லையா என்பது அடுத்த கேள்வியாகும். ஒவ்வொருவருக்கும் இரண்டு விதங்களிலான பாபங்கள் உள்ளன. முதலாவது சுமந்து வந்த பாபங்கள், இரண்டாவது உடன் வரும் பாபம் என்பது. சுமந்து வந்த பாபம் என்பது பூர்வஜென்ம வினைப்பயனால் ஏற்படும் நிலை. இரண்டாவது வாழும்போது அவரவர் செய்யும் நன்மை மற்றும் தீமையினால் ஏற்படுபவை. முதல் வகையிலான பாபங்களை அதை அகற்றும் சக்தியுடன் அனுப்பப்பட்டுள்ள குல தெய்வங்களினால் மட்டுமே அகற்ற முடியும் என்பது தெய்வ நியதி. ஆகவே மற்ற ஆலயங்களில் உள்ள எத்தனை சக்தி தெய்வத்தினாலும் அவற்றை நிவர்த்தி செய்ய இயலாது. இப்படிப்பட்ட தெய்வ நியதியினால் உடன் வரும் பாபம், அதாவது அவ்வபோது தாம் செய்யும் தீய காரியங்களினால் தம்மிடம் அமர்ந்துள்ள பாவ அணுக்களை மட்டுமே வழிபடப்படும் பிற தெய்வங்களினால் அகற்ற முடியும். அவர்களினாலும் அவற்றை முற்றிலுமாக அகற்றிக் கொள்ள முடியாது. ஓரளவு மட்டுமே தற்காலிகமாக நிவர்த்தி செய்து கொள்ள முடியும். அவற்றை முற்றிலுமாக விலக்க வேண்டும் எனில், இன்னென்ன பாவ அணுக்களை துரத்த இத்தனைக் காலம் தேவை என்ற கணக்கு இருப்பதினால் வேண்டுதல் செய்ய ஆலயத்துக்கு செல்பவர்களை குறிப்பிட்ட கால வகையிலான விரதங்கள், பூஜைகளை செய்யுமாறு கூறுவார்கள். அதே சமயத்தில் அந்த பாபங்களின் விளைவுகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள குல தெய்வத்தையே நாட வேண்டும்.
அப்படி என்றால் பிற ஆலயங்களில் சென்று வழிபடும் பக்தர்களுடைய பாபங்கள் அகலுவதில்லையா? குல தெய்வத்திடம் சென்று பிரார்த்தனை செய்து கொண்டால் அத்தனை பாப அணுக்களும் ஒரேடியாக அழிந்து விடும் என்பது நிச்சயமானதா? அப்படி என்றால் குல தெய்வ ஆலயம் சென்று வழிபடுபவர்களுக்கும் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்படுகிறதே , அது ஏன்? பிறந்த அனைவருக்குமே குல தெய்வம் உண்டா? அப்படி குல தெய்வம் இல்லாதவர்களின் கர்ம வினைகளை அகற்றுவது யார் ? ஒரு குல தெய்வத்தை எத்தனை குலங்களோ அல்லது பரம்பரையினரோ வழிபட முடியும்? அதற்கு கட்டுப்பாடு உள்ளதா? குல தெய்வம் இல்லாதவர்கள் உண்டா? அவர்கள் யாரை வழிபடுகிறார்கள்? இதை அடுத்த பாகத்தில் விளக்குகிறேன்.
ஒருமுறை கிருஷ்ண பகவான் உத்தவ முனிவருக்கு கூறினார் 'முனிவரே அவரவர் செய்த கர்ம வினையினால் ஏற்படும் பாபங்களை சுமந்து கொண்டு செல்லும் மனிதர்களுடைய கர்ம வினையை அகற்றும் பொறுப்பு அவரவர் சார்ந்த தெய்வங்களுக்கே தரப்பட்டு உள்ளது. அதில் தலையிட மற்ற தெய்வங்களுக்கு அதிகாரம் கிடையாது என்பதினால், மற்ற தெய்வங்கள் அந்த மனிதர்களுடைய வாழ்க்கையில் வெறும் சாட்சி பூதமாக மட்டுமே நின்று கொண்டு இருக்கும்'. அப்படி என்றால் சாட்சி பூதம் என்ற நிலை என்ன?
....தொடரும்
No comments:
Post a Comment