யோகமான அமைப்பு சாதகங்களில் இருந்தும் அவை யோகங்களை தராதது ஏன் ?
"ஒரு மனிதனின் சாதகத்தில் யோகமான அமைப்புகள் பல இருந்தாலும் அவை யோகங்களை தராமல் மாறாக அந்த திசை முழுவதும் கஷ்டங்களை தந்துவிடுகிறது.அதற்கான காரணங்கள் என்ன.
ஒருவருடைய சாதக கட்டத்தில் சுபர்கள் என அழைக்கப்படும் குரு,சுக்கிரன்,வளர்பிறைச் சந்திரன் மற்றும் பாவியோடு சேராத புதன் போன்ற கிரகங்கள் கேந்திர ஸ்தானம் என அழைக்கப்படும் ஒன்று,நான்கு ,ஏழு மற்றும் பத்து போன்ற இடங்களில் அமர்ந்து ஆட்சி ,உச்சம் போன்ற பலமான அமைப்பை பெற்றிருந்தாலும்,சுப ஸ்தான ஆதிபத்தியம் பெற்றிருந்தாலும் அவை "கேந்திராதிபதி தோஷம் பெற்றுவிடுவதால் நன்மை செய்வதற்கு பதிலாக பாதகங்களையே செய்துவிடுகிறது.
இதுபோன்ற அமைப்புடைய கிரகங்கள் மறைவு ஸ்தானங்களான ஆறு,எட்டு ,பணிரெண்டு போன்ற இடங்களிலோ அல்லது திரிகோண ஸ்தானங்களில் அமர்ந்தால்தான் அதன் திசை காலங்களில் நன்மையை செய்துவிடுகிறது.
இதே சுபரான கிரகங்கள் ஒருவரின் சாதகத்தில் உபய ராசிகளான மிதுனம்,கன்னி,தனுசு மற்றும் மீனம் போன்ற ராசிகளை தனது ராசியாக பெற்றவர்களுக்கு தனது ஏழாமிடமான மனைவி ஸ்தானமானது பாதகாதிபதி ,மாரகாதிபதி ஆகிய இரண்டையும் பெற்று இருப்பதால் அவை கேந்திரங்களிலும் அமர்ந்தால் மேலும் கேந்திராதிபதி தோஷத்தையும் பெற்றுவிடுகிறது.எனவே இதன் திசை காலங்களில் உச்சம்,ஆட்சி போன்ற பலமான அமைப்பை பெற்றிருந்தாலும் சாதகங்களை தருவதை விட பாதகங்களை அதிகமாக செய்துவிடுகிறது.எனவே உச்சம்,ஆட்சி போன்ற பலமான அமைப்பை பெற்றிருக்கிறது என மேலோட்டமாக பலன் கூறினால் உங்களது பலன் தவறாக அமைந்துவிட வாய்ப்பு உண்டு.
இதில் நாம் இன்னும் தெரிந்த கொள்ளவேண்டியது என்னவெனில் உபய ராசிக்காரர்களுக்கு மனைவி ஸ்தானம் எனப்படும் ஏழாமாதிபதி ஏழிலே உச்சம் ,ஆட்சி போன்ற அமைப்பை பெறும்போது மேற்கண்ட மூன்று (பாதகாதிபதி,மாரகாதிபதி மற்றும் கேந்திராதிபதி ) விதமான பாதிப்புக்கு உள்ளாகுவதால் இதுபோன்ற அமைப்புடையவர்கள் அவர்களுக்கு வரும் மனைவியால் தொல்லையே வர வாய்ப்பு உண்டு.இதில் லக்கனாதிபதி கெட்டு (பலவீனமடைந்து ) விட்டால் மனைவியின் கருத்தைக்கேட்டு நடக்கும் பொண்டாட்டிதாசர்களாகி
விடுவார்கள்.
மாறாக லக்கனாதிபதியும் உச்சம்,ஆட்சி போன்ற பலமான அமைப்பை பெற்றுவிட்டால் அங்கே "கிரக யுத்தம் " ஏற்பட்டு நீ பெரியவனா ? நான் பெரியவளா ? எனும் கருத்து ஈகோ ஏற்பட வாய்ப்புண்டு.இருவரும் நன்றாக படித்திருப்பார்கள்.
இருப்பினும் கணவன் மனைவி இரண்டு பேருக்கும் இடையே ஒரு அன்யோன்யம் ஏற்பட வாய்ப்பு குறைவு.இதுபோன்ற அமைப்பை தங்களது சாதகங்களில் பெற்றிருப்பவர் நமக்கு சரியான மனைவி அமையாமைக்கு நமது கிரக அமைப்பே காரணம் என ஒருவர் தெரிந்துகொண்டால் அதனால் வரும் மனக்கஷ்டங்களிலிருந்து அலட்டிக்கொள்ளாமல் விதிப்பயன் என எண்ணி தாமரை இலை தண்ணீர் போல பற்றற்ற வாழ்வை மேற்கொள்ளலாம்.
இதே போல ஒருவரது சாதக கட்டத்தில் பாவ கிரகங்கள் என அழைக்கப்படும் சனி,ராகு ,கேது ,பாவியோடு சேர்ந்த புதன் ,தேய்பிறைச் சந்திரன் போன்ற கிரக பகவான்கள் திரிகோணங்களில் அமராமல் கேந்திரங்களில் அமரல் சுபம்.மாறாக திரிகோணங்களில் அமரும்போது அதன் திசை, புத்தி காலங்களில் யோகத்தை செய்யாமல் தொல்லைகளையே வழங்கும்.
அடுத்து மறைவு ஸ்தானம் என அழைக்கப்படும் ஆறு ,எட்டு ,பணிரெண்டு போன்ற ஆதிபத்திய கிரகங்கள் ஒரு ஸ்தானங்களோடு சேரும்போதோ அல்லது பார்வை பெறும்போதோ சேர்ந்திருக்கக்கூடிய கிரகங்கள் தனது சுயத்தன்மையை இழந்து அந்த ஸ்தானம் பாதிக்கப்பட செய்துவிடுகிறது.
மேலும் இந்த மறைவு ஸ்தான கிரகங்களும் இயற்கை பாவ கிரகங்களாக இருந்தால் அந்த ஸ்தான கிரகங்கள் என்னதான் உச்சம் ஆட்சி போன்ற பலமான அமைப்பை பெற்றிருந்தாலும் அதன் பலனை தர விடாமல் செய்துவிடுகிறது.மேலும் இந்த மறைவு ஸ்தானங்களில் சுப ஆதிபத்திய கிரகங்கள் இருந்தாலும் அக்கிரகங்களால் கிடைக்கும் நன்மைகள் கிடைக்க விடாமல் செய்துவிடுகிறது.
லக்கனத்திலோ அல்லது லக்கனாதிபதியோட தொடர்பைப்பெறும்போது அந்த சாதகனை நோய் ,கடன் மற்றும் எதிரி போன்றவர்களால் தொல்லையை தர வைத்துவிடுகிறது.மேலும் சாதகனை லக்கன ஆதிபத்தியத்திற்கு உரிய குணங்களிலிருந்து அவனை மாற்றிவிடுகிறது.இன்னும் பாவியாக இருப்பின் அதிக இன்னல்கள்களை தந்துவிடும்.லக்கனாதிபதி மறைவு ஸ்தானங்களுக்கு சென்று குடியேறினால் சாதகர் சோம்பேறியாகவும்,சுறு சுறுப்பு தன்மை அற்றவராக மாறிவிடுவார்.
இரண்டாமிடம் அதன் அதிபதி தொடர்பு மற்றும் சேர்க்கை பெறின் அவரை தனம்,வாக்கு ,கல்வி ,குடும்பம் மற்றும் நேத்திரம் போன்ற ஸ்தனங்களில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.அந்த ஸ்தான கிரகங்கள் இயற்கை.பாவியாக இருப்பின் சிலருக்கு கால தாமத திருமணத்தை தந்துவிடுகிறது.
இதேபோல மறைவு ஸ்தானத்திற்கு இதன் அதிபதிகள் சென்று மறைந்துவிட்டால் தன யோகம் சிறிதுமின்றி கஷ்டப்படுவார்.குடும்பத்தில் சிறுவயதிலிருந்து தங்காமல் விலகி இருப்பார்.
நான்காமிடம் மற்றும் அதன் அதிபதியோடு மறைவு ஸ்தானதிபதிகள் தொடர்புகொண்டாலோ அல்லது பார்வை செய்தாலோ ஒருவருக்கு தன் சுகம்,தாய் சுகம் ,உயர் கல்வியால் ஏற்படும் சுகம் மற்றும் வீடு ,வண்டி வாகனங்களால் பெறப்படும் சுகங்களை கெடுத்துவிடுவார்.மேலும் ஒருவரின் கற்பு ஸ்தானமாகவும் அமைவதால் அவை ஒருவரின் குணத்தை கெடுத்து விடும்.
ஐந்தாமிடம் மற்றும் அதன்பதிகளோடு தொடர்பு மற்றும் சேர்க்கை பெறும்போதோ அல்லது இந்த மறைவு ஸ்தானங்களில் ஐந்தாமாதிபதி அமர்ந்து அவை இயற்கை பாவராக அமைந்தால் புத்திர தோஷம் ஏற்பட்டு புத்திரபாக்கியம் தடைபடும்.(புத்திரகாரகன் குரு பலம் பெற்றிருந்தால் பலம் மாறும்),மீறி புத்திரர்களே இருந்தாலும் அவர்களலால் சுகம் பெறும் யோகம் குறைவு, மேலும்
பூர்வீக மனையில் இல்லாமல் இருத்தல் நலம்.பூர்வீக சொத்து இல்லாமல் இருக்கும்.அப்படியே இருந்தாலும் அவை பிரச்சினையாக இருக்கும்.நல்ல புத்தி ,கற்பனை ,யுக்தி ,சிந்தனை தருவதற்கு பதிலாக சூழ்ச்சி ,வஞ்சகம் ,கபடம் மற்றும் காமம் போன்மவைகளை தரும்.அறிவில் சிறந்த சான்றோர்களோடு பழகுவதற்கு பதிலாக தரம் தாழாந்த மனிதர்களோடு பழக்கவழக்கம் ஏற்படும்.
அடுத்து ஏழாமிடம் மற்றும் அதிபதிகளோடு மறைவு ஸ்தானங்கள் தொடர்பு மற்றும் சேர்க்கை பெற்றாலோ அல்லது மறைவு ஸ்தானங்களில் இதன் அதிபதிகள் அமர்ந்தாலோ ஒருவருக்கு தாமத திருமணம்தான் அமையும்.அவை இயற்கை பாவியாக அமைந்து விட்டால் மனை மற்றும் மனையால் வரும் சுகம் குறைவு.கற்ற மனைவியாக அமைவதும்,குணநலவாதியாகவும் அமர்வது சிரமம்.
ஒன்பதாமிடம் மற்றும் அதன் அதிபதி இந்த மறைவு ஸ்தான அதிபதிகள் தொடர்பு சேர்க்கை பெறும்போதும் அந்த சாதகர் தான தர்ம குணங்கள் இருக்காது.தந்தையால் எவ்வித பலனையையும் எதிர்பார்க்க முடியாமல் போய்விடுகிறது.சம்பாரிக்கின்ற பணம் தவறான வழிகளில் செலவாகிவிடும்.மேலும் ஒன்பதாமாதிபதி மறைவு ஸ்தானத்திற்கு சென்றால் (தந்தைகாரகன் சூரியனும் பலவீனம் அடைந்திருந்தால் ) தந்தை இருக்கமாட்டார்.சிறு வயதிலே இழந்திருக்க வாய்ப்புண்டு.அப்படியே இருந்தாலும் அவரால் எவ்வித பலனும் கிடைக்காது.வருமானம் ஏதுமின்றி தவிப்பர்.மேல்நிலை கல்வி பாதிக்கப்படலாம்.
பத்தாமிடம் மற்றும் அதன் அதிபதிகள் மறைவு ஸ்தானங்களின் அதிபதிகளின் சேர்க்கை மற்றும் பார்வை பெற்றால் அரசுக்கு விரோதமான தொழிலில் ஈடுபாடு ஏற்படலாம்.அதிலும் மறைவு ஸ்தான கிரகங்கள் பாவிகளாக இருப்பின் குற்றங்களை கண்டறியும் போலிஸ்(பத்தில் செவ்வாயாக இருப்பின்),இராணுவம் மற்றும் வழக்கில் பிரச்சினையை தீர்க்க கூடிய வழக்கறிஞராக ஆகலாம்.
மேலும் பத்தாமாதிபதி மறைவு ஸ்தானங்களுக்கு சென்றால் கேந்திராதிபதி தோஷம் நீங்கி மறைவான லாட்டரி சீட்டு ,பைனான்ஸ் போன்ற உழைப்பில்லாத அரசுக்கு விரோத தொழில் உண்டாகும்
பதினொறாமிடம் அதன் அதிபதிகள் மறைவு ஸ்தான அதிபதிகள் இடம்பெறும்போது தான் செய்கின்ற தொழிலில் லாப பங்கம் ஏற்பட்டுவிடும்.மூத்த சகோதர ஸ்தானம் பாதிக்கப்படும்.மேலும் பதினொறமிட அதிபதி மறைவு ஸ்தானத்திற்கு செல்லும்போது எவ்வித லாபங்களையும் தருவதில்லை.வெளிநாட்டு யோகம் தருவதில்லை.மூத்த சகோதரம் இருக்காது.
மறைவு ஸ்தான அதிபதிகளான மூன்று ,ஆறாமிடம்,எட்டாமிடம் மற்றும் பணிரெண்டாமிட அதிபதிகள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் விபரீத ராஜயோகத்தை தந்துவிடுகிறது.அதாவது தாம் சார்ந்த துறையில் எதிர்பாராத லாபம் ,பதவி உயர்வு போன்றவற்றை தந்துவிடுகிறது.இதுபோன்ற விபரீத ராஜயோகம் அமைப்பை பெற்றிருந்தாலும் அதற்குரிய மறைவு அதிபதிகளின் திசை நடந்தால் ஒழிய யோகத்தை தராது.சிலருக்கு அவ்வித திசைகளை தம் வாழ்வில் ஒருவர் சந்திக்க முடியாமல் அதாவது வராமலே போய் அந்த யோகத்தை பெற முடியாமல் போய்விடுகிறது.
இதேபோல ஒருவர் தனது சாதகத்தில் குரு -சந்திர யோகம்,தர்ம -கர்மாதிபதி யோகம்,குருமங்கள யோகம்,பிருகுமங்கள யோகம் மற்றும் பஞ்சமகா யோகங்களை பெற்றிருந்தாலும் அந்த யோகங்களை செய்ய முடியாதபடி அந்த கிரகங்களில் ஒன்று பாதகாதியாக அமைந்துவிடுவதால் அந்த யோகங்களை தராமல் செய்துவிடுகிறது.
பாதகாதியானது
சர ராசிக்கு -11-ம் அதிபதி
ஸ்திர ராசி -9 ஆம் அதிபதி
உபய ராசி - 7 ஆம் அதிபதி.
உதாரணமாக மேஷ ராசிக்கு தர்ம-கர்மாதிபதி யோகத்தை பார்க்கும்போது ஒன்பதாம் அதிபதி குருவும்,பத்தாம் அதிபதி சனியும் இணைந்து அல்லது பரிமாறி அல்லது பார்வை பெற்றிருக்கும்போது தர்ம -கர்மாதிபதி யோகமெனிலும் சனி பகவானுக்கு பத்து மற்றும் பதினொன்று என இரு ஆதிபத்தியம் பெறுவதால் சர ராசிக்கு பதினொறாம் அதிபதி பாதாகாதிபதி எனும் மற்றொரு ஆதிபத்தியம் பெற்று யோகபங்கம் உண்டாகிவிடுகிறது.
எனவே "யோகமான அமைப்புகள் ஒருவரது சாதகங்களில் இருந்தும் யோகம் செய்வதற்கு பதிலாக யோகபங்கம் ஏற்பட்டுவிடுகிறது ஏன் என ஆராய்ந்து பார்க்கும்போது இதுபோன்ற இன்னும் பல காரணங்கள் உள்ளது.
No comments:
Post a Comment