குல தெய்வ வழிபாடு - 11
11
திரேதா யுகத்தில் ஏகலவ்யனகரா என்ற ராஜ்யத்தை ஸ்ருதாதாரா என்ற கந்தர்வ புருஷன் ஆண்டு வந்தான். அவன் பரம்பரையினர் சிவபெருமானின் பக்தர்கள். வம்சவம்சமாக சிவபெருமானை வழிபட்டு வந்தார்கள். பெரும் கொடையாளிகளாகவும் இருந்தார்கள். பூமியை ஆண்டாலும் அவர்களால் கந்தர்வ லோகத்திலும் இருக்க முடிந்தது. ஒரு கட்டத்தில் அவனுடைய பாட்டனார் காலத்தில் அவர்கள் சிவ வழிபாட்டை மறந்து தாமே கந்தர்வ புருஷர்கள், இனி அவர்கள் யாரையும் வழிபடத் தேவை இல்லை, தாங்கள் செய்யும் தர்மமும், தானமும் தங்களைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தில் பல காலம் சிவபெருமானின் நினைவே இல்லாமல் இருந்து விட்டார்கள். அவருக்கு செய்ய வேண்டிய பாராம்பரிய வழிபாடுகளை மறந்தனர்.
இப்படியாக இருந்த பரம்பரையில் அவர்களின் பின் வழியில் வந்த வம்சத்தை சேர்ந்தவனே ஏகலவ்யனகரா ராஜ்யத்தை ஆண்டு வந்த ஸ்ருதாதாரா எனும் இன்னொரு கந்தர்வ புருஷன். அவனுக்கு சத்யதாரா மற்றும் சீலாதாரா என்ற இரண்டு மகன்கள் இருந்தார்கள். ஸ்ருதாதாரா மரணம் அடைந்த பின்னர் அவரது மகனான சீலாதாராவை இன்னொரு மகனான சத்யதாரா விரட்டி அடித்து விட்டு ஆட்சியைக் கைபற்றிக் கொண்டான். தந்தையின் மரணத்துக்குப் பின் சத்யதாரா மற்றும் சீலாதாரா என்ற இருவரும் கந்தர்வ புருஷ நிலையில் இருந்து சாதாரண மானிடர் நிலைக்கு வந்திருந்தார்கள்.
சீலாதாராவுக்கு சிவபெருமானை
வேண்டி தவம் செய்யுமாறு
முனிவர் அறிவுரை தந்தார்
வேண்டி தவம் செய்யுமாறு
முனிவர் அறிவுரை தந்தார்
சீலாதாரா தனது சகோதரனிடம் இருந்து தப்பி ஓடி காட்டிற்கு சென்று அங்குமிங்கும் சுற்றி அலைந்தபடி என்ன செய்வது என்ற வழி தெரியாமல் அலைந்து கொண்டு இருந்தான். அப்போது அவன் அசிதேவ மகரிஷி என்ற முனிவரை சந்தித்தான் (புராணங்களில் இம்முனிவர் பெயர் வேறு சில இடங்களில் காணப்படுகின்றது. அவரே அகஸ்திய முனிவரின் முன் பிறவி என்றும் சிலர் கூறுகிறார்கள்). அவரிடம் சீலாதாரா தனது நிலையைக் கூறி அழுததும் அவர் கொடுத்த அறிவுரைப்படி அந்த வனத்தில் பல காலம் இருந்தபடி சிவபெருமானை வழிபாட்டு வர அவன் தவத்தினால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் அவன் முன் தோன்றினார்.
தனக்கு நேர்ந்த கொடுமையை அவன் சிவபெருமானிடம் கூறி அழுதபோது அவர் கூறினார் 'மகனே உனக்கு வந்துள்ள கஷ்டம் எல்லாம் உன்னுடைய பரம்பரையினர் செய்த தவறினால் வந்தவைதான். உன் முந்தைய பரம்பரையினர் காலம் காலமாக என்னை வழிபட்டு வந்திருந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் உன்னுடைய தந்தை வழி பாட்டனார் என்னை அவமதிப்பது போல என்னை முற்றிலும் உதாசீனப்படுத்தி விட்டு தன் இச்சையாக வாழ்ந்து வந்தார். எவன் ஒருவன் இப்படி தான் வணங்கி வந்த தெய்வத்தை உதாசீனப்படுத்துவார்களோ அவர்கள் தனது பெற்ற தாயாரையே உதாசீனப்படுத்தியது போலாகும். ஆகவே அவர்களுடைய அடுத்த ஏழு சந்ததியினருக்கும் நல்ல வாழ்க்கை அமையாது.
நான் உன்னுடைய முந்தைய பரம்பரையை காத்து வந்தவன் என்றாலும் அவர்களில் சிலர் என்னை அவமானப்படுத்துவது போல உதாசீனப்படுத்தினார்கள். ஆகவேதான் உங்கள் குடும்பத்தின் இந்த நிலைமையும். ஆனால் நீ அந்த தவறை உணர்ந்து என்னை வேண்டி தவம் இருந்துள்ளாய். ஆகவே உன்னுடைய மூதையோரில் சிலர் என்னை உதாசீனப்படுத்தியதினால்தான் நீங்கள் இந்த துயரங்களை அனுபவிக்கிறீர்கள் என்றாலும் என்னை வேண்டி நீ மனதார பிரார்த்தனை செய்ததினால் உனது வம்சத்தினர் அனுபவிக்கும் துயரங்கள் உன் இந்த பிறவியுடன் முடிவடையும் என அருள் புரிகிறேன். நீயும் அடுத்த ஜென்மத்தில் ஒரு அரசனாக பிறப்பாய். உன்னை நாட்டை விட்டு துரத்திய உன் சகோதரனும் உன்னுடன் பிறப்பான். அந்த ஜென்மத்தில் நீ அவனை வஞ்சம் தீர்ப்பாய். அதோடு உங்களுடைய வம்சத்துக்கு ஏற்பட்ட சாபமும் தீரும். நீயும் கந்தர்வ புருஷனாகி விடுவாய்' என்று ஆசிர்வதித்தப் பின் மறைந்து விட்டார். அடுத்தகணம் சீலாதாரா மரணம் அடைந்தான். அதே நேரத்தில் ராஜ்யத்தில் ஆண்டு வந்திருந்த அவனது சகோதரன் சத்யதாராவும் ஒரு கயவனால் கத்திக் குத்தப்பட்டு மரணம் அடைந்தான்.
அடுத்த பிறவியில் சீலாதாராவும், சத்யதாராவும் மீண்டும் பூமியில் இரண்டு ராஜ்யத்தில் அரசர்களாகப் பிறந்தார்கள். சீலாதாரா ஒரு ராஜ்யத்தில் பீமபாதா என்ற பெயரில் ராஜ்யத்தை ஆள, சத்யதாராவும் சாமரபத்ரா எனும் பெயரில் அரசன் ஆயினான். அடுத்த சில காலத்திலேயே அவர்களுக்கு இடையே மூண்ட யுத்தத்தில் இருவருமே காட்டுப் பகுதியில் ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டு போய் சண்டை இட்டபோது பீமபாதா அவனை துரத்தி வந்த சகோதரனான சாமரபத்ராவைக் கொன்றான். அவன் மடிந்து விழுந்ததும் பீமபத்திரா ஒரு யானையாக மாறி விட்டான். அப்படி அவன் யானையாக மாறியதும் அவன் முன் சிவபெருமான் தோன்றிக் கூறினார் 'பீமபத்ரா நீ முன் பிறவியில் சீலாதார என்பவனாக இருந்தாய். உன் பூர்வ ஜென்ம பரம்பரையினர் என்னை உதாசீனப்படுத்தியதினால் ஏற்பட்ட கர்ம வினைகள் அனைத்தும் உனக்கு இதோடு மறைந்து விட்டது. இனி நீ மீண்டும் கந்தர்வ புருஷனாக மாறி இன்னொரு பிறப்பு எடுத்து ஒரு ராஜ்யத்தின் மன்னனாவாய். அப்போது நீ மீண்டும் உனது குலத்தினர் வணங்கி வந்திருந்த தெய்வமான என்னை மீண்டும் வழிபடத் துவங்குவாய். மீண்டும் நானும் உனது குலத்தைக் காத்து வந்திருந்தபடி வாழ்வில் மகிழ்ச்சியை கொடுப்பேன்' என ஆசிர்வதித்து விட்டு சென்று விட்டார். இது எடுத்துக் காட்டுவது என்ன என்றால் ஒரு பரம்பரையினர் தொடர்ந்து வழிபட்டு வரும் தெய்வமே ஒருவரது பரம்பரை தெய்வமாகி விடுகிறது. அதுவே அவர்களது குல தெய்வம் என்பதாகி விடுகிறது. அதை உதாசீனப்படுத்தினால் அவர்கள் வம்சத்தினர் துயரங்களை அனுபவிப்பார்கள் என்பதையே.
.............தொடரும்
No comments:
Post a Comment