Wednesday, 23 December 2015

துளசியின் பெருமை

துளசியின் பெருமை

ஒரு முறை இந்திரன், தான் என்ற அகந்தையுடன் சிவனை தரிசிக்க கைலாயத்திற்கு வந்தான். இதை அறிந்த சிவன் சேவகன் வடிவெடுத்து கைலாய வாசலில் நின்று, உள்ளே செல்ல முடியாதபடி தடுத்தார்.

கோபமடைந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தால் சிவனை அடித்தான். கோபத்தால் சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்தார். காவல் காப்பவர், சிவன் என்பதை அறிந்த இந்திரன், ஆணவத்தால் தான் செய்த செயலை மன்னிக்க வேண்டினான். கோபத்தில் தன் உடலில் ஏற்பட்ட வியர்வைத்துளியை பாற்கடலில் தெளித்தார் சிவன்.

அதில் ஒரு அசுர குழந்தை தோன்றியது. இந்த குழந்தை பிரம்மனின் தாடியை பிடித்து இழுக்க வலி தாங்காத பிரம்மனின் கண்களிலிருந்து கண்ணீர் தோன்றி அந்த துளியும் குழந்தையின் மீது விழுந்தது. இப்படி சிவனின் வியர்வை துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான அசுரனாதலால் குழந்தைக்கு "ஜலந்தராசூரன்' என பெயர் வைக்கப்பட்டது.

அவன் பெரியவனானதும், மூவுலகும் தனக்கு அடிமையாக வேண்டும் என்றும், சாகாவரமும் கேட்டான். பிரம்மன் மறுத்தார். அதற்கு ஜலந்தராசூரன், ""தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும்,'' என வரம் வாங்கி விட்டான். இவனது அட்டகாசம் அதிகமானது. கடைசியில் சிவனையே அழிக்க சென்றான்.

சிவன் அந்தணர் வேடமிட்டு, அசுரன் முன் வந்து நின்று, தன் காலால் தரையில் சக்கர வடிவில் ஒரு வட்டம் போட்டார். ""இந்த சக்கரத்தை எடுத்து உன் தலையில் வை. அது உன்னை அழிக்கும்,'' என்றார். ஆணவம் கொண்ட ஜலந்தரன், ""என் மனைவியின் கற்பின் திறனால், எனக்கு அழிவு வராது,'' என சவால் விட்டான்.

இந்த நேரத்தில், திருமாலை அழைத்த சிவன், "" நீர் ஜலந்தராசூரனைப் போல் வடிவெடுத்து, அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில், மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது.

இந்நேரத்தில், சக்கரத்தை அசுரன் எடுத்து தலையில் வைக்க அவன் கழுத்தை சக்கரம் துண்டித்து விடுகிறது. இதை அறிந்த பிருந்தை, தன் கணவன் அழிய காரணமாக இருந்த விஷ்ணுவிடம், ""நான் கணவனை இழந்து வருந்துவது போல, நீயும் உன் மனைவியை இழந்து வருந்த வேண்டும்,'' என சாபம் கொடுத்து விட்டு தீக்குளித்தாள்.

இதனால் தான், விஷ்ணு ராமாவதாரம் எடுக்க வேண்டி வந்தது. பிருந்தையின் சாபத்தினால் விஷ்ணுவுக்கு பித்து பிடித்தது. பித்தை தெளிவிக்க பிருந்தை தீகுளித்த இடத்தில் சிவன் ஒரு விதை போட்டார். இந்த விதை விழுந்த இடத்தில் துளசி செடி வளர்ந்தது.
இந்த துளசியால் மாலைதொடுத்து திருமாலுக்கு சாற்ற பித்து விலகுகிறது.

அசுரனை அழிக்க காரணமாக இருந்த சக்கரத்தை சிவனிடம் திருமால் கேட்டார். அதைப் பெறுவதற்காக ஆயிரம் தாமரைகளால், சிவனை பூஜித்தார். சிவனின் திருவிளையாடலால் இரண்டு பூ குறைந்தது. திருமால் தன் இருகண்களையும் எடுத்து, சிவனை பூஜிக்க மகிழ்ந்த சிவன் சக்கரத்தை திருமாலுக்கு கொடுத்தார்.

No comments:

Post a Comment