கூட்டுப் பிரார்த்தனை
* வசிஷ்டரும், விஸ்வாமித்திரரும் எதிரிகள் என்பது ஊரறிந்த விஷயம்.
ஒருமுறை இருவருக்கும் ஒரு பிரச்னையில் தகராறு ஏற்பட்டது.
விஸ்வாமித்திரர் வசிஷ்டரிடம், ஓய் வசிஷ்டரே!
உலக உயிர்கள் அனைத்தும் இறைவனை அடைய வேண்டும் என்பது என் ஆசை. உயிர்கள் இறைவனை அடைய மனம் ஒருமித்த தவம் இருக்க வேண்டும். நான் அப்படிப்பட்ட தவசீலன் என்பதால் தான் இறைவனை பார்க்க முடிந்தது. எனவே தவத்தின் பெருமை குறித்து பிரசாரம் செய்யப் போகிறேன். உலகமக்கள் என்னைப் பின்பற்றி இறைவனை அடைவார்கள், என்றார்.
வசிஷ்டர் சிரித்தார். விஸ்வாமித்திரரே! நீர் எப்போதும் அவசர குடுக்கை தான்.
ஏற்கனவே, ஒரு அரிச்சந்திரனை உம் பொருட்டு பாடாய் படுத்தினீர். இப்போது உலகத்தையே பாடாய் படுத்தப் போகிறீரோ!
இறைவனை அடைய நினைப்பவன் தவம் இருக்க வேண்டும் என்று அவசியமே இல்லை. தவம் என்பது உலகத்தாருக்கு ஏற்புடையதும் அல்ல.
உடலை வருத்தி இருக்கும் உண்ணாவிரதம் கூட இறைவனை அடைய உதவுமா என்பது சந்தேகமே!
துறவிகளுக்கு வேண்டுமானால் தவமிருக்கலாம். இறைவனை அடையலாம். ஆனால், சம்சார சாகரத்தில் மூழ்கிக் கிடக்கும் குடும்பஸ்தர்கள்கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.இதுவே அவர்களை இறைவனிடம் சேர்ப்பித்து விடும், என்றார். இருவரும் நீண்ட நேரமாக விவாதித்தனர். பிரச்னை தீர்வுக்கு வரவில்லை.
நேராக பிரம்மாவிடம் சென்றார்கள். பிரம்மா இவர்களிடம், நான் படைப்புத் தொழிலில் ரொம்பவும் மும்முரமாக இருக்கிறேன். நீங்கள் சிவனைப் பாருங்கள், என சொல்லி விட்டார். சிவனிடம் சென்றார்கள் இருவரும். என் பரமபக்தன் ஒருவன் பூலோகத்தில் மிகவும் கஷ்டப்படுகிறான். என்னை வருந்தி அழைத்தான். அவனைப் பார்க்கப் போகிறேன். பெருமாள் தான் இது போன்ற விஷயங்களுக்கு தகுதியானவர். அமைதியானவர்.
உங்கள் கேள்விக்கு பொறுமையாக பதில் சொல்வார், என்றார். பெருமாளிடம் ஓடினார்கள் இருவரும்.
முனிவர்களே! இதற்கு எனக்கு பதில் தெரியுமாயினும்,என்னை விட இதோ படுத்திருக்கிறேனே! ஆதிசேஷன்.
அவனுக்கு ஆயிரம் நாக்கு. நீங்கள் கேட்ட கேள்விக்கு ஒரு நொடியில் பதில் சொல்லி விடுவான், என்று தப்பித்துக் கொண்டார்.
அவர்கள் ஆதிசேஷனிடம் கேட்டனர்.
முனிவர்களே! உங்கள் கேள்விக்கு என்னிடம் பதில் இருக்கிறது. ஆனால், அதைச் சொல்ல ஒரு நிபந்தனை.
நான் தான் இந்த உலகைத் தாங்குகிறேன். இப்போது பாரம் அதிகமாக இருக்கிறது. பேசவே முடியவில்லை. இதை நீங்கள் குறைத்து வையுங்கள். பதில் சொல்கிறேன், என்றது. விஸ்வாமித்திரர்தான் செய்த தவத்தில் நூறில் ஒரு பங்கை ஆதிசேஷனுக்கு கொடுத்தார்.பாரம் இறங்கவில்லை. அவ்வளவு தவத்தையும் கொடுத்தார். ஓரளவு கூட அசையவில்லை. வசிஷ்டர் ஆதிசேஷனுக்கு, தன் சிஷ்ய கோடிகளுடன் செய்த கூட்டுப்பிரார்த்தனையின் பலனில் லட்சத்தில் ஒரு பங்கு தான் கொடுத்தார். ஆதிசேஷனின் பாரம் நீங்கி விட்டது. விஸ்வாமித்திரர்தலை குனிந்தார். தவம், தியானம், விரதம் முதலானவை கடினமானவை.
கூட்டுப் பிரார்த்தனை இலகுவானது. இது வீட்டில் ஒற்றுமையை வளர்க்கும். வெளியிடங்களில் சகோதரத்துவத்தை உருவாக்கும். ஊர் கூடி தேர் இழுத்தால் தான் தேர் நகரும்.
அதுபோல், குடும்பத்திற்காகவும், தேசத்தின் பாதுகாப்புக்காகவும் ஒட்டு மொத்தமாக கூடி பிரார்த்தனை செய்வோம். நம் கோரிக்கை இறைவனால் நிறைவேற்றப்படும்.
No comments:
Post a Comment