Monday 30 November 2015

செல்வ செழிப்புடன் வாழ சித்தர்கள் காட்டிய வழிமுறை

செல்வ செழிப்புடன் வாழ சித்தர்கள் காட்டிய வழிமுறை

இலக்குமி தோத்திரம்:-

அகத்திய முனிவர் தம்முடைய மனைவியோடு கொல்லாபுரம் என்னும் ஊருக்குச் சென்றார். கொல்லாபுரத்தில் உள்ள திருமகள் திருக்கோவிலிற்கு சென்று இங்கு குடிகொணடிருக்கும் திருமகளை போற்றி பின்வரும் பாடலைப் பாடினார்.

திருமகளும் மனமகிழ்ந்து அகத்திய மகரிசியிற்கு காட்சி கொடுத்து “அகத்திய மகரிசியே தங்களின் போற்றிப் பாடலிற்கு நான் மிகவும் மனமகிழ்ந்தேன். இப் பாடலை யாரொருவர் உள்ளத்தூய்மையோடு பாடி போற்றுகிறாரோ அவர் அரிய பெரிய இன்பங்களை நுகர்வார். இப் பாடல்கள் எழுதப் பெற்ற ஏடானது இல்லத்திலே இருக்குமானால் வறுமையைக் கொடுக்கின்ற தவ்வையானவள் அவ்வில்லத்தை அடைய மாட்டாள்.” என்று திருவாய் மலர்ந்தருளினாரகள். இப் பாடல்களை நாள்தோறும் படிப்பவர்கள் வறுமை நீங்கி செல்வத்தையடைந்து அச் செல்வத்தினாலான பயனையும் நுகர்வர் இது நடைமுறையில் கண்டறிந்த உண்மை. இந் நூல் வீட்டிலிருக்குமானால் செல்வ நலம் சிறந்தோங்கும்.

1

மூவுலகம் இடரியற்றும் அடலவுணர்
உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவைஉறழ் திருமேனி அருட்கடவுள்
அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர்உல கினும்விளங்கும் புகழ்க்கொல்லா
புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவைஇரு தாள்தொழுது பழமறைதேர்
குறுமுனிவன் பழிச்சு கின்றான்

மூன்று உலகங்களுக்கும் துன்பத்தை விளைவிக்கின்ற வலிமை பொருந்திய அசுரர்களுடைய உயிரை ஒழிக்கின்றதும், பூவையொத்த மென்மையான, அழகிய உடலை கொண்ட அருட் கடவுளான திருமாலின் மார்பில் தோன்றிய தாயே, தேவர் உலகத்திலும் சிறப்பான புகழ்மிக்க கொல்லாபுரம் ஊரில் சேர்ந்து இனிதாக வீற்றிருக்கும் பாவையாகிய திருமகளின் இரண்டு திரு அடிகளையும் வணங்கி, பழைமையான சாத்திரங்களையெல்லாம் ஆராய்ந்து குரு முனிவரான அகத்திய முனிவர் பாடுகின்றார்.

2

கொழுதியிசை அளிமுரலும் தாமரைமென்
பொகுட்டி லுறை கொள்கைபோல
மழையுறழுந் திருமேனி மணிவண்ணன்
இதயமலர் வைகு மானே
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே
கரகமலம் முகிழ்த்தெந் நாளுங்
கழிபெருங்கா தலில்தொழுவோர் வினைதீர
அருள்கொழிக்குங் கமலக் கண்ணாய்.

தேனிற்காக வரும் வண்டினம் பண்களை பாடுவதற்கு இடமாக இருக்கும் தாமரை மலரின் கொட்டையில் உறைகின்ற தத்துவம் போன்ற மழை நீர் நிரம்பிய கருமுகிலினை ஒத்த நிறத்தினையுடைய திருவுடம்பினையுடைய மணிவண்ணனாகிய திருமாலின் உள்ளமாகிய தாமரை மலரில் வாழுகின்ற மான் போன்ற அருட்பார்வை கொண்ட திருமகளே. உலகம் முழுவதும் உனது அருளினால் தீன்றிய அருட்கொடியே. என்னாளும் உனை மறவாது தாமரை மலர் போல் இரு காரமும் குவித்து உன்னை மிகுந்த காதலோடு அதாவது மிகுந்த அன்போடு வணங்குபவர்களின் தீவினை தீர்த்து அருள் பொழியும் தாமரை மலர் போன்ற கண்களை உடையவளே!

3

கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி
செழுங்கமலக் கையாய் செய்ய
விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலான்
தனையீன்ற விந்தை தூய
அமுதகும்ப மலர்க்கரத்தாய் பாற்கடலுள்
அவதரித்தோய் அன்பர் நெஞ்சத்
திமிரமகன் றிடவொளிருஞ் செழுஞ்சுடரே
எனவணக்கஞ் செய்வான் மன்னோ.

தாமரை மலர் போன்ற கண்ணுடைய திருமகளே. அழகிய மறுவமைந்த மார்பினை உடைய திருமாலின் இல்லத்தரசியே. செழுமை நிறைந்த தாமரை மலரினை ஒத்த கையினை உடையவளே, செந்நிறமான விமலையே, பசுமையான கரும்பினை வில்லாக வளைக்கும் வேனிற் காலத்திற்குரியவனான காமனைப் பெற்றவளே, தூய்மையான அமுதகலசத்தை ஏந்திய பூ போன்ற மென்மையான கையினை உடையவளே, பாற்கடலில் பிறந்தவளே, அன்பர்கள் மனதில் இருக்கும் இருளை அகற்றி ஒளிரச் செய்யும் செழுமையான பேரொளியே என்று போற்றி வணக்கிறேன்.

4
மடற்கமல நறும்பொ குட்டில் அரசிருக்கும்
செந்துவர்வாய் மயிலே மற்றுன்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன்
உலகமெலாம் காவல் பூண்டான்
படைத்தனன்நான் முகக்கிழவன் பசுங்குழவி
மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன்நின் பெருஞ் சீர்த்தி எம்மனோ
ரால் எடுத்துச் சொல்லற் மாற்றோ.

அழகிய இதழ்களையுடைய நல்ல மணமுள்ள தாமரை பூக் கொட்டையில் அரசாயிருக்கும் நற்பவளம் போன்ற சிவந்த அதரங்களை உடைய மயில் போன்றவளே, மற்றும் உன் கடைக்கண் பாரரவை அருள் பெற்றல்லவா நீல மணி நிறத்தினையுடைய திருமால் உலகையெல்லாம் காக்கும் தொழிலை மேற்கொண்டார். நான்கு முகக்கடவுள் படைத்தல் தொழிலை செய்தார். பசுமையான பிறைச்சந்திரனை அணிந்த சிவபெருமானும் அழித்தற் தொழிலைச் செய்தார். நின் பெருங் கீர்த்தி என்னை போன்றோரால் எப்படி எடுத்துச் சொல்ல முடியும்

5
மல்லல்நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித்
தனிபுரக்கு மன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில்
நிகரில்லாக் காட்சி யோரும்
வெல்படையில் பகைதுரந்து வெஞ்சமரில்
வாகைபுனை வீரர் தாமும்
அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின்
அருள்நோக்கம் அடைந்துள்ளாரே.

வளம் பொருந்திய பரந்த பூமி முழுவதையும் பொதுவானவற்றிலிருந்து விலகி தனியே ஆட்சி செய்யும் அரசர்கள் தானும், கல்வியிலும், பெரிய அறிவிலும், மிகுந்த அழகிலும் சிறந்து விளங்குவோரும், வெல்லுகிற படையினால் பகைவர்களை துரத்தி கொடிய போரில் வெற்றி வாகை சூடும் வீரர்கள் தானும், தாமரை மலரின் அகவிதழாம் அல்லி வட்டத்தினுள் உள்ள கொட்டையின் தங்கியிருக்கின்ற அழகிய அணிகலன்களை அணிந்த திருமகளாம் தங்களின் திருஅருளைப் பெற்றவர்களே ஆவர்.

6
செங்கமலப் பொலந்தாதில் திகழ்ந்தொளிரும்
எழின்மேனித் திருவே வேலை
அங்கண்உல கிருள்துரக்கும் அலர்கதிராய்
வெண்மதியாய் அமரர்க் கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே
நெடுங்கானில் பொருப்பில் மண்ணில்
எங்குளைநீ அவணன்றோ மல்லல்வளம்
சிறந்தோங்கி இருப்ப தம்மா.

செந்தாமரை மலரின் பொன்னிறமான மகரந்தத்தை போல் சிறந்து ஒளிரும் அழகிய எழில் மேனியினளே திருமகளே, கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தின் இருளை விரட்டும் சூரியனாய், வெண்மையான சந்திரனாய், தேவர்களை மகிழ்விக்கும் பொங்கும் நெருப்பாய் நின்று உலகை காக்கும் பூங்கொடி ஆனவளே! நீண்ட காட்டில், மலையில், நிலத்தில் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கு செல்வ வளம் சிறப்பாக ஓங்கி இருக்கிறதம்மா.

7
என்றுதமிழ்க் குறுமுனிவன் பன்னியொடும்
இருநிலத்தில் இறைஞ்சலோடும்
நன்றுனது துதிமகிழ்ந்தோம் நான்மறையோய்
இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவர்
ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு
தவ்வை அவண் மருவல் செய்யாள்.

என்று திருமகளை புகழ்ந்து பாடிய தமிழிற்கு இலக்கணம் செய்த குறு முனியாகிய அகத்திய முனிவர் தனது மனைவியோடு நிலத்தில் வீழ்ந்து வணங்கலானார். அங்கு தோன்றிய திருமகளும் நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த வல்லவனே நீ என்னை புகழ்ந்து பாடிய பாடலிற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்பாடல்களை முறைப்படி படிப்பவர்கள் பெரிய இன்பத்தை அனுபவிப்பார்கள். என்னை புகழ்ந்த இந்த பாடல்கள் எழுதிய ஏடு யார் வீட்டில் இருக்கிறதோ அவர்கள் வீட்டிற்கு வறுமையைத் தரும் எனது தமக்கையானவள் வரமாட்டாள் என வரமளித்தார்கள்.இப்பாடல்கள் அதிவீரராம பாண்டியர் மொழிபெயர்த்த காசி காண்டத்தில் இடம் பெற்றுள்ளது.
பூசிக்கும் முறை:-
பூசை அறையில் பஞ்சமுக தீபமேற்றி வைத்து நறுமணம் தரக்கூடிய சாம்பிராணி தூபம் அல்லது பத்தி பொருத்தி வைத்து, முதலில் விக்கின வினாயகரை காரிய சித்தி வேண்டி வணங்க வேண்டும். பின்னர் அகத்திய மகரிசியிற்கு குரு வணக்கம் செலுத்த வேண்டும். அதன் பின்னர் மகாலட்சுமி தாயிற்கு மந்திர புட்ப, தூப தீப ஆராதனை செய்து வணங்க வேண்டும். பிறகு இப்பாடல்களை 3. 5, 9 முறை என படித்து தூப தீப நைவேத்திய ஆராதனை செய்து முடிக்க வேண்டும்.

அகத்திய மகரிசி காட்டிய வழியில் மகாலட்சுமி தாயை வணங்கி நாமும் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வோமாக.

நமசிவாய என்பதன் சிறப்பு தெரியுமா?

நமசிவாய என்பதன் சிறப்பு தெரியுமா?

நமசிவாய என்பதற்கு சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். நமசிவாய என்று ஜெபித்து வர, சிவனருளால் வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவை திருநீறு, ருத்திராட்சம், திருவைந்தெழுத்து ஆகிய சாதனங்கள். திருநீறும்,  ருத்திராட்சமும் புறச்சாதனங்கள். திருவைந்தெழுத்து எனப்படும் பஞ்சாக்கரம் அகச்சாதனம் இம்மந்திரமானது உயிரில் பதிந்து மூச்சுக் காற்றில் கலந் து வருவதால் நம்முள் இருந்தே நமக்குப் பயன்தருவதாக இருக்கும். மந்திரங்கள் பல இருந்தாலும் அவற்றில் தலையாயது  பஞ்சாசர மந்திரம் என்பர்.

வேத ஆகமங்களில் நடுநாயகமாக நிலைபெற்றிருப்பது  பஞ்சாசர  மந்திரமே. ரிக், யஜுர், சாம என்ற மூன்றில் நடுவாகிய யஜுர் வேதத்திலுள்ள ஏழு  காண்டங்களில், நடுக்காண்டத்தின் மையமாகிய நான்காவது சம்ஹிதையில் நடுநாயகமாக இருப்பது ருத்ராத்யாயம். அதன் நடுநாயகமாக இருப்பது  ருத்திர ஜெபம். ருத்திரத்தின் நடுவில் வரும் மந்திரம் நம சோமாயச நமசிவாய என்பது இம்மந்திரத்தை தனி வாக்கியமாக ஒருமுறை ஓதும்போது  நமசிவாய என்றும், பலமுறை உச்சரிக்கும்போது சிவாய நம என்றும் ஒலிக்கும்.

மூவர் அருளிய திருமுறைகளுள் 4, 5, 6-ஆவது திருமுறைகள் அப்பர் அருளியவை அவற்றில் நடுவில் அமைந்துள்ளது. ஐந்தாவது திருமுறை, அதன்  நடுவில் இடம்பெற்றிருக்கும் திருப்பாலைத்துறைத் திருப்பதிகத்தில் 11 பாடல்கள் உள்ளன. அவற்றுள் நடுவான ஆறாவது பாடலில் சிவாய நம என்ற   பஞ்சாசர  மந்திரம் நடுநாயகமாக வைத்துப் போற்றப்படுகிறது.

ஓம் எனும் பிரணவத்தின் விரிவே சிவாய நம ஓம் என்ற பிரணவம் மூல மந்திரம்  ஆகும். அவ்வொலியிலிருந்தே அண்ட சராசரங்கள் தோன்றின. அனைத்திற்கும் ஆதாரமாகத் திகழ்வது  பஞ்சாசர  மந்திரமே. உயிர்கள் என்று  துன்புற்றனவோ, அன்றே இறைவன் உயிர்கள் துன்பத்திலிருந்து விடுபடும் சாதனமாக திருவைந்தெழுத்தை அருளினார்.

இம்மந்திரத்தின் வகைகளை ஐந்தாகக் கூறுவர்.

தூல  பஞ்சாசரம்   - நமசிவாய
சூக்கும பஞ்சாசரம்  - சிவாயநம
காரண பஞ்சாசரம்  - சிவ(õ)ய சிவ.
மகாகாரண பஞ்சாசரம்  - சிவ.
மகாமனு பஞ்சாசரம்  - சி.

தூல பஞ்சாசரம்  - நமசிவாய

நமசிவாய என்னும் திருவைந்தெழுத்து சிவபெருமானின் முதல் திருமேனியாகும். மந்திர வடிவான இறைவனின் திருமேனியில்-

திருவடி - ந
திருஉந்தி - ம
திருத்தோள்கள் - சி
திருமுகம் - வா
திருமுடி - ய

இத்தூல மந்திரம் உலக இன்பங்களைத் தந்து இம்மை நலம் அருளக்கூடியது. இதுவே ஞானமார்க்கத்தின் முதல் படி ஆகவேதான் ஞானிகளும் அப்பர்.  சம்பந்தர், சுந்தரர் ஆகியோரும் இம்மந்திரத்தைப் போற்றி ஜெபித்தனர்.

சூக்கும பஞ்சாசரம்  - சிவாயநம

சிவாயநம என்னும் அட்சரம் சிவனிருக்கும் அட்சரம் என சிவவாக்கியர் குறிப்பிட்டுள்ளார். இம்மந்திரம் இம்மை-மறுமைப் பயன்களை  அளிக்கவல்லது. மாணிக்கவாசகப் பெருமாள் இம்மந்திரத்தை தவமிருந்து பெற்றார் என்பர். உலக இன்பங்களைத் தருவதோடு விரும்பும் காலத்தில்  திருவடிப் பேற்றையும் அளிக்கவல்லது.

நடராஜமூர்த்தியின் ஞான நடனத்திருக்கூத்தே சூக்கும பஞ்சாசரத் திருமேனியாகும்.

சி-உடுக்கை ஏந்திய வலக்கரம்.

வா - தூக்கிய திருவடியைச் சுட்டும் இடதுகரம்.

ய - அஞ்சேல் என்றருளும் வலது அபயகரம்.

ந - அனலேந்திய இடக்கரம்.

ம - முயலகனின்மேல் ஊன்றிய திருவடி.

உலகப்பற்றை அறவே ஒழித்து திருவடிப்பேற்றை விரும்பும் ஆன்மாக்களுக்காக நிகழ்த்தப்பெறும் ஞானத்திருநடனம் இது. ஞான மார்க்கத்தின்  இரண்டாவது படி இது.

காரண பஞ்சாசரம்  - சிவயசிவ

ய என்பது உயிரைக் குறிப்பது உயிராகிய ய வுக்கு இருபுறமும் சிவசக்தி காப்பாக இருப்பதால், இம்மந்திரத்தை இதய மாணிக்க மந்திரம் என்பர்.

உலகப்பற்றை அறவே ஒழித்து திருவடிப்பேற்றிலே மூழ்கியிருக்கும் தவசீலர்கள், இம்மந்திரத்தை ஜெபிப்பதன்மூலம் இவ்வுடம் போடுகூடிய  நிலையில் இவ்வுலகிலேயே பேரின்பத்தைப் பெறுவர்.

மகா காரண பஞ்சாசரம்  - சிவசிவ

சிவசக்திக்குள்ளே ய கரமாகிய உயிர் ஒடுங்கியுள்ளது.
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினைமாளும்
சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவகதிதானே

என இம்மந்திரத்தின் மகிமையை திருமூலர் சிறப்பித்துக் கூறுகிறார்.

சிவ சிவ மந்திரத்தை தினமும் ஜெபிப்பவர் சிவனும் தானும் பிரிவில்லாத நிலையான மேலான பேரின்பத்தைப் பெற்று விரைவில் உன்னத முக்தி நிலை பெறுவர்.

மகாமனு பஞ்சாசரம்  - சி

சி என்பது மகாமனு பஞ்சாசர மந்திரம். சி என்ற ஓரெழுத்தில் வ என்னும் அருள் சக்தியும் ய என்னும் உயிரும் ந என்னும் மறைப்பாற்றலும் ம  என்னும் மலங்களும் ஒடுங்கியுள்ளன. இது ஓரெழுத்து மந்திரமானாலும். இதில் திருவைந்தெழுத்துகளும் அடக்கம்.

ருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபிக்கும்போதும் மனதை ஒருமுகப்படுத்தி ஜெபமாலையின்றி ஜெபிக்கும்போதும் மூன்றுவகையான மந்திர  ஜெபமுறைகள் கூறப்பட்டுள்ளன. மனதிற்குள் மந்திரத்தை ஜெபிப்பது மானஸம். தனக்கு மட்டும் கேட்கும்வண்ணம் மெல்ல உச்சரிப்பது மந்தம். பிறர்  அறிய உச்சரிப்பது வாசகம் மனதிற்குள் உச்சரிப்பது உத்தமம். மெல்ல உச்சரிப்பது மத்திமம் பிறர் அறிய உச்சரிப்பது அதமம்.

எந்த மந்திரத்தை ஓதினால் என்ன பலன் என்பதை சைவ சித்தாந்த சாத்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன. உலக இன்பத்தை மட்டும் துய்க்க வேண்டுமென விரும்புகிறவர்கள் நமசிவாய மந்திரத்தை ஓதலாம்.

உலக இன்பத்தோடு இறையருளும் கிட்டவேண்டுமென எண்ணுபவர்கள் சிவாய நம என்னும் மந்திரத்தை ஓதலாம்.

மும்மலங்களை அறுத்து இறைவனின் திருவடியிலேயே மூழ்கித் திளைக்க விரும்புபவர்கள் சிவாயசிவ என்னும் ஐந்தெழுத்தை ஓதலாம்.

மும்மலங்களை அறுத்த பின்பும் தொடரும் வாசனா மலத்தையும் போக்கவேண்டுமென எண்ணுபவர்கள் சிவசிவ மந்திரத்தை ஓதலாம்.

பெற்ற திருவடிப்பேறு எக்காலமும் நிலைத்திருக்க சி கார மந்திரத்தை ஜெபித்து உய்வுபெறலாம்.

அம்மையப்பரே! உங்களை நான் வணங்குகிறேன். என்னைப் பற்றி நிற்கின்ற ஆணவத்தையும் மறைத்தலையும் நீக்கி, உமது அருளால் ஆட்கொண்டு  அருளல் வேண்டும் என்பதே பஞ்சாசரத்தின் பொருள்.

ந ஆகிய திரோதன சக்தி ம என்ற மலத்தை ஒழித்து, அதுவே வ ஆகிய அருள் சக்தியாக மாறி சி ஆகிய சிவத்தை ஆன்மா அடையுமாறு செய்யும்.

பரமேசுவரனை தன் வடிவமாகக்கொண்ட  பஞ்சாசரத்தைவிட மேலான தாரக மந்திரம் வேறெதுவும் இல்லையென பஸ்மஜாபாலோப நிஷதம்  கூறுகின்றது.

ராகு - கேது

ராகு - கேது

ஒவ்வொரு கிழமையிலும் துர்க்கையை வழிபடும் முறை

ராகு கேது பெயர்ச்சியான ஜாதகரீதியாக சில சிரமங்கள் வருமானால், துர்க்கை வழிபாடு செய்தால் போதுமானது. ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்ய வேண்டிய விபரம் தரப்பட்டுள்ளது.

ஞாயிறு : ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30-6 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.

திங்கள் : திங்கள்கிழமைகளில் காலை 7.30-9க்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் என்பதும் நம்பிக்கை.

செவ்வாய் : ராகு கால நேரமான மாலை 3.00-4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

புதன் : மதியம் 12 முதல் 1.30க்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பது, ரத்த சம்பந்தமான நோய் தீரும் என்பதும் நம்பிக்கை.

வியாழன் : வியாழக்கிழமைகளில் மதியம் 1.30-3 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

வெள்ளி : வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10.30-12 துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.

சனி : காலை 9-10.30 வரை மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும்.

உங்கள் நட்சத்திரங்களின் திருமண வரலாறு

உங்கள் நட்சத்திரங்களின் திருமண வரலாறு.......

மனமே மனிதனை ஆட்டிப் படைக்கிறது. மனதை ஆள்பவர் சந்திர பகவான். சந்திர பகவானுக்குரிய பூஜைகளை, தான தருமங்களை முறையாகச் செய்தால் சஞ்சல மனதை மாற்றி அமைதி அடையச் செய்வார். சந்திரனின் அமிர்த கிரணங்களின் சக்தியை முழுமையாகப் பெறவேண்டும் எனில் பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கிரிவலமே சிறந்தது.

சந்திர பகவான் பதினாறு கலைகளுடன் விளங்குகிறார். அவை அண்ணாமலையாரின் திருமேனியில் பட்டு பிரகாசித்து பிரதிபலித்து நம்முடலை அடைகிறது. பௌர்ணமியன்று அண்ணாமலை கிரிவலம் வந்தால் பதினாறு முக அதிசய தரிசனம் பெறலாம். இதனால் பதினாறு செல்வங்களைப் பெறலாம்.

அத்ரி மகரிஷியின் பத்தினி அனுசுயா தேவி. பிரம்மா, விஷ்ணு, ருத்ரமூர்த்திகளை தன் கணவனுக்காக குழந்தைகளாக்கி அவர்களுக்குப் பாலூட்டி தெய்வமூர்த்திகளுக்கே அன்னை ஆயினள். அந்தத் தெய்வத்தாய் இன்றும் தன் கணவர் அத்ரி மகரிஷியுடன் பௌர்ணமி தினங்களில் மனித ரூபத்தில் கிரிவலம் வருவதாக நம்பப்படுகிறது.

சந்திர பகவானின் திருமண வரலாறு: சந்திரன் முதலில் பதினாறு கலைகளைத்தான் தினந்தோறும் பிரகாசித்தார். நாளெல்லாம் பௌர்ணமியாகத்தான் இருந்தது. தட்சனுடைய சாபத்திற்குப் பின்புதான் வளர்பிறை, தேய்பிறை என்கிற நிலை ஏற்பட்டது.

அஸ்வினி முதல் ரேவதி வரை இருபத்தி ஏழு நட்சத்திர தேவியரையும் சந்திரன் மணம் புரிந்துகொண்டார். மணக்கும் முன் அவர் அரிய தவநெறிகளையும் செயற்கரிய வேள்விகளையும் இறை பணிகளையும் செய்ய வேண்டி இருந்தது. ஒவ்வொரு நட்சத்திரமும் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றி 27 தாரகை தேவியரை மணம் புரிந்தார் சந்திரன்.

அஸ்வினி தேவி: கைலாய பனிமலையை வெறுங்காலோடு அடிப்பிரதட்சணம் செய்து அஸ்வினி தேவியை மணம் புரிந்தார்.

பரணி தேவி: கடும் வெய்யிலில் நீர் அருந்தாமல் இறைவனின் திருப்பாதங்கள் பட்ட இடமெல்லாம் சென்று தான தரும காரியங்கள் செய்து பரணியைக் கைப்பிடித்தார்.

கார்த்திகை தேவி: சந்திரன் தம் தமக்கையான ஸ்ரீ மகாலக்ஷ்மியை மூலப்பிரபுவாக வரிந்து 1008 துவாதசி திதிகளில் பாதபூஜை செய்து கிருத்திகா தேவியைக் கைப்பிடித்தார். லக்ஷ்மியும் நாராயணனும் பல யுகங்களில் கண்காணாத இடத்திற்குத் தவம் செய்ய சென்றுவிட சந்திரன் இத்திருப்பணி செய்ய நிறைய கஷ்டங்களை அனுபவித்தார்.

ரோகிணி தேவி: பௌர்ணமி திதியில் திருவண்ணாமலையில் வலம் வந்து ரோகிணியை மணம் புரிந்தார். இறைவன் பல இடங்களில் தன் பால் நிறத்தையும் மலை ரூபத்தையும் மறைத்துவிட, அந்தந்த இடங்களில் ஆஸ்ரமம் கொண்டிருந்த கௌதமர், துர்வாசர், பரத்வாஜர், அகத்தியர் போன்ற மகரிஷிகளுக்கு சேவை செய்து இறைவனின் பால்வண்ண தரிசனம் பெற்றார்.

மிருகசீரிஷ தேவி: பிரபஞ்சம் எங்கும் இரட்டையாகப் பிறந்தவர்களில் இருவருக்குமே எப்போதும் நல்லெண்ணங்களே தோன்றி நற்காரியம் செய்பவர்களுக்குத் தபோ பலனை அளிக்க வேண்டும் என மிருகசீரிஷ தேவியின் வரத்தைக் கடுமையான இன்னல்களுக்கு இடையே நிறைவேற்றி தேவியை மணம் முடித்தார்.

திருவாதிரை தேவி: சரபேஸ்வரர், நரசிம்மர், உக்ரஹப் பிரத்தியங்ரா மாலினி, சூலினி, காளி போன்றவர்களின் உபாசகர்களுக்கு கடுமையான நியதிகள் உண்டு. கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் நிபந்தனைகளைக் கடந்து கடைபிடித்து தேவியைக் கைப்பிடித்தார்.

புனர்பூச தேவி: கோபம் மிஞ்சினால் விபரீதம் விளையும். குறைந்தால் ஏமாற்றமும் இழப்பும் ஏற்படும். சமநிலை படுத்தி மக்களுக்கு அனுக்கிரகிக்க வேண்டும் என்ற புனர்பூச தேவியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து மணம் புரிந்தார்.

பூசம் தேவி: பூசத்தில் திருமணம் புரிந்திட குடும்பத்தில் அமைதி நிலவும். தயாள குணம், சுமூக நிலை நிலவும். இத்தகைய உத்தம விருப்பத்தை பூர்த்தி செய்திட மணம்புரிந்தார்.

ஆயில்ய தேவி: மாட்டுப்பெண், நாத்தனார் போன்றவர்களிடையே கருத்துவேறுபாடுகள் எழுவது இயல்பு. இவை நீங்கி நிலைக்க புண்ணிய நதிகளில் தாமரை இலைத் தீபங்களை ஏற்றி ஹோமம், தானதருமங்கள் செய்து ஆயில்ய தேவியைத் திருமணம் செய்தார்.

மகம் தேவி: ஒவ்வொருவரும் சனி தசை, புத்தி, அந்தரம், மாரக தசை ஏற்படுகையில் மரணபயம் ஏற்படுவதுண்டு. இதை நிவர்த்திக்க வழிமுறைகளை அளிக்க வேண்டும் என்று மக நட்சத்திர தேவி கேட்க, பூர்த்தி செய்து மணம் புரிந்தார்.

பூரம் தேவி: கூட்டு நாம ஜெபம், நாம சங்கீர்த்தனம், ஹோமம், தானம் செய்து ஜீவன்களிடம் தெய்வீக காரியங்களை தொடரச் செய்து பூரதேவியைக் கைப்பிடித்தார்.

உத்திரம் தேவி: பஞ்சமி திதியில், பராசக்தியானவள், ருத்ர சக்தி, சத்ரு சக்தி, துவார சக்தி, விகல்ப சக்தி ஆகியவற்றை ஒளியாகப் பரப்புகிறாள். பஞ்சமி திதியில் நோன்பை ஏற்று மன அமைதியைத் தந்து சந்திரன் அருள்பாலிக்க வேண்டும் என்ற உத்திர தேவியின் விருப்பத்தை நிறைவேற்றி மணம் புரிந்தார்.

ஹஸ்தம் தேவி: தெய்வாம்சங்களை தியான யோகம், கர்ம யோகம், வேதம் போன்றவற்றின் மூலம் பெறலாம். இவற்றில் சங்கீதம் ஏழுவகைப்பிறப்பிலும் உய்வளிக்கும் சக்தி உடையது. சங்கீதத்தின் ஆத்ம விருத்தி நிலையை பெற்றுத் தரவேண்டும் என்ற ஹஸ்த நட்சத்திர தேவியின் ஆசையை நிறைவேற்றினார்.

சித்திரை தேவி: விசேஷ தினங்களில் கடல் ஸ்நானம் செய்தால் கர்ம வினைகள் ஒழிகின்றன. இதனை சித்திரை தேவி கேட்க, பூர்த்தி செய்து மணம் புரிந்தார். அதனால்தான் சித்திரா பௌர்ணமியன்று கடல் ஸ்நானம் செய்வது நன்மை என்று கூறுகின்றனர்.

சுவாதி தேவி: ஒரே நேரத்தில் பலவிதமான எண்ணங்களில் உழல்வதால் நற்காரியங்கள் பாதியில் தடைபடுகின்றன. ஸ்திர புத்தியை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று சுவாதிதேவி விருப்பப்பட, நிறைவேற்றிக் கைப்பிடித்தார்.

விசாக தேவி: "குருவின் மதிப்பு மாறிடலாகாது' என்று உணர்த்த குரு மண்டலம் சென்று அதற்குரியத் தவங்களை மேற்கொண்டு விசாக தேவியை மணம் புரிந்தார்.

அனுஷ தேவி: இறைபணிகளை சீர் செய்து விதிகளை அமைத்து, அறநிலை பேணுகிற தர்மத்தை வலியுறுத்தி அனுஷ தேவியைக் கைப்பிடித்தார்.

கேட்டை தேவி: அன்னதானம் போல் கன்னிகாதானமும் உயர்ந்தது ஆகும். தக்கப் பருவத்தில் மணமாகி புனிதமான கற்புடன் பெண்கள் வாழ, ஹோமம், யாகம், பூஜைகள் செய்து கேட்டை தேவியைக் கைப்பிடித்தார்.

மூலம் தேவி: அவிக்ர மூலம், சாந்த மூலம், தீர்க்க மூலம், கடாட்ச மூலம் என்ற நால்வகை, மூல நட்சத்திரத்தில் உண்டு. தர்மநெறி தவறாத அரசாங்கம் உலகம் எங்கும் நிலவ வேண்டும் என்ற மூல தேவியின் விருப்பத்தை நிறைவேற்றி மணம் புரிந்தார்.

பூராடம் தேவி: பொருள் இல்லாததால் தடைபடும் திருமணங்கள் அனைத்திற்கும் உதவவேண்டும் என்ற பூராட தேவியின் விருப்பத்தைப் பூர்த்திசெய்து திருமணம் செய்துகொண்டார்.

உத்திராடம் தேவி: அன்னம் கொதிக்கிறபோது ஏற்படும் உலைக்கு பல தெய்வீக சக்திகள் உண்டு. உலை கொதித்தால்தான் நாட்டில் வளம் ஏற்படும். உலை கொதித்தல் சுபீட்ச அட்சய தேவி ஆகும். இந்த மங்கள தேவியின் புகழ் விளங்க செய்ய வேண்டும் என்று உத்திராட தேவியின் வேண்டுகோளின்படி செய்து சந்திரன் தேவியைச் சங்கமித்தார்.

திருவோண தேவி: திருவோண நட்சத்திரத்தன்று மகாவிஷ்ணுவை வணங்கி முறையாக விரதம் மேற்கொள்கிறவர்களுக்கு பலன்கள் அபரிதமாய் பொழியும் சாந்தி பூஜைகள் செய்து உலகத்தாரை உய்விக்க வேண்டும் என்று திருவோணம் தேவி ஆசைப்பட, நிறைவேற்றி மணம்புரிந்தார்.

அவிட்டம் தேவி: தேக பலத்துடன் புத்தியும் யுக்தியும் சேர வேண்டும். ஆயுள் பலத்துடன் நன்மதி சேர வேண்டும் என அவிட்ட தேவி ஆசைப்பட, நிறைவேற்றி மணம் புரிந்தார்.

சதயம் தேவி: சனீஸ்வரனுடைய உக்ர நாளில் சதய நட்சத்திரம் கூடிய நாளில் சந்திரனை வழிபட உக்கிரம் குறையும். சாயா தேவியும் சந்திரனும் ஆறடி உயரம் கொண்ட சிவலிங்கத்திற்கு வழிபாடு செய்து தம்பதி
களாயினர்.

பூரட்டாதி தேவி: பூலோகத்தில் பாகப்பிரிவினையால் குடும்பங்கள் சிதறலாகாது என்று பூரட்டாதி தேவியின் ஆவலைப் பூர்த்தி செய்து மனைவி ஆக்கிக் கொண்டார்.

உத்திரட்டாதி தேவி: கருமித்தனம், உலோபத்தனம் இரண்டுமே இறைநெறிகளுக்கு ஆகாது. இவற்றை ஜீவன்களிடமிருந்து அகற்ற வேண்டும் என்ற உத்திரட்டாதி தேவியின் ஆசையைப் பூர்த்தி செய்து கரம்
பிடித்தார்.

ரேவதி தேவி: சுயநலம், சுயஸ்துதி, சுயப் புராணம் ஆகிய மூன்று வழியில் அகந்தைப் பெருக, பக்தி மங்கும். எனவே இவற்றை அழிக்க வேண்டும் என்று ரேவதி விரும்ப, பூர்த்தி செய்து மனைவி ஆக்கிக் கொண்டார் சந்திரன்.

அவரவர்களுக்குரிய நட்சத்திர தேவியால்தான் அவரவர் வாழ்க்கைச் சீராக அமைகிறது என்பதை உணர்ந்து அவரவர்களுக்குரிய நட்சத்திர லிங்கத்தை தினமும் தியானித்து வழிபட வேண்டும். குறைந்தது மாதம் ஒருமுறையேனும் அவரவர் நட்சத்திர தினத்தன்று திருவண்ணாமலை கிரிவலம் வருதல் நல்லது.