Thursday, 3 December 2015

மனிதனின் வெற்றிக்கு

மனிதனின் வெற்றிக்கு !

சூரியோதயத்திற்கு முன் அதிகாலை எழுந்து காலைக் கடன்களை முடித்து குளித்து தூய உடையணிந்து கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும். தினசரி கோயிலுக்குப் போக முடியாதவர்கள் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை போக வேண்டும். பிரார்த்தனைக்குச் சிறந்த இடம் கோயில் தான். கோயிலில் நிதானமாக நடந்து ஒவ்வொரு விக்கிரகத்தையும் வணங்க வேண்டும். வீண் பேச்சு பரபரப்பு கூடாது. பிரார்த்தனையின் மூலம் தைரியம், மனத்தூய்மை, புலனடக்கம், தெய்வீக உணர்வு, நேர்மை உண்டாகிறது. தெய்வத்தின் உதவியின்றி எதுவும் எப்போதும் நடக்காது. உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் தந்தை கடவுள். அவரே எல்லா உயிர்களையும் பரிபாலிக்கிறார். கடவுள் பொறுப்பில் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு நம் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும். ஒரு மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு நல்ல காரியத்தில் மனதை செலுத்துகிறானோ, அவ்வளவுக்கவ்வளவு செல்வம் கிடைக்கும்.

மனிதனுக்குத் தேவை அன்புள்ள இதயமும் அமைதியுள்ள மூளையும். சந்தர்ப்பம் வரும் போது அதனைப் பயன்படுத்திக் கொள்ள தயாராக இருப்பதே வெற்றிக்கு அடிப்படை குறைவாகப் பேச வேண்டும். இனிமையாக பேச வேண்டும். உண்மையே பேச வேண்டும். <புத்திசாலியின் முதல் நண்பன் பணம் - நல்ல நாக்கு ஒரு நல்ல ஆயுதம் அதை தவறான வழியில் உபயோகிக்கக் கூடாது. எல்லா உண்மைகளையும் எப்போதும் சொல்லக்கூடாது. பிறர் நினைப்பதைப் பற்றிக் கவலைப் படக்கூடாது. தன்னம்பிக்கை, தாமதம் இன்றி எடுக்கும் முடிவு இதுதான் வெற்றியை நிர்ணயிக்கும். தைரியத்தைக் கைவிடக் கூடாது. தைரியம் போனால் எல்லாம் போய்விடும். தோல்வி வெற்றியின் படிக்கட்டாகும். தோல்விகளைக் கண்டு அஞ்சக்கூடாது. தோல்விகள் மனதைப் பலப்படுத்தும். எதையும் எப்போதும் சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும். நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும்.

நாம் நினைப்பது நல்லதாக இருக்கவேண்டும். எண்ணிய எண்ணம் ஈடேற சுய முயற்சியும், கடவுள் அருளும் இருந்தால் எதுவும் நடக்கும். சுறுசுறுப்பாக இருங்கள் செல்வம் வந்தடையும். சோர்வுக்கு இடம் கொடுக்காதீர்கள். வெற்றி கிடைக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். நிம்மதி கிடைக்கும். எல்லோரையும் நேசியுங்கள், சந்தோஷம் உண்டாகும். கடவுளை நம்புங்கள், நினைத்தது நடக்கும்.
எந்த வீட்டில் உபசாரம் மனப்பூர்வமாக செய்யப்படுகிறதோ அங்கு திருமகள் தங்கியிருப்பாள். பசியோடு வருபவர்களுக்கு முன்பின் தெரியாதவர்களாக இருந்தாலும் உணவு அளிக்க வேண்டும்
வீட்டில் திருமகள் தங்குவாள் வீட்டில் காலையிலும், மாலையிலும் விளக்கு ஏற்ற வேண்டும்.

உண்மையான அழகு உடலில் இல்லை, தூய்மையான, அன்புள்ள இரக்கமுள்ள உள்ளத்தில் தான் இருக்கிறது. தூய உள்ளம், தூய சிந்தனை, குற்றமற்ற மனசாட்சி இவை எந்த துன்பங்களையும் தாங்கிக் கொள்ளும். எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள். சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். அது இதயத்தின் இசை. சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள், அது சக்தியின் பிறப்பிடம், விளையாட நேரம் ஒதுக்குங்கள், அது இளமையின் ரகசியம். படிக்க நேரம் ஒதுக்குங்கள். அது அறிவின் ஊற்று. நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள், அது மகிழ்ச்சிக்கு வழி. உழைக்க நேரம் ஒதுக்குங்கள் அது வெற்றியின் விலை. உழைப்பின் மூலம் தான் செல்வம் வரும். தர்மத்தின் மூலம் அது நிலைத்திருக்கும்

No comments:

Post a Comment