Saturday 12 December 2015

குல தெய்வ வழிபாடு - 4

குல தெய்வ வழிபாடு  - 4

 
இதன் இடையே ஆரியர்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் வந்து அங்காங்கே தங்கலானர்கள்.  அந்தணர்களாக கருதப்பட்ட ஆரியர்கள்  இந்தியாவுக்குள்  வந்த காலத்தில் நகரங்கள் என்பதே மிகக் குறைவானதாகும். அனைத்து பகுதிகளுமே அருகருகில் இருந்த கிராமங்களாகவே இருந்தன. ரிக்வேத காலத்தில் கூட கிராமங்கள் ஒன்றுடன் ஒன்று அதிக தூரத்தில் அமையாமல் பாதுகாப்பிற்காக அருகருகிலேயே அமைந்திருந்தன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து உள்ளார்கள். அதுவே பிற்காலத்திலும் தொடர்ந்து கொண்டிருந்துள்ளது.

காலம் நகர்ந்து கொண்டே இருந்தாலும் பண்டை காலத்தில் நகரங்களை விட கிராமப் பகுதிகளே அதிகம் இருந்தன என்பதினால் பெரும்பாலான மக்கள் விவசாயத் தொழிலை மேற்கொண்டவாறு கிராமப்புறங்களிலேயே வசித்து வந்தார்கள். அந்த இடங்களில் அந்தணர்கள் மற்றும் அந்தணர்கள் அல்லாதவர்கள் என்ற இரு பிரிவினரும் வசித்து வந்தார்கள் என்றாலும் அவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே பகுதியில், ஒன்றாக  சேர்ந்து வாழ்ந்திடாமல் தனித் தனி பிரிவாக ஒருவருக்கொருவர் தள்ளி இருந்த இடங்களிலேயே வசித்து வந்தார்கள். அதன் காரணமும் ஜாதி பேதம்தான். ஆனால் ஆலய வழிபாடு என்பதை பொருத்தமட்டில் கிராமங்களில் இருந்த அனைவருமே அந்த ஊரில் இருந்த ஆலயங்களில் ஏதாவது ஒன்றில் சென்று சேர்ந்தே வழிபாடு செய்து வந்துள்ளார்கள். ஆலய வழிபாட்டில் அந்தணர் மற்றும் அந்தணர் அல்லாதவர்கள் என்ற பேதத்தையும் வைத்துக் கொள்ளவில்லை.

கிராம வழிபாட்டுத் தலங்கள் 
அல்லது ஆலயம்  
இந்த நிலையில் காலம் செல்லச் செல்ல உருவ வழிபாடுகள் துவங்கிய பின்னர் அந்தணர்கள் மற்றும் அந்தணர்கள் அல்லாதோர் அவரவர்கள் வணங்கி வந்திருந்த தெய்வங்களைப் இரு பிரிவுகளாக பிரித்து வைத்துக் கொண்டு பூஜிக்கத்  துவங்கினார்கள். அதன் காரணமும் இதுதான்.  அந்தணர்கள் நெய்வித்தியமாகவும், வேண்டுதல் காணிக்கைகளாகவும், பிரசாதங்கள் என்ற பெயரிலும் பழங்களையும் அரிசியினால் செய்த உணவுகளையும் ஆலயங்களில் படைத்தார்கள். ஆனால் அந்தணர்கள் அல்லாதோர் தம் காணிக்கையாக அசைவ உணவை பிரசாதமாக படைத்ததும் அல்லாமல் மிருக பலிகளையும் தந்தார்கள்.

அதை ஏற்க மறுத்த அந்தணர்கள் மிருகபலி மற்றும் அசைவ பண்டங்களை காணிக்கைக் கொடுத்த ஆலயங்களுக்கு செல்வதை தவிர்க்கலானார்கள். சில கிராமங்களில் ஒரே ஒரு ஆலயம் மட்டுமே இருந்தால், அங்கு மிருகபலி மற்றும் அசைவ பண்டங்கள் படைக்கப்பட்டபோது அங்கு செல்வதை அந்தணர்கள் தவிர்த்தார்கள்.

அசைவ உணவையும் மிருக பலியையும் காணிக்கையாக அந்தணர்கள் அல்லாதோர் தந்ததற்கு அடிப்படைக் காரணம்  அவர்களின் உணவுப் பழக்கம்.  எப்படி அந்தணர்கள் தமது உணவுப் பழக்கத்தில் அனைத்து விதங்களிலான இறைச்சி மற்றும் முட்டை போன்றவற்றை உண்பதை தவிர்த்து வந்தார்களோ அது போல அந்தணர்கள் அல்லாதோரில் பெரும் பகுதியினர் இறைச்சி உணவை உண்பவர்களாக இருந்தார்கள். ரிக் வேத காலத்திலேயே பெரும்பாலான மக்கள் (அதில் ஆரியர்களும் உண்டு என்பதே உண்மை) மாமிச உணவுகளையே உண்பவர்களாக இருந்துள்ளார்கள் என்பது தெரிகிறது. அதன் காரணம் பசிக்கு உணவு வேண்டும் என்பதே.

அதே சமயத்தில் இரு பிரிவினரும் ஒன்று கலந்து பேசி அவரவர்கள் வழிபாட்டு நேரத்தை அந்தந்த ஆலயத்தில் வரையுறுத்துக் கொண்டார்கள்.  இதுவே  கிராமிய ஆலயங்களில் இரண்டு ஆலயப் பிரிவுகள் தோன்றக் காரணம் ஆயிற்று. மெல்ல மெல்ல அந்தப் பிரிவு தனித் தனி ஆலயங்கள் எழவும் காரணம் ஆயிற்று. இப்படியாக கிராம ஆலயங்கள் மிருக பலிகள் தரப்பட்ட ஆலயங்கள் மற்றும் மிருக பலிகள் தரப்படாத ஆலயங்கள் என இரு பிரிவினைகளாயின. மிருக பலி தரப்பட்டு வந்த, அசைவ உணவு பிரசாதமாக படைக்கப்பட்ட ஆலயங்களுக்கு அந்தணர்கள் செல்வதை முற்றிலும் தவிர்த்தார்கள். மிருக பலி தருவதை எதிர்க்கலானார்கள்.  அப்படிப்பட்ட ஆலயங்களுக்கு அந்தணர்கள் அல்லாதவர்கள் மட்டுமே சென்றார்கள்.
அந்தணர்கள் வணங்காத கிராம 
கோவில்களில் மிருக பலி தரப்பட்டது

ஆரியர்கள் வருகை தருவதற்கு பல காலத்துக்கு முன் தென் இந்தியப் பகுதிகளில் இருந்த பெரும்பான்மையினர் வனப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்திருந்தார்கள். அந்த காலத்தில் விளை நிலங்கள் இருந்த இடங்களில்தான் மக்கள் அதிகம் வாழ்ந்து வந்தார்கள். கட்டிடங்கள் அதிகம் கிடையாது. வனங்களில் கிடைத்தவற்றை உண்டு வாழ்ந்தவர்கள். வனப்பிரதேசம் என்றால் அடர்ந்த காடுகள் என்பதல்ல அர்த்தம். வெற்று நிலங்களை சுற்றி அமைந்திருந்த, அதிக மனித நடமாட்டம் அல்லாத இடங்கள், அடர்ந்த மரங்கள், செடி கொடிகள், ஆறு, குளங்கள் மற்றும் மணல் திட்டுக்களைக் கொண்ட இடங்கள்.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றின்படி அங்கெல்லாம் வாழ்ந்திருந்த மக்கள் காட்டில் கிடைத்ததையும், வயலில் விளைந்ததையும்  உண்டபடி வாழ்ந்து கொண்டு  இருந்தாலும், அவை  அவர்களுக்கு போதுமானதாக இல்லை. அதன் மூலம் நிலையாக உணவும் கிடைக்கவில்லை. உணவுகளை பாதுகாத்து வைத்திருக்கும்  வழிமுறைகளையும் அவர்கள் அறிந்திடவில்லை.   ஆகவே இயற்கையாகவே மிருகங்கள், பறவைகள் போன்றவை பிற மிருகங்களின் இறைச்சிகளை உண்பதையும், பாம்பு போன்றவை முட்டைகள் உண்பதையும் கண்டு தமது பசியை போக்கிக் கொள்ள தாமும் அவற்றை உண்ணத் துவங்கியபோது அதுவே வனப்பிரதேசத்தில் வசித்தவர்களின் உணவின் ஒரு பகுதியாக  மாறியது.

அதே நேரத்தில் அவற்றை உண்ணப்  பிடிக்காதவர்கள் பழங்கள், தானியங்கள், கனிகள் மற்றும் காய்கறிகளை சமைத்து உண்டார்கள். இப்படியாக அவரவர் உண்ணத் துவங்கிய உணவே அசைவம் மற்றும் சைவம் என்றாகி  அவரவர் வழிபட்ட தெய்வங்களுக்கு படைக்கப்பட்ட பிரசாதம் மற்றும் நெய்வித்தியத்திலும் இடம் பெற்றது.

சைவ உணவை உண்டவர்கள் சாத்வீக குணம் கொண்டவர்களாக இருக்க, வேட்டையாடி உணவை உண்டு வந்தவர்களின் குணம் மூர்கத்தனமாக இருக்க இந்த வேறுபாடு அவர்கள் மன நிலையை வெளிப்படுத்தி ஆலய வழிபாட்டிலும் புகுந்தது. இந்த பிரிவினையினால்தான் அந்தணர்கள் வணங்கிய தெய்வங்கள் சைவ தெய்வங்கள் அதாவது சாந்த தெய்வங்கள் எனவும் அந்தணர் அல்லாதோர் வணங்கிய தெய்வங்கள் அசைவ தெய்வங்கள் அதாவது யுத்த தெய்வங்கள் எனவும் கூறப்படலாயின.

அடுத்து ஆரியர், திராவிடர் என்ற பிரிவு காலப் போக்கில் நுழையத் தொடங்கி அந்த இரு பிரிவினரும் வணங்கத் துவங்கிய தெய்வங்கள்  தமிழ் தெய்வங்கள் மற்றும் ஆரியக் கடவுட்கள் என பார்க்கப்படத் துவங்க, அந்தணர்கள் வணங்கிய தெய்வங்கள் ஆரியர்களின் தெய்வம் எனவும், அந்தணர்கள் அல்லாதவர்கள் வணங்கிய தெய்வங்கள் திராவிட தெய்வங்கள் எனவும் ஆயின.

ஏற்கனவே கூறியது போல அந்தணர்களிலும்  சைவ மற்றும் வைஷ்ணவப் பிரிவும் தோன்றியது. பரப்பிரும்மம் என்பதில் இருந்த மும்மூர்த்திகள் மூன்று தனித் தனி தெய்வங்களாக கருதப்பட்டார்கள். முக்கியமாக அவர்களில் சிவனை ஆராதித்தவர்கள் சைவர்கள் எனவும், விஷ்ணுவை ஏற்றுக் கொண்டவர்கள் வைஷ்ணவர்கள் எனவும் கூறிக் கொண்டார்கள். பிரும்மாவுக்கோ தனித் தன்மை இல்லாமலேயே இருந்தது.

இப்படியான நிலையில்  முன் காலத்தில் ( தற்போதைய நிலைமை வேறு. அதை பின்னர் கூறுகிறேன்) அந்தணர்கள் ஆராதித்த தெய்வங்கள் சிவன், விஷ்ணு, வினாயகர், பார்வதி (அம்பாள் எனப் பொதுவாக கூறினார்கள். ஆனால் அதில் பார்வதியின் அவதாரமான மாரியம்மன் குடும்ப வகையினரை சேர்த்துக் கொண்டது இல்லை), மகாலஷ்மி, சரஸ்வதி, ராமர், ஹனுமான், போன்றவர்களாக இருக்க, அந்தணர்கள் அல்லாதவர்கள் வணங்கத் துவங்கிய தெய்வங்கள் வேடர்களுடன் வாழ்ந்திருந்து வேடர்களால் வளர்க்கப்பட்ட முருகன், பரசுராமன், ஐயப்பன், வள்ளி தேவி, பார்வதியின் அவதாரமான மாரியம்மன் போன்ற பல அம்மன்கள், ரேணுகா தேவி, போன்றவர்கள் ஆவர்.

அந்தணர்கள் வணங்கிய தெய்வங்களை அம்பாள் என்ற பெயரிலும், பிற சமூகத்தினர் வணங்கி வந்த அதே தெய்வங்களை அம்மன் என்றும் பெயரிட்டு உருவங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தி அதிலும் அபிப்பிராய பேதத்தை உருவாக்கினார்கள்.  அந்தணர்கள் வணங்காத தெய்வங்களான முருகன், வள்ளி, ஐயப்பன், மாரி அம்மன்கள் போன்றவற்றை  திராவிடர்களின் தெய்வங்கள் என காலப்போக்கில் கருதலானார்கள். இத்தனைக்கும் முருகன் சிவபெருமானின் மகன், மற்றும் வள்ளி தேவி மஹாவிஷ்ணுவின் மகள் ஆவாள். ஐயப்பனோ சிவன் மற்றும் விஷ்ணுவின் இணைப்பால் பிறந்தவர். மாரியம்மன் பார்வதியின் அவதாரம் ஆவாள்.
பொதுவாக கிராமங்களில் இருந்தவர்களுக்கு அவர்கள் வசித்து வந்த பகுதிகளின் அருகிலேயே ஆலயங்கள் அமைந்து இருந்தன. அவற்றை ஆலயங்கள் என்று கூறமாட்டார்கள். அதை கிராமக் கோவில் என்று கூறுவார்கள்.  ஏன் எனில் அவை  பெரிய அளவில் கட்டப்பட்டு இருக்காது.  நான்கு பக்கமும் கல் மற்றும் மண்ணைக்  கொண்டு கட்டப்பட்ட சுவற்றுடன் அவற்றில் சில மேல்கூரைக் கூட இல்லாமல் காணப்படும். சில கோவில்களில் கதவு கூட இருக்காது.   ஒரே ஒரு சிறிய  அறையில், சுமார் மூன்று அல்லது நான்கு அடி உயரம்,  இரண்டு அல்லது மூன்று அடி நீல அகலம் கொண்ட இடத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தெய்வ சிலைக் காணப்படும். இல்லை என்றால் குத்துக் கல்கூட காணப்படும். அதில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் உருவங்கள் வரையப்பட்டு இருக்கும்.


அந்தக் காலங்களில் அநேகமாக பலரும் கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்து வந்துகொண்டு இருந்ததினால் தாத்தா, மகன், பேரன் என அனைவருமே ஒரே குடும்பமாக வசித்து வந்தார்கள். அநேகமாக அனைவரும் ஒரே வீட்டில் அல்லது அந்த வீட்டில் அதிக குடும்பத்தினர் வசிக்க இடம் இல்லை எனில் அந்த இடத்தை சுற்றி அக்கம் பக்கத்தில் வாழ்ந்து வந்தார்கள். அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல இடங்களில் வசித்து வந்தாலும் ஒரு பண்டிகை என்றால் அனைத்து குடும்பத்தினரும் வீட்டின் பெரியவர் வீட்டில் வந்து ஒன்று கூடி பண்டிகையை ஒன்றாகவே கொண்டாடுவார்கள். அன்று ஒன்றாகவே அனைவரும் கோவிலுக்கும்  சென்று வழிபடுவார்கள். அந்த பழக்கம் பரம்பரைப் பரம்பரையாக தொடர்ந்து வந்து கொண்டு இருந்தது. அதனால்தான்  ஒரு பரம்பரையின் மூத்தவர்கள் வணங்கி வந்திருந்த தெய்வமே பரம்பரை தெய்வமாயிற்று. அந்த வார்த்தையே மருவி குல தெய்வம் என்றாயிற்று. 

வேத காலத்தில் ஒவ்வொரு குடும்பங்களின் தலைவராகவும், அந்த குடும்பத்தின் தந்தையே இருந்தார். அவரை மீறி யாரும் செயல்பட மாட்டார்கள். தந்தைக்கு பணிந்து நடப்பதை மரியாதை குறைவாக யாரும் கருதவில்லை. குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் செய்போவரையும் கௌரவ குறைவாக நடப்பவர்களையும் தண்டிக்கும் நிலை இருந்ததே தவிர மற்றப்படி குடும்ப ஒற்றுமையில் பாச பிணைப்புகளே அதிகம் இருந்தற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. தகப்பனாரின் மறைவுக்கு பின்பு அவரின் அடுத்த சகோதரரோ அல்லது மூத்த மகனோ குடும்ப தலைவனாக ஆக்கப்பட்டிருக்கிறார். மிகப் பெரிய கூட்டு குடும்பங்களாகவே இருந்த ஒரு குடும்பத்தில் தாத்தா, அவருடைய தாத்தா மற்றும் அவர்கள் வழி மகன்கள் குடும்பத்தினர் என அனைவருமே ஒரே தெய்வத்தை, ஒரு குறிப்பிட்ட கோவிலில்  வணங்கி வந்ததினால் நாளடைவில் அவர்கள் பரம்பரைக்கு அந்த ஆலய தெய்வமே குல தெய்வமாயிற்று.

இதனால்தான் பல குடும்பங்களும் வழிபட்டு வந்த குல தெய்வ ஆலயங்கள் கிராமங்கள், காட்டுப் பகுதிகள், மலை, வயில்வெளி, மற்றும் அதிக சாலை வசதி இல்லாத இடங்கள் போன்றவற்றில் இன்றும் உள்ளன. இதுவே ஒரு பரம்பரையின் குல தெய்வம் அமைந்த வரலாறு. இதற்கும் தெய்வ ரீதியாக காரணம் இல்லாமல் இல்லை. இதையே இயற்கை நியதியாக பிரும்மன்  படைத்திருந்தார். அது என்ன? 
..............தொடரும் 

No comments:

Post a Comment