Friday, 18 December 2015

உருத்திராட்ச மணி

உருத்திராட்ச மணி

இதுவரை நாம் அறிந்திறாத பல அபூர்வ தகவல்கள்!

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!,
உருத்திராட்சம் என்றவுடன் நமக்கு
என்னவெல்லாம் நினைவுக்கு வருகிறது...
சன்னியாசம், சாமியார்கள், ஆன்மீகம், எளிமை, ஜபமாலை, உடல்நலம், மருத்துவம், மந்திரவாதிகள் இத்யாதி இத்யாதி!!.

ருத்திராக்ஷம், உருத்திராக்கம் என பல
பெயர்களில் அறியப்படும் இந்த
உருத்திராட்சம் பற்றி பல்வேறு
கருத்தாக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள்
உள்ளன. புராணங்களில் இது பற்றிய மிகைப்படுத்தப் பட்ட பல தகவல்கள் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம்
தவிர்த்து உருத்திராட்சம் பற்றிய அரிய
தகவல்கள் சிலவற்றைப் பற்றியும், சித்தர்
பெருமக்களின் பாடல்களில் கூறப் பட்டுள்ள
தகவல் பற்றியும் தொகுத்து அளிப்பதே இந்த
தொடரின் நோக்கம்.
வடமொழியில் ருத்ராக்ஷம் என்பதற்கு
“ருத்திரனின் கண்கள்” என்பதாக பொருள்
கூறப்படுகிறது. ருத்திரன் என்பது சிவனை
குறிக்கிறது. “ganitrus” என்ற மரத்தின்
பழத்தில் இருந்து பெறப்படும் கொட்டைதான்
இந்த உருத்திராட்சம். இந்த மரங்கள் உலகின்
சில பகுதிகளில் மட்டுமே காணப் படுகிறது.
இமயமலையின் அடிவாரங்களில்,
கங்கைநதியின் சமவெளிப்
பகுதிகளில்,ஆஸ்திரேலியா மற்றும் மலேயா
நாடுகளில் மட்டுமே காணப் படுகிறது. இந்த
தாவரத்தில் 90 வகை இருப்பதாக தாவரவியல்
பகுத்தறிந்திருக்கிறது. இவற்றில் 25 வகை
மரங்கள் இந்தியா மற்றும் நேப்பாள நாடுகளில்
கிடைக்கிறது.
இந்த மரம் அதிகபட்சமாய் 80 அடி உயரம்
வளரக் கூடியது. உருத்திராட்ச மரத்தின் சில
வகைகள் தமிழகத்தின் பழநி, நீலகிரி போன்ற
இடங்களிலும், கேரளத்தில் திருவாங்கூர்
பகுதியிலும், கர்நாடகத்தில் மைசூர்
பகுதிகளில் காணப் படுகிறது. இதன் பழங்கள்
கருமை கலந்த நீலம் அல்லது
செம்மையோடிய நீல நிறத்தில் கடினமான
மேலோட்டுடன் இருக்கும். இந்த மரத்தின்
இலைகள் வாத மரத்தின் இலைகளைப் போல
ஆறு அங்குல நீளத்தில் இருக்கும். முதிர்ந்த
இலைகள் உதிர்ந்த உடன் அந்த கணுக்களில்
பூக்கள் தோன்றும். உருத்திராட்ச மரத்தின்
பூக்கள் வெண்மை நிறமுடையாக இருக்கும்.
உருத்திராட்ச மரத்தின் பழங்கள் கடுமையான
மேலோட்டுடன் இருந்தாலும் உள்பகுதி
புளிப்பு சுவையுள்ள சாறு நிறைந்த சதைப்
பகுதியாக இருக்கும். இவற்றின் நடுவில்
இருக்கும் கொட்டை பகுதியைத்தான் நாம்
உருத்திராட்ச மணி என்கிறோம். நேப்பாள
நாட்டில் விளையும் உருத்திராட்ச மணிகளே
தரத்தில் உயர்ந்தனவாக கருதப் படுகிறது.
இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில்
உள்ள காசி நகரம்தான் உருட்திராட்ச
மணிகளுக்கு முக்கியமான சந்தையாக
இருக்கிறது.
இயற்கையில் உருத்திராட்ச மணி
செம்மையும், கருமையும் கலந்தேறிய
பழுப்பு நிறத்தில் இருக்கும். கடையில்
விற்பனைக்கு கிடைக்கும் மணிகள்
பெரும்பாலும் மெருகேற்றப்பட்டும்,
சாயமேற்றப் பட்டிருக்கும். இதன் பொருட்டே
சிவந்தும், பளபளப்பாகவும் இருக்கிறது. சில
இடங்களில் அரக்கு, பிளாஸ்டிக்
போன்றைவைகளினால் செய்யப் பட்ட போலி
மணிகளும் விற்பனைக்கு வருகின்றன.
போலிகளை கண்ட்றியும் முறைகளை இந்த
தொடரின் நெடுகே பகிர்ந்து கொள்கிறேன்.

உருத்திராட்சம் - அளவும், வகைகளும்!

உருத்திராட்ச மரத்தின் பழத்தில் இருந்து இந்த
கொட்டைகளை பிரித்தெடுத்து கழுவி
உலரவைத்து அவற்றின் அளவைப் பொறுத்து
தனித் தனி பயன்பாட்டுக்கென
பிரித்தெடுக்கின்றனர். இந்த கொட்டைகளின்
அளவு தட்பவெப்ப நிலை, மரத்தின்வகை,
வயது மற்றும் பழத்தின் முதிர்ச்சியைப்
பொறுத்து மாறு படுகிறது. பொதுவில்
பார்ப்பதற்கு மங்கலாய் கருமை அல்லது
செம்மையேறிய பழுப்பு நிறத்தில்
உருத்திராட்ச மணிகள் காணப் படுகின்றன.
உருத்திராட்ச மணியின் வெளிப்புற பரப்பானது
ஒழுங்கற்ற ஆனால் உறுதியான மேடு
பள்ளங்களுடனும், பிளவுகளுடனும் காணப்
படுகிறது. இந்த கொட்டைகளை உற்று
கவனித்தால் மேலிருந்து கீழாக அழுத்தமான
கோடு போன்ற பிளவுகள் இருக்கும். இந்த
பிளவுகளையே முகங்கள் என்கின்றனர். இந்த
உருத்திராட்ச மணிகளின் வளர்ச்சி மற்றும்
திரட்சியைப் பொறுத்து இவற்றில் பிளவுகள்
அல்லது முகங்கள் அமைகின்றன. ஒரு
முகத்தில் இருந்து 21 முகம் வரையிலான
உருத்திராட்ச மணிகள் கிடைக்கின்றன.
பொதுவில் 95 விழுக்காடு காய்கள் ஐந்து
அல்லது ஆறு முகம் கொண்டவைகளாகவே
இருக்கின்றன.
இந்த காய்களில் உள்ள முகங்களின் அழுத்தம்
மற்றும் இடைவெளியைப் பொறுத்தே இந்த
உருத்திராட்ச மணிகளின் எடை அமைகிறது.
நெருக்கமான இடைவெளியை உடைய காய்கள்
பாரமானதாகவும், அகன்ற ஆழமான
இடைவெளியுள்ள காய்கள் பாரம் இல்லாமல்
லேசானதாகவும் இருக்கும். இத்தகைய
காய்கள் மட்டும் நீரில் மிதக்கும்.
மிக அபூர்வமாய் இரண்டு காய்கள் ஒன்றோடு
ஒன்று இனைந்தது முகங்கள் ஏதும் இல்லதது
போலிருக்குமாம். இந்த வகை மணிகளை
“கவுரி சங்கர்”என்கின்றனர். ஒரு முகம்
மட்டும் அமைந்துள்ள காய்கள் தோற்றத்தில்
முழுமையாக விளைச்சலை அடையாத
காய்களைப் போலிருக்கும். ஏகமுகம், இரண்டு
முகம், மூன்று முகமுடைய உருத்திராட்ச
மணிகளும் அபூர்வமானதாகவும், சக்தி
உடையவனாகவும் கருதப் படுகிறது. இந்த
கருத்தாக்கங்கள் யாவும் நம்பிக்கையின்
பாற்பட்டதே.
உருத்திராட்ச காய்களின் அளவை வைத்து
மூன்று தரமாக பிரிக்கின்றனர். நெல்லிக்காய்
அளவு உருத்திராட்சம், இலந்தைப் பழ அளவு
உருத்திராட்சம், கடலை அளவு உருத்திராட்சம்
என மூன்றாக பொதுமைப் படுத்தப்
பட்டிருக்கிறது. நெல்லிக்காய் அளவுள்ள
உருத்திராட்சங்கள் பூரண பலனையும்,
இலந்தைப் பழ அளவிளான காய்கள் மத்திம
பலனையும், கடலை அளவுள்ளவை அதம
பலனையும் தருமென கூறப் பட்டிருக்கிறது.
பொதுவில் ருத்திராட்சங்கள் மாலைகளாய்
கோர்த்தே பயன் படுத்தப் படுகிறது. நூல்
கயிறு முதல் உலோக கம்பிகள் வரை
மாலைகளாய் கோர்க்க பயன் படுத்தப்
படுகிறது. இப்படி மாலைகளாய் கோர்ப்பதில்
பல தனித்துவமான முறைகள் கையாளப்
படுகின்றது. நான்கு வகையிலான
எண்ணிக்கையில் இந்த மாலைகள் கோர்க்கப்
படுகின்றன. 1, 27, 54, 108 என்கிற
எண்ணிக்கையிலான மாலைகளே பயன்
பாட்டில் இருக்கிறது. இப்படி மாலையாக
கோர்க்கும் போது ஒரே வகையான
முகங்களைக் கொண்ட உருத்திராட்சங்களையே
பயன் படுத்திட வேண்டுமாம். ஆனால்
வர்த்தக ரீதியாக மாலை கட்டுவோர் இவற்றை
கவனத்தில் கொள்வதில்லை.
இப்படி மாலையாக கட்டும் போது ஒரு
உருத்திராட்சம் எக்காரணத்தைக் கொண்டும்
அடுத்த உருத்திராட்சத்தை தொட்டுக்
கொண்டிருக்க கூடாதாம்.
ஏன்?, எதற்கு?

உருத்திராட்ச மணி - சில அபூர்வ தகவல்கள்!

நம் உடலில் அணிந்து கொள்வதற்கு,
பிரார்த்தனைகள் அல்லது மந்திரங்களை
செபிக்கும் போது ஜபமாலையாக பாவிக்க,
இறைவனின் திருமார்பில் ஆபரணமாய்
சூடுவதற்கு என மூன்று விதமான பயன்
பாட்டிற்கென உருத்திராட்ச மாலைகள்
உருவாக்கப் படுகின்றன. ஒரே முகமுடைய
மணிகளால் மட்டுமே இந்த மாலைகள்
அமைக்கப் பட வேண்டும். பெரும்பாலான
உருத்திராட்ச மணிகளின் நடுவில்
இயற்கையாகவே துளையிருக்கும். அப்படி
துளைகள் இல்லாத காய்களில் மட்டுமே
துளைகளை இடுகின்றனர். இந்த தகவல்
அநேக பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஒரு சில குறிப்பிட்ட முகங்களை உடைய
உருத்திராட்ச மணிகளை அவற்றின் மகத்துவம்
கருதி அனைவரும் விரும்பி வாங்குவதால்,
அவை மிக அதிகமான விலைக்கு விற்கப்
படுகின்றன. இதைப் பயன்படுத்தி கொண்டு
சில வியாபாரிகள் அரிய வகை மணிகளை
போலியாக தயாரித்து விற்கின்றனர். இவை
பெரும்பாலும் பிளாஸ்டிக் அல்லது
அரக்கினால் செய்யப் படுகின்றன. இவை
பார்ப்பதர்கு அசலான மணிகள் போலவே
தோற்றமளிக்கும். எளிதில் இனங்காண
முடியாத அளவில் இருக்கும். எனவே அசலான
உருத்திராட்சங்களைப் பார்த்து வாங்கிட
வேண்டும்.
அசலான மணிகளை இனம் பிரித்தறிய சில
எளிய சோதனை முறைகள் உள்ளன. இரண்டு
செப்பு நாணயங்களுக்கு இடையே
உருத்திராட்ச மணியை வைத்தால் அவை
சுழலுமாம். அதே போல ஏகமுக மணியை
நீரோட்டத்தில் விட்டால் அது எதிர்த்து
ஓடுமாம். நான்கு முக உருத்திராட்ச
மணியைத் தவிர மற்ற அனைத்து முகமுடைய
உருத்திராட்ச மணிகளும் நீரில் மிதக்கும்
தன்மையுடையதாம். இது போல வேறு சில
முறைகளும் இருக்கின்றன.
ஒவ்வொரு உருத்திராட்ச மணியும்
தனித்துவமான சக்தி மண்டலமாக கருதப்
படுகிறது. இந்த் மணிகளின் மகத்துவம் பற்றி
தொடரின் நெடுகே பகிர்ந்து கொள்கிறேன்.
இதன் பொருட்டே அவைகளை மாலைகளாய்
கட்டும் போது ஒவ்வொரு மணிக்கும்
இடையே இடைவெளி விடுகின்றனர். இந்த
இடைவெளியாது ஒரு மணி மற்றொரு
மணியை தொட்டு விடாதபடி நேர்த்தியான
முடிச்சுகளால் அமைக்கப் படுகிறது.
பொதுவில் மூன்று வகையான முடிச்சுக்கள்
பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றை
கவனித்துப் பார்த்து வாங்கிட வேண்டும்.
இந்த முடிச்சு வகைகள் நாகபாசம், சாவித்திரி,
பிரமகிரந்தி என அழைக்கப் படுகின்றன.
மாலையின் பயன்பாட்டினைப் பொறுத்து இந்த
முடிச்சுக்கள் மாறுபடும். இப்படி
மாலைகளாய் கோர்க்கும் போது கடைசியில்
இரண்டு முனைகளும் ஒன்றோடு ஒன்று
முடிச்சுப் போடும் இடத்தில் தனியே ஒரு
மணியை அமைக்கின்றனர். இதனை “நாயக
மணி” அல்லது “மேரு மணி” என
அழைக்கின்றனர்.
இப்படி கோர்க்கப் பட்ட ஜெப மாலைகளை
வைத்து செபிக்கும் போது அந்த மந்திரம்
கூடுதல் பலனை தருகிறது. காலை
வேளைகளில் நாபிக்கு சமமாகவும், மதிய
நேரத்தில் மார்புக்கு சமனாகவும், அந்தி
வேளையில் நாசிக்கு சமனாகவும் வைத்து
செபித்திட வேண்டும். அவ்வாறு செய்வதால்
மட்டுமே சரியான பலனை அடைந்திட
முடியும். மேலும் உருத்திராட்ச மணியால்
ஆன செபமாலையை வைத்துக் கொண்டு
மலை உச்சி, நதிக்கரை, காடுகள், குகைகள்,
ஞானிகள், சித்தர்களின் ஜீவசமாதி இருக்கும்
இடங்கள் போன்றவற்றில் இருந்து செய்வது
அதி உன்னத பலனைக் கொடுக்குமாம். இந்த
உருத்திராட்ச மாலைகளை ஆண், பெண்,
குழந்தைகள் என அனைவரும் அணியலாமாம்.

உருத்திராட்சமும் சித்தர்களும்!

உருத்திராட்ச மணி மாலைகள் சித்தர்
பெருமக்களின் அடையாளங்களில் ஒன்றாகவே
இருந்திருக்கிறது. இன்றும் கூட நாம் உருவகப்
படுத்தும் சித்தர் உருவங்களில் இந்த
உருத்திராட்ச மாலைகள் இடம் பெறுவதை
கவனித்திருப்பீர்கள். உருத்திராட்ச மணிகளைப்
பற்றிய குறிப்புகள் பல்வேறு சித்தர்களின்
பாடல்களில் நமக்கு காணக் கிடைக்கிறது.
அந்த பாடல்களை எல்லாம் தொகுத்து இங்கே
பகிர வேண்டுமெனில் இந்த தொடர் இரண்டு
வாரஙக்ளுக்கு மேல் நீளும் என்பதால்
திருமூலர் மற்றும் அகத்தியர்
கூறியவைகளை மட்டும் இந்த பதிவில்
பகிர்ந்து கொள்கிறேன்.
திருமூலர் உருத்திராட்ச மணிகளின்
மகத்துவம் பற்றி பின்வருமாறு
விளக்குகிறார்.உருத்திராட்ச மணிகள் எந்த
அளவுக்கு மகத்துவமானவை என்பது இந்த
பாடல்களின் மூலம் அறியலாம்.
"பூதி யணிவது சாதன மாதியிற்
காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை
ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந்
தீதில் சிவயோகி சாதனந் தேரிலே"
- திருமூலர் -
"காதணி குண்டலம் கண்டிகை நாதமுன்
ஊதுநற் சங்கம் உயர்கட்டி கப்பரை
ஓதுமில் பாதுகம் யோகாந்த ஆதனம்
ஏதுமில் யோகபட் டம்தண்டம் ஈரைந்தே"
- திருமூலர் -
அகத்தியரும் தனது பாடல்களில் உருத்திராட்ச
மணி பற்றிய பல தகவல்களை
கூறியிருக்கிறார். அந்த வகையில் இன்று நாம்
காண இருப்பது மிகவும் அரியதான ஒரு
தகவல். ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர்
அல்லது துறவறம் மேற்கொண்டவர்கள்
உருத்திராட்ச மணி மாலையினை உடலில்
அணிந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். அந்த
மணி மாலைகள் எத்தகையதாக என்ன
அளவுடன் இருத்தல் வேண்டும் என்பதை
அகத்தியர் தனது சீடருக்கு அருளியிருக்கிறார்.
அந்த பாடல் பின்வருமாறு...
"துதிக்கவென்றால் புலத்தியனே
இன்னங்கூர்வேன்
துப்புரவாய் செபமாலை பூணுங்காலம்
மதிக்கவே செபமாலை ருத்திரட்ச
மன்னவனே யாறுமுகந் தானெடுப்பாய்
பதிக்கவே செபமாலை முப்பதிரெண்டு
பாங்குடனே சடையதிலே யணியவேண்டும்
விதிப்படியே ருத்ராட்ச மன்பத்தொன்று
வேதவிதிப் பிரமாணம் செப்பக்கேளே"
- அகத்தியர் -
கேளப்பா புலத்தியனே யின்னங்கூர்வேன்
கொடியான ருத்திராட்சம் மன்பத்தொன்று
மீளப்பா மாலயது களுத்திலேதான்
மிக்கவே தான்றரிக்க விதியேயாகும்
தாளப்பா கரகணுக்கில் செபமாலை
தகமையுட னுத்திராட்சம் பன்னிரெண்டாகும்
வேளப்பா ருத்திராட்சம் கங்கணந்தான்
நாதமுறைத் தான்படியே வட்டமாச்சே"
- அகத்தியர் -
"அட்டமாம் ருத்திராட்ச முழங்கைமேலே
அன்புடனே சரமதுவும் சோடசந்தான்
திட்டமுடன் சோடசமாம் பதினாறப்பா
தீர்க்கமுடன் முழங்கரமா மணியத்துள்ளே
நிட்டையிலே தான்பூண்டு மதியங்கொண்டு
நிஷ்களங்க மானசெப மாலைபூண்டு
சட்டமுட னசுவினியர் சொன்னநீதி
சடாட்சரனே யுந்தமக்கு சாற்றினேனே"
- அகத்தியர் -
மனதை ஒருநிலைப் படுத்தி செபம்
செய்திடும் வேளையில் அணிந்திட வேண்டிய
உருத்திராட்சங்கள் பற்றிய தகவலை தான்
அசுவினி தேவரிடம் இருந்து அறிந்து
கொண்டதாக கூறுகிறார். அதாவது இந்த
உருத்திராட்சங்கள் அனைத்துமே ஆறு
முகங்களை உடையதாக இருக்க வேண்டுமாம்.
முப்பதி இரண்டு மணிகளால் கோர்க்கப் பட்ட
உருத்திராட்ச மாலையினை சடையிலும்,
ஐம்பத்தியோரு மணிகளால் கட்டப் பட்ட
மாலையினை கழுத்திலும், பன்னிரெண்டு
மணிகளால் கோர்க்கப் பட்ட மாலையினை
மணிக்கரத்திலும், பதினாறு மணிகளால் கட்டப்
பட்ட மாலையினை முழங்கைக்கு மேற்பட்ட
பகுதியிலும் அணிய வேண்டுமென்கிறார்.
அடுத்த முறை துறவியர் அல்லது
சிவனடியார் எவரையேனும் சந்திக்க
நேர்ந்தால் அகத்தியர் அருளியபடி
அணிந்திருக்கின்றனரா என்பதை
அவதானியுங்கள்.

உருத்திராட்சமும்! மருத்துவமும்!

உருத்திராட்ச மணிகளைத் தரும் உருத்திராட்ச
மரம் என்பது ஒரு மூலிகைத் தாவரம். சித்த,
ஆயுர்வேத மருத்துவங்களில் இவை மருந்துப்
பொருட்களாக பயன் படுத்தப் படுகின்றன.
மிகவும் அரிதான சில தகவல்களை மட்டும்
இங்கே தொகுத்து பகிர்ந்திருக்கிறேன்.
உருத்திராட்ச மரத்தின் பழமானது கடினமான
ஓட்டுடன் கருநீலமாய் இருக்கும் என
முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இதன்
உள்ளே இருக்கும் சதைப் பகுதியானது
புளிப்பான சாறு நிறைந்திருக்கும்.
மூளையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்
படுவதால் உருவாகும் “காக்காய் வலிப்பு”
என்கிற epilepsy க்கு இந்த பழத்தின் சாறு
அருமருந்தாக கூறப் படுகிற்து. மேலும்
cough, bronchitis, nerve pain, migraine
போன்ற வியாதிகளுக்கு நல்ல பலனை
தருகிறது.
ஒருமுக உருத்திராட்ச மணியை உடலில்
அணிவதன் மூலம் ஆஸ்த்துமா, எலும்புருக்கி
நோய், மூட்டுவலி, பக்கவாதம், கண்களில்
ஏற்படும் பிரச்சினைகளின் தீவிரத்தை தணிக்க
முடியும்
இருமுக உருத்திராட்ச மணியை உடலில்
அணிவதன் மூலம் தீக்காயங்களின் பாதிப்பில்
இருந்து விடுபடலாம் என
கூறப்பட்டிருக்கிறது. மேலும் கவனசிதறல்,
மன அழுத்தம், குழந்தைபேறு இல்லாதவர்கள்
இருமுக மணியை உடலில் அணிவதன் மூலம்
நல்ல பலன் பெறமுடியும்.
மூன்று முக மணியினை அணிவதால்
ஆயுதங்களினால் ஏற்படும் காயங்களின்
பாதிப்பினை குறைக்கலாமாம். மேலும் தாழ்வு
மனப்பான்மை, எதிர்மறை
சிந்தனையுடைய்வர்களுக்கு நல்ல பலனை
அளிக்குமாம்.
நான்கு முக உருத்திராட்ச மணியை உடலில்
அணிவதன் மூலம் இருமல் தொல்லைகளில்
இருந்து தீர்வு பெறலாம். மேலும் இரத்த
ஓட்டம் சிற்ப்பாகும்.
ஐந்துமுக உருத்திராட்ச மணியை உடலில்
அணிவதன் மூலம் உடல்பருமன் பிரச்சினைகள்
மற்றும் இதயக் கோளாறு உடையவர்களுக்கு
நல்ல பலனைத் தருமாம்.
ஆறுமுக உருத்திராட்ச மணியை உடலில்
அணிவதன் மூலம் குழந்தையின்மை, வலிப்பு
மற்றும் பேச்சாற்றல் திறன் பாதிக்கப்
பட்டவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.
ஏழுமுக உருத்திராட்ச மணியை உடலில்
அணிவதன் மூலம் மூச்சுக் கோளாறு மற்றும்
கால்களில் பாதிப்புடையவர்களுக்கு நல்ல
பலனைத் தரும்.
எட்டுமுக உருத்திராட்ச மணியை உடலில்
அணிவதன் மூலம் வயிறு தொடர்பான
பிரச்சினைகள், தோல்வியாதிகளுக்கு நல்ல
தீர்வு கிடைக்கும்.
ஒன்பதுமுக உருத்திராட்ச மணியை உடலில்
அணிவதன் மூலம் தன்னம்பிக்கை பெருகி
உடல் ஆரோக்கியம் மிளிரும்
பத்துமுக உருத்திராட்ச மணியை உடலில்
அணிவதன் மூலம் உறுதியான மனநலம்
வாய்க்கும்.
பொதுவில் உருத்திராட்ச மணிகள் தங்களை
சுற்றியுள்ள வெப்பத்தை கிரகித்துக் கொண்டு
சுற்றுப் புறத்தினை குளிர்விக்கும்
தன்மையுடைவை. இதனை நம் உடலில்
அணிவதால் தேகம் குளிர்ச்சியாகும் என
கூறப் படுகிறது. நம் துறவிகள் ஏராளமான
உருத்திராட்ச மணிகளை அணிந்தன் பின்னால்
இத்தகைய அறிவியல் இருந்திருக்கக் கூடும்.
நாம் அருந்தும் நீரில் உருத்திராட்ச மணியை
ஐந்து நிமிடம் ஊற வைத்து அந்த நீரைப் பருக
உயர் குருதி அழுத்தம் கட்டுக்குள் வருமாம்.
தீராத காய்ச்சல் உள்ளவர்களுக்கு பழைய
உருத்திராட்ச மணியை தேனில் உரைத்துக்
கொடுக்க காய்ச்சல் குறையுமாம். இதைப்
போலவே உருத்திராட்சக் கொட்டையினை
குடிக்கும் நீரில் ஐந்து நிமிடம் ஊற விட்டு
அந்த நீரில் சிறிது மஞ்சள் தூளை சேர்த்துக்
கலக்கி அருந்தினால் எத்தகைய இருமல்
மற்றும், வாந்தி தணியுமாம்.

ருத்ராட்ச மாலை ஒரிஜினல் தானா என்பதை
அறிய எளிமையான டெஸ்ட் ஒன்று உள்ளது .
உங்கள் இடது கை விரல்களை மெதுவாக
மடக்குங்கள் . ஐந்து விரல்களும் மூடிய
நிலையில் , லேசாக வைத்திருங்கள் . அது
யோகத்தில் ஒரு முத்திரை . அப்போது
ருத்ராட்சமாலையை விரலின் முட்டிக்கு
மேலாகத் தொடாமல் தொங்கவிடுங்கள் .
ஓர் ஆச்சர்யம் நிகழும் . ருத்ராட்ச மாலை
அப்படியே மெல்ல வலதுபுறமாகச் சுழல
ஆரம்பிக்கும் . உடனே கையை அதே
பொஸிஷனில் சற்று இறுக்கமாக
வைத்திருங்கள் . அது யோகத்தை முறித்தல்
நிலை . அப்போது மாலை மெல்ல
இடதுபுறமாகச் சுழல்வதை உணர்வீர்கள் .
அப்படிச் செய்தால் அது குறையற்ற ,
சுத்தமான ருத்ராட்ச மாலை . முனிவர்கள்
ருத்ராட்ச மாலை அணிந்த காரணம் புரிகிறதா ?
அந்தக் காலத்தில் முனிவர்கள் காட்டுக்குள்
இருப்பார்கள் . கிடைத்ததைச் சாப்பிடுவார்கள் .
அப்போது அது நல்ல உணவா , கெட்ட உணவா
என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களுக்கு
ருத்ராட்ச மாலைஉதவும் . அதாவது நல்ல
உணவாக இருந்தால் மாலை கடிகாரம் போல்
வலப்புறமாகச் சுற்றும் . விஷமுள்ள உணவாக
இருந்தால் இடதுபுறமாகச் சுழலும் . அதை
வைத்து அவர்கள் நல்ல உணவைக்
கண்டுகொள்வார்கள்

No comments:

Post a Comment