Monday, 14 December 2015

பிராணாயாமம்

பிராணாயாமம்

தச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது.

கண்ணால் காண முடியாத (உயிர், பிராணன், ஜீவன்) எனும் உயிர்க்காற்று நிலவி, நிரவிடும் ( தச வாயுக்களில் ஒன்றான பிராதனமான பிராண வாயு ஆகும்.)

images pirana

ஒவ்வொரு உயிரும் தன் தாயில் கர்ப்பத்தில் உதித்து சிசு வளர்கையில் தன் தாயிடம் இருந்து அதன் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் அடங்கிய ஒரு கலவையை தொப்புழ் கொடியின் மூலம் பெறுகின்றது. ஆணோ அல்லது பெண்ணோ அதற்கு ஏற்ற அவயவங்களில் ஆக்கத்தினையும் முழுமையாக உருவாக்கும்.

செல்களையும் அத்தொப்புழ் கொடியினின்றே அனுப்பப்பட்டு அதன் விளைவாகவே அங்க வளர்ச்சி துவங்கி விட்டது என்றே கூறலாம்.

(ஸ்டெர்ம்செல்ஸ் பேங்க் ) இன்று மனித அங்கங்கள் எவை ஆயினும் அது பழுது பட்டிருந்தாலோ அல்லது நீங்கப்பட்டிருப்பினும் கூட அவற்றை ஸ்டெர்ம்செல்கள் மூலம் முழுமையாக உருவாக்க முடியும் என்று உணர்ந்திருக்கிறார்கள்.

இதன் அடிப்படை யாதெனின் பிராணனின் சித்து விளையாட்டே அது. தாயின் பிராண வாயுத்தொகுப்பு முழுவதும் சிசுவின் முழு அங்கங்களின் (தலை உட்பட) உற்பத்திக்கே செலவிடப்படுகின்றன.

சிசு வளர்ச்சி என்பதற்கு கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் வெளிப்பிராணன் கருவிடம் தன்னைப் பிணைத்துக் கொள்கிறது.

பின் முற்றிய 42 வாரங்கள் முடிந்ததும் குழந்தை அன்னையை விட்டு வெளி உலகிற்கு வந்த பின் ஏற்கனவே பிணையுண்டிருந்த பிராணன் குழந்தையின் வளர்ச்சிக்கும், அதன் அனைத்து வாழ்க்கை இயக்கங்களையும் (Metabolic System) வளர்சிதை மாற்றப்பணிகளை பொறுப்பேற்கிறது.

பிறந்த உடன் துவக்கிய சுவாசம் இறுதி மூச்சு எனப்படும் மரணம் வரை அவனை வாழ வைக்கிறது.

பிராண வாயுக்களோடு (பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்) என்று பெயர்ப்பும் பிரதான ஐந்து வாயுக்களுடன் இதர உப வாயுக்களான (நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன் , தனஞ்செயன் ) என்ற ஐந்து வாயுக்களும் சேர்ந்து தச வாயுக்கள் எனப்படும் பத்து வாயுக்களும் இணைந்திருப்பினும் செயல்படாமல் இருந்தன எனக்கூறலாம்.

கருவீட்டினின்றும் பெருவீடு என்ற இந்த பிரபஞ்சத்தின் பிடிக்கு வந்த பிறகே இந்த பத்து வாயுக்களும் தத்தம் பணியினைத் துவங்கியது என்பதோடு உடலின் பல்வேறு பகுதிகளில் பிராணனோடு இணைந்தும், தனித்தும் பிராணனின் கட்டுப்பாட்டில் பங்கேற்கிறது. தச வாயுக்களும் அதன் தன்மைகளும் பிராணன் ஏனைய வாயுக்களுக்கு எல்லாம் தலைமையாக இருந்து அனைத்து உறுப்புகளுக்கும் உயிரூட்டும் வகையில் ரத்த ஓட்டத்தின் மூலம் பிராண வாயுவினை அளித்து வருகிறது.

இப்பணிக்கு வாசி என்ற சுவாசத்தை பயன்படுத்தி அச்சுவாசத்தின் மூலம் அச்சுவாசத்தினுள் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்கிறது. இது மேல் நோக்கிய பாய்ச்சலைக்(ஓட்டம்)கொண்டது.

அபானன்

அபான வாயு கீழ் நோக்கிய பாய்ச்சலைக்(ஓட்டம்)கொண்டது. “மலக்காற்று” எனவும் இதற்குப் பெயர் உண்டு.

குண்டலினி போன்ற மா சக்திகளைப் பெறுவதற்கு இன்றியமையாதது மட்டுமின்றி குறிப்பிட்ட சில பயன்களுக்காக அபானன் வெளியேறி விடாமல் இருக்கச் சில பந்தங்களை இயற்றி அப்பலன்களை அடைவாரும் உண்டு.

கும்பகம் என்ற உள்நிறுத்த சுவாசப்பயிற்சியின் பலன்கள் எண்ணிலடங்காதது என சித்தர்கள் கூறுகின்றனர். அவ்வமயம் அபானனை வெளியேறி விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இதில் தவறு ஏற்படுமாயின் கும்பகப்பயிற்சி பலன் அற்றதாகி விடும் என்றும் எச்சரிக்கின்றனர்.

வியானன்

இதன் உற்பத்தி மூலத்தானமாக மண்ணீரல் விளக்குகிறது. உணர்வு நரம்புகள் (கட்டளை நரம்புகள்) மற்றும் உணர்வுகளை எற்றிசெல்லுதல் ,செயல் படுத்துதல் நரம்புகளாகவும் மற்றும் இரு நரம்புகளுக்கு இடையே வியாபகம் பெற்ற நரம்பணுக்களை கட்டுப்படுத்துவதாகவும் நரம்புகளின் கேந்திரமான மூளையையும் செயல்படுத்தும் (இயங்கும்) வகையில் தொழில் புரிய வைப்பதும் வியானன் என்ற வாயு ஆகும் . இதனை தொழிற்காற்றென அழைப்பர்.

உதானன்

மூச்சு மண்டலத்தின் மேல் பகுதியில் உள்ள முன் தொண்டை, மூக்கு ,குரல் வளை, மூச்சுக்குழல் , மூச்சின் இதர கிளை குழல்கள் ஆகிய கருவிகளின் உதவியினாலும் நாபி எனும் பகுதியில் இருந்து பிராண உந்துதலால் குரல் (சப்தம்) எழும்புவதற்கு அடிப்படை உதானன் என்ற ஒலிக்காற்று ஆகும். மேலும் குரல் வளையினுள் உட்பக்கத்திற்குள் இரண்டு பக்கத்திலும் பக்கத்திற்கு இரண்டு திசுக்களான மடிப்புகள் இடைவெளியுடன் அமையப்பெற்றுள்ளன . இம்மடிப்புகள் குரல் நாண்கள் எனப்படுவதாகும். இதனுள்ளே உதானன் செல்கிறபோது குரல் நாண்கள் அதிர்ந்து ஒலியினை எழுப்புகின்றன.

சமானன்.

உடலின் அனைத்துப் பகுதிகளில் உள்ள திசுக்கள் மற்றும் மிக நுண்ணிய உடலணுக்களை வளர்க்கவும் பராமரிக்கவும் காரணியாய் உள்ளதும் பல்வேறு வகை புரதம் மற்றும் இதர தாதுக்களை உணவில் இருந்து பிரித்தல் , உணவை செரித்தல் , அவ்விதம் செரித்தல் மூலம் கிட்டிய சத்துக்களை உடல் முழுதும் பரவச்செய்தல் போன்ற பணிகளைச் செய்யும் வாயுவே சமானன் ஆகும் . இதனை நிரவுக்காற்று(பரப்புதல்,சேர்ப்பித்தல்)எனப் பெயர்பெறுகிறது.

நாகன்

பிராணனின் தலைமை வாயிலான மூக்கு மற்றும் கேந்திர பாகமான நுரையீரலின் அனைத்துப் பகுதிகளிலும் நோய்த் தொற்று ஏற்படுத்தும் கிருமிகள் தூசு, மாசுக்காற்று , ஆகியவைகள் உட்புகாமல் வெளியேற்றும் வகையில் மூளையின் அதிவேக கட்டளையின்படி சாதரண மூச்சின் அழுத்தம் மற்றும் வேகத்தை விட பல நூறு மடங்கு வேகமும் அழுத்தமும் கொண்ட தும்மல் என்ற நிகழ்வினை ஏற்படுத்தும் வாயு நாகன் ஆகும். இதனை “தும்மற்காற்று” எனக்கூறுவர். மேலும் கபாலத்தின் கீழ்ப்பகுதி ,கண்களின் நேர்பின் பகுதி , மூக்கின் வலது மற்றும் இடது உள்பள்ளப்பகுதி (CAVITY) ஆகியவற்றின் சவ்வுகளின் ஒவ்வாமை (அலர்ஜி) காரணமாக இறந்த செல்களை வெளியேற்றவும் , தும்மல் மூலம் வெளியேற்றுதலுக்கு நாகன் வாயு உதவிபுரிகிறது.

கூர்மன்

உள்விழி நீரை சரியான அழுத்தத்தில் வைத்திடவும் விழிகளின் அசைவிற்கு துணை புரிவதும் , மகிழ்ச்சி ,சோகம் மற்றும் விழிக்கு ஒவ்வாத நிலையினை ஏற்படுத்தும் காலங்களில் விழி நீர் என்ற கண்ணீரை வரவழைப்பதும் கூர்மன் என்ற வாயுவின் பணியாகும். குறிப்பு – விழிநீரில் சோடியம் குளோரைடு என்ற உப்பு நீர், அல்குமீன் , என்ற முட்டைச் சத்து சிறிதளவு சளி போன்ற கிருமி நாசினிகளை வெளியேற்றி விழிகளை பாதுகாப்பதும் கூர்மனின் பணியாகும்.

கிருகரன்

மூளை தனக்கு ஒய்வு பெற எண்ணும்போதும் மூச்சின் வேகம், மூச்சின் எண்ணிக்கை இரண்டையும் குறைக்க முயலும்போது அந்நேரம் உறக்கம் வருவதற்கு “கொட்டாவி” என்ற செயலை ஏற்படுத்துவது கிருகரன் ஆகும். அவ்வேளை நுரையீரல் உள்ளே உட்புகும் வெளியேறும் பிராண வாயு குறைவினால் உடலின் அனைத்து பாகங்களிலும் பிராண வாயு ஏற்றம் திடீரெனக் குறைவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் நுரையீரலை வேகமாகச் சுருங்கி விரியும் தன்மையினை ஏற்படுத்தி நுரையீரல் பிராண வாயு பற்றாக்குறையினைச் சரிப்படுத்தும் நோக்கமும், ஆக இவ்விரு பணிகளையும் செய்து முடிப்பதும் கிருகரன் என்ற வாயுவின் பணி ஆகும்.

தேவதத்தன்
விழி உலராயிருக்கவும் , விழியை பாதுகாக்கவும் ,இமைகளை இமைத்தல் (நிமி) என்ற பணியை மேற்கொள்வது தேவதத்தன் ஆகும். மேலும் நாம் உறங்கும் சமயம் தவிர்த்து விழித்திருக்கும் முழுதும் இடைவிடாது செயாலற்றும் வாயுவை தேவதத்தன் என்பர்.

தனஞ்செயன்
மனித உடல் இறந்து பட்டு வீழ்ந்தபின் ஏனைய ஒன்பது வாயுக்களின் பணிகள் முற்றிலும் நின்று விடும். அத்துடன் அவை யாவும் உடலை விட்டு வெளியேறிவிடும். ஆனால் தனஞ்செயன் மரித்த உடலில் இயங்கிக்கொண்டு இருந்த ஒவ்வொரு செல் (நுண் திசுக்கள்) இயக்கமறச்செய்து விடுகிறது. அவ்வமயம் தனஞ்செயன் நுண் கிருமிகளைத் தூண்டிவிட்டு வெளியே இருந்து வெளிக்காற்று, ஒளி உட்புக முடியாமல் உடல்தோல் மற்றும் தசைகளை விறைக்கச் செய்வதும் உடலை வீங்க வைத்தும் பின் உடலில் இருந்து வெளியேறிவிடுகிறது. இதனை வீங்கற்காற்று என அழைப்பர்.

இவ்விதமாய் தசவாயுக்களும் நம் உடலில் பல்வேறு செயல்களும் தன்னிச்சையாக செயல்படுகிறது. உயிர்க்காற்று (பிராண வாயு) யின்றி ஏனைய ஒன்பது காற்றுகளும் செயல்படமுடியாது.

எனவே பிராணனை நன்கு இயக்கி பிராணனுள் பிராணனால் சக்தியூட்டி பிராண ஆற்றலை மேம்படுத்தி அதன் வழியே உடல், மனம் இரண்டின் இயக்கங்களை நம் கட்டுபாட்டில் கொணர்ந்து உடற்சக்தி , உளசக்தி இரண்டின் துணையுடன் மூன்றாவது ஆன்ம சக்தியை எழுப்பி அதன் மூலம் தேவையான போது உடல் இயக்கத்தை முற்றிலும் நிறுத்தி ஆன்ம எழுச்சி முதிர்கின்ற போது இவ்வுடற் சக்தியின்றியே இறைசக்தியினை உணர்வதற்கு ஞானிகள் கூறிய யுக்தியே பிராணனை வசமாக்கும் “பிராணாயாமம் ” ஆகும்.

No comments:

Post a Comment