Friday, 18 December 2015

சதுரகிரியில் சித்தர்களை நேரில் தரிசிக்க.....

சதுரகிரியில் சித்தர்களை நேரில் தரிசிக்க.....

சதுரகிரி மலையில் சித்தர்களை நேரில் தரிசிக்கும் முறை ஒன்று கோரக்கர் அருளிய ரவிமேகலை என்னும் நூலில் காணக் கிடைக்கிறது.

அந்த தகவல் பின்வருமாறு..

பக்தியுட னெனதுகோர குண்டாப் பாறை பருநீருஞ் சுனையருவிப் பாய்ச்சல் புத்தேன் நித்தியமும் நிறைந்திருக்கும் மலையின் சாரல் நீரோடுங் கால்புனல்வாய் யருவிப் பக்கல் சித்தர்களைக் கண்டிடவென் பாறை யுற்றுச் சிதறாமல் நானோதும் மந்திரத்தை முக்திபெறக் கண்மூடி நாற்பத் தைந்துநாள்
முயங்காம லிருந்துதோத் திரமும் பாரே.            

தீமையைக் குகையிருக்கும் சித்தர் முத்தர் தீவிரமாய் உனக்குவரம் தருவார் வந்து ஊமையென்ற சங்குமையம் உதிக்கக் காட்டி உண்மையுடன் ஓர்மொழியை உபதே சிப்பார் ஆமையெழுத் தானதோ ராதி பீடம் ஆதார மென்றபரை நாட்டாஞ் சொல்வார் தூமையென்ற கதிகோடு அமுதர் பானத் தூடாடுஞ் சோதிநிலைச் சொரூப மீவார்.  

சதுரகிரி மலைச் சாரலில், சுனையருவிக்கு அருகில் உள்ள புனல்வாய் அருவிப் பக்கமாய் கோரக்கர் குண்டா என்றொரு பாறை இருக்கிறது.

அந்த பாறைக்கு வந்து தான் சொல்லியுள்ள மந்திரத்தை நாற்பத்தி ஐந்து நாள் கண்மூடி இருந்து செபித்து வந்தால் சித்தர்களை தரிசிக்கலாம் என்கிறார். 

தொடர்ந்து நாற்பத்தி ஐந்து நாள் மந்திரத்தை செபிக்க மந்திரம் சித்திக்குமாம்.

மந்திரம் சித்தியடைந்ததும் குகையில் இருக்கும் சித்தர்கள்  காட்சி தந்து "ஊமை" என்று அழைக்கப்படும் சங்கு மையத்தை விழிப்படைய செய்து குரு உபதேசமும் செய்வார்கள் என்கிறார்.

பின்னர் ஆமை எழுத்தை பீடமாக கொண்ட ஆதாரத்தை நாடும் வழிமுறைகளையும் சொல்லி சோதி நிலைச் சொரூபமும் தருவார்களாம்.

இத்தனை சிறப்பு பொருந்திய இந்த மந்திரத்தை வார்ச்சடையை உடைய ஆத்தாள் தனக்கு சொல்லியதாகவும் அதனை தான் உலகத்தாருக்கு சொல்வதாகவும் கூறியிருக்கிறார்.
         
வாச்சடை யாளத்தா ளுரைத்த மந்திரம் வழங்கிடுவேன் வையகத்தில் வஞ்ச மின்றி நேர்பெறவே ஓம். பசு.பரபதிபக்ஷ  ராஜ நிரதிசய சித்ரூப ஞான மூர்த்தோய்
தீர்க்க நேத்ராய, கண, கம், கங், கெங், லங் லிங், லங், லா, லீலம், ஆவ், பாவ்,ஆம்,ஊம் பார்கவ்விய சோதிமய வரப்பிர சன்ன பாத தரிசியே கோரக்கர் சரணாய நமஸ்து.    

ஓம் பசுபரபதிபக்ஷ ராஜநிரதிசயசித்ரூப ஞானமூர்த்தாய தீர்க்கநேத்ராய கணகம்கங் கெங்லங் லிங்லங் லாலீலம் ஆவ்பாவ் ஆம்ஊம் பார்கவ்விய ஜோதிமய வரப்பிரசன்ன பாத தரிஸ்ய கோரக்க சரணாய நமஸ்து.

சதுரகிரி மலையில் மோட்சம் கிடைக்க....

ஞான மார்க்கத்தின் உயரிய நிலை முக்தியடைதல் அல்லது வீடு பேறடைதல்.

இத்தகைய நிலையினை அடையும் பாதையானது அத்தனை எளிதானதில்லை.

குருவருள் துனை நிற்க கவனக் குவிப்புடன் கூடிய தொடர் பயிற்சி மற்றும் விடா முயற்சியினால் மட்டுமே இது சாத்தியமாகும்.

ஆகக் கடினமானதும், மிக உயரியதுமான இந்த முக்தி நிலையினை சதுரகிரி மலையில் அடையும் வழியொன்றினை அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்கு அருளியிருக்கிறார்.

"கேளடா சதுரகிரியின் வளமைதன்னை காண்பவர்க்கு கெதிமோட்சங் கிட்டுங்கிட்டுங் ஆளடா சதுரகிரி என்கோணமாகும் அருளான கோணமெல்லாம் குகைதானுண்டு சூளடா கிரிமுடியில் குகைதானுண்டு
சொன்ன குகை ஒன்பதிலும் நவசித்தர் தளடா சிறப்புடனே தவசுபண்ணி தன்னருளால் பிர்மமய மானார்பாரே"

- அகத்தியர் -

சதுரகிரி மலையானது எண்கோண வடிவில் அமைந்திருப்பதாகவும், இந்த எட்டு மூலைகள் மற்றும் நடுவிலிருக்கும் சதுரகிரி உச்சி என ஒன்பது இடங்களில் குகைகள் இருப்பதாக கூறுகிறார்.

இந்த குகைகளில் நவ சித்தர்கள் சிறப்பாக தவம் செய்து அருள் பெற்று பிரம்ம மயமானார்களாம்.

இந்த ஒன்பது குகைகளையும் தரிசிப்பவர்களுக்கு மோட்சம் கிடைக்குமென அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்கு கூறியிருக்கிறார்.

த்ற்போது சதுரகிரி மலையானது சுமார் ஐநூறு சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கிறது.

அக்காலத்தில் இந்த மலையின் பரப்பளவு இன்னமும் கூட அதிகமாய் இருந்திருக்கலாம்.

அடர்ந்த வனமான இந்த மலையில் கால்நடையாகவே எட்டு மூலைகளுக்கும் பயணித்து மொத்தமுள்ள ஒன்பது குகைகளையும் தரிசிப்பதில் உள்ள மேலான சிரமங்கள் ஒருவரை பக்குவமானவராய் ஆக்கி விடக்கூடும்.

இத்தகைய பக்குவமானது ஒருவரை மேலான முக்தி நிலைக்கு உயர்த்தி விடலாமென கருதுகிறேன்.

மேலும் இந்த பாடல்வழியே சதுரகிரி மலையானது எண்கோண வடிவில் அமைந்திருப்பதும் புலனாகிறது.

சதுரகிரி மலையில் இப்படி எத்தனையோ ஆச்சர்யங்கள் மறைந்தும் , நிறைந்துமிருக்கின்றன.

No comments:

Post a Comment