Saturday, 12 December 2015

குல தெய்வ வழிபாடு - 6

குல தெய்வ வழிபாடு  - 6


6
ஒரு குலம் என்பது அந்தந்த வழிக் குடும்ப பாரம்பரியத்தைக் குறிக்கும். அந்த கால வம்சத்தினர் தமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை வைத்துக் கொண்டு இருந்தார்கள். தமக்கு காவல் தேவை, தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் போன்றவற்றுக்காக குல தெய்வ வழிபாட்டை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு இருந்தார்கள். மற்ற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு குலதெய்வத்திற்கு மட்டும் தான் உண்டு. குலம் தழைக்க வேண்டும், முன்னோர் சாந்தி அடையவேண்டும், பின்னோர் செழிக்க வேண்டும் என்று நம் முன்னோர்களால் வழிபடப்பட்ட குல தெய்வத்தின் அருள் நம் மீது பட்டால் துன்பங்கள் பறந்திடும் என்ற நம்பிக்கைகள் பரவி இருந்தன.
 
ஒவ்வொரு வம்சத்தினரும் தமது கிராமங்களில், காட்டுப் பகுதிகளில், நகரங்களை விட்டு வெகு தொலைவில் அவரவர்கள் குடி இருந்த பகுதிகளில் இருந்த ஏதாவது ஒரு இடத்தில் இருந்த ஆலயத்தில் சென்று குல தெய்வத்தை வழிபட்டார்கள். ஆனால் காலம் மாறிக் கொண்டே இருக்க  மெல்ல மெல்ல முன்னர் நான் கூறிய நிலைகளினால் குல தெய்வ வழிபாடுகளும்  மறையத் துவங்கி இருந்தன. அது கலி காலத்தின் ஆரம்ப நிலையையே குறித்தது.

ஆமாம் குல தெய்வ ஆலயங்கள் எப்படி கிராமங்களில் தோன்றின? அவற்றில் இருந்த தெய்வங்கள் எப்படி அங்கு வந்தன என்பதே அடுத்த முக்கிய கேள்வியாகும்.

புராணங்களைப் படித்தோம் எனில் பல தெய்வங்கள் தமக்கு ஏற்பட்ட சாபங்களை நிவர்த்தி செய்து கொள்ள பூமியில் பிறப்பு எடுத்து அங்கு வந்து அவரவர்களுக்கு தரப்பட்டு இருந்த விதிப்படி சிவனையோ, விஷ்ணுவையோ, இல்லை பிற கடவுளையோ வழிபாட்டு அவர்களுடைய தரிசனத்தைப்  பெற்று தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டு மீண்டும் பழைய தெய்வீக உடலை அடைந்தார்கள் என்ற கதைகள் பலவும் உண்டு. அவை உண்மையானவை. அப்படி தெய்வங்கள் பூமிக்கு வந்து மனித உருவிலே வாழ்ந்து தமது சாபங்களை விலக்கிக்  கொண்டப்  பின்னர் தாம் மனித உடலில் இருந்த அந்த உடலை பூமிக்குள் புதைய  வைத்து விட்டே சென்றன. ஆனால் அந்த மனித உடலைத் துறந்து சென்றபோது தமது உண்மையான உருவத்தை அதற்குள் பதிய வைத்து விட்டே சென்றிருந்தன என்பதினால் பூமிக்குள் புதைந்து கிடந்த தேவ மனிதர்களின் உடல்கள் சிதைந்து போகாமல் காலப் போக்கில் கற்களாகி விட்டன.

மனித உடல்களுக்குள் தேவ உடல்கள் புகுந்தபோது அந்த உடல்கள் தேவ உடல் அமைப்புடன் இருந்தது என்பதின் காரணம் ஒரு அச்சு போல அவை அந்த பாறைகளில் பதிந்தன. அதனால்தான் பின்னர் கற்களாக மாறிய சிலைகள் தேவ உருவத்துடனேயே அமைந்து இருந்தன. மக்களுக்கும் அந்தந்த தெய்வங்களின் உருவங்கள் இப்படி இருக்கும் என்பதும் தெரிய வரலாயிற்று.

இன்னும் சில தெய்வங்கள் பூமிக்கு வந்து வனப்பகுதிகளில் தவம் செய்தவாறு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இருந்து சாப விமோசனம் அடைந்தன. தெய்வங்கள் குடி இருந்திருந்த உடல்கள் சீரழிந்து போவதில்லை என்பதினால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒரே இடத்தில் அமர்ந்து  தவமிருந்த நிலையில் இருந்த அவர்களது உடல் அந்த நிலையிலேயே கல்லாகி விட அதனுள் இருந்த அவர்களது ஆத்மா மட்டுமே சாப விமோசனம் பெற்று தேவ லோகம் சென்றன. அதனால் தெய்வங்கள் எந்த நிலையில் அமர்ந்திருந்தனவோ அந்த அமர்ந்திருந்த நிலையிலான சிலைகள் பிற்காலத்தில் கிடைத்தன. அது அந்தந்த தெய்வங்களின் உருவ அமைப்பும் ஆயிற்று.

கல்லாகிக் கிடந்திருந்த இன்னும் சில தெய்வங்களின் உடல்கள்  வெள்ளங்கள் வந்தபோது நதிகளில் மூழ்கி மறைந்து இருந்தன. இப்படியாக கல்லாகி கிடந்த சிலை உருவிலான உடல்கள், பூமிக்குள் புதைந்து கிடந்த உடல்கள் மற்றும் நதிகளில் மூழ்கிக் கிடந்த உடல்கள் என அனைத்துமே காலப்போக்கில் பல யுகங்களிலும் அங்காங்கே வெளியில் வந்தன. மனிதர்களால் கண்டெடுக்கப்பட்டன. பிற்காலத்தில் அங்கெல்லாம் அந்தந்த தெய்வங்களின் கோவில்கள் எழுந்தன. இதற்கு உதாரணமாக பல நிகழ்வுகள் புராணங்களில் காணப்படுகின்றன.
திருப்பதி  வெங்கடாசலபதி சரித்திரத்தில் 
பூமியிலே விஷ்ணு புதைந்து கிடந்தார் 
எனக் கூறப்பட்டு உள்ளது

திருப்பதி வெங்கடாசலபதி லஷ்மி தேவியைத் தேடி அலைந்து தன்னை மறந்து பூமிக்குள் புதைந்து  இருந்து தவமிருந்துள்ளார். அவரே சேஷாசலத்தில்  ஸ்வயம்புவாக சிலை உருவில் எழுந்தருளினார்.

ஆலகால விஷத்தை முழுங்கிய சிவபெருமான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ரிஷிகேசத்தின் நீலகண்ட மகாதேவர் மலைப்பிரதேசத்தில்  மயங்கி  சிவலிங்க உருவிலான அமைப்பில் கல்லாகிக்  கிடந்துள்ளார்.   அங்கு அவருடைய ஆலயம் எழுந்துள்ளது. சிவனுடைய தோற்றத்தைக் காட்டும் ஸ்வயம்புவான சிலைகள்  காணப்பட்டது இல்லை என்ற அதிசயத்தின் காரணம் அவரால் தனித்து இயங்க முடியாது என்பதினால் சிவனும் சக்தியும் இணைந்திருந்த உடல் அமைப்பான சிவலிங்க உருவிலேயே அவர் அனைத்து இடங்களிலுமே சிலைகளானார் என்பது ஐதீகம்.

இலங்கையில் கதிர்காமத்தில் இருந்த முருகனும் வள்ளியை மணந்து கொண்டப் பின் சில காலம் அங்கேயே தங்கி இருந்தப் பின்  பூமியில் மறைந்து போய் வேல் உருவில் நிற்க அங்கு அவரது ஆலயம் எழுந்தது. தமிழ்நாட்டின் காஞ்சீபுரம் அருகில் உள்ள திருப்பாற்கடலில் மஹாவிஷ்ணு ஸ்வயம்புவாக எழுந்துள்ளார்.

வடநாட்டின் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத்தில் உள்ள சிவலிங்கங்கள் பூமியில் இருந்து கிடைத்ததே. அது மட்டும் அல்லாமல் மாடு உருவில் இருந்த சிவபெருமானை பாண்டவ சகோதரர்களில் ஒருவரான பீமன் பிடித்து விட சிவபெருமான் அங்கேயே சிவலிங்கமாகி  விட்டார். மயிலையில் உள்ள மல்லீஸ்வரர் ஆலயத்திலும் ஸ்வயம்பு சிலைகளே உள்ளதென தல புராணம் மூலம் அறிகிறோம். கல்லாகிக் கிடந்த அகலிகை ராமரின் ஸ்பரிசத்தினால் மீண்டும் உயிர் பிழைத்து எழுந்தாலும், அவளது உடல் அங்கு கல்லாகிக் கிடந்தது.

இதைப்  போல பார்வதி, லஷ்மி போன்ற பல பெண் தெய்வங்கள் பல அவதாரங்களில் பூமியில் பல இடங்களில் மனித உருவில் தோன்றி தவமிருந்து சாப விமோசனம் பெற்று தேவ லோகத்துக்கு திரும்பிச் சென்றபோது அவர்களது உடல்கள் அவரவர்கள் இருந்த உருவத்திலேயே கல்லாகி பூமியிலே புதைந்து இருந்தன. சில அம்மன் சிலைகள் பாம்புப் புற்றில் கண்டெடுக்கப்பட்டன. அவை சிலைகளாகி கிடந்தன.

இப்படியாக ஆயிரக்கணக்கான தெய்வ சிலைகள் பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்டாலும் அவற்றில் சிலவற்றுக்கு மட்டுமே தனி ஆலயங்கள் எழுந்தன.  அவை பெரும்பாலும் கிராமப் பகுதியிலேயே இருந்தது என்றாலும் பின் காலத்தில் அந்த கிராமங்கள் பலவும் நகரங்களாகி விட்டன. ஆகவே கிராம ஆலயங்களாக இருந்தவை பல மன்னர்கள் ஆண்ட காலத்தில், அந்தந்த  மன்னர்கள் அவற்றை  விசாலப்படுத்தி பெரிய பெரிய ஆலயங்களாக நகரத்துக்குள் எழுப்பியபோது அவை ஆலயங்களாயின. இப்படியாக  ஸ்வயம்புவாக எழுந்த சிலைகளில் அமைந்திருந்த ஆலயங்கள் பலவும் சில பரம்பரையினரின் குல தெய்வங்கள் ஆயின.

இன்னும் சில கிராம ஆலயங்கள் ஸ்வயம்புவாக எழுந்த சிலைகளினால், வீர மரணம் எய்திய கிராமத்தினரின்  சிலைகளினால், வீரச் செயல் செய்த பெண்களினால், கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்களின் சிலைகளினால்,  ஊரைக் காத்த வீரர்களின் சிலைகளினால், தெய்வமாகி விட்டவர்களின் சிலைகளினால் மற்றும் அகால மரணமடைந்தவர்களின் சிலைகளினால் உருவாக்கப்பட்டு அவை அந்தந்த கிராமத்தினருக்கு காவல் தெய்வமாக அமைந்தப்பின் சில காலம் பொறுத்து  தேவ கணமாக மாறிய அவை சிலரது வம்ச குல தெய்வமாக அமைந்து விட்டிருந்தன.

சில கிராமங்களில் முந்தைய நூற்றாண்டில் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனிக் கோயில்  அமைக்கப்பட்டு இருக்கும். அதையே அவர்கள் குல தெய்வமாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள். உதாரணத்துக்கு சில குல தெய்வ ஆலயங்களை கீழே தந்துள்ளேன்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள ஊர் செட்டிமல்லன்பட்டி என்ற ஊரில்  இல்லத்துப் பிள்ளைமார் சமூகத்தை  சேர்ந்தவர்கள்  வழிபடும் குல தெய்வ ஆலயமான  துர்க்கை அம்மன் கோயில் உள்ளது .

தமிழ்நாடு, கரூர் மாவட்டத்தில், கரூர் நகரத்திற்கு மேற்கே வாங்கல் என்னும் ஊரில் உள்ளது கொங்கு வேளாளர் சமுதாயத்தின் குல தெய்வ ஆலயமான  புதுவாங்கலம்மன் கோவில்  என்பது. 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகிலுள்ள தாமரைக்குளம் எனும் ஊரில் வாணியர் இனத்தவர் குல தெய்வமாக வணங்கும்  சீலக்காரியம்மன் கோயில் உள்ளது. அந்த ஆலயத்தில் சீலக்காரியம்மன் மூல தெய்வமாக இருக்க, பத்ரகாளி, மாரியம்மன், கணபதி, முருகன், பைரவர் போன்ற தெய்வங்களும் வணங்கப்படுகின்றன. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கணவனை இழந்த பெண்கள் இறந்த கணவன் உடன் அழிக்கப்படும் சிதையில் உடன்கட்டை ஏறி உயிர்விடும் வழக்கம் இருந்து வந்தது. இப்படி உடன்கட்டை ஏறிய சில பெண்கள் தெய்வங்களாக இருந்து அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றுவதாக ஒரு நம்பிக்கை அன்றைய மக்களிடையே இருந்து வந்தது. அப்படி உயிரைத் துறந்த பெண்கள்  தம்மைக் காக்கும்  தெய்வங்களாக ஏற்கப்பட்டார்கள். அவர்கள் கிராம தெய்வங்கள் ஆயினர். அப்படி தெய்வமானவளே   சீலக்காரியம்மன் என்கிறார்கள்.  சில பிரிவு நாடார்கள் மற்றும் பிள்ளைமார்களும்  அவளை தமது குல தெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.  சீலக்காரிக்கென தனியாக சிலை எதுவுமின்றி அவள் இறந்த போது அணிந்திருந்த ஆடை, அணிகலன்களை ஒரு பெட்டியில் வைத்து அடைத்து அதையே தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் சலுப்பபட்டி கிராமத்தில் உள்ள அக்கினி வீரண்டாள் கோவில் என்பது  அகமுடையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குலதெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ள கோயிலாகும். பதினேழாம் நுற்றாண்டின் இறுதியில் சாப்டூர் பாளையக்காரர் படையில் இருந்தவாறு எதிரிகளுக்கு எதிராக வீரப்போர் புரிந்து வீர மரணம் அடைந்த  ஒரு தளபதியின் மனைவி வீரக்காள் என்பவர் பாளையக்காரரிடத்தில் சந்தனக்கட்டையை பெற்று தீ மூட்டி அக்கினியில் குதித்து தன் உயிர் நீத்ததாகவும், ஆனால் அவரது சேலை மட்டும் தீயில் எரியவில்லை என்றும் அதனால் அவளை அக்கினி வீரண்டாள் எனப் பெயரிட்டு தமது குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு உள்ளார்கள் என்கிறார்கள். 

அதைப் போல ராஜ கம்பளம் சமூகத்தினரின்  குல தெய்வ ஆலயமான சோலை சாமி ஆலயம் என்பது  தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள  எப்போதும் வென்றான் எனும் கிராமத்தில்  உள்ளது. அங்குள்ள  தெலுங்கு மொழி பேசும் அருந்ததியர் சமூகத்துக்கும் அதுவே குல தெய்வ ஆலயமாம்.

தொட்டிய நாயக்கர் எனும் இனத்தவரால் வழிபடப்படும் குல தெய்வமே ஜக்கம்மா தேவி என்ற தெய்வம். அவள் போயசம்மா, எல்லம்மா, ஜக்கும்மா, போலேரம்மா, பொம்மம்மா போன்ற பெயர்களினால் அழைக்கப்படுகிறாள். அவளை குல தெய்வமாக ஏற்று இருந்த மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனும்  ஒருவராவார். 

பெரியாண்டிச்சி எனும் பெண் தெய்வம்   தமிழ்நாட்டில் வன்னியர்களில் ஒரு பிரிவினரால் வழிபடப்படும் குலதெய்வம் ஆகும்.  சேலம் மாவட்டத்திலும், தருமபுரி மாவட்டத்திலும் அதிகமாக பெரியாண்டிச்சி கோயில்கள் உள்ளன.

இப்படியாக பல்வேறு இடங்களிலும் பல்வேறு சமூகத்தினரின் குல தெய்வமாக உள்ள கிராம மற்றும் நகர ஆலயங்கள் உள்ளன. அவற்றில் சில  ஆகம வழிமுறையிலான பூஜை முறைகளைக் கொண்டவை.  சிலஆகம வழிமுறையிலான பூஜைகளைக் கொண்டிருக்கவில்லை. சில ஆலயங்களில் பல்வேறு ஆதீனத்தார்களின் முயற்சியினால் தமிழ் மொழியிலான மந்திரங்களை ஓதி பூஜைகள் செய்யப்படுகின்றன.  இன்னும் சிலவற்றில் வேத பாடங்களைக் கற்றறிந்த அந்தணர் மற்றும் அந்தணர்கள் அல்லாதவர்கள்  அர்ச்சகர்களாக இருந்தவாறு  பூஜைகளை செய்கிறார்கள். 
..........தொடரும்

No comments:

Post a Comment