Saturday 30 January 2016

காலச் சக்கரம்

தெரிந்து கொள்வோம்.

காலச் சக்கரம்

காலக்கணிப்பின் அடிப்படை
அறுபது நொடி கொண்டது.

ஒரு விநாடி அறுபது விநாடி கொண்டது ஒரு நாழிகை அறுபது நாழிகை கொண்டது ஒரு நாள்
முன்னூற்று அறுபது நாள் கொண்டது ஒரு (சாந்திர) வருடம் (Lunar Year)
ஆகவே ஒரு வருடத்தில் 21, 600 நாழிகைகள் உண்டாம்.

எமக்கு ஒரு நாளில் நடக்கும் சுவாசமும் 21, 600. இது சிதம்பர இரகசியத்தின் ஒரு பகுதி. சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலத்தில் உள்ள
பொன் ஓடுகளின் எண்ணிக்கை 21,600. இந்த பொன் ஓடுகளைத் தைத்துப் பொருத்தியுள்ள ஆணிகளின் எண்ணிக்கை 72, 000. இது எமது
உடலில் உள்ள 72, 000 நாடிகளைக்
குறிக்கின்றது.

சிதம்பரத்தில் இருந்து தீக்ஷிதர்களை விரட்டியடிப்பதில் முனைப்பாக
இருக்கும் சைவர்களாகிய நமக்கு அங்கிருக்கும் ஓடுகளையும் ஆணிகளையும் கவனிக்க எங்கே
நேரமும், அக்கறையும் இருக்கப்போகின்றது?

360 மானுட வருடங்கள் = ஒரு தேவ வருடம். இவ்வாறு 4000 தேவ வருடங்கள் கிருத யுகம்; இதனோடு 400 தேவ வருடங்கள் இதன் தொடக்கம்; நானூறு தேவ வருடங்கள் இதன் அந்தம்; ஆக மொத்தம் 4800 தேவ வருடங்கள் கொண்டது கிருத யுகம்.

3000 தேவ வருடங்கள் திரேதா யுகம்;
இதனோடு 300 தேவ வருடங்கள் இதன்
தொடக்கம்; முன்னூறு தேவ வருடங்கள் இதன் அந்தம்; ஆக மொத்தம் 3600 தேவ வருடங்கள் கொண்டது திரேதா யுகம்.

2000 தேவ வருடங்கள் துவாபர யுகம்;
இதனோடு 200 தேவ வருடங்கள் இதன்
தொடக்கம்; 200 தேவ வருடங்கள் இதன்
அந்தம்; ஆக மொத்தம் 2400 தேவ வருடங்கள் கொண்டது துவாபர யுகம்.

1000 தேவ வருடங்கள் கலி யுகம்; இதனோடு 100 தேவ வருடங்கள் இதன் தொடக்கம்; 100 தேவ வருடங்கள் இதன் அந்தம்; ஆக மொத்தம் 1200 தேவ வருடங்கள் கொண்டது கலி யுகம்.

முன் சொன்ன சிதம்பர் இரகசிய இலக்கமான 21, 600 ஐ 80 ஆல் பெருக்க வருவது கிருத யுக வருடங்கள். இது பதினேழு இலட்சத்து இருபத்தெண்ணாயிரம் (17, 28, 000) மானுட வருடங்கள்.

இந்த 21, 600 ஐ 60 ஆல் பெருக்க வருவது திரேதா யுக வருடங்கள். இது பன்னிரண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம் (12, 96,000) மானுட வருடங்கள்.

இந்த 21, 600 ஐ 40 ஆல் பெருக்க வருவது துவாபர யுக வருடங்கள். இது எட்டு இலட்சத்து அறுபத்து நாலாயிரம் (8, 64, 000) மானுட வருடங்கள்.

இந்த 21, 600 ஐ 20 ஆல் பெருக்க வருவது கலி யுக வருடங்கள். இது நான்கு இலட்சத்து முப்பது இரண்டாயிரம் (4, 32, 000) மானுட
வருடங்கள்.

அடுத்தடுத்து வரும் இந்த நான்கு
யுகங்களையும் சேர்த்து ஒரு சதுர் யுகம்
என்பர். பன்னீராயிரம் 12,000 தேவ வருடம் = நாற்பத்து மூன்று இலட்சத்து இருபதாயிரம் 43,20, 000

மானுட வருடங்கள் = ஒரு சதுர் யுகம்.
சிதம்பர இரகசியத்தின் ஒரு பகுதிதான்.
எல்லாவற்றினது கணக்கும்; எமது
சுவாசத்தில் இருந்து அண்ட சராசரங்களின் கால எல்லை வரை, சிதம்பர இரகசியத்தில் அடங்கும்.

எட்டல்:
60 நொடி அல்லது தற்பரை = 1 விநாடி
60 விநாடி = 1 நாழிகை 24 நிமிடம்)
(2-1/2 நாழிகை = 1 மணித்தியாலம்)
60 நாழிகை = 1 நாள்
360 நாள் = 1 சாந்திர வருடம்
365நாள் 15 நாழிகை 31 விநாடி 15 நொடி = 1
சௌர வருடம்
360 சௌர வருடம் = 1 தேவ வருடம்
சதுர் யுகங்கள்
4800 தேவ வருடங்களைக்கொண்டது கிருத யுகம்.
3600 தேவ வருடங்களைக் கொண்டது திரேதா யுகம்.
2400 தேவ வருடங்களைக் கொண்டது துவாபர யுகம்.
1200 தேவ வருடங்களைக் கொண்டது ஒரு கலி யுகம்.

அடுத்தடுத்து வரும் இந்த் நான்கு யுகங்கள் கொண்டது ஒரு சதுர் யுகம்.

1. கிருத யுகம்; 4800 தேவ வருடங்கள் =
பதினேழு இலட்சத்து இருபத்தெண்ணாயிரம் வருடங்கள் (17, 28, 000 = 1.728 million years).

2. திரேதா யுகம்; 3600 தேவ வருடங்கள் = பன்னிரண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம் வருடங்கள் (12, 96, 000 = 1.296 million years).

3. துவாபர யுகம்; 2400 தேவ வருடங்கள் = எட்டு இலட்சத்து அறுபத்து நாலாயிரம்
வருடங்கள்(8, 64, 000 = 0. 864 million years).

4. கலி யுகம்; 1200 தேவ வருடங்கள் = நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் வருடங்கள் (4, 32, 000 = 0. 432 million years).

சதுர் யுகம்- 4800 + 3600 + 2400 + 1200 =
12, 000 தேவ வருடங்கள் = நாற்பத்து மூன்று லட்சத்து இருபதாயிரம் மானுட வருடங்கள் (43, 20, 000 வருடங்கள் = 4. 32 million years).

பிரம்மாவின் நாள்

இவ்வாறு ஆயிரம் சதுர் யுகங்கள் கொண்டது உலகைப் படைக்கும் பிரம்ம தேவனின் ஒரு பகற் பொழுதாகும். அதுபோல ஆயிரம் சதுர் யுகங்கள் கொண்டது பிரம்மதேவனுக்கு ஒரு
இராக்காலமாகும். ஆக மொத்தம் இரண்டாயிரம் சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு நாள்.- பகவத் கீதை 8.17-

இந்திரனின் காலம்

இவ்வாறு பிரம்மாவின் ஒரு நாளில் சுவர்க்க
லோகத்துக்கு 14 இந்திரர்கள் வந்து இருந்து
ஆண்டு மாளுவர். ஒரு பகலிலே 420
இந்திரர்கள் மாளுவர். ஒரு வருடத்திலே 5040
இந்திரர்கள் மாளுவர். இவ்வாறு ஒரு
பிரம்மாவின் ஆயுட்காலத்தில் 540,000
இந்திரர்கள் வந்து போவர். ஆறுமுக நாவலரின்
நான்காம் பாலபாடம்.
இது விஷ்ணுவின் ஒரு நாளாகும். இவ்வாறு
விஷ்ணுவின் ஒரு ஆயுட்காலம் உருத்திரனின்
ஒரு நாளாகும். -சிவ மகா புராணம் -

கற்ப காலம்

பிரமதேவனின் பகற்காலத்தில் படைப்பும்,
இராக்காலத்தில் பிரளயமும் உண்டாகின்றன.
அந்தப்பிரளய காலத்தில் பூலோகம், புவர
லோகம், சுவர்க்க லோகம் ஆகிய மூன்று
உலகங்களும் அழிந்து விடுகின்றன. பலர்
பூலோகம் என்பது எமது பூமியைக்
குறிக்கின்றது என்று தவறாக எண்ணுகிறார்கள்.
பூலோகம் என்பது நாம் வாழும் பூமி
உள்ளடங்கிய புவனத்தொகுதி
(Galaxy)முழுமையையும் குறிக்கும். எமது
பூமி உட்பட்ட கிரகங்கள் சூரியனைச்சுற்றி
வருவது நாம் அறிந்ததே. இந்த சூரியன்
உண்மையில் ஒரு நட்சத்திரம். இந்த
சூரியனாவது ஒரு இடத்தில் நிலையாக
நிற்கின்றானா என்றால் இல்லை. சூரியனும்
அதன் கிரகங்களுடன் சேர்ந்து தொடர்ந்து
சுற்றிக்கொண்டே இருக்கின்றது. இவ்வாறு
எமது சூரியக் குடும்பம் உள்ள ஆகாய கங்கை
எனப்படும் பால்வீதியில் சூரியனைப்போல
2000 பில்லியன் நட்சத்திரங்களுக்கு மேல்
உள்ளன. இவையெல்லாம் சுழற்சியாகச்
சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன என்றும்
இன்றைய அண்டவியல் விஞ்ஞானம்
கூறுகின்றது. இவை இவ்வாறு எதைச்
சுற்றும் அச்சு என்பது இன்றைய
விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்டது.

ஆனால் எமது சைவ நூல்கள் இவ்வாறு சூரியன் உள்ளிட்ட நடசத்திரங்களும், கிரகங்களும்
சந்திரர்களும் சுற்றி வரும் அச்சை மகாமேரு
என்று கூறுகின்றன. இந்த அச்சை சுழற்சியின்
(Spiral) மையமாக உள்ள மலை என்று
வர்ணிக்கின்றன.
'உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ்
ஞாயிறு' என்று 11ம் திருமுறையான
திருமுருகாற்றுப்படை சூரியன் மேருவை
வலம் வருவதாகக் கூறுகின்றது.

'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்'
என்று ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான
சிலப்பதிகாரம் சூரியன் மேருவை வலம்
வருவதாகக் கூறுகின்றது. இவற்றில் இருந்து
எமது பூலோகம் முழுவதுக்குமான
சுழற்சிக்குரிய அச்சே மேரு என்று
தெரிகின்றது.
இதேபோல புவர் லோகம், சுவர்க்க லோகம்
என்பவை வேற்று புவனங்களாம் (parallel
galaxies). காயத்திரி மந்திரமும் 'ஓம் பூர் புவவ்வ' என்றே தொடங்குகின்றது. இவற்றுள் புவர் லோகம் இன்றைய விஞ்ஞானம் கூறும்
எமது புவனத்தொகுதிக்கு அடுத்துள்ள
அன்ட்றோமீடா புவனத்தொகுதியாக
(Andromeda Galaxy) இருக்கலாம். பிரமனின்
இரவுக்காலத்தில் நிகழும் இந்த மூன்று
புவனங்களினதும் பிரளயத்தை நைமித்திகப்
பிரளயம் என்பார்கள். பின்னர் பிரமதேவனின்
பகற்காலத்தில் பூலோகம், புவர் லோகம்,
சுவர்க்க லோகம் ஆகிய உலகங்களின் படைப்பு
மீண்டும் தொடங்குகின்றது. மற்றெல்லா
உலகங்களும், அண்டங்களும் முன்போலவே
இருக்கின்றன.

இவ்வாறாக பிரமதேவனின் ஒரு
பகற்காலத்தை ஒரு கற்ப காலம் என்பர்.
“பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழூழ் செல்ல” –பரிபாடல்-
இவ்வாறு ஆயிரம் சதுர் யுகங்கள் கொண்ட
ஒரு கல்ப காலம் பிரம்மாவுக்கு ஒரு பகல்.
இது இரண்டாயிரம் சதுர் யுகங்கள்
பிரம்மாவுக்கு பகலும் இரவும் கொண்ட ஒரு முழு நாள்.

ஒரு கற்ப காலம் = ஆயிரம் சதுர்யுகம் = 432
கோடி வருடங்கள (432 Million years).
இவ்வாறு அநேக கற்பங்கள் உள்ளன.
அவைகளுக்குப் பெயர்களும் உள்ளன.

பினவருவன அவற்றுள் சிலவாகும்.
1. பார்த்திவ கல்பம்
2. கூர்ம கல்பம்
3. பிரளய கல்பம்
4. அனந்த கல்பம்
5. சுவேதவராஹ கல்பம்
6. பிராஹ்ம கல்பம்
7.. சாவித்ர கல்பம்

இப்போது நடப்பது சுவேதவராஹ கல்பம்.
விஷ்ணு வெள்ளைப் பன்றியாக வராக
அவதாரமெடுத்து வெள்ளத்துள் மூழ்கிக்கிடந்த
பூவுலகை மேலெடுத்ததால் இது இப்பெயர்
பெற்றது. சுவேத என்றால் வெண்மை என்று
பொருள்; வராகம் என்றால் பன்றி. சைவக்
கிரியைகளின் தொடக்கத்தில் சங்கல்பம் என்று
ஒன்று வரும். இன்ன காலத்தில், இன்ன
இடத்தில், இன்னாராகிய யான், இன்ன
கருமத்தைச் செய்யச் சங்கல்பிக்கிறேன்
என்பதுதான் இது.

இதிலே "சுவேதவராஹ
கல்பே" என்று வரும். அடுத்த முறை
கிரியைகள் செய்யப்படும்போது அவதானியுங்கள். இப்படி எண்ணற்ற
கற்பங்கள் வந்து போயுள்ளனவாம்.
“கற்பமும் ஈறும் கண்டோன் காண்க...”
– திருவாசகம்-

“ஏதிலாக் கற்பம் எண்ணில சென்றன ”
- கந்த புராணம் காசியப முனிவர் உபதேசம்
20ம் பாடல்-.
“கற்பங்கள் தொறுர நடஞ்செய் கழலடைந்தோர்
கணிப்பிலர் தஞ் சிற்பங்கள் தரும்புகழுஞ்
சென்றன”
-உமாபதி சிவாச்சாரியார்-
பான்மைதருங் கற்பமிது பாத்ம்மெனும்
பரிசுணர்ந்து -என்று இரணிய வர்மன்
தில்லைக்கு வந்த காலத்தை பாத்ம கற்பம்
என்று உமாபதி சிவாச்சாரியார்
கோயிற்புராணத்தில் கூறுகின்றார்.

இவைகளையெல்லாம் நாம் இப்போதுள்ள
சரித்திராசியர்களுடைய கிறிஸ்துவுக்கு முன்
கிறிஸ்துவுக்கு பின் என்ற கால
அளவுகளுக்குள் அடக்கி ஆராய முடியுமா?

மன்வந்தரம்

ஆயிரம் சதுர் யுகங்கள் கொண்ட கற்ப
காலத்தில் 14 மனுக்கள் அதிகாரம்
பண்ணுவார்கள். ஒவ்வொருவருடைய காலமும்
71 சதுர் யுகங்களாகும். இந்த 71 சதுர்
யுகங்களின் சுற்றை மன் வந்தரம் என்பார்கள்.
ஒவ்வொரு மன்வந்தர முடிவிலும் ஒரு
பிரளயம் பூலோகத்துக்கு மட்டும்
நடைபெறும். இதில் பூலோகம் மட்டும் நீரில்
அமிழும். தற்போது உலகம் பசுமைக்குடில்
வாயு வெளியேற்றத்தினால் வெப்பமாகின்றது
என்று அலறும் சூழல் பாதுகாப்பாளர்களும்
சூழலியல் விஞ்ஞானிகளும் இதைத்தான்
சொல்லுகிறார்கள். பிரம்ம தேவனின் ஒரு பகற்காலத்திற்குள்ளேயே பதினான்கு தடவைகளுக்கு வந்து போகும் இந்த மன்வந்தர
பிரளயத்தையே நைமித்தியப் பிரளயம் என்பர்.

இது ஒரு கிருத யுக காலத்துக்கு நீடிக்கும்.
அதாவது 4800 தேவ வருடங்கள் அல்லது
எமது கணக்குப்படி பதினேழு இலட்சத்து
இருபத்தெட்டாயிரம் (17, 28, 000) வருடங்கள்.
ஒரு மன்வந்தரம்= 71 சதுர் யுகம் = முப்பது
கோடியே அறுபத்து ஏழு இலட்சத்து
இருபதாயிரம் வருடங்கள் = 306.72 million years.
ஒவ்வொரு மன்வந்தரத்துக்கும் ஒவ்வொரு
மனு தொடக்கமாக வருவார். அந்தந்த
மன்வந்தர காலங்களில் தொடக்க
புருஷர்களாயுள்ள அவர்களின் பெயரால் அந்த
மன்வந்தர காலம் விளங்கும். இவ்வாறு ஒரு கற்ப காலத்துக்கு பதினான்கு மனுக்கள் உள்ளார்கள்.

அவர்களின் பெயர்கள் வருமாறு;
1. சுவயாம்புவ மனு
2. சுவாரோசிஷ மனு
3. உத்தம மனு
4. தாமஸ மனு
5. ரைவத மனு
6. சாட்சூஷ மனு
7. வைவஸ்வத மனு
8. பௌஷ்ய மனு
9. அக்னி ஸாவர்ணி ஞ்னு
10. சூர்ய ஸாவர்ணி மனு
11. இந்திர ஸாவர்ணி மனு
12. பிரம்ம ஸாவர்ணி மனு
13. ருத்ர ஸாவர்ணி மனு
14. ரௌச்ய மனு

இவர்களில் முதல் ஆறு மனுக்களும் இறந்து
போனார்கள். தற்போதுள்ள காலத்தின் மனு
வைவவ்வத மனு. இவரின் பெயரால்
இப்போதுள்ள மன்வந்தரம் வைவவ்வத
மன்வந்தரம் எனப்படுகின்றது.
சைவக்கிரியைகளில் சங்கல்பம்
செய்யும்போது 'வைவவ்வத மன்வந்தரே'
என்று வரும்; கவனியுங்கள்.
பிரம்மாவின் ஆயுள்
இப்போது இருக்கும் பிரம்மாவுக்கு 50 வயது
முடிந்து, ஐம்பத்தோராவது வயதில்
முதலாவது மாதத்தில் முதலாவது நாள்
நடக்கின்றது. இவ்விதமாக ஒவ்வொரு
பிரம்மாவுக்கும் நூறு ஆண்டு கால ஆயுள்உண்டு.

இது நமது கணக்குப்படி மூன்று
இலட்சத்துப் பதினோராயிரத்து நாற்பது கோடி
வருடங்கள் (31.104 billion years). இதை பரம்
என்று கூறுவர். இதிற் பாதி பரார்த்தம். அர்த்தம்
என்றால் பாதி. பரத்தில் பாதி பரார்த்தம். பாதி
பெண்ணுருவாகக்கொண்ட இறை வடிவு அர்த்தநாரீசுவரர். நாரீ என்றால் பெண்.

ஆக இப்போது பிரம்மாவுக்கு ஐம்பது
ஆண்டுகள் முடிந்து ஐம்பத்தோராவது
ஆண்டில் (இரண்டாவது பரார்த்தத்தில்)
முதலாவது மாதத்தில் முதலாவது நாள்
நடக்கின்றது. இவ்வாறு ஒரு பிரமதேவனின் ஆயுள் முடிந்தவுடன், அடுத்தாக இந்தப்பதவிக்கு வரும் பிரமதேவன் படைப்பைத்தொடங்குவார்.
இப்படி பல கோடி பிரம்மர்கள் இருந்திருக்கின்றார்கள்.

மகா பாரதத்தில் மார்க்கண்டேய
பர்வத்தில் என்றும் பதினாறு வயதான
மார்க்கண்டேயர் பாண்டவர்களை வன வாசத்தில்
சந்தித்தபோது அவர் இவ்வாறு மூன்று
பிரம்மாக்களைக் கண்டவர் என்று கூறுகின்றார்.
தற்போதிருக்கும் பிரம்மாவுக்கு அடுத்தாக
பிரம்ம பதவிக்கு வரப்போகின்றவர்
உருத்திரர்களில் ஒருவரின் அவதாரமும், ஏழு
சீரஞ்சீவிகளில் ஒருவரும், ஸ்ரீராமருக்கு
அணுக்கத் தொண்டருமாகிய வாயு புத்திரன்
ஆஞ்சநேயர் ஆவார் என்று பவிஷ்ய புராணம்
கூறுகின்றது. இவ்வாறே இப்போதிருக்கும்
இந்திரனுக்கு அடுத்ததாக இந்திர பதவிக்கு
வரப்போகின்றவர் மகாபலிச் சக்கரவர்த்தி
என்றும் பவிஷ்ய புராணம் கூறுகின்றது. இவர்
தற்போது சுவர்க்த்துக்கும் மேலான
போகங்களை உடைய சப்த பாதாளங்களில்
ஒன்றின் அதிபதியாக இருந்து வருகின்றார்.
“....கோடி கோடி பிரம்மர்கள்..”
- திருவாசகம்-
“நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணல்எண்ணில் இந்திரர்
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே”
- திருநாவுக்கரசர் தேவாரம் -5ம் திருமுறை
100ம் பதிகம் 3ம் பாடல்-

நடப்பு கால அளவையும் உலக அழிவும்,
ஆதியில் ஒரு பிரளயமும் அதன் பின் 6
மன்வந்தரங்களும் அவற்றின் பிரளயங்களும்
கழிந்தன. இப்போது நடப்பது ஏழாவது
மன்வந்தரம், இது வைவஸ்வத மன்வந்தரம்.
இந்தக் கால அளவு "சுவேத வராஹ கல்பே -
வைவஸ்வத மன்வந்தரே - கலியுகே" என்று
பூசைகளில் சங்கல்பம் செய்யும்போது கூறும்
மந்திரத்தில் வரும்.
இப்போது நடப்பது சுவேதவராஹ கற்பம்.
இதிலே தற்போதைய நடப்பு வைவஸ்வத
மன்வந்தரம். ஒரு மன்வந்தரத்துக்கு 71 சதுர்
யுகங்கள் உள்ளன என்று முன்னர் பார்த்தோம்.
வைவஸ்வத மன்வந்தரத்துக்கு இதில் 27 சதுர்
யுகங்கள் கழிந்துவிட்டன. இப்போது நடப்பது
28வது சதுர் யுகம்.

பூஜைகளில் சங்கல்பம்
செய்யும்போது இது “அஷ்டா தசா விம்சதீ”
என்று வரும், கவனியுங்கள். இதில் கிருத,
திரேதா, துவாபர யுகங்களும் முடிந்து
இப்போது நடக்கும் கலி யுகம் 17 பெப்ரவரி.
3102 BC இல் ஆரம்பமாகி இந்த 2012 February
17 உடன் 5113 வருடங்கள் கழிகின்றன.
தற்போது நடக்கின்ற கலியுகம் முடிவதற்கு
இன்னமும் 4,26, 887 வருடங்கள் உள்ளன.

இத்துடன் இருபத்தெட்டவாது சதுர்யுகம்
முடிவுக்கு வர இருபத்தொன்பதாவது சதுர் யுகம் தொடங்கும். இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக 71 சதுர் யுகங்கள் கழியும்போது மன்வந்தரத்தின் முடிவில் வருகின்ற பிரளய அழிவு வரும். அப்போது எஞ்து பூமி உட்பட இந்த பூலோகத் தொகுதியில் இருக்கும் அனைத்து உலகங்களும் நீருள் அழிந்து மறையும். அதற்கு இன்னமும் இவ்வாறு 43 சதுர் யுகங்கள் அதாவது 185.76 மில்லியன் வருடங்கள் இருக்கின்றன.

சப்தரிஷி சகாப்தம்

எங்களுக்கு தற்போது கிடைத்துள்ள
காலக்கணிப்புகளில் (Calenders)
பழைமையானது சப்தரிஷி சகாப்தம் ஆகும்.

வானநூல் குறிப்புகளை வைத்துப்
பார்க்கும்போது இந்த சகாப்தம் கி.மு.8516 இல்
தொடங்கியதாகத் தெரிகிறது. இந்தக்
கணிப்புமுறை நட்சத்திரங்களையும்,
சூரியனுடைய செல்கதியையும்
அடிப்படையாகக் கொண்டது. தற்போது
பூமத்திய ரேகைக்கு சூரியன் செப்ரெம்பர்
மாதம் 21ம் திகதி உச்சம் கொடுத்துக்
கடக்கிறது என்பது நாம் அறிந்ததே.
வானசாத்திர ரீதியில் சூரியன் துலா இராசியில்
பிரவேசிக்கிறது. ஆனால் பெப்ரவரி மாதம் 21ம்
திகதிதான் சூரியன் கும்ப ராசியில்
பிரவேசிக்கிறது. ஆனால் சப்தரிஷி
காலக்கணக்கு தொடங்கியபோது இந்த இரண்டு
நிகழ்வுகளும் அதாவது சூரியனது கும்ப
ராசிப்பிரவேசம், பூமத்தியரேகைக் கடப்பு
ஆகிய இரண்டும் ஒன்றாக நவம்பர் மாதத்தில்
நிகழ்ந்தன. விளங்குவதற்கு சிரம்மாக
இருந்தால் வாசித்து விட்டு சற்று ஆறுதலாக
இருந்து அசை போட்டுப் பாருங்கள்:
விளங்கும்.

இந்தக்கணிப்பின் படி சப்தரிஷி
சகாப்த காலக்கணக்கு கி.மு. 8516 நவம்பர்
மாதம் 21 இல் தொடங்கியிருக்கிறது. இதுவே
அக்காலத்திய வருடப்பிறப்பாக இருந்தது.
இதற்கு முந்தைய காலக்கணிப்புகளைப்பற்றிய
குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை.
இதன் பின்னர் இற்றைக்கு அண்ணளவாக
ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்னர்
விசுவாமித்திரர் அக்காலத்திய வானசாத்திர
வல்லுனர்களையும் அறிஞர்களையும் கூட்டி
ஆராய்ந்து தைமாதத்தில் வருடப்பிறப்பு
தொடங்குவதாகக் கொள்வதாக முடிவு
எடுக்கப்பட்டதாக வியாசர் மகாபாரதத்தில்
குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர கர்க மஹரிஷி என்பவர் வசந்த
காலத்தில் சூரியன் பூமத்திய ரேகையைக்
கடக்கும் காலமாகிய சித்திரை மாதத்தை
வருடப்பிறப்பாக ஏற்படுத்தினார். இதையே
பின்னால் வந்த ஆரியப்பட்டர், வராஹமிஹிரர்
போன்ற கணித, வானியல் சாத்திர
வல்லுனர்களும் ஏற்றுப் பின்பற்றி
வந்துள்ளார்கள்.

இதுவே இன்று வரை
நடைமுறையில் உள்ளது. அடிப்படைகள்
ஒன்றாக இருந்தபோதிலும் காலத்துக்குக்
காலம் வானியல் அறிஞர்களான மேதைகள்
இதில் சில நடைமுறை மாற்றங்களை
ஏற்படுத்தினார்கள் என்பது இதிலிருந்து
தெரியவருகின்றது.
தற்போதுள்ள இந்து சமய வருடங்களுக்கு
அறுபதாண்டு வட்டம் உள்ளது நாம் அறிந்ததே.
இதேபோல சப்தரிஷி சகாப்தத்தில் நூற்றாண்டு
வட்டம் வழமையில் இருக்கிறது. இவை
ஒவ்வொன்றும் ஒவ்வொரு நட்சத்திரகளின்
பெயரால் அழைக்கப்படுகின்றன. இவ்வாறு
அசுவினி தொடக்கம் ரேவதி வரை இருபத்தேழு
நட்சத்திரங்களின் பெயராலும் 2700 ஆண்டுகள்
கொண்ட இருபத்தேழு நூற்றாண்டு வட்டங்கள்
இருக்கின்றன. இதன் பின்னர் அடுத்த
இருபத்தேழு நூற்றாண்டுகளின் வட்டம்
மீண்டும் அசுவினி நட்சத்திரத்தில் இருந்து
ஆரம்பமாகும்.

இப்போது நடப்பது சப்தரிஷி சகாப்தத்தின் படி
10,059ம் ஆண்டு ஆகும். இது நான்காவது
வட்டம். இதில் உள்ள புனர்பூச நட்சத்திர
நூற்றாண்டின் எண்பத்து ஆறாம் ஆண்டுதான்
எமது இன்றைய கி.பி. 2010ம் ஆண்டு.
இந்த ஒவ்வொரு நூற்றாண்டிலும்
ஐந்தாண்டுகளைக்கொண்ட இருபது சிறு கால
வட்டங்கள் இருந்தன. இந்த ஒவ்வொரு
ஐந்தாண்டு சிறு வட்டத்தின் தொடக்க ஆண்டு
சம்வத்சரம் என்று தொடங்கும். பின்னாளில்
சம்வத்சரம் என்ற பெயரே ஆண்டு என்னும்
சொல்லைப் பொதுவாகக் குறிப்பதாக
ஆகிவிட்டது. சைவசமயக் கிரியைகளில்
சங்கல்பம் செய்யும்போது "நாம்சம்வத்சரே"
என்று தொடங்குவதைக் கவனியுங்கள்.
தமிழ் வருடங்கள்
தற்போது தமிழ் ஆண்டுகள் என வழங்கப்படும்
கால அட்டவணை முறை அறுபதாண்டு வட்டம்
ஒன்றைக் கொண்டுள்ளது. இது பிரபவ
ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில்
நிறைவுபெற மீண்டும் அடுத்த பிரபவ ஆண்டு
சுழற்சியாகத் தொடங்குகிறது. சிலர் இவ்வாறு
ஒரே வருடத்தின் பெயர்கள் திரும்பத் திரும்ப
வருவதால் பிற்காலத்தில் பழைய
நிகழ்வுகளைச் சரியாக நிர்ணயிப்பதில்
குழப்பம் ஏற்படுகிறது என்று குழம்புகிறார்கள். ஆனால் இந்த ஆண்டுகளின் கால அளவைகள்
எந்தவித குழப்பமும் இல்லாமல் வானியல் விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்டு மிகவும்
கச்சிதமாகக் கணித்து வரையறுக்கப்பட்டவை.

ஒவ்வொரு தமிழ் வருடமும் எமது பார்வையில் சூரியன் பன்னிரு ராசிகளில் சஞ்சரிக்கும் கால
அளவாகும். சூரியன் முதலாவது இராசியான மேட இராசியில் பிரவேசிப்பது புதுவருடப் பிறப்பாகும்.

இவ்வாறு ஒவ்வொரு பன்னிரு இராசிகளிலும் ஒன்றன் பின் ஒன்றாக
சூரியன் பிரவேசிக்கும் காலம் பன்னிரு தமிழ் மாதப்பிறப்பு அல்லது மாத முதல்
நாட்களாகும். இவ்வாறு சூரியன் மேடம் முதல் மீனம் ஈறாக உள்ள பன்னிரு இராசிகளில் சஞ்சரிக்கும் காலம் ஒரு தமிழ் வருடமாகும். இது வானியல் விஞ்ஞான ரீதியாக 365 நாள் 6
மணித்தியாலம் 11 நிமிடம் 48 விநாடி என்று கச்சிதமாகக் கணிக்கப்பட்ட ஒன்று.

இதையே பஞ்சாங்க கணக்கில் 365 நாள் 15 நாழிகை 31 விநாடி 15 நொடி என்று கூறுவார்கள். இதையே வானியல் விஞ்ஞானத்தில் வானியல்
வருடம் (Astronomical Year) என்று
சொல்லுவார்கள்.

நாம் இதையே அழகாக தமிழ் வருடம் என்று சொல்லி அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி
பெயர்களும் வைத்துள்ளோம்.

இது முயல், வேதாளம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி, எலி, காளை, புலி என்ற பன்னிரண்டு வருடங்களைக் கொண்ட சீனர்களின் கால வட்டத்தைப் போன்றது.

ஆனால் அதைவிட ஆழமான வானியல்
விஞ்ஞான கணிப்பீடுகளை ஆதாரமாகவும், அடிப்படையாகவும் கொண்டது. இந்தஅறுபது வருடங்களைக் கொண்ட காலவட்டத்தின் வருடங்கள் தமிழ் வருடங்கள் என்றும் இந்த
வருடங்களின் தொடக்கம் தமிழ் வருடப்பிறப்பு என்றும் வழங்கும் வழமையே எமது வழமை.

அவையாவன
1. பிரபவ வருடம்
2. விபவ வருடம்
3. சுக்கில வருடம்
4. பிரமோதூத வருடம்
5. பிரசோற்பத்தி வருடம்
6. ஆங்கீரச வருடம்
7. ஸ்ரீமுக வருடம்
8. பவ வருடம்
9. யுவ வருடம்
10. தாது வருடம்
11. ஈசுர வருடம்
12. வெகுதானிய வருடம்
13. பிரமாதி வருடம்
14. விக்கிரம வருடம்
15. விஷு வருடம்
16. சித்திரபானு வருடம்
17. சுபானு வருடம்
18. தாரண வருடம்
19. பாரத்திப வருடம்
20. விய வருடம்
21. சர்வசித்து வருடம்
22. சர்வதாரி வருடம்
23. விரோதி வருடம்
24. விகிர்த்தி வருடம்
25. கர வருடம்
26. நந்தன வருடம்
27. விஜய வருடம்
28. ஜய வருடம்
29. மன்மத வருடம்
30. துர்முகி வருடம்
31. ஏவிளம்பி வருடம்
32. விளம்பி வருடம்
33. விகாரி வருடம்
34. சார்வாரி வருடம்
35. பிலவ வருடம்
36. சுபகிருது வருடம்
37. சோபகிருது வருடம்
38. குரோதி வருடம்
39. விசுவாவசு வருடம்
40. பராபவ வருடம்
41. பிலவங்க வருடம்
42. கீலக வருடம்
43. சௌமிய வருடம்
44. சாதாரண வருடம்
45. விரோதிகிருது வருடம்
46. பரிதாபி வருடம்
47. பிரமாதீச வருடம்
48. ஆனந்த வருடம்
49. இராட்சத வருடம்
50. நள வருடம்
51. பிங்கள வருடம்
52. காலயுத்தி வருடம்
53. சித்தார்த்தி வருடம்
54. ரௌத்திரி வருடம்
55. துர்மதி வருடம்
56. துந்துபி வருடம்
57. ருதிரோற்காரி வருடம்
58. இரத்தாட்சி வருடம்
59. குரோதன வருடம்
60. அட்சய வருடம்
என்பனவாம்.

இது திராவிடர்களிடையே உள்ள வழமையே அன்றி வட இந்தியாவிலோ அல்லது வேறு எங்குமோ இந்த வழமையைப் பார்க்கமுடியாது. பின்னர் இதைப்போய் ஆரியர்களின் கால அளவை என்று சொல்வது எப்படிப் பொருந்தும்? இது யாருடைய கால அளவையாக இருந்தாலும் வானியல் விஞ்ஞான ரீதியாக அச்சொட்டாக இருக்கின்றது. நீங்கள் வேண்டாமென்றால் என்ன செய்வது? வருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள் நடப்பில் உள்ள ஆங்கில வருடம் 365 நாட்களை
மட்டும் கொண்டது. அது டிசம்பர் மாதம் 31ம் திகதி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குப் பின் தொடங்கி அடுத்த டிசம்பர் மாதம் 31ம் திகதி
நள்ளிரவு பன்னிரண்டு மணியுடன்
முடிவுறுகின்றது. இதற்கு எந்தவிதமான
வானியல் விஞ்ஞான ஆதாரமோ
அடிப்படையோ இல்லை.

365 நாட்களைக்கொண்ட இந்த ஆங்கில வருடக்கணக்கின்படி, வானியல் விஞ்ஞானரீதியாக உள்ள 365 நாட்கள் 6 மணித்தியாலங்கள் 43 விநாடிகள் கொண்ட வானியல் வருடத்தில் ஒவ்வொரு ஆண்டும்
மேலதிகமாக 6 மணித்தியாலங்கள்
மிகுதியாகும்.