Saturday 12 December 2015

குல தெய்வ வழிபாடு- 2

குல தெய்வ வழிபாடு- 2

    2   
ராமனும் ஒரு தெய்வம், ஹனுமான், சீதை மற்றும் கிருஷ்ணரும் தெய்வம் என மக்கள் தற்போது கூறி வணங்கினாலும், இராமாயண மற்றும் மகாபாரத நிகழ்வுகள் நடைபெற்ற காலத்தில் மானிட உருவில் இருந்த அவர்களை யாரும் தெய்வமாக வணங்கிடவில்லை. மாறாக அவர்களும் சிவபெருமானையே வணங்கி வந்துள்ளார்கள். அவர்கள் சிவபெருமானே அனைவருக்கும் மேலான தெய்வம் என்பதை உணர்ந்திருந்தார்கள் என்பதே அதன் காரணம். ஒரு அடிப்படை உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகில் உள்ள அனைத்து தெய்வங்கள், தெய்வ கணங்கள், கிராம தேவதைகள் மற்றும் பிற அனைத்து அவதாரங்களும் பரமாத்மன் எனும் சிவன் மூலம் வெளிவந்த விஷ்ணு, பிரும்மா என்பவர்களில் மூலம்  தோன்றியவர்களே .

இராமாயண காலத்தில் ராவணன்  சிவனை ஆராதித்த கதைகளும், அவர் கட்டியதாக கூறப்படும் வழிபாட்டுத் தலங்களும் ஸ்ரீ லங்காவின் பல இடங்களில் காணப்படுகின்றன.  பிற கடவுட்களைக் குறித்த செய்திகள்- நாரதர் மற்றும் வினாயகர் போன்றவர்கள்- அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே காணப்படுகின்றன.

மகாபாரத யுத்தம் நடந்தது கி.மூ 3139 ஆம் ஆண்டு, அதாவது சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பாக என்று கூறுகிறார்கள்.  அந்த புராணத்தில் தெய்வங்களின் பெயர்களை ஜாடையாக குறிப்பிட்டுள்ளார்களே தவிர அவர்களுக்கு வழிபாடுகள் இருந்தது என்பதைக் கூறவில்லை என்று ஆராய்வாளர்கள் கருதினாலும், மத்தியப் பிரதேசத்தின் மால்வா எனும் பகுதியில்  உள்ள சில ஆலயங்கள் அதற்கு மாறாக உள்ளன.   மஹாபாரத யுத்தத்தில் வெற்றி பெற தமக்கு சக்தி கொடுக்க வேண்டும் என்பதற்காக பாண்டவர்கள் வந்து  வழிபட்டதான சக்தி ஆலயங்கள் சில நதிக் கரைகளில் உள்ளன என்ற செய்தி ஆச்சர்யமாக உள்ளது. அதில் ஒரு ஆலயம் உஜ்ஜயினியைத் தாண்டி நல்கேடா எனும் இடத்தில் நர்மதை நதிக்கரையில் உள்ளது. பாண்டவ சகோதரர்கள் வனவாசம் சென்று இருந்தபோது அவர்கள்  யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் எனில்  கொக்கு முகத்தைக் கொண்ட பகலாமுகிக்கு பூஜை செய்ய வேண்டும் என கிருஷ்ணர் அவர்களுக்குக் கூறியதினால் அவர்கள் யதுஷ்ராரின் தலைமையில் இங்கு வந்து கொக்கு ரூபத்துடன் இங்கு எழுந்தருளி இருந்த பகலாமுகியை பல காலம் பூஜித்தார்கள். அவளும் அவர்களது பூஜையை மனதார ஏற்றுக் கொண்டு அவர்கள் இழந்த நாட்டை மீண்டும் பெறுவார்கள் என்ற வரத்தை தந்ததும் அல்லாமல் அவர்களுக்கு எதிரிகளை அடக்குவதற்காக தனது சக்தியும் அந்த யுத்தத்தில் கிடைக்கும் என்று கூறினாள். அது போலவே அவர்கள் யுத்தத்தில் வெற்றி அடைந்ததும் கிருஷ்ண பகவான் கூறியது போலவே பகலாமுகிக்கு இங்கு ஆலயம் அமைத்தார்கள் என்று ஒரு புராணக் கதையும் நிலவுகிறது.

 கொக்கு முகம் கொண்ட பகலாமுகி
 
ஆகவே மகாபாரத காலத்தில் சில தெய்வ அவதார உருவங்கள்  இருந்துள்ளன என்பதாகவும் நம்ப இடமுள்ளது. இப்படிப்பட்ட மேலும் பல ஆலயங்கள் விக்ரமாதித்தன் ஆட்சியில் கட்டி உள்ளார்கள் என்றாலும், அந்த ஆலயங்களுக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த தாந்த்ரீக சக்தி படைத்த சிலைகள் மகாபாரத மற்றும் இராமாயண காலத்தை சேர்ந்த  சிலைகள் என்பதினால் விக்ரமாதித்தன் அங்கெல்லாம் சென்று வழிபாட்டு உள்ளார் என்கிறார்கள். அதே சமயத்தில் மகாபாரதத்தில் கிருஷ்ணரை பிரதான கதாநாயகனாக, மஹா சக்தி மிக்க புருஷராக காட்டி உள்ளார்கள் என்றாலும் அவரையே தெய்வமாக யாரும் வழிபாடு செய்ததாகத் தெரியவில்லை. அதற்கான செய்திகளும் இல்லை.

மகாபாரத காலத்தில் ஹஸ்தினாபுரத்தை ஆண்டு வந்தவர் யுதிஷ்டர். அதே ஹஸ்தினாபுரத்தை பிற்காலத்தில் விக்கிரமாதித்திய மன்னனும் ஆண்டு வந்துள்ளார். அவர்களுக்கு இடையில் எழுபது மன்னர்கள் இருந்துள்ளார்கள். இந்த செய்திகளை கி.பி 1872 ஆம் ஆண்டை சேர்ந்த சில எழுத்துப் பிரதிகள் மூலம் 'வேதிக் பௌண்டேஷன்' என்பதை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பில் இருந்து அறிய முடிகிறது.  இதை எடுத்துக் காட்டுவதின் காரணம்  விக்கிரமாதித்தன் ஆண்ட காலத்தில் அவர் ஆண்ட பூமியில் பல ஆலயங்கள் எழுப்பப்பட்டு உள்ளன என்றாலும் அவற்றுள் இருந்த  சிலைகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதே.  
 
 
வேதிக் பௌண்டேஷன்  பத்திரிகையில் 
வெளியாகி உள்ள எழுத்துப் பிரதி

ஆகவே யுதிஷ்டர் முதல் விக்ரமாதித்தியன் ஆட்சி காலத்துக்குள்ளாக அதாவது சுமார் எழுபது மன்னர்கள் ஆண்டு வந்திருந்த மொத்த 3000 ஆண்டுகளின் இடையில் உருவ வழிபாடு, சிலைகள்  பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டு  உள்ளன என்பது தெளிவாகிறது. இதில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஹஸ்தினபுரம் இந்தியாவின் வட பகுதி ஆகும். அந்தப் பகுதி முழுவதிலும் வழிபடப்பட்டு உள்ள தெய்வங்கள் பெரும்பாலும் பெண்ணினத்தை சார்ந்த சக்தி தெய்வங்கள் அதாவது  பார்வதி மற்றும் பார்வதியின் பலவிதமான அவதார தெய்வங்கள், ரூபங்கள் மற்றும் லிங்க உருவிலான சிவபெருமான் ஆவர். அபூர்வமாக மட்டுமே விஷ்ணுவின்  வழிபாடு இருந்துள்ளது. அதே சமயத்தில் விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரின்  வழிபாடும்  சில இடங்களில் இருந்துள்ளது.

நிற்க, சற்றே  பின்னோக்கிப் பார்க்கும்போது ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. மகாபாரத  காலத்தில் போரில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் விஸ்வரூப தரிசனம் தந்ததாகவும், அதில் அனைத்து கடவுட்களின் உருவங்களையும் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் காட்டியதாக கூறுகிறார்களே. அப்படி என்றால் வேத காலத்துக்கு முற்பட்ட மகாபாரத யுத்த காலத்தில் பல கடவுட்களும் பல ரூபங்களில் இருந்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது அல்லவா. அப்படி என்றால் அந்த காலத்தில் அவர்களைக் குறித்த செய்திகள் ஏன் கூறப்பட்டிருக்கவில்லை ?

மகாபாரத மற்றும் இராமாயண காலங்களிலும் வேத காலத்திலும்  உருவ வழிபாடு இல்லை என்கின்றார்களே, அப்படி என்றால் கிருஷ்ணர் காட்டியதாக கூறப்படும் விஸ்வரூப தரிசனங்களில் காட்டப்பட்ட அந்த ரூபங்களை யார் படைத்தது? அவற்றை யார் வணங்கி உள்ளார்கள்? அவர்களது ஆலயங்கள் எங்குள்ளன? புராணங்களின் கூற்றின்படி கிருஷ்ண அவதாரம் என்பது விஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம் அல்லவா. அது அவர் கலியுகம் துவங்கியதும் எடுக்க இருந்த அவதாரம் அல்லவா. விஷ்ணுவின் எட்டு அவதாரங்களை அவர் ஏற்கனவே எடுத்து இருந்தார் என்றால்  பல தெய்வ அவதாரங்கள் கிருஷ்ணருக்கு முன்னிருந்த எட்டு அவதார காலத்திலும் இருந்திருக்க வேண்டுமே. அவை என்ன ஆயின ? அவற்றைக் குறித்த செய்திகள் ஏன் இராமாயண மற்றும் மகாபாரத காலத்தில் கூறப்பட்டு  இருக்கவில்லை? இவை அனைத்துமே நியாயமான கேள்விகளே. இந்தக் கேள்விகள் அனைத்துமே அர்த்தம் உள்ளவை. அதற்கான விளக்கம் இது.

இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது நான்கு யுகங்களை பிரும்மா படைத்தாராம். ஒவ்வொரு யுகத்துக்கும் குறிப்பிட்ட அளவில்  ஆயுள் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவற்றில் படைக்கப்பட்ட உயிரினங்கள் எத்தனை என்பது குறித்து சரியான விளக்கங்கள் தரப்படவில்லை. பிரும்மா படைத்தது 84 லட்ஷ உயிரினங்கள் என்று கருட புராணத்தின் மூலம்  அறிகிறோம். பிறக்கும் எதற்கும் அழிவும் உண்டு என்பதே பிரபஞ்ச  தத்துவம். அதற்கேற்ப படைக்கப்பட்டவை அழிந்து கொண்டே இருக்க அதற்கு இணையாக புதுப் பிறவிகளும் புது யுகங்களில் தோன்றிக் கொண்டே இருந்தன. அந்த நான்கு யுகங்கள் சத்ய, த்ரேதா, துவாபர மற்றும் கலி யுகம். இந்த நான்கும் சுயன்று கொண்டே இருக்கும் சக்கரம் போல வந்து கொண்டே இருக்கும்.

விஷ்ணு பகவான் கிருஷ்ண பகவானாக  எடுத்த ஒன்பதாவது அவதாரம் துவாபர யுகத்தின் முடிவில்தான். ஒவ்வொரு யுகமும் முடிந்து (அழிந்து)அடுத்த யுகம் ஆரம்பிக்கும்போது அவற்றில் பழைய யுகங்களை சேர்ந்த நினைவுகளுடன் எவருமே இருக்க மாட்டார்கள்.  அனைத்தும் அழிந்து புது யுகம் மலரும். அனைத்து ஆத்மாக்களும் வெவேறான உடலுடன் பிறப்பு எடுக்கும். ஆகவே முந்தைய யுகங்களில் நடந்தவை எதுவுமே எந்த மனிதருக்கும் தெரியாது.  அது தெய்வ அவதாரங்கள் மட்டுமே  அறிந்த உண்மை ஆகும். அதனால்தான்  அந்தந்த புதிய யுகங்களில் தெய்வ தோற்றங்கள் மூலமே முந்தைய யுகங்களின் நிலைகளை அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு யுகத்திலும் தெய்வம் பல பல அவதாரங்களையும் தன்னுடைய சார்ப்பாக அனுப்பும். அவை அவதார புருஷர்கள்,  பூத கணங்கள் முதல் தேவதைகள், சில தெய்வீக மனிதர்கள், ரிஷி முனிவர்கள் போன்றவர்கள்.

இதனால்தான் முன்னர் இருந்த தெய்வங்களை  பற்றியோ அல்லது தெய்வீக அவதாரங்களைப் பற்றியோ புதிதாக பிறப்பு எடுத்த மனிதர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. விஷ்ணு பகவானின் முதல் எட்டு அவதாரங்களும் முதல் மூன்று யுகங்களில் முடிந்து விட்டன. அந்த யுகங்களின் முடிவோடு அந்த செய்திகளும் மறைந்தே போயின. அவற்றைக் குறித்த அனைத்து  செய்திகளும் புதிய யுகங்களில் தெய்வமே அனுப்பி இருந்த அவதார புருஷர்கள்,  பூத கணங்கள் முதல் தேவதைகள், தெய்வீக மனிதர்கள் மூலமும் ரிஷி முனிவர்கள் போன்றவர்கள் எழுதிய புராணங்கள் மற்றும் வாய்வழிச் செய்திகள் மூலமே தெரிந்துள்ளது. மேலும் அந்தந்த யுகங்களில்  இருந்த பலவும் பூமியிலே புதைந்து மறைந்து விட்டன.

மகாபாரத காலத்தில் ஒன்பதாவது அவதாரமாக வந்த கிருஷ்ணர் விஸ்வரூப தரிசனம் தந்தார். ஆனால் அவர் அர்ஜுனனுக்கு வெளிப்படுத்தியதாக கூறப்படும் தெய்வங்கள் மகாபாரதம் மற்றும் இராமாயண காலத்தை சேர்ந்த  பிரும்ம, விஷ்ணு, சிவன், வினாயகர், நாரதர், வாயு, அக்னி, ஹனுமான், இந்திரன், நாகங்கள், மற்றும் பல்வேறு மாமுனிவர்கள், ரிஷி முனிவர்கள் போன்றவர்களே. எந்த புராணத்திலுமே கிருஷ்ணர் தனது விஸ்வரூப தரிசனத்தில் இன்னென்ன தெய்வ உருவங்களை வெளிப்படுத்தினார் என்பதான குறிப்புக் கிடையாது. அது மட்டும் அல்ல அவர் காட்டியதாக கூறப்படும் எதிலுமே எந்த பெண் தெய்வமும் கிடையாது. விஸ்வரூப தரிசன படங்கள் எதை வேண்டுமானாலும்  பாருங்கள்,   இந்த உண்மை புரியும்.

 ''பரப்பிரும்மனால் பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது முதலில் வெளிவந்த  தெய்வங்களும், கடந்து போன யுகங்களில் இருந்த பத்து அவதார தெய்வங்களும், ரிஷி முனிவர்கள் மற்றும் இராமாயண, மகாபாரத காலத்தில் இருந்த தெய்வங்களினால் படைக்கப்பட்ட வேறு சில முக்கிய தெய்வங்கள் போன்ற அனைத்து  தெய்வங்களும் ஒரே பரப்பிரும்மனின் அங்கங்கள். தாங்கள்  அனைவருமே  ஒரே ஆத்மனில் இருந்து வெளிவந்தவர்களே''  என்பதை கிருஷ்ண அவதாரத்தில்  விஸ்வரூபத்தைக் காட்டி அதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டது.

அது மட்டும் அல்லாமல் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை என்பதை வெளிப்படுத்தவே இராமாயண, மகாபாரத நிகழ்வுகள் நடைபெற்ற யுகங்களில் அந்தந்த நிகழ்வுக்கு ஏற்ற வகையில் வினாயகர், ராமர், ஹனுமான், நாரதர், கிருஷ்ணர் போன்ற கடவுட்கள் தோன்றினார்கள். பரப்பிரும்மனால், மும்மூர்த்திகள் மூலம் படைக்கப்பட்ட தெய்வங்கள் எத்தனை, அவர்களின் உருவம் என்ன, அவர்கள் எப்போது அவதரிப்பார்கள் என்பதை எல்லாம் மானிடர்களுக்கு மெல்ல மெல்ல வெளிக் காட்ட வேண்டும் என்பதற்காகவே அப்படி வெளிப்படுத்த இருந்த ரிஷி முனிவர்களையும்  கிருஷ்ணர் தன் விஸ்வரூப தரிசனம் மூலம் வெளிக் காட்டினார்.

அதுவரை இந்த உலகிற்கே தெரியாமல் இருந்திருந்த, முடிந்து போன யுகங்களில் இருந்த  தெய்வ உருவங்கள் கிருஷ்ண அவதாரம் மூலம் விஷ்ணுவினால் வெளிப்படுத்தப்பட அதன் பிறகே ரிஷிகள், முனிவர்களுக்கும் அந்தந்த தெய்வங்களின் தரிசனம் கிடைக்க அந்த உருவங்கள் அவர்களுடைய சீடர்கள் மூலம் மக்களிடையே வாய்மொழிச் சொல்லாக பரவத் துவங்க, அதன் மூலம் உருவ வழிபாடு உலகெங்கும் பரவத் துவங்கியது. பல்வேறு தெய்வ உருவங்களையும் நம்மால் பார்க்க முடிந்துள்ளது. இதில் கிராம தேவதைகள், பூத கணங்கள் மற்றும் அவதார தேவதைகள் என பலவும் அடக்கம். பிற்காலத்தில் சிற்ப சாஸ்திரக் கலை மூலம் அவை  மேலும் விரிவடைந்தது.
.............தொடரும் 

1 comment:

  1. அனைத்தும் அருமையான தெளிவான விளக்கங்கள்

    ReplyDelete