செட்டிபுண்ணியம் ஹயக்ரீவர் ஆலயம்
பிரபஞ்சம் படைக்கப்பட்டப் பின் பிரளய காலத்தில் ஒருமுறை கடுமையான யுத்தம் செய்து அசுரர்களை அழித்த களைப்பில் சமுத்திரத்திலே ஆயிலையில் யோக நித்திரையில் இருந்தார் மகா விஷ்ணு. அதற்கு முன்னர்தான் அவர் நாபிக் கமலத்தில் இருந்து வெளிவந்த பிரும்மன் நான்கு வேதங்களையும் படைத்து அவற்றை உலகிற்கு உபதேசித்த பிரும்மா தனது படைப்புத் தொழிலையும் துவக்கி இருந்தார்.
விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருந்து பிரும்மா வெளி வந்த அதே நேரத்தில் விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருந்த ஆயிலையில் இருந்த இரண்டு நீர் திவலைகளில் இருந்து மது மற்றும் கைடபன் எனும் இரண்டு அசுரர்கள் வெளி வந்து பிரும்மா செய்து வந்திருந்த படைப்புத் தொழிலையும் தாமே செய்ய ஆசை கொண்டு பிரம்மனிடமிருந்த வேதங்களை திருடிக் கொண்டு ஓடி விட்டார்கள். அந்த வேதங்களை திருடிக் கொண்டு சென்றவர்கள் அதை தக்க இடத்தில் பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும் என்று எண்ணி அதை கடலுக்கு அடியில் இருந்த பாதாளத்தில் கொண்டு சென்று ஒளித்து வைத்து விட்டு அங்கேயே குதிரை வடிவ முகம் கொண்டு இருந்தார்கள்.
வேதங்கள் அவர்கள் வசம் இருந்ததினால் அதை வைத்துக் கொண்டு தவம் செய்து சிவபெருமானிடம் இருந்து அழியா வரத்தையும் பெற்றார்கள். அந்த வரத்தின்படி தம்மை அழிக்க குதிரை முகம் கொண்டவர் அவதரித்தால் மட்டுமே முடியும் எனும் அளவிற்கு வரத்தையும் பெற்றதை அறிந்து கொண்ட மகாவிஷ்ணு பிரும்மாவிடம் இருந்து அவர்கள் திருடிச் சென்ற வேதங்களை மீட்டு வருவது மட்டும் அல்லாமல் அவர்களை முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாடகம் நடத்தினார். அந்த நாடகத்தின் ஒரு காட்சியாக வில்லின் நாண் மூலம் தலை அறுபட்டு குதிரை முகம் கிடைக்கப் பெற்றவர், ஹயம் என்றால் குதிரை என்பது அர்த்தம் என்பதினால் ஹயக்ரீவர் என்ற பெயரையும் பெற்றார். அந்த குதிரை முகத்தோடு கடலுக்குள் புகுந்து சென்று அந்த அசுரர்களைக் கொன்று வேதத்தை மீட்டு வந்தார். அசுரர்களுடன் போரிட்ட குதிரை முகத்தைக் கொண்டிருந்த ஹயக்ரீவர் உக்ரமாக இருந்ததினால் அவர் கோபத்தைக் குறைக்க மகாலட்சுமி அவர் மடியில் அமர்ந்து கொண்டு அவரை சாந்தப்படுத்தினாள்.
இப்படியாக தசாவதார அவதாரங்கள் எடுக்க இருந்த காலத்துக்கு முன்னரே விஷ்ணு பகவான் எடுத்த முதல் அவதாரமான ஹயக்ரீவர் மடியில் லஷ்மி தேவி அமர்ந்திருந்த உருவமே லட்சுமி ஹயக்ரீவர் எனும் வடிவம் ஆயிற்று. அந்த கோலத்தில் அவர்கள் இருந்தபோது அங்கு வந்த சரஸ்வதி தேவி ஹயக்ரீவரிடம் வேண்டிக் கொண்டபடி சரஸ்வதிக்கும் ஞானத்தை உபதேசித்து கல்விக்கே அதிபதியான சரஸ்வதிக்கே குருவானார். ஆகவே ஹயக்ரீவரை வணங்கித் துதித்தால் சரஸ்வதியை வணங்கித் துதித்து பெற்ற அருளை விட பல மடங்கு அருள் கிட்டும் என்பார்கள். தேர்வுகளில் வெற்றி பெற்று நல்ல கல்வி அறிவு கிடைக்க சரஸ்வதியை வணங்க வேண்டும் என்றாலும் அதன் பின்னர் சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவரையும் வணங்கித் துதித்தால்தான் சரஸ்வதி தேவியிடம் இருந்து பெற்ற கல்வி ஞானம் முழுமை அடையும், இன்னும் அதிக கல்வி ஞானத்தை முழுமையாகப் பெற்று வெற்றி மேல் வெற்றியும் அடையலாம் என்பது ஐதீகம் ஆகும். ஆனால் அங்கும் சின்ன நிபந்தனை இருந்தது. கல்விக்காக சரஸ்வதியை வணங்காமல் ஹயக்ரீவரை மட்டுமே கல்விக்காக வணங்கினால் முழுமையான பலன் கிட்டாது. கல்வி ஞானத்தைப் பொருத்த ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவருடைய சீடரான சரஸ்வதிக்கும் மரியாதை தர வேண்டும் என்பதினால் சரஸ்வதியையும் வேண்டி விட்டு தம்முடைய அதாவது ஹயக்ரீவரின் அருளாசியைப் பெற வேண்டும் என்பதே ஹயக்ரீவரின் தத்துவம் என்பார்கள். மற்ற வேண்டுதல்களுக்காக அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப ஹயக்ரீவரை நேரடியாக துதிக்கலாம் .
செட்டிப்புண்ணிய ஆலயத்து
ஹயக்ரீவரின் தோற்றம்
ஆலயம் செல்லும் வழியில்
காணப்படும் இயற்கை எழில் காட்சிகள்
ஆலயம் செல்லும் வழியில் உள்ள மலைத்
தொடரில் உள்ள பாறைகளில் காணப்படும்
இறைவனின் திருநாமம் அந்த இடமே பெருமாள்
குடியிருக்கும் இடம் என்பதை பறை சாற்றுகிறது
இந்த பின்னணியில்தான் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் இருந்த திருவஹந்திபுரம் எனும் ஊரில் பக்தர்களினால் ரகசியமாக வழிபடப்பட்டு வந்திருந்த தேவநாதப் பெருமாள் மற்றும் ஹயக்ரீவர் போன்ற தெய்வங்களின் சிலைகள் அன்னியர்களினால் நாசம் அடையாமல் இருக்க 1848 ஆம் ஆண்டில் அன்றைய திவானாக இருந்த திரு ரங்காச்சார் என்பவரால் பரம ரகசியமாக செட்டிப் புண்ணியத்தில் உள்ள இந்த ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன. அந்த காலத்தில் சரியான சாலைகள் இல்லாத, போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்த மற்றும் மக்கள் நடமாட்டம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்த செங்கல்பட்டு அருகே இருந்த இடமே செட்டிப்புண்ணியம் என்பது. அந்த இடமும் உயர்ந்திருந்த மலையின் உச்சியில் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியில் அமைந்திருந்தது என்பதினால் இந்த இடத்தில் விக்ரகங்களை வைப்பது பாதுகாப்பானது என்று நினைத்தே அவற்றை இங்கு கொண்டு வந்தார்களாம். இங்கு அதிக அளவில் செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்களே குடி இருந்ததாலும், அவர்களே ஆலய மூர்த்திகளை பாதுகாக்க அனைத்து விதங்களிலும் உதவி செய்ததினாலும் இந்த இடம் செட்டிப் புண்ணியம் என்ற பெயரைப் பெற்றது.
முதலில் வரதராஜப் பெருமாளுக்காகவே இந்த ஆலயம் அமைக்கப்பட்டு இருந்ததாம். அதன் பின்னரே தேவநாதப் பெருமாள் மற்றும் குதிரை முகத்துடன் யோக நித்திரையில் இருந்த ஹயக்ரீவருடைய சிலை மற்றும் உர்ச்சவ மூர்த்திகள் 1848 ஆம் ஆண்டுவாக்கில் இங்கு கொண்டு வரப்பட்டு ரகசியமாக வைக்கப்பட்டன. அதன் பின்னர் அதே போல ரகசியமாக வழிபடப்பட்டு வந்திருந்த தஞ்சாவூரில் இருந்த உற்சவ மூர்த்திகளான சீதா-ராம-லஷ்மண-ஹனுமான் மூர்த்திகளும் 1868 ஆம் வாக்கில் இங்கு கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்படலாயின.
இந்த ஆலயம் தோன்றிய காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று பொதுவாக கூறப்பட்டாலும் பலரும் நம்புவதைப் போல சுமார் 500 முதல் 600 ஆண்டுகள் பழமையான இந்த ஸ்ரீ தேவநாத பெருமாள் ஆலயத்தில் வரதராஜப்பெருமாள் மூலவராக வழிபடப்படுகிறார். ஆலயம் உள்ள இடமும், அதற்குள் உள்ள மூர்த்திகளின் மகிமைகளும் பரவலாக வெளியில் தெரிந்தால் மீண்டும் அந்த ஆலயத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று அந்த காலத்தில் இருந்த பக்தர்கள் அஞ்சியதினால் அந்த ஆலயம் குறித்த அனைத்து செய்திகளுமே செவி வழி வார்த்தைகளாகவே இருந்து விட சமீப காலம்வரை பெருமளவிலான பொதுமக்களுக்கு செட்டிப் புண்ணியத்தில் மறைந்திருந்த தெய்வீக மகிமை மிக்க ஆலயத்தின் விவரமோ அல்லது மகிமையோ அதிகமாக தெரியாமலேயே இருந்தன.
ஆயினும் கூத்தனூரில் இருந்த சரஸ்வதி ஆலய மகிமையைக் குறித்து மட்டுமே தெரிந்திருந்த மக்களுக்கு மெல்ல மெல்ல ஹயக்ரீவரின் சக்தி மற்றும் ஹயக்ரீவரின் மேன்மையும் வரலாறுகளும் தெரியவர கல்விச் செல்வத்தை அளவில்லாது வழங்கும் ஸ்ரீ யோக ஹயக்ரீவமூர்த்தி குடியேறி இருந்த ஆலயங்களை நோக்கிப் பக்தர்கள் படையெடுக்கலாயினர். பல இடங்களிலும் ஹயக்ரீவர் ஆலயமும் எழுந்தது. இந்த நிலையில்தான் மெல்ல மெல்ல செட்டிப் புண்ணியத்தின் யோக ஹயக்ரீவர் ஆலய விவரங்களும் வெளித் தெரியவரத் துவங்கியதும் பக்தர்கள் அங்கு செல்லத் துவங்கினார்கள்.
அந்த காலத்திலும் கூட அதிக சாலை வசதிகளே இல்லாத, மலைப் பகுதியில் இருந்த இந்த ஆலயத்துக்கு சென்று யோக ஹயக்ரீவரை தரிசித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உண்மையான பக்தர்கள் மட்டும் தத்தம் குழந்தைகளுடன் செட்டிப் புண்ணியத்தை தேடி வருவது வழக்கமாக இருந்து வந்திருந்ததாம்.
இந்த ஆலயத்தில் குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவர் யோக முத்திரைக் கொண்டு தனியாகவே காட்சி தருவது அபூர்வமான காட்சி ஆகும். அனைத்து ஆலயங்களிலும் யோக ஹயக்ரீவர் மடியில் லஷ்மி தேவி அமர்ந்துள்ள காட்சியே இருக்கும். ஆனால் அதற்கு மாறாக இங்கு ஹயக்ரீவர் குதிரை முகம் கொண்டு தனிமையில் யோக நிலையில் அபாய முத்திரைக் காட்டியபடி ஸ்ரீ தேவநாதன் எனும் பெயரில் தனி சன்னதியில் காணப்படுவது விசேஷ காட்சி ஆகும். அவர் சன்னதியில் உற்சவ மூர்த்தியையும் வைத்து பூஜிக்கிறார்கள். அவர் சன்னதியின் அருகில் உள்ள சன்னதியில் ஹோமப்ஜவல்லி எனும் பெயரில் லஷ்மி தேவி காட்சி தருகிறார். சன்னதிக்கு எதிர் புறத்தில் சற்றே தள்ளி அமைந்துள்ள தனி சன்னதியில் ராம-சீதா-லஷ்மண சமேதகர்களாக காட்சி தந்து கொண்டு இருக்க ஹனுமார் அவர்கள் முன் மண்டி இட்டபடி காணப்படும் உற்சவ மூர்த்திக்கே மதியம் 12.00 மணிக்கு உச்ச கால ஆராதனை நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் அனைத்து சன்னதியிலும் சன்னதிக்குள்ளேயே மூல மூர்த்திக்கு முன்பாக வைக்கப்பட்டு உள்ள உற்சவ மூர்த்திக்கே ஏன் பூஜைகளை செய்கிறார்கள் என்பதற்கான காரணம் விளங்கவில்லை.
ஆலயத்தின் பின்புறத்தில் உள்ள அங்கோளம் அல்லது அழிஞ்சல் என்ற பெயருடைய தெய்வீக மரத்தில் தமது வேண்டுதலை நிறைவேற்றித் தர பக்தர்கள் தமது ஆடையில் இருந்து இரண்டு நூலை பிய்த்து எடுத்துக் கட்டுகிறார்கள். சிலர் வீடு கட்ட அருள் வேண்டி அந்த மரத்தின் அடியிலேயே கல்லினால் ஆன சின்ன வீடு கட்டுகிறார்கள்.
ஆலயத்தில் நிறைய குரங்குகள் காணப்படுகின்றன. சற்றே ஏமார்ந்தால் அவை நமது கைகளில் உள்ளவற்றை பிடுங்க முயல்கின்றன. சன்னதியின் வாயிலில் தமது பிரார்த்தனை நிறைவேற நெய் விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.
தேவநாதர் சன்னதிக்கு செல்லும்
முன் உள்ள கூடத்தின் காட்சி
தேவநாதர் சன்னதிக்கு செல்லும்
முன் உள்ள கூடத்தில் உள்ள ஸ்தல வரலாறு
தினமும் பூஜை செய்யப்படும் ஆலயப் பசு
தேவநாத ஸ்வாமி சன்னதி நுழை வாயில்
பரிமுகன் என அழைக்கப்படும் ஹயக்ரீவருடைய உருவ அம்சங்கள் என்னென்ன? சந்தியா தேவதைகள் நாசித் துவாரங்களாக இருக்க நீண்ட நாசி, குதிரை முகத்தில் உள்ள பிடரி மயிர்கள் சூரிய ஒளிக்கதிர்களால் அமைந்தவை, கங்கையும், சரஸ்வதியும் அவரது புருவங்களாக அமர்ந்துள்ளார்கள், சந்திரனும் சூரியனும் அவரது கண்களாக அமர்ந்திருக்க அவருடைய பற்கள் பித்ரு தேவதைகள் ஆவர். பிரும்ம லோகம் இரண்டுமே மேலும் கீழுமாக அவர் வாயின் உதடுகளாக அமைந்தன என்பார்கள்.ஒருவர் வாழ்க்கையில் அவருடைய மேன்மைக்கு சாட்சியாக காணப்படுவது கல்வி ஞானமே. ஆகவேதான் கல்வியும் செல்வமும் பெருக இங்குள்ள யோக ஹயக்ரீவர் ஆலயத்துக்கு வந்து தேவநாத ஸ்வாமி எனும் பெயரில் எழுந்தருளி உள்ள யோக ஹயக்ரீவரை வணங்குகிறார்கள். ஸ்வாமிக்கு ஏலக்காய் மாலை சார்த்தி வணங்கினால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும், ஞாபக சக்தி கூடும் என்பது நம்பிக்கை ஆகும். கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தில் வழிபடும் முறையிலேயே தேர்வு எழுதும் மாணவர்கள் பெற்றோர்களுடன் இங்கு வந்து யோக ஹயக்ரீவரின் பாதத்தில் தாம் எடுத்துச் செல்லும் பேனா மற்றும் பென்சிலை வைத்து வணங்கிய பின் அதை எடுத்து செல்கின்றனர். இதன் காரணமாக செட்டி புண்ணியம் ஹயக்ரீவர் கோவில் என்றே இது பெயர் பெற்றுவிட்டது. கல்விக்காக வேண்டுபவர்கள் மட்டும் இன்றி இசை, நடனம் போன்ற கலைகளிலும் சிறந்து விளங்குவதற்கும் , தமது தொழிலில் தடைகள் அகலவும் இங்குள்ள ஹயக்ரீவரை வந்து வழிபடுகிறார்கள்.
இந்த பிரிவினரைத் தவிர அஞ்ஞானம் எனும் இருளை அகற்றி ஞானம் எனும் ஒளியை நோக்கி பயணிக்க விரும்பும் தம்முடைய பக்தர்களை ஞான நிலைக்கு அழைத்து செல்லும் ஞான ஆசிரியனாக இருந்தவாறு யோக ஹயக்ரீவர் அருள் புரிகிறார். சில தலங்களில் யோக ஹயக்ரீவர் கல்வி ஞானம் பெற அருள் புரியும் வேளையில், அவர் மடியில் அமர்ந்துள்ள லஷ்மி தேவியோ அந்த பக்தர்களுக்கு கல்வி ஞானத்தோடு சேர்த்து செல்வத்தையும் வாரி வாரி வழங்கும் விதமாக அருள்புரிகிறார்.
சென்னையில் இருந்து செல்பவர்கள் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து மகேந்திரா சிட்டியின் நேர் எதிரில் உள்ள சின்ன சாலையில் இறங்கி மூன்று கிலோ மீட்டர் அளவுக்கு ஆலயம் செல்லும் வழியைக் காட்டும் பெயர் பலகைகளுடனான சற்றே மலை மீது ஏறிச் செல்லும் வகையில் அமைந்துள்ள பாதையிலேயே சென்றால் ஸ்ரீ தேவநாத ஸ்வாமி ஆலயத்தை அடையலாம். காலை 7.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும் இந்த ஆலயத்தில் உள்ள யோகஹயக்ரீவரை திருவோண நட்சத்திரத்தன்றும், புதன்கிழமையிலும் ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுவது பலன் தரும் என்பார்கள்.
No comments:
Post a Comment