Thursday, 10 December 2015

ருத்ராட்சம் – சில அறியப்படா தகவல்கள்!!!

ருத்ராட்சம் – சில அறியப்படா தகவல்கள்!!!

ருத்ராட்சம் என்பது ஈல்லியோகார்பஸ் கனிற்றஸ் (Elaeocarpus ganitrus) என்ற பெயருள்ள மரத்தின் விதை. இவ்விதை ஒருவரின் ஆன்மீக வளர்ச்சிக்கு முக்கியமானதாக உள்ளது. இங்கு வெவ்வேறு வகையான ருத்ராக்ஷ மணிகளும் அவைகளின் பயன்களையும், பஞ்சமுகி ஏகமுகி போன்றவற்றை பற்றியும்  ஒரு பகிர்வு. இமாலய பகுதியை சேர்ந்த ஒருசில உயர்ந்த மலைப் பகுதிகளில் வளரும் குறிப்பிட்ட மரங்களின் விதைதான் ருத்ராட்சம். துரதிர்ஷ்டவசமாக இந்த மரங்களை இரயில்வே தண்டவாளங்களில் முன்பு பயன்படுத்தி வந்தார்கள். இதனாலேயே இந்தியாவில் இப்பொழுது வெகுசில மரங்களே மீதம் உள்ளது. இன்று இவை பெரும்பாலும் நேபாள், பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இவை தென் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சில இடங்களில் காணப்பட்டலும், சிறந்த தரம் உள்ளவை உயர்ந்த இமாலய பகுதியில் உள்ளவையே. ஏனெனில் அங்குள்ள நிலம், சூழ்நிலை போன்றவை அதன் வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கிறது. இந்த விதைகளுக்கு என்று தனிப்பட்ட அதிர்வு உள்ளது. சாமான்யமாக அளவு பெரிதாக உள்ள விதைகளில் அவ்வளவு அதிர்வு இருக்காது. விதை எவ்வளவு சிறியதோ அந்த அளவுக்கு அதிர்வும் கூடுதலாக இருக்கும். ருத்ராட்ச மாலைகள் சாமான்யமாக இம்மணிகளை மாலையாக கோர்ப்பது வழக்கம்.

மரபில் 108 + 1 என்ற கணக்கில் மணிகள் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த தனியாக உள்ள ஒரு மணியை “பிந்து” என்கின்றனர். ஒவ்வொரு மாலையிலும் ஒரு பிந்து இருப்பது அவசியம். இல்லையேல் அதன் சக்தி ஒருவித சுழற்சியில் சிக்கிக்கொள்ளும். இதனால் அதை அணிபவர் சிறிது பலவீனமாக இருப்பவரானால் தலை சுற்றல் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஏகமுகி அணிந்தால் பன்னிரண்டு நாட்களில் குடும்பத்தை விட்டு விலகுவார் என்று மக்கள் சொல்கிறார்கள். ருத்ராட்ச மணிகளை கோர்க்கும் பொழுது பட்டுநூலோ அல்லது பஞ்சுநூல் கொண்டோ கோர்ப்பது சிறந்தது. நூலில் கோர்த்த மாலை என்றால், ஆறு மாதத்திற்கு ஒருமுறை நூலை மாற்றுவது நல்லது, இல்லையென்றால் நூல் ஒரு நாள் அறுந்து உங்கள் 108 மணிகளும் ஒவ்வொரு பக்கம் உருள வாய்ப்பு உண்டு. செம்பு, வெள்ளி, தங்க கம்பியிலும் இம்மணிகளை கோர்க்கலாம், ஆனால் பெரும்பாலும் நீங்கள் அதை நகை கடைக்கு கொண்டு செல்வீர்கள். கடைக்காரர் தங்க கம்பியோ அல்லது வேறெதுவோ கொண்டு இறுகக் கட்டி முடிக்கும் போது ருத்ராட்சம் உள்ளே விரிசல் விடலாம். நான் எவ்வளவோ முறை நகைகாரரிடம் சொல்லச்சொல்லியும், அவர்கள் என்னிடம் செய்து கொண்டு வரும்போது பெரும்பாலும் 30 – 40 விழுக்காடு உடைந்து இருக்கும். தளர்ந்த முறையில் கோர்ப்பது சிறந்ததும், முக்கியமும் ஆகும். அழுத்தத்தால் உண்டான விரிசல் உள்ள மாலை நல்லதல்ல. இந்த மாலையை எந்நேரமும் அணியலாம். குளிக்கும் பொழுது கூட நீங்கள் இதை அணியலாம். நீங்கள் பச்சை தண்ணீரில் குளிப்பவராகவும், இரசாயன சோப்பு பயன் படுத்தாதவராகவும் இருந்தால், தண்ணீர் இதன் மேல் பட்டு உங்கள் உடல் மீது வழிவது மிக்க சிறந்தது. ஆனால் நீங்கள் இரசாயன சோப்பும், சுடு தண்ணீரும் பயன்படுத்துபவரானால், அது விரிசல் விட்டு சுலபமாக உடைந்து போக வாய்ப்பு உண்டு. அந்த மாதிரி சமயங்களில் இதை அணியாமல் இருப்பது நல்லது. ருத்ராட்சத்தின் பயன்கள் அதிகமாக பிரயாணம் செய்பவர்கள், பல்வேறு வகைப்பட்ட இடங்களில் சாப்பிட்டு, தூங்குபவர்களுக்கு, ருத்ராட்சம் அவர்களுடைய சக்தியின் கூடாக மாறி ஒரு நல்ல உறுதுணையாக இருக்கும். சில நேரம் நீங்கள் பார்த்திருப்பீர்கள் – புது இடமாக இருந்தாலும் சில இடங்களில் உடனே தூக்கம் வரும், ஆனால் வேறு சில இடங்களில், உடம்பு அசதியாக இருந்தாலும் கூட தூக்கம் வராது. பொதுவாக உங்களைச் சுற்றியுள்ள சக்திநிலை உங்கள் சக்திநிலைக்கு சாதகமாக இல்லையென்றால், அந்த இடம் உங்களை நிலைகொள்ள விடாது.

சாதுக்களும், சந்நியாசிகளும் ஒவ்வொரு இடமாக சுற்றிகொண்டு இருப்பதால், பல இடங்களும் சூழ்நிலைகளும் அவர்களுக்கு சாதகமாக இருக்காது. அவர்கள் ஒரே இடத்தில் இரண்டு முறை தங்கியிருந்து தூங்கக் கூடாது என்று ஒரு விதிமுறை உண்டு. இன்று மறுபடியும் மக்கள் வேலை காரணமாகவோ, தொழில் காரணமாகவோ, பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யவும், வெளியில் சாப்பிட்டு, தூங்கவும் வேண்யிருப்பதால் ருத்ராட்சம் அணிவது மிகவும் பயனளிக்கும். இதில் மற்றொரு விஷயம் அடங்கியுள்ளது. காட்டில் வசிக்கும் சாதுக்கள், சந்நியாசிகள், அறியாத ஏதோ ஒரு குளமோ அல்லது குட்டையிலோ நீர் அருந்தக் கூடாது. இயற்கையிலேயே அந்த நீர் விஷ வாயு கொண்டதாகவோ, தூய்மை அல்லாமலோ இருக்கக்கூடும். அந்நீரை குடித்தால் அவர்கள் முடம் ஆகவோ அல்லது உயிர் போகக் கூட வாய்ப்பு ஏற்படும். அந்த சமயங்களில் ருத்ராட்ச மாலையை நீருக்கு மேலாக தொங்க பிடித்தால், நீர் நல்லதாகவும், குடிக்க தகுதியானதாகவும் இருந்தால் – மாலை கடிகார முள் செல்லும் திசையில் (பிரதக்ஷணமாக) சுற்றும். விஷமுள்ளதாக இருந்தால் மாலை எதிர் திசையில்(அப்பிரதக்ஷணமாக) சுற்றும். உணவின் தரத்தையும் இவ்வாறு பரிசோதித்துப் பார்க்கலாம்.

எந்தவொரு நல்ல பிராண சக்தி உள்ள பொருளுக்கு மேலேயும் பிடித்து பார்த்தால் அது கடிகார முள் செல்லும் திசையில் சுற்றும். ஒரு கெட்ட பிராண சக்தி உள்ள பொருளுக்கு மேல் பிடித்தால் அது எதிர் திசையில் சுழலும். தீய சக்திக்கு எதிரான கவசம்! இது தீய சக்திக்கு எதிராக கவசமாக செயல்படவல்லது. ஒருவருக்கு கேடு செய்ய கூடிய தீய சக்திகளை சிலர் உபயோகப்படுத்துகிறார்கள். அது ஒரு விதமான விஞ்ஞானம். வேதங்களில் ஒன்றான அதர்வண வேதம் என்பதில், சக்தி நிலையை ஒருவருக்கு சாதகமாகவும், இன்னொருவருக்கு பாதகமாகவும் எப்படி உபயோகப்படுத்தலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. எவர் ஒருவர் இதில் தேர்ச்சி பெற்றுள்ளாரோ, அவர் இதைப் பயன்படுத்தி எல்லையில்லா துன்பம் உண்டாக்க முடியும். மரணம் கூட சம்பவிக்க முடியும். நமது மரபில் மக்கள் ருத்ராட்சத்தை கையாள்வது என்பதை வாழ்வில் ஒரு புனிதமான பணியாக நினைத்தார்கள். ஒரு ருத்ராட்சம் இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க உதவும். நமக்கு யாரும் தீவினை செய்ய மாட்டார்கள் என்று நாம் எண்ணலாம். ஆனால் உங்களை நோக்கியே அது குறி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது, உங்கள் அருகில் அமர்ந்துள்ளவருக்கு குறி வைத்ததாக எண்ணிக்கொள்வோம், நீங்கள் அருகில் இருப்பதாலேயே அது உங்களை பாதிக்கும்.

உதாரணமாக தெருவில் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் உங்களை குறி வைக்கவில்லை ஆனாலும் உங்கள் மேல் குண்டு பாய வாய்ப்பு உள்ளது அல்லவா? அது போலவே சில விஷயங்கள் நடக்க வாய்ப்பு உண்டு. அது உங்களுக்கு குறி வைக்கவில்லை என்றாலும், நீங்கள் தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருப்பதாலேயே பாதிக்கலாம். இதை நினைத்து மிகப்பெரிய பயம் கொள்ள தேவையில்லை அனால் இம்மாலை அவற்றிலிருந்து ஒருவித பாதுகாப்பு கொடுக்கும். ஏகமுகியும், பஞ்சமுகியும் ருத்திராட்ச மணிகளில் ஒன்றிலிருந்து இருபத்தொன்று முகங்கள் வரை உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பயன் உள்ளதால், கடையிலிருந்து எதோ ஒன்றை வாங்கி அணிவது சரியல்ல. தப்பான ஒன்றை அணிவதால் வாழ்கையில் தொல்லைகள் வரலாம். ஏகமுகி மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால் அதை அணிவதில் பலருக்கு விருப்பம். நீங்கள் நிறைய முகங்கள் கொண்டவராக இருக்கிறீர்கள். உங்களுக்கு இவ்வளவு முகங்கள் இருக்கையில், ஏகமுகி அணிந்தால் கஷ்டத்தை விலைக்கு வாங்குவது போல ஆகிவிடும். ஏகமுகி அணிந்தால் பன்னிரண்டு நாட்களில் குடும்பத்தை விட்டு விலகுவார் என்று மக்கள் சொல்கிறார்கள். நீங்கள் குடும்பத்தை விட்டு விலகுவீர்களா இல்லையா என்பது ஒரு பக்கம், ஆனால் நீங்கள் தனியாக இருக்க விருப்பப்படுபவராக இதன் சக்தி நிலை உங்களை மாற்றிவிடும். மற்றவர்களுடன் ஒன்றி வாழ முடியாமல் போகும். வேறு விதமான சிறப்பு மணிகள் அணிய வேண்டுமானால், கடைகளிலிருந்து வாங்கி அணிவதைக் காட்டிலும், இதைப்பற்றி அறிந்தவரிடம் இருந்து பெற்றுக்கொள்வது சிறந்தது.

பஞ்சமுகி எல்லோருக்கும் பொருந்தும், நல்லதும் கூட – ஆண், பெண், குழந்தைகள் உட்பட. பொதுவான நன்மை, உடல் நலம், விடுதலை ஆகியவை கிடைக்கும். இரத்தக்கொதிப்பை சீராக்கும், நரம்புகளை அமைதிப்படுத்தும், நரம்பு மண்டலத்தில் ஒரு வித அமைதியையும், சுறுசுறுப்பையும் அளிக்கும். 12 வயதுக்குள்ளாக இருக்கும் சிறுவர்கள் ஆறுமுக மணியை அணியலாம். அது அவர்களை அமைதியாக்கி, ஒருமுகப்படுத்தும் தன்மையை கொடுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக பெரியோர்களின் சமநிலையான கவனிப்பை ஈர்ப்பார்கள். கௌரிஷங்கர் கௌரிஷங்கர் என்பது உங்கள் ஈடா பிங்களா நாடிகளை ஒருவித சமநிலையை அடையசெய்கிறது. பொதுவாக இது வாழ்வில் செழிப்பு கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. செழிப்பு என்பது பணம் மட்டும் அல்ல, பல வேறு விதங்களில் செழிப்பு அடையலாம். உங்களிடம் சொந்தமாக ஒன்றும் இல்லை என்றால் கூட வாழ்வில் செழிப்பாக இருக்கலாம். நீங்கள் ஒரு சமநிலை கொண்ட மனிதராக இருந்தாலோ, புத்திசாலித்தனமாக செயல்பட்டாலோ, செழிப்பு உண்டாகும்.

உங்கள் சக்திநிலை சீராக இருக்கும்போது இப்படி நடக்கும். கௌரிஷங்கர் உங்கள் ஈடா பிங்களா நாடியை சமன்படுத்தி சீராக்க செய்யும். உங்களுக்கு உங்கள் வாழ்கையை தூய்மையாக்க வேண்டுமானால் ருத்ராட்சம் ஒரு நல்ல கருவியாகவும் உதவியாகவும் இருக்கும். யாரோ ஒருவர் ஆன்மிக பாதையில் நடக்க வேண்டும் என்றால், தன்னை உயர்த்திக்கொள்ள, எந்த ஒரு சிறு கருவியாக இருந்தாலும், உபயோகபடுத்த வேண்டும் என்று நினைப்பார். இது ஒரு நல்ல கருவி. ஒரு குரு என்பவர் சாமான்யமாக வெவ்வேறு தரப்பான மனிதருக்கு வெவ்வேறு விதமாக ருத்ராட்சத்தை சக்தியூட்டி கொடுப்பார். ஒரு பிரம்மச்சாரியாகவோ அல்லது சந்நியாசியாகவோ ஆக வேண்டும் என்றால் முற்றிலும் வேறு விதமாக சக்தியூட்டப்படும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட விதமாக சக்தியூட்டியதை அணியக்கூடாது.

நமது மரபில் மக்கள் ருத்ராட்சத்தை கையாள்வது என்பதை வாழ்வில் ஒரு புனிதமான பணியாக நினைத்தார்கள். வழி வழியாக வந்த தலைமுறைகள் இதே செய்தன. இதை ஒரு தொழிலாக செய்தாலும், அடிப்படியாக ஒரு புனிதமான அர்ப்பணிப்பாக நினைத்தார்கள். தேவைகள் அதிகரிக்க இது ஒரு வணிகமாக மாறியது. இன்று இந்தியாவில் பத்ராக்ஷா என்ற ஒரு விஷ விதை உள்ளது. இது அதிகமாக உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் வளர்கிறது. இரண்டும் பார்க்க ஒரே மாதிரியாக இருக்கும். வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம். கையில் எடுத்துப்பார்த்து, நுண்ணிய உணர்வுகள் இருப்பவராக இருந்தால் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியும். அதை உடலில் அணியக்கூடாது. ஆனால் அவை உண்மையான மணிகள் போல இன்று விற்பனை செய்யப்படுகிறது. ஆதலால் நம்பிக்கையான இடங்களில் இருந்து மாலைகளைப் பெறுவது அவசியம்.

No comments:

Post a Comment