Friday, 11 December 2015

நகுல புராணம்

நகுல புராணம்
 
நகுலேஸ்வரர் ஆலயம் : கீரிமலை வரலாறு 



ஒரு காலத்தில் இந்தியாவும் இலங்கையும் பாரத ஷேத்திரம் அல்லது பாரத கண்டம்  எனும் பெயரில் ஒரே நிலப்பரப்பாக இருந்துள்ளன. ஒரு புராணக் கதையின்படி மேரு மலை மீது கோபம் கொண்ட நாரத முனிவர் வாயு பகவானிடம் மேரு மலையின் கர்வத்தை அடக்குமாறு கேட்டுக் கொள்ள, அதை ஏற்றுக் கொண்ட வாயு பகவானும் மேரு மலையுடன் யுத்தம் செய்தார். மேரு மலையில் பல தெய்வங்கள் குடி இருக்க விஷ்ணு பகவானின் வாகனமான கருடனும் அதற்குக் காவலாக சுற்றிக் கொண்டு இருந்தார். மேரு மலைக்கும் வாயுவிற்கும் பல காலம் யுத்தம் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது மேரு மலையில் இருந்து ஒரு பகுதி உடைந்து வங்காள விரிகுடாக் கடலில் விழுந்து விட நடுக்கடலில் இருந்த  அந்த மலையின் பாகமே  நிலப்பரப்பாகி, இந்தியாவுடன் இணைந்த பூமியாகி, பின்னர் இலங்கை என ஆயிற்று என்கிறார்கள்  .

இன்னொரு புராணக் கதையின்படி இலங்கையை குபேரர் ஆண்டு வந்தார். அதை அவருடைய ஒன்று விட்ட சகோதரனான ராவணன் அவரிடம் இருந்து அபகரித்துக் கொண்டு விட்டார். ராவணனது ஆட்சி காலத்தில் அந்த பூமியில் சிவ வழிபாடு மிக அதிக அளவில் இருந்தது. ஆகவே சிவபெருமான் தேவலோக கட்டிடக் கலைஞரான விஸ்வகர்மாவை அங்கு அனுப்பி எங்கெல்லாம் தான் பக்தர்களுக்கு வினோதமான தோற்றத்தில் தாம் காட்சி தந்தாரோ அங்கெல்லாம் அவருக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறு கூறினாராம். இப்படியாகத்தான் பூமியில் பல இடங்களில் சிவாலயங்கள் தோன்றின என்கிறார்கள்.

எது எப்படியோ, இலங்கை நிலப்பரப்புப் பகுதியில் முக்கியமான சில சிவாலயங்கள் அமைக்கப்பட்டன. மாபெரும் கடல் கொந்தளிப்பினாலும், பயங்கர புயலினாலும் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே இருந்த நிலப்பரப்பு பிளவுபட்டு இரண்டுமே தனி நாடுகளாயின. அதனால் அதில் மிக முக்கியமான சில தொன்மை வாய்ந்த சிவாலயங்கள் இலங்கை பூமியில் தங்கிவிட்டன. அவற்றின் பல ஆலயங்களின் வரலாற்றை அறிஞர்கள் அறிந்திருந்தாலும், சில முக்கியமான ஆலயங்களின் வரலாற்றை மிகவும் கஷ்டப்பட்டு ஆராய்ச்சி செய்தே அறிந்து கொள்ள முடிந்துள்ளது. அப்படிப்பட்ட ஆலயங்களில் நகுலேஸ்வரத்தில் உள்ள ஆலயமும் ஒன்றாகும். அந்த ஆலயத்தின் மேன்மை நகுல புராணம் எனும் நூலில் கூறப்பட்டு உள்ளது .

உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஹிந்துக்கள் வழிபடும் நகுலேஸ்வரர் ஆலயம் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதன் அருகில் உள்ள கீரிமலை நீர்நிலை நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ குணங்களைக் கொண்டது. அந்த தீர்த்தத்தை கங்காசகரசங்கம் என்றும் கூறுவார்கள். ஒரு சாபத்தினால் கீரியைப் போன்ற முகமாக மாறிவிட்ட ஒரு சாது இங்கு வந்து தவமிருந்து தன்னுடைய பழைய முகத்தை திரும்ப அடைந்தார் என்றும் அந்த முனிவரின் மரணத்துக்குப் பின்னரே அவருடைய சீடரான ஒரு மன்னன் இந்த ஆலயத்தைக் கட்டினார் என்றும் கூறுகிறார்கள். இறப்பதற்கு முன்னர் அந்த சாது அங்கேயே தங்கி இருந்து மக்களுக்கு சேவைகளை செய்து வந்தார்.

3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆலயங்கள் கட்டிடங்களாக கட்டப்பட்டதான வரலாறு இல்லை. அங்காங்கே சில வழிபாட்டு தலங்கள் எழுப்பப்பட்டன. அவை மேற்கூரைகள் மற்றும் சுற்றுச் சுவர்கள் கூட இல்லாமல் இருந்தன. அந்த வழிபாட்டுத் தலங்களில் தெய்வ உருவங்களை செதுக்கிய பாறைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள். அல்லது அந்தந்த இடங்களில் பூமிக்கு அடியில் புதைந்து கிடந்த சிலைகளை வெளியே எடுத்து அவற்றை அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள். தாம் புதைந்து இருந்த இடங்களை தமது பக்தர்களுக்கு அந்தந்த தெய்வங்களே அவர்களது கனவுகளில் தோன்றிக் கூறினார்கள் என்பது நம்பிக்கிக் கதைகளாகும் .

இப்படியாக வழிபடப்பட்டு இருந்த இடங்களில் இருந்த தெய்வ மகிமைகளை காலம் காலமாக மக்கள் வாழ்மொழி செய்திகளாகவே பரப்பியபோது அவற்றின் மகிமைகளைக் கேட்டறிந்த மக்கள் பிற்காலத்தில் அங்காங்கே அவற்றின் மீது ஆலயங்களை எழுப்பினார்களாம்.

இலங்கையில் பெருமை வாய்ந்த ஐந்து சிவாலயங்கள் இருந்துள்ளன. அவற்றில் 1859 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட நகுலேஸ்வரரும் ஒன்றாகும். அதற்கு முன்னர் கி.பி 1621 இல் இலங்கை மீது படை எடுத்து வந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துகீசிய படையினர் இந்த ஆலயத்தை முற்றிலுமாக இடித்துத் தள்ளி விட்டார்கள். ஆனால் அதற்கு முன்னரே அந்த ஆலய அர்ச்சகர் அந்த ஆலயத்தின் மூல விக்கிரத்தையும் முக்கியமான பொருட்களையும் எடுத்துக் கொண்டு போய் அருகில் இருந்த கிணற்றில் மறைத்து வைத்து விட்டார். இப்படியாகத்தான் அன்னியர்கள் படையெடுத்து வந்த நேரங்களில் கீரிமலை பகுதியில் இருந்த பல ஆலயங்களில் இருந்த முக்கியமான பொருட்களையும் விக்கிரகங்களையும் அங்குள்ள பக்தர்கள் சிலர் எடுத்துக் கொண்டு போய் அங்கிருந்த கிணறுகளுக்குள் போட்டு மறைத்து வைத்து இருந்ததினால் பிற்காலத்தில் அந்த மூல மூர்த்திகளும் விக்கிரங்களும் மீண்டும் எடுக்கப்பட்டு ஆலயங்கள் அமைக்கப்பட்டன. போத்துக்கீசியரால் இடிக்கப்பட்ட நகுலேஸ்வரர் ஆலயம் மூன்று பிரகாரங்களுடன் ஐந்து கோபுரங்களும் உடைய பெரிய ஆலயமாக இருந்துள்ளது என்பது அங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வந்துள்ளது. போர்த்துகீசிய படையினரால் அழிக்கப்பட்ட அந்த ஆலயம் பின் நாளில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக மீண்டும் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் பல்வேறு குண்டு வீச்சுக்களையும் தாக்குதல்களையும் எதிர் கொண்டு இந்த ஆலயம் அழிவை சுமக்க வேண்டி இருந்தது. 1878 ஆம் ஆண்டு சிவ பக்தரும் புலவருமான ஆறுமுக நாவலர் என்பவர் அழிந்த ஆலயங்களை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு அதற்கான நன்கொடைகளை மக்களிடம் இருந்தே வசூல் செய்து ஆலயங்களை புதிப்பித்தார். அதில் நகுலேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். யுத்தம் காரணமாக பல வருடங்கள் நகுலேஸ்வரர் ஆலயம் நித்திய பூசை வழிபாடுகள் இன்றி அழிவடைந்த நிலையில் இருந்து வந்திருந்தாலும் 2009ம் ஆண்டு முதல் ஆலயத்திற்கு சென்று வர பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு இந்த ஆலயத்தில் குடமுழுக்கு நடைபெற்று ஆலயம் மீண்டும் பக்தர்கள் வந்து செல்லும் இடமாக மாறி உள்ளது என்கிறார்கள். நைமிசாரண்யா வனத்தில் அமர்ந்திருந்த அனைத்து சாதுக்கள் மற்றும் சன்யாசிகளுக்கு சூதக முனிவர் நகுலேஸ்வரர் ஆலயத்தின் மேன்மையைக் குறித்து கூறியதே இந்த ஆலயத்தின் கதையாகும்.

பாகம்-1 

ஒரு காலத்தில் நைமிசாரண்யத்தில் முனிவர்கள் அமர்ந்து இருந்தது போல அன்றும் அனைவரும் அமர்ந்து இருந்தார்கள். கிரேதா மற்றும் சத்ய யுகத்தில் இருந்தே புகழ் பெற்று விளங்கும் நைமிசாரண்யா வனம் குறித்த விவரங்கள் பல புராணங்களில் காணப்படுகின்றன. அன்றைய கோசலம் மற்றும் பாஞ்சால ராஜ்யங்களுக்கு இடையே அமைந்து இருந்த இந்த புனித வனத்தில் எண்பத்தி எட்டாயிரத்துக்கும் அதிகமான ரிஷி முனிவர்கள் தவத்தில் இருந்திருக்கிறார்கள், பலர் இங்கு வேள்வியும் செய்துள்ளார்கள்.

அப்போது அங்கு வந்த சூதக முனிவரைப் பார்த்த மற்ற ரிஷி முனிவர்கள் '' மா முனிவரே எங்களுக்கு ஒரு சந்தேகம் உள்ளது. நேற்று நாங்கள் பேசிக் கொண்டு இருக்கையில் நாரத முனிவர் இந்தப் பக்கமாக போய்க் கொண்டு இருந்தார். அவரை பார்த்த நாங்கள் ஸ்வாமி , நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்டபோது அவர் தட்சிண கைலாயம் எனப்படும் நகுலேஸ்வரத்துக்கு தான் சென்று கொண்டு இருப்பதாகவும், அங்கு சென்று நகுலேஸ்வரரை வணங்கியப் பிறகு வந்து பேசுவதாகக் கூறி விட்டு அவசரமாகச் சென்று விட்டார். ஆனால் நாங்கள் யாருமே நகுலேஸ்வரர் எனும் தலத்தை பற்றிக் கேள்விப்படவே இல்லை. அது என்ன தலம்? அது எங்குள்ளது? அதன் மகிமை என்ன என்பதை விளக்குவீர்களா'' என்று கேட்டார்கள்.

முனிவர்களின் ஆவலைக் கண்ட சூதக முனிவர் மகிழ்ச்சி அடைந்து நகுலேஸ்வர புராணத்தைக் குறித்துக் கூறத் துவங்கினார்.

''இங்கு கூடி உள்ள முனிவர் பெருமக்களே நான் கூறப்போகும் இந்த கதையை கவனத்துடன் கேளுங்கள். யாழ்பாணம் எனுமிடத்தில் உள்ள நகுலேஸ்வரத்தில் சிவபெருமான் எழுந்தருளி உள்ள ஆலயம் உள்ளது. அந்த இடத்தை கைலாய மலையின் தென் பகுதி என்று கூறுவார்கள். நகுலேஸ்வரத்தில் சிவபெருமான் நகுலேஸ்வரர் எனும் பெயரில் எழுந்தருளி இருக்க அவரது துணைவியார் பார்வதி நகுலேஸ்வரியாகவும், அவர்களுக்கு துணையாக பகவான் விஷ்ணு நகுல மாதவன் என்ற பெயரிலும் அமர்ந்துள்ளார்கள். (யாழ்ப்பாணம் என்பதே தற்காலத்திய ஜாப்னா ஆகும். யாழ் என்பது ஒரு வீணைப் போன்ற வாத்தியம் ஆகும். பாணம் என்பது இடம் என்பதாக பொருள் தரும். இந்த இடம் யாழ்ப்பாணம் என்ற பெயர் பெற்ற காரணத்தை பின்னர் வரும் கதையில் கூறப்பட்டு உள்ளது)

முன்னொரு காலத்திலே ராமனால் வதைப்பட்டு மரணம் அடைந்த இலங்கேஸ்வரன் எனும் ராவணன் இலங்கையை ஆண்டு வந்தான். பெரும் சிவபக்தனான அவன் யாழ் எனப்படும் வீணையை இசைத்து கானம் பாடி சிவபெருமானை பூஜித்தும் மகிழ்வித்தும் அவரிடம் இருந்து பல வரங்களை பெற்றிருந்தான். காலம் கடந்தது. ராமனின் மனைவி சீதையை கவர்ந்து வந்து, அதனால் ஏற்பட்ட பிரச்சனை பெரும் போராகி ராவணன் அந்த யுத்தத்தில் கொல்லப்பட்டது அனைவருக்கும் தெரியும். அப்போது இலங்கையில் ராவணனின் ஆட்சியில் இருந்த கந்தர்வனான சுகனீசன் என்பவன் நெடுநாளாகவே ராவணனின் வீணை மீது ஆசை கொண்டிருந்தான். ராவணன் யுத்தத்தில் மடிந்த சேதியைக் கேட்டவன் ராவணனின் அந்தப்புரத்துக்குப் போய் அந்த யாழ் எனும் வீணையை எடுத்து வந்து விட்டான். அதை எடுத்து வந்தவன் அப்போது பெரும் காடுகளும் மலைகளுமாக மட்டுமே இருந்த யாழ்ப்பாணத்திலே இருந்த கங்கரசாகரசங்கமம் எனும் தீர்த்தத்தில் சென்று குளித்தான். அங்கு குளித்தவன் யாழை எடுத்துக் கொண்டு போய் அதில் நாதத்தை மீட்டி சிவபெருமான் மீது அற்புதமான பாடல்களைப் பாடி நகுலேஸ்வரரான அவரை பூஜித்தான். அவன் இனிய கானத்தையும் மனம் உருகி பாடிய தோத்திரங்களையும் கேட்ட நகுலேஸ்வரர் எனும் சிவபெருமான் அவன் முன் தோன்றி அவன் கேட்ட வரங்களை தந்ததும் அல்லாமல், அவனை உலகிலேயே அற்புதமான யாழ்ப்பாணன் அதாவது யாழ் வாத்தியத்தை இசைப்பவன் எனும் பெயரை தரிப்பான் என்று அருள் புரிந்து விட்டு சென்றார். அவர் அருள் புரிந்த சில நாட்களிலேயே அவர் கொடுத்த சக்திகளைக் கொண்டு அந்த கந்தர்வன் அந்த காடுகளையும், மலைகளையும் அழித்து ஒரு நகரை நிர்மாணிக்க பல இடங்களிலும் இருந்தும் பலரும் அங்கு வந்து தங்கலானார்கள். யாழ்ப்பாணன் எனும் அவன் பெயராலேயே அந்த ஊரும் யாழ்ப்பாணம் என ஆயிற்று. இப்படியாக நகுலேஸ்வரர் எனும் ஆலயம் உள்ள இடம் யாழ்ப்பாணம் என பெயர் கொண்டது''.

பாகம்-2 

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்பாணத்தில் உள்ள கதிர்காமனில் குட்டை முனிவரான அகஸ்திய முனிவர் வந்து தங்கி இருந்தார். கதிர்காமனில்தான் முருகப் பெருமான் பக்தர்களுக்கு உருவமற்ற நிலையில் ஒரு வேல் உருவில் இருந்த வண்ணம் அருள் புரிந்து வருகிறார். ஹிமயமலையின் மன்னனின் மகளான பார்வதியுடன் நடக்கும் சிவபெருமானின் திருமணத்தை கைலாய மலையில் காண தேவலோகத்தில் இருந்த அனைவரும் மற்றும் ரிஷி முனிவர்களும் அங்கு சென்று இருந்தபோது பூமி பாரம் தாங்காமல் வட பகுதியில் புதைந்து போகத் துவங்கியது. ஆகவே பூமியின் பாரத்தை சமன் செய்ய சிவபெருமான் அகஸ்திய முனிவரை தென் பகுதிக்கு சென்று அங்கு தங்கி இருக்குமாறு அனுப்பி இருந்தார்.

அகஸ்திய முனிவர் தென் பகுதிக்கு சென்று தங்கியதும் அவர் அளவற்ற பாரத்தை அடைந்தார். அந்த சக்தியையும் சிவபெருமானே அவருக்கு கொடுத்து அனுப்பி இருந்தார். ஆனால் அதே சமயம் தன்னுடைய திருமணத்தைக் கண்டு களிக்க வந்திருந்த முனிவரை ஏமாற்ற விரும்பாத சிவபெருமானோ அகஸ்திய முனிவர் தென் பகுதியில் தங்கி இருக்கையில் அவருக்கு தன்னுடைய திருமணத்தை நேரில் பார்த்த மகிழ்ச்சி கிடைக்க தானே கைலாய மலையில் கூடி உள்ள அனைவருடனும் அங்கு வந்து அவர் முன்னிலையில் கைலாய மலையில் நடைபெற்ற அதே கோலாகலத்தில் தன்னுடைய கல்யாண வைபவத்தை நடத்திக் காட்டுவதாக வாக்குறுதி தந்தார். ஆகவே சிவபெருமான் தந்த வாக்குறுதி நிறைவேறும் நாளை எதிர்பார்த்தபடி அகஸ்தியர் கதிர்காமனில் தங்கி இருந்தவாறு சிவபெருமானையும் வேண்டி வந்தார்.

இன்னும் காலம் ஓடியது. அன்று சித்ரா மாதம், பூச நட்சத்திரம், சோம வாரம் ஆகும். மதிய நேரத்தில் திடீரென ஆகாயத்தில் இருந்து பேரிகை முழக்கம் கேட்டது. வானம் முழுவதும் பூமாரி பொழிந்தவண்ணம் இருக்க, எங்கெங்கு நோக்கினாலும் வானமே வண்ணமயமாக ஜொலிக்க பவழமும், வைடூரியமும், ரத்தினக் கற்களும் பூமாரி விழுந்து கொண்டு இருந்த ஒரு பெரிய சிம்மாசனம் ஆகாசத்தில் இருந்து பூமியை நோக்கி இறங்கி வந்து கொண்டு இருந்ததை அகஸ்திய முனிவர் கண்டார்.

அந்த சிம்மாசனம் பூமிக்கு அருகில் வந்தபோதே நாதஸ்வர இசைகளும், நாத ஒலிகளும் தம்மை மயக்குவதை உணர்ந்தார். அந்த சிம்மாசனத்தை சுற்றி மறைத்தவாறு பலகோடி தேவர்களும் முனிவர்களும் வந்து கொண்டு இருந்தார்கள்.

அடுத்து அங்கே ஒரு பெரிய திருமண மண்டபமே இறங்கி வந்திருக்க அந்த மண்டபத்திற்குள் அனைவரும் நுழைந்தார்கள். தேவேந்திரனின் கணங்கள் பொன்னையும் பொருளையும் வழி நெடுக தூவிக்கொண்டு வர சிவபெருமானின் இரு புறத்திலும் பிரும்மாவும், விஷ்ணுவும் ஆடிப் பாடிக் கொண்டு வர, அவர்களுக்கு முன்னால் ஒரு கை தடியை தட்டிய வண்ணம் நந்தி தேவர் சென்று கொண்டு இருக்கையிலேயே, ஓரக்கண்ணால் அகஸ்திய முனிவரைக் கண்ட சிவபெருமான் அவரை உள்ளே வருமாறு செய்கை தந்ததும், அதைக் கவனித்த விஷ்ணுவும், பிரும்மனும் ' மா முனிவா....... வருக...வருக...உம் வரவு நல்வரவாக....வாரும்...உள்ளே வாரும் 'என அவரை அழைக்க ஆனந்தக் கூத்தாடியபடி அகஸ்திய முனிவரும் அவர்களைத் தொடர்ந்து உள்ளே சென்றார்.

அடுத்த சில கணங்களில் இமயமலையின் அதிபதி அங்கு தனது மகள் பார்வதியை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு தனது பரிவாரங்களுடன் நுழைந்தார். வேத கானங்கள் முழங்கின. அங்கு வந்த இமயவன் சிவபெருமானின் பாதங்களைத் தொட்டு வணங்கி அதற்கு பாலும், தேனும், பன்னீரும் ஊற்றி அபிஷேகம் செய்தார்.

அடுத்து கண்களை பறிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டு இருந்த அவர் மகள் பார்வதி தேவியை அழைத்து வந்து அவரை சிவபெருமானின் வலப்புறத்தில் நிற்க வைத்து அவர்களின் திருமணத்தை முறைப்படி துவக்கி  வைத்தார். அங்கிருந்த பிரும்மனோ மந்திரங்களை ஓதி பண்டிதராக மாறி திருமணத்தை நடத்தி முடித்து வைத்தார். இமயமலை அரசன் தனது பெண் பார்வதியின் கைகளை சிவபெருமானின் கரங்களில் ஒப்படைத்து அந்த திருமண வைபவத்தை நிறைவேற்றினார். பேரானந்தம் கொண்ட அகஸ்திய முனிவரும் தனது ஆசையை இந்த பூமியில் சிவபெருமான் நிறைவேற்றி உள்ளாரே என்பதைக் கண்டு பலமுறை அவரை வணங்கி எழுந்தார். அவருக்கு பூஜைகளை செய்து மகிழ்ந்தார்.

நடந்தேறிய அனைத்தும் அகஸ்திய முனிவருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற சிவபெருமானே நடத்திய நாடகம் ஆகும். அதை நடத்திக் காட்டி அகஸ்தியர் மூலம் நகுலேஸ்வரத்தின் மகிமையை உலகுக்கு உணர்த்த எண்ணிய சிவபெருமான்  செய்த லீலை ஆகும். அதற்குப் பிறகு சிவபெருமான் ஆணையிட்டபடி அதுவரை நகுலேஸ்வரத்தைப் பற்றி தெரியாத இரகசியத்தை பிரும்மா அங்கு கூடி இருந்த அனைவருக்கும் எடுத்துரைத்தார். அது என்ன என்றால் நகுலேஸ்வரத்தில்தான் சிவபெருமான் உருவமற்ற நிலையில் நகுலேஸ்வரராக இருந்து கொண்டு தனது மனைவியை நகுலேஸ்வரியாக வைத்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு சேவகம் செய்தவாறு விஷ்ணு நகுல மாதவராக அந்த ஆலயத்தின் அருகில் உள்ள கங்காசாகரசங்கத்தில் இருப்பதான ரகசியத்தை கூறிய பிரும்மா பின்னர் அந்த நிலை ஏற்பட்டதின் பின்னணிக் கதையை விவரமாக கூறத் துவங்கினார்.

பாகம்-3 

சூதக முனிவர் தொடர்ந்து கூறலானார். அனைத்து முனிவர்களுக்கும் பிரும்ம தேவர் அந்த நிலை ஏற்பட்டதின் பின்னணிக் கதையை கூறத் துவங்கினார்.

'' ஒரு முறை பூமியில் அக்ரமங்களை அழித்து அரக்கர்களை அடக்க வேண்டிய தருமணம் வந்து விட்டதை விஷ்ணு உணர்ந்தார். அதற்காக அவர் பல்வேறு அவதாரங்களை எடுத்து பல்வேறு சமயங்களில் பூமிக்கு செல்ல வேண்டும் என்பது விதியாகும். ஆனால் ஒவ்வொரு அவதாரத்திலும் அவர்  அழிக்க வேண்டிய தீயவர்கள் மற்றும் அசுரர்கள் மூன்று உலகிலும் உள்ள எவராலும், எதனாலும் தம்மை அழிக்க முடியாது என்ற பல அரிய வரங்களை பல தெய்வங்களிடம் இருந்து பெற்று இருப்பார்கள். ஆனால் தம்மை யாராலும் அழிக்க முடியாது என்று அவர்கள் பெற்று இருந்த வரங்களிலும் சில உள் அர்த்தங்கள் மற்றும் வெளித் தெரியாத சிறு நிபந்தனைகள் இருந்துள்ளன. ஆகவே அவர்களை தாம் எடுக்க உள்ள எந்த சாதாரண உருவிலும் இருந்து அழிக்க முடியாது. அவர்களை அழிக்க வேண்டும் என்றால் அசாதரணமான, அதிசயமான புதிய புதிய அவதார உருவங்களை எடுக்க வேண்டும். தீயவர்களை அழிக்க அதீத சக்தியும், பலமும் வேண்டி இருக்கும். அவற்றை சிவபெருமானினால் மட்டுமே கொடுக்க முடியும். ஆகவே அந்த பிறவிகளை எடுக்கப் போகும் முன் தமக்கு உள்ள சக்திகளையும் மீறி விசேஷமான சக்தியையும், அதீத பலத்தையும் பெற்றுக் கொள்வதற்காக பகவான் விஷ்ணு சிவபெருமானை தேடினார். அவரோ நகுலேஸ்வரத்தில் நகுலேஸ்வரர் எனும் உருவமற்ற நிலையில் இருப்பதாக தெரியவர விஷ்ணு பகவானும் சற்றும் தாமதிக்காமல் நகுலேஸ்வரத்துக்கு கிளம்பிச் சென்று அங்கிருந்த கங்காசகரசங்கத்தின் பக்கத்தில் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு சிவபெருமானை இப்படியாக வேண்டலானார்.

'ஸ்வாமி, மலையில் கிடப்பவரே, சம்புவே, உலக நாயகரே, கைலாய மலையில் வாசம் செய்யும் நீங்கள் இங்கு வந்து எனக்கு தரிசனம் தருவீரா? கருணாநிதியே, சர்வ வல்லமை படைத்தவரே, நகுலாம்பிகையுடன் கூடி இருந்து அனைவரையும் ரஷிப்பவரே, நான் எடுக்க உள்ள அவதாரங்களில் என் தொழிலை திறமையுடன் செய்து முடிக்க எனக்கு தக்க சக்தி தந்து எனக்கு திருவருள் செய்ய வேண்டும். நான் அவதரித்தப் பின் என் தொழிலை செய்து முடித்தப் பின் அடியேன் உம்முடைய சன்னிதானத்தை விட்டு செல்லாமல் இங்கேயே வாசம் செய்து உம்மை துதித்துக் கொண்டு இருக்க எமக்கு நீவீர் அருள் புரிய வேண்டும்.

அது மட்டும் அல்ல கைலாயனாதா, மேலும் இந்த தீர்த்தத்தை காத்துக் கொள்ளுதல் என்ற அதிகாரத்தையும் எனக்கு நீங்கள் அளிக்க வேண்டும். எவர் ஒருவர் விதிப்படி இந்த தீர்த்தத்திலே வந்து ஸ்நானம் செய்கிறார்களோ அதன் பின் அந்த ஜனங்கள் என்னை தரிசனம் செய்தப் பின் என் அனுமதியைப் பெற்றே உம்மையும் தரிசனம் செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் அவர்களுக்கு அருள் புரிய வேண்டும். சாம்பசிவப் பெருமானே, என்னுடைய இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு எனக்கு அருள் புரிய வேண்டும்'.

தினமும் இவ்விதமாக விஷ்ணு மனமுருகி தோத்திரம் செய்து கொண்டு இருந்த நேரத்தில் ஒருநாள் மனம் மகிழ்ந்து போன நகுலேஸ்வரர் விஷ்ணுவின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அவர் முன் தோன்றிக் கூறினார் 'மாதவா, முகுந்தா, உன் துதிக்கு நான் மயங்கி விட்டேன். நீ என்னிடம் வைத்துள்ள பக்திக்கும் நம்பிக்கைக்கும் நான் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் நீ கேட்ட அனைத்து வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்டு நீ கேட்டபடி உனக்கு அருள் புரிகிறேன். மாதவா, இது கர்மபூமியாகும். இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு அனுக்கிரஹம் செய்யும் பொருட்டே நான் இங்கு வந்து வசிக்கிறேன். நான் அருணாசலம் மற்றும் கேதாரத்தில் எத்தனை சக்தியுடன் வசிக்கிறேனோ அப்படித்தான் இங்கும் வசிக்கிறேன்.

முகுந்தா, நீயே இங்கு எனக்கு அடியவனாகவும் சக்தியுமாகவும் இருக்கிறாய். ஆகவே இனி இந்த பூமியில் நீ எனக்கு இடப் பக்கத்தில் இருந்து வருவாய். எந்த ஜனங்கள் இங்கு வந்து, இந்த தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தப் பின் உன்னையும் தரிசனம் செய்தப் பின் என்னை வழிபடுவார்களோ அவர்களுக்கு நான் அருள் புரிவேன். அவர்கள் காரிய சித்தியும் பெறுவார்கள். நான் இன்று முதல் இங்கு நகுலேஸ்வரனாக வசிப்பேன். என் மனைவியும் உன் சகோதரியுமான பார்வதியும் இங்கு நகுலேஸ்வரி என்ற பெயருடன் என்னுடன் இருப்பாள். நீயும் எனது இடப்பக்கத்தில் இருந்தவாறு நகுல மாதவன் என்ற பெயரில் இங்கு வந்தவர்களுக்கு அருள் புரிந்து கொண்டு இருப்பாய்.

இந்த தலத்தில் வந்து வழிபாடு செய்பவர்கள் முதலில் உன்னை வணங்கி விட்டே என்னிடம் வருவார்கள். அப்படி உன்னை வணங்காமல் என்னிடம் வந்தால் அவர்களுக்கு என்னுடைய அருள் கிடைக்காது'. இப்படியாக கூறிய பின்னர் சிவபெருமான் மறைந்து விட்டார். சிவபெருமான் விஷ்ணுவிற்கு தரிசனம் தந்ததைக் கேள்விப்பட்ட பிரும்மா மற்றும் பிற தேவர்கள் அனைவரும் உருவமற்ற நிலையில் நகுலேஸ்வரராக இருந்த சிவபெருமானிடம் ஆசிபெற அங்கு வந்து கூடி நின்றார்கள். அந்த இடமான நகுலேஸ்வரத்தை கீரி  மலை என்றும் கூறுவார்கள்.

நகுலேஸ்வரர் என்ற பெயர் பல அர்த்தங்களைக் கொண்டது. சமிஸ்கிருதத்தில் குல என்றால் சரீரம் என்று பொருள். குல என்பது ஜாதி மற்றும் இனத்தையும் குறிக்கும். ந என்றால் இல்லை என்று பொருள். ஆகவே நகுலேஸ்வரம் என்பது சரீரம் அற்ற, எந்த இனத்தையோ, ஜாதியையோ சார்ந்திராத சிவபெருமான் வசிக்கும் இடம் என்றும், அங்குள்ள சிவபெருமானை ஜாதி பேதம் இன்றி எவர் வேண்டுமானாலும் வந்து வழிபடலாம் என்றும் குறிப்பதாகும். அதனால்தான் சுகனேசன் கட்டிய அந்த ஆலயத்தில் ஜாதிபேதம் அற்றவராக, உருவமற்ற நிலையில் சிவபெருமான் வசித்ததினால் அவர் நகுலேஸ்வரர் என அழைக்கப்பட்டார். அதைப் போல கீரி என்பது ஒரு பிராணி. கீரி  மலை என்ற பெயர் ஏற்பட்டதற்கு ஒரு காரணக் கதையும் உண்டு. 

பாகம்-4 

நகுல மாதவர் பிரும்மாவிற்கு கூறிய ரகசியம் என்ன என்பதை சூதக முனிவர் அங்கு எடுத்துரைத்தார். 

''முனிவர்களே , எல்லாப் பாவங்களையும் போக்கவல்ல இந்த தீர்த்தத்தின் மகிமையை குறித்து நகுல மாதவர் பிரும்மாவிற்கு கூறியதை இப்போது உங்களுக்கும் கூறுகிறேன். அதையும் கேளுங்கள். விஷ்ணு கூறினார் ' இந்த நதி பிறக்கும் இடம் எது தெரியுமா? அது நகுல மலையில் இருந்தே உற்பத்தி ஆகிறது. அதன் பெயர் கன்னி  கங்கை என்பது. உலகத்துக்கு நன்மை பயக்க தன்னிடம் வந்து ஸ்நானம் செய்தவர்களின் பாவங்களை தானே சுமந்து கொண்டு சென்று கடலில் கரைத்து விடுகிறது. அப்போது அந்த பாவங்கள் அனைத்தும் அழிந்து போகின்றன. எந்த ஒருவர் இங்கு வந்து இந்த கன்னி  கங்கை தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வானோ அப்போதே அவன் பாவங்கள் அனைத்தும் அழிந்து போகும். அவனும் சிவப்ரீதியைப் பெறுவான். பொன்னை களவாடியவர்கள், மதுபானம் பருகுபவர்கள், பிராமணனைக் கொன்றவர்கள் மற்றும் குரு துரோகிகள், கணவனுக்கு துரோகம் செய்தவர்கள் என அனைத்து பாவங்களையும் செய்தவர் எவராயினும் இந்த தீர்த்தத்தில் வந்து குளிக்கையில் அந்த பாவங்களில் இருந்து விமோசனம் பெறுகிறார்கள். எந்த மனிதர் இந்த தீர்த்தத்தில் வந்து ஸ்நானம் செய்து எள்ளும் நீரும் கொண்டு தர்ப்பணம் செய்வானோ அவனது பித்ருக்கள் அனைவரும் மேலான பதத்தை அடைவார்கள். இங்கு வந்து இந்த தீர்த்தத்தில் பிண்டதானம் செய்து விட்டு எவனொருவன் அன்னதானமும் செய்வானோ அவன் கயாவிலும், கங்கையிலும், நர்மதையிலும், காவேரியிலும் பித்ரு காரியம் செய்த பலனை விட அதிக பலனை அடைவார்கள். எவன் ஒருவன் இந்த தீர்த்தத்தில் குளித்தப் பின் பசுவை தானம் செய்வானோ அவர்கள்  கற்பகாலம்வரை அடுத்தப் பிறவி எடுக்காமல் ஸ்வர்கத்தில் இருப்பார்கள். எவன் ஒருவன் இங்கு வந்து வேத விதிப்படி யாகம் செய்வானோ அவன் பிரும்ம லோகத்தை அடைவான். எவன் ஒருவர் இங்கு வந்து நகுல மாதவரை வணங்கித் துதிப்பாரோ அவன் விஷ்ணு லோகத்தை அடைந்து ஒரு கோடி கற்ப காலம் வரை அங்கேயே வாழ்ந்து கொண்டு இருப்பான். எவன் ஒருவன் நகுல மாதவரை வணங்கியப் பின் பக்தியோடு இங்கு சிவபூஜை செய்வானோ அவன் சிவப் பிராப்தியைப் பெறுவான்'.

கங்கசகரசங்கத்தின் மகிமையைக் குறித்து இவற்றை விஷ்ணுவிடம் இருந்து நேரடியாக கேட்டப் பின் மனம் மகிழ்ந்து போன பிரும்மா தனது இருப்பிடத்துக்கு சென்று விட்டார். அங்கிருந்த விஷ்ணுவோ தாம் அடுத்து எடுக்க வேண்டிய பிறவி குறித்தும் அந்த காலநேரம் எப்போது கனிந்து வரும் என்பதைக் குறித்தும் யோசனை செய்தவண்ணம் சிவபெருமானை துதித்தபடி அங்கிருந்தார்.

இப்படியாக நைமிசாரண்யத்தில் கூடி இருந்த முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் நகுலேஸ்வரத்தைக் குறித்து கூறிய சூதக முனிவர் மேலும் அதன் மகிமையைக் குறித்துக் கூறலானார் '' உத்தமமான முனிவர்களே, நான் இன்னமும் நகுலேஸ்வரரின் மகிமையை சொல்வேன். கேளுங்கள்.

நகுலேஸ்வரம் சாதாரண தலம் அல்ல. இங்கு ராமபிரான் வந்து பெரும் சிவபக்தனான ராவணனைக் கொன்ற தமது பிரும்மஹத்தி தோஷத்தைத் அழித்துக் கொண்டு சென்றுள்ளார். சனியினால் பீடிக்கப்பட்ட நளனும் இங்கு வந்து நகுலேஸ்வரரையும், நகுலேஸ்வரியையும் வணங்கி நிவாரணம் பெற்று உள்ளார்கள். அது மட்டும் அல்ல பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன்  தனது பசுக்களை களவாடிவிட்ட திருடர்களிடம் இருந்து தனது பசுக்களை மீட்டுத் தருமாறு ஒரு பிராமணன் வேண்டிக் கொண்டபோது, அந்த திருடர்களை துரத்திக் கொண்டு போனான். திருடர்களோ தருமனின் வீட்டில் புகுந்து பின் வழியே ஓடி விட அவர்களை துரத்திக் கொண்டு சென்ற அர்ஜுனன், அந்த வீட்டுக்குள் நுழைய அப்போது தன்னை மறந்த நிலையில் திரௌபதியுடன் தருமபுத்திரர் தனிமையில் இருந்தது தெரியாமல் அவர்கள் இருந்த அந்த அறைக்குள் நுழைந்து அவர்கள் இருந்த அலங்கோல கோலத்தைப் பார்த்து விட்ட பாவத்தைத் தொலைக்க இங்கு வந்து சிவபெருமானை வணங்கி நிவாரணம் பெற்றுள்ளார்''.

இப்படியாக சூதக முனிவர் கூறிக்கொண்டு இருந்த கதையைக் கேட்ட முனிவரில் ஒருவர் தனது சந்தேகத்தை சூதகரிடம் கேட்டார் ' மா முனிவரே, இது அனைத்தும் கேட்கவே மிக அற்புதமாக உள்ளது. ஆனால் கீரி  முகம் கொண்ட நகுல முனிவர் என்றொருவர் இருந்ததாகவும் அவர் இங்கு வந்து தவம் செய்து சாப விமோசனம் பெற்றதினால் நகுல மலை என்று இந்த இடத்துக்கு பெயர் வந்ததாகவும், நகுல மலையை சுற்றி உள்ள இடம் கீரி மலை என ஆகியதாகவும் சிலர் கூறுகிறார்களே. அதுவும் உண்மையா? அவற்றையும் எமக்குக் கூறுவீர்களா?' என்று கேட்க சூதக முனிவர் அந்த தலத்தின் மகிமையை எடுத்துக் காட்டும் மேலும் சில கதைகளை தொடர்ந்து கூறலானார்.

பாகம்-5 

சூதக முனிவர் கூறலானார் ''முன் ஒரு காலத்திலே சுதாம முனிவர் என்றொரு மாமுனிவர் இருந்தார். அவர் மேரு மலையின் அடிவாரத்திலே இருந்த வனம் ஒன்றில் கடும் தவத்தில் இருந்தார். புதருக்குள் இருந்த அவரை பார்க்காமல் காட்டில் வேட்டையாடிக் கொண்டு இருந்த வேடன் ஒருவன் மதியம் களைப்பினால் உந்தப்பட்டு மிருகங்கள் வந்து தம்மை தாக்காமல் இருக்க அவர் அமர்ந்திருந்த அந்த மரத்தின் மீது ஏறி படுத்து உறங்கி விட்டான். தன்னை மறந்து உறங்கியவன் வாயில் இருந்து எச்சில் வெளி வந்து அந்த முனிவரின் நெற்றியில் விழுந்தது. அதையும் அறியாமல் அவன் உறங்கிக் கொண்டு இருக்க, தன் நெற்றிப் பொட்டில் வந்து விழுந்த எச்சிலால் கண் விழித்த முனிவர் யார் தன் மீது எச்சிலை உமிழ்ந்தார் என்று நோக்கினார். அப்போது அந்த மரத்தின் மீது இருந்து கீரிப்பிள்ளை ஒன்று வேக வேகமாக வெளி வந்தது. வெளிவந்த கீரிப்பிள்ளை முனிவரின் பாதங்களில் வணங்கி தான் அதை செய்யவில்லை என்றும், அந்த வாய் நீர் வெளியே வந்தது மேலே படுத்துள்ள வேடன் வாயில் இருந்து ஆகும் என்று கூறி அந்த வேடனைக் காட்ட சுதாம முனிவரும் கடும் கோபத்துடன் அந்த வேடனை கீழ் இறங்கி வருமாறு சப்தமிட்டு அழைத்தார்.

மரத்தின் மீது இருந்து கீழ் இறங்கி வந்த வேடனும் நடந்ததை தெரிந்து கொண்டப் பின் தன் தவறை உணர்ந்தான். முனிவரிடம் மன்னிப்புக் கேட்டான். ஆனால் அதற்குள் அந்த முனிவரோ அவனுக்கு ஒரு கடும் சாபம் இட்டு விட்டார். தான் கண் விழித்தபோது முதலில் தான் கண்ட கீரிப்பிள்ளையின் முகம் அவர் மனதில் வர அந்த வேடனை சபித்தார் 'என் மீது எச்சலிட்ட மூடனே இனி நீ கீரிப்பிள்ளையின் முகம் கொண்ட மனிதனாகப் பிறக்க வேண்டும்'.

உடனே அந்த மனிதன் அவர் கால்களில் விழுந்து வணங்கி மீண்டும் மன்னிப்பைக் கோர சுதாம முனிவர் தன் நிலைக்கு வந்தார். அப்போது அவர் அருகில் இருந்த கீரிப்பிள்ளையும் மனித உருவை அடைந்து ஒரு தேவகணமாயிற்று. முனிவரும் வேடனும் அந்த தேவகணத்தை வணங்கி நின்றவுடன் அந்த தேவகணம் கூறியது 'வேடனே, உன் இந்த நிலைக்குக் காரணம் உன்னுடைய பூர்வ ஜென்மப் பலனே ஆகும். உனக்கு இந்த முனிவரால் பூர்வ ஜென்மத்தின் அந்த சாபத்திற்கு சாப விமோசனம் கிடைக்க வேண்டும் என்று உள்ளது. அதனால்தான் இது நிகழ்ந்துள்ளது' என்று கூற அதைக் கேட்ட அந்த வேடன் தான் பூர்வ ஜென்மத்தில் யாராக இருந்தேன் என்பதையும், தான் செய்த பாவம் என்ன என்பதையும் கூறுமாறும் பணிவுடன் அந்த தேவகணத்தைக் கேட்க, அந்த தேவகணமும் அவனுடைய பூர்வ ஜென்மக் கதையைக் கூறத் துவங்கியது.

'வேடா, முன் ஒரு காலத்தில் நீ ஒரு புழுவாகப் பிறந்து இருந்தாய். அப்போது ஒரு பாவாத்மா இருந்தான். அவன் வீட்டு முற்றத்தில்தான் நீ புழுவாக நெளிந்து கொண்டு இருந்தாய். அவன் வீட்டில் சமைக்க வெட்டி வைத்திருந்த மாட்டு இறைச்சி ஒன்றை ஒரு காகம் கௌவிக் கொண்டு போயிற்று. அது பறந்து செல்லும்போது அதன் நிழல் உன் மீது விழுந்தது. உடனேயே புழுவாக இருந்த நீ சாப விமோசனம் பெற்று மரணம் அடைந்து மனிதனாகப் பிறந்தாய். ஆனால் காகம் தனது வாயில் இறைச்சியை வைத்துக் கொண்டு உனக்கு சாப விமோசனம் தந்ததினால் உன்னுடைய சாபத்தில் பாதி அளவே அகன்றது. மீதி பாதியையும் அகற்றிக் கொள்ள நீயும் இந்த மனிதப் பிறவி எடுக்க வேண்டி இருந்தது. நீ இறைச்சிகளை தின்னும் வேடனாகப் பிறக்க வேண்டி இருந்தது. அந்த காகம் கீரியாக இருந்த என்னுடைய இறைச்சியை எடுத்துக் கொண்டு சென்றதினால் உனக்கும் சாப விமோசனம் கிடைக்க நான் இங்கு வந்து வழிகாட்ட வேண்டும் என்பது விதியாயிற்று. கவலைப்படாதே. நீ கீரி முகத்தை அடைந்தாலும் நகுலேஸ்வரத்துக்கு சென்று அங்கு நகுலேஸ்வறரை துதித்து வந்தால் சாப விமோசனம் பெறுவாய் என்றது.

பாகம்-6 

'வேடனே இன்னும் தொண்ணூறு நாழிகைக்குள் நீ கீரிப்பிள்ளையின் முகத்தை அடைய உள்ளாய். அதற்குள் நீ கிளம்பிச் சென்று வேதாரண்யத்துக்கு தென் பகுதியில் தெரியும் கடலில் பயணித்தால் நீண்டப் பயணத்துக்குப் பின்னர் பெரிய மலை பகுதியை நீ காண்பாய். எந்த இடத்தில் உன்னை அறியாமலேயே உன் மனதில் அமைதி நிலவுவதைக் காண்பாய். இதுவே   குறிப்பது அது. அப்போது உன் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கு சென்று அந்த மலை அடிவாரத்தில் தங்கி நகுலனாக உள்ள சிவபெருமானை துதித்து வந்தால் உனக்கு மீண்டும் சாப விமோசனம் கிடைக்கும்' என்றது.

அதைக் கேட்ட அந்த வேடனும் சற்றும் காலம் தாழ்த்தாமல் உடனே கிளம்பி வேதாரண்யத்துக்குச் சென்றான்.அந்த தேவகணத்தின் உதவியினால் அவனால் பதினைந்து நாழிகைக்குள் வேதாரண்யத்தை பறந்து சென்று அடைய முடிந்தது. வேதாரண்யத்தை அடைந்து கடலில் பயணிக்கத் துவங்கி இலங்கையின் யாழ்பாணப் பகுதியில் இருந்த நகுல மலைப் பிரதேசத்தை அடைந்தான். அங்கு சென்று இறங்கியதுமே அந்த வேடன் ஒரு முனிவராக மாறினார். ஆனால் அவர் முகம் மட்டும் கீரிப்பிள்ளையின் முகம் போல மாறி விட்டது.

கீரிப்பிள்ளையின் முகத்தோடு இருந்த முனிவரைக் கண்ட மக்கள் அவரைக் காணவே அஞ்சினார்கள். அவருடன் நெருங்கிப் பேசவோ அல்லது அவர் அருகில் செல்லவோ பயந்தார்கள். அவரை சீண்டுவாரில்லை. மேலும் அவரை திட்டித் தீர்த்தார்கள். அதைக் கண்டு மனம் ஒடிந்து போன அந்த முனிவர் அந்த ஊரை விட்டு ஒதுங்கி மலை அடிவாரத்தில் இருந்த வனப் பகுதிக்குச் சென்று அங்கு நகுலேஸ்வரரை வேண்டித் துதித்தபடி தவத்தில் இருந்தார்.

பல காலத்துக்கு தவத்தில் இருந்த அவர் தவத்தைக் கண்டு மகிழ்ந்து போன சிவபெருமான் அவர் முன் தோன்றி தானே அந்த இடத்தில் உருவமற்ற நகுலேஸ்வரராக தங்கி உள்ளதாகவும் அவருக்கு என்ன வரம் வேண்டும் என்றும் கேட்க சிவபெருமானிடம் நடந்த அனைத்தையும் கீரி முகத்தைக் கொண்ட முனிவர் கூறினார். அதைக் கேட்ட நகுலேஸ்வரர் அவருக்கு சாப விமோசனம் தந்து அவரை அழகிய முகம் கொண்ட முனிவராக்கினார். கீரிப்பிள்ளையின் முகத்தைக் கொண்ட முனிவர் அதி அற்புதமான அழகை அடைந்ததைக் கண்ட மக்கள் அவர் உண்மையிலேயே பெரும் மகானாக இருந்திருக்க வேண்டும், அவருக்கு தெய்வீக அருள் உள்ளது என்பதை உணர்ந்தார்கள். தாங்கள் அவரை உதாசீனப்படுத்தியதற்கு அவரிடம் வந்து மன்னிப்புக் கேட்டார்கள். அந்த முனிவரும் பல காலம் அங்கேயே தங்கி இருந்து நகுலேஸ்வரருடைய மகிமையை எடுத்துக் கூறி மக்களை நல்வழிப்படுத்தி வந்தார்.

காலப்போக்கில் அவர் மறைந்து விட அவருடைய பெயராலேயே அந்த மலை பகுதியை  கீரி மலை என அழைத்தார்கள். அந்த ஊர் மன்னனும் அந்த முனிவரின் புகழைக் கேள்விப்பட்டு அங்கு வந்து அவரை தரிசனம் செய்தப் பின் அவர் விரும்பியபடி அங்கேயே ஒரு ஆலயத்தையும் நிறுவினார்.

காலம் கடந்தது. சிவபெருமானோ அங்கே ஏற்கனவே உருவமற்ற நகுலேஸ்வரராக இருந்திருக்க அவர் மனைவி பார்வதியும் நகுலேஸ்வரியாக தங்கி இருக்க அவர்களுக்கு உதவியாக மகாவிஷ்ணுவும் நகுல மாதவனாக அங்கிருந்தார். நகுல முனிவரின் முயற்சியால் சிவபெருமான் அங்கு தங்கியதினால் பெயரால் அந்த இடமும் நகுலேஸ்வரர் என ஆயிற்று. கீரி முகத்தைக் கொண்ட முனிவர் தவமிருந்து தமது சாபத்தை  விலக்கிக் கொண்டு அந்த இடத்தை தெய்வீகமாக்கியதினால் அந்த இடத்தின் பெயர் கீரி மலை எனவும் அழைக்கப்படலாயிற்று

பாகம் -7 

சூதக முனிவர் அந்த தீர்த்தத்தின் மேன்மையைக் குறிக்கும் இன்னொரு கதையையும் கூறலானார். 'தென் இந்தியப் பகுதியை  ஒரு சோழ மன்னன் ஆண்டு வந்தான் அவன் பெயர் திசையுக்த சோழன் என்பது. அவனுக்கு ஒரு அழகிய மகள் பிறந்தாள். எல்லா அங்கலஷணங்களும் உள்ளவளாகவும், பிறந்தவளாகவும், புத்தி கூர்மைக் பெண்ணாகவும் இருந்தவளுமானவள் என்ன காரணத்தினாலோ அவள் வயது வளர வளர அவளது அழகிய முகம் குதிரை முகம் போல ஆகத் துவங்கியது. ஒரு கட்டத்தில் அவள் முகம் முழுவதுமே குதிரை போல ஆகி விட அவளால் வெளியில் நடமாட முடியவில்லை. யாருடனும் பழக முடியவில்லை. மனம் ஒடிந்துப் போனவள் திருமண வயதை எட்டியதும் தனது வனப்பை இழந்தாள். அதைக் கண்ட மன்னனும் அவனது மனைவியும் கவலைக் கொண்டனர்.

என்ன செய்வது என்று புரியாமல் ஜோதிடர்களையும், பண்டிதர்களையும் அழைத்து ஆலோசனைக் கேட்டார்கள். அப்படி அவர்கள் பலரையும் சந்தித்து ஆலோசனைக் கேட்டபோது அந்த மன்னனின் அரண்மனைக்கு ஒரு பெரிய சன்யாசி வந்தார். அவரிடமும் மன்னன் தனது மகளின் நிலையைக் கூறி அழுதார். அதைக் கேட்ட அந்த சன்யாசியும் மன்னனிடம் கவலைக் கொள்ள வேண்டாம் என்றும், நகுல மலைக்குச் சென்று அங்குள்ள கீரி முனிவரிடம் ஆலோசனைக் கேட்குமாறும்  கூறினார்.

அவர் கூறிய அறிவுரையை ஏற்றுக் கொண்ட மன்னனும் உடனே தனது மகளை அழைத்துக் கொண்டு பரிவாரங்களுடன் நகுல மலைக்குச் சென்றார். அங்கு தங்கி இருந்த கீரி முனிவரை சந்தித்து தமது பிரச்சனைகளைக் கூறி அவரிடம் அறிவுரை கேட்டார்கள்.

அவளது பூர்வ ஜென்மத்தை ஆராய்ந்த கீரி முனிவர் கூறினார் 'மன்னா உன்னுடைய மகளின் இந்த நிலைக்குக் காரணம் முன் ஒரு பிறவியில் அவள் பெற்று இருந்த சாபமே. ஒரு பிறவியில் அவள் ஒரு மன்னனின் குதிரை லாயத்தில் வேலைப் பார்த்து வந்தாள். அவளுக்கு ஒரு தீய பழக்கம் இருந்தது. அவ்வப்போது பெண் குதிரைகளின் முகத்தில் ஏதாவது கூரிய கம்பினால் அல்லது ஈட்டியினால் அவற்றைக் குத்திக் குத்திக் காயப்படுத்துவாள். அவை வலியினால் அலறித் துடிக்கும்போது அதைக் கண்டு மகிழ்ச்சி அடைவாள். அவளுக்கு பெண் குதிரைகளை அப்படி காயப்படுத்துவது ஒரு வினோத பழக்கமாக இருந்தது. இப்படியாக அவள் யாருக்கும் தெரியாமல் குதிரை லாயத்தில் திருட்டுத் தனமாக செய்து வந்த அட்டகாசத்தினால் பல பெண் குதிரைகளின் முகங்களில் காயம் ஏற்பட்டு அவை துடித்தன.

ஒருநாள் அவள் பிறந்த பெண் குதிரையின் முகத்திலும் கூரிய கம்பினால் குத்தி விட அந்தக் கம்பு அதன் மூக்கில் சென்று பலத்த காயத்தை ஏற்படுத்தி விட அதனால் ஏற்பட்ட காயம் பெரியதாகி புரைபுண்ணாகி அது துடி துடித்து செத்து விட்டது. அந்தக் குதிரை சாகும் முன் மனதார அந்தப் பெண்ணுக்கு சாபம் இட்டது. நீ அடுத்த ஜென்மத்தில் பெண் உருவில் மனிதப் பிறவி எடுக்க வேண்டும். ஆனால் குதிரையின் முகத்தை காயப்படுத்தி வேதனைப் படுத்துகிறாயே அதே குதிரையின் முகத்தை கொண்டவளாக மாறி நீ அவமானப்பட்டால்  தவிக்க வேண்டும்.

இப்படி அவள் முன் பிறவியில் செய்து இருந்த பாவத்தினால்தான் இந்தப் பிறவியில் அந்த இறந்து போன குதிரையின் சாபத்தினால் குதிரை முகத்தைக் கொண்டப் பெண்ணாகி அவமானப்படுகிறாள். ஆனால் விதி எப்படி வேலை செய்துள்ளது என்பதைப் பாருங்கள். சந்தர்ப்பவசத்தினால் எந்த குதிரையை இவள் முன் பிறவியில் சாகடித்தாளோ, அந்த குதிரையின் தாய் குதிரையாக நான்தான் இருந்தேன். பின்னர் வேடனாகப் பிறந்து சாபம் பெற்று கீரி முகத்தவனாக இங்கு வந்து சாப விமோசனம் பெற்றுள்ளேன். இவளோ என்னிடமே வந்து சாப விமோசனத்துக்கு வழி கேட்டு என்னையே வேண்டிக் கொண்டு நிற்கிறாள். இதுவும் நகுலேஸ்வரரின் ஆணைப் போலும். இவள் என்னுடையக் குழந்தையைக் கொன்று விட்டாலும், அதற்கான  அவமானத்தை அடைந்து விட்டதினால் இவளை நான் மேலும் தண்டிக்க விரும்பவில்லை.

ஆகவே இவளுக்கு மீண்டும் மனித உருவிலான பெண் முகத்தை அடைய வழிகாட்டுவது ஒரு முனிவரான என் கடமை. முனிவரான என்னிடம் வந்து இவள் இறைஞ்சும்போது அவளை தண்டிப்பது முனிவரான என் நிலைக்கு அழகல்ல. தவறை மறந்து மன்னிப்பதே பெருமை. ஆகவே இவள் இங்கேயே தங்கி இருந்து கங்கரசாகரசங்கமத்தில் தினமும் குளித்தப் பின் இங்குள்ள நகுலேஸ்வரி மற்றும் நகுலேஸ்வரரை வணங்கி வந்தால் அவள் தனது பழைய முகத்தைப் பெறுவாள் என்று கூற அவர்களும் அங்கேயே தங்கி இருந்து கீரி முனிவர் கூறியபடி தினமும் கங்கரசாகரசங்கமத்தில் குளித்தப் பின் ஆலயத்தில் நகுலேஸ்வரி மற்றும் நகுலேஸ்வரரை வணங்கி வர விரைவில் அவளது முகம் மாறி அழகியப் பெண்ணாக மாறினாள்.

இப்படியாக நகுலேஸ்வரத்தின் மகிமைக் கதையைக் கூறி முடித்தார் சூதக முனிவர். அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றார்கள்.

No comments:

Post a Comment