Thursday, 7 January 2016

ஜீவ சமாதிகளின் வகைகள் .

சித்தர்கள் குறிப்பிடும் முன்னோர்கள்
அடைந்துள்ள.

ஜீவ சமாதிகளின் வகைகள் .

{ ஜீவ சமாதி பற்றிய நமக்குள் உள்ள
முழுமையான கேள்விகளும் அதற்காக
பதில்களும் சித்தர்களால் சொல்லப்பட்ட
சுக்சுமமான உண்மைகளும் அதன் பின்னால்
ஒளிந்துள்ள மர்மங்களும்...........
இந்த தேவரகசியத்தை நமக்கு அருளிய
மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு கோடி
கோடி நன்றிகள். ]

ஜீவசமாதி - சில குறிப்புகள்.
-------------------------------------------

ஜீவசமாதி குறித்த விவரங்கள் பலருக்கு
புதிய தகவலாய் இருந்திருப்பதை
பின்னூட்டங்கள் மற்றும் தனி அஞ்சல்களின்
வாயிலாக அறிய முடிந்தது. இந்த தகவல்கள்
யாவும் காலகாலமாய் ஏடுகளிலும்,
நூலகங்களில் தூங்கிக் கொண்டிருக்கும்
தகவல்களே, இதை பகிர்வதில் எனக்கென
பெருமை எதுவுமில்லை.இப்படி ஒரு
வாய்ப்பினை எனக்கு அருளிய எல்லாம் வல்ல
குருவுக்கே அத்தனை புகழும் சேரும்.

இந்து மரபியலில் ஜீவசமாதியின்
முக்கியத்துவம் தெளிவாக வரையறுத்து
கூறப் பட்டிருக்கிறது. எனினும் ஜீவசமாதி
என்பது குறிப்பிட்ட எந்த ஒரு
மதத்திற்குமானது இல்லை. தமிழகத்தில்
இஸ்லாம் மற்றும் கிருத்துவ ஞானியரின்
அடக்கத் தலங்கள் புகழ்பெற்ற வணக்கத்
தலமாய் இருப்பதை இதற்கு உதராணமாய்
காட்டிட முடியும். ஞானத்தின் உச்ச நிலை
எய்திய ஒருவரை இன்ன மதத்தவர் என
அடையாளம் காட்டிக் கொண்டிருக்கத் தேவை
இல்லை என்பது என்னுடைய தாழ்மையான
கருத்து.

ஞானியரின் ஜீவசமாதியில் ஒரு விளக்கேற்றி
வைத்து, மனதை ஒரு முகப் படுத்தி
தியானத்தில் அமர்ந்திருந்தாலே அவர்களின்
அருளுக்கு பாத்தியமாக முடியும். ஆனால்
தற்காலத்தில் இவை எல்லாம் புறக்கணிக்கப்
பட்டு வழிபாடுகள், ஆராதனைகள் என
சடங்குகள் சார்ந்த ஒரு வைபவமாக மாற்றப்
பட்டுவிட்டது வருந்தத் தக்கது.
எமது நாட்டிலும் கூட பல ஞானியரின்
ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன. கடந்த
காலத்தின் அசாதாரண நிகழ்வுகளினாலும்,
தற்போதைய அரசியல் சூழலினாலும்
அவற்றில் பல அழிந்ந்தும், பராமரிப்பு அற்றும்
போய்விட்டன. எஞ்சிய ஒரு சில ஜீவசமாதிகள்
அருளாளர்களினால் போற்றிப் பாதுகாக்கப்
பட்டு வருகிறது.

சமாதி நிலை என்பது எந்த வித
எண்ணங்களும் இல்லாது கண்களை மூடி
அமர்ந்திருப்பது என்பதாகவே நம்மில் பலரும்
புரிந்து கொண்டிருக்கிறோம். உண்மையில்,
சமம் + ஆதி = சமாதி, அதாவது ஆதியும்
அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை
நிலைக்கு சமனான ஒன்றுமற்ற அல்லது
வெறுமையான மனநிலையில் இருப்பதே
சமாதி எனப்படும்.

இன்னொரு வகையில் சொல்வதானால்,
கண்ணை திறந்து கொண்டு அனைத்து
நிகழ்வுகளிலும் பங்கேற்று கொண்டே,
உள்ளார்ந்த விழிப்புணர்வுடன் "நான்" "எனது"
"என்னுடையது" என்ற அகங்காரம் இல்லாத
பக்குவமும் சமாதி நிலையாக சொல்லப்
படுகிறது.

இதனை திருமூலர் தனது திருமந்திரத்தில்
பின் வருமாறு கூறுகிறார்.

"சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியிற் றங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே"
- திருமந்திரம் -

"சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுடன் னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே"
- திருமந்திரம் -
இந்த நிலை எல்லோருக்கும் சாத்தியமில்லை.

குருவருளுடன் கூடிய விடாமுயற்சியும்,
பயிற்சியுமே இந்த நிலைக்கு இட்டுச்
செல்லும். பதஞ்சலி முனிவர் தனது பதஞ்சலி
யோகம் என்னும் நூலில் சாமாதி நிலைக்கு
இட்டுச் செல்லும் எட்டுப் படிநிலைகளின்
வகைகளை விரிவாக அருளியிருக்கிறார். அது
தொடர்பான பதிவுகளை இந்த இணைப்பில்
வாசிக்கலாம்.

கொங்கணவர் தனது “கொங்கணவர்
வாதகாவியம்” என்ற நூலில் சமாதி
நிலைகளைப் பற்றி விரிவாக
விளக்கியிருக்கிறார். ஆறுவகையான சமாதி
நிலைகள் இருப்பதாக கொங்கணவர்
குறிப்பிடுகிறார்.

அவையாவன...
தத்துவல்ய சமாதி
சவிகற்ப சமாதி
நிருவிகற்ப சமாதி
அகண்டவிர்த்தி சமாதி
சஞ்சார சமாதி
ஆரூட சமாதி

தத்துவல்ய சமாதி...
--------------------------------
கொங்கணவர் தனது “கொங்கணவர்
வாதகாவியம்” நூலில் அருளிய ஆறு
வகையான சமாதி நிலைகளைப் பற்றி
நேற்றைய பதிவில் பார்த்தோம். இன்று முதல்
வகையான தத்துவல்ய சமாதி நிலை பற்றி
பார்ப்போம்.

"தானான சமாதியாறு குணத்தைக் கேளு
தத்துவல்ய சமாதியொன்று சாற்றுவேன்யான்
கானான தத்துவங்காண் முப்பதாறுங்
கலந்தூத பௌதிகத்தைச் சூட்சுமதத்
திலடக்கி
நானான சூட்சுமத்தை யழித்து நன்றாய்
நம்பெரிய வரசனைப்போ லாக்கின் மைந்தா
வானான காரணமாஞ் சரீரத்தில டக்கி
மருவியதைப் பிரகிருதி யிலே மருவப்
பண்ணே"
- கொங்கணவர் -

"பண்ணினதோர் புருடனையுந் திட்டான்பான
பரவிநின்ற சைதன்ய மாகக் கண்டு
கண்ணினதோர் கர்த்தனிக ரழித் தொன்றேயாகிக்
காற்றசையா வறையினின்ற விளக்குப் போல
ஒண்ணினதோ ரலைச்சலற் றேயகண்டந்தானா
யொன்றாலு மலைச்சலற்றுத் தானே தானாய்
பண்ணினதோர் கரைதனித்து ஒன்றே யாகிப்
பந்தமற்றது தத்துவலய சமாதி யாச்சே"
- கொங்கணவர் -

இருக்கிற எல்லாவற்றிற்கும் சாட்சியாக நாமே
சீவனாகவும், பிரபஞ்சமாகவும், உள்ளாகவும்,
வெளியாகவும் நிற்கிறோம். மேலும்
சங்கற்பம், விகற்பம் போன்றவைகளை கடந்து
ஆதிகாரணமாக ஞானமாகவும் நிற்கிறோம்.
இது போலவே மாயையாகவும்,
முக்காலமாகவும் ஆகாசம் போல் எங்கும்
பரவி நிறைந்து நிற்கிறோம்.

இப்படியான முப்பத்தாறு வகை
தத்துவங்களைக் கொண்ட இப்பௌதிக
தேகத்தை சூட்சுமத்தில் அடக்கி, அந்த
சூட்சமத்தை அழித்து அதனை காரணத்தில்
அடக்கி, இந்த காரணத்தை மூலப்பிரகிருதியில்
லயப்படுத்தி, அப்பிரகிருதியை சுத்த
சைதந்யமாகவும் எங்கும்
வியாபித்தவனாகவும் உணர்ந்து
கொள்வதுடன் எல்லாம் என்று தெளிந்து
அனைத்து பந்தங்களையும் அகற்றி நிற்பதே
தத்துவல்ய சமாதியாகும்.

கொஞ்சம் சிக்கலான விளக்கம்தான்... இதனை
எளிமைப் படுத்தி எழுதினால் நான் என்பதை
கரைத்து, தாமே எல்லாவற்றிலும் நிறைந்தும்,
மறைந்தும் நிற்பதை உணர்ந்த ஒரு உயர்
நிலையாக கூறப் படுகிறது.

சவிகற்ப சமாதி...
---------------------------
கொங்கணவர் அருளிய ஆறு வகையான சமாதி
நிலைகளில் இன்று இரண்டாவது வகையான
சவிகற்ப சமாதி நிலை பற்றி பார்ப்போம். இந்த
சமாதி நிலை என்பது யோகத்தின் மிக உயர்ந்த
நிலையாகும். வெறும் வார்த்தைகளால்
இவற்றை விவரித்து உணர்த்துவதும்,
உணர்வதும் கடினமானது. இவை யாவும்
உணர்ந்து அறிந்து அனுபவிக்க வேண்டிய
அதி உயர்நிலைகள். எனவே எனது இந்த
முயற்சியினை ஒரு தகவல் பகிர்வாக மட்டும்
கருதிட வேண்டுகிறேன்.
வாருங்கள்!, சவிகற்ப சமாதி பற்றி
கொங்கணவர் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

"ஆச்சப்பா சவிகற்பச் சமாதி கேளு
அடுத்தாக்கால் ரெண்டுவகை யதிலேயுண்டு
வாச்சப்பா சத்தானு வித்தையொன்று
வரிசையுடன் திரையவித்தைச்
சமாதியொன்று
போச்சப்பா சத்தானு வித்தை மார்க்கம்
பெரியதொரு தத்துவலய சமாதிக்குள்ளே
ஓச்சப்பா சத்தங்கள் பட்சியோசை
வுன்மனத்தே படுகிறது உயிர்ப்புக்கேளே"
- கொங்கணவர் -

"கேளப்பா சத்தானு வித்தையென்றுங்
கெடியான சவிகற்பச் சமாதியென்றும்
வாளப்பா திரிசானு வித்தைமார்க்கம்
வகைசொல்வே னன்றாகக் கேளுமக்காள்
நாளப்பா நின்றநிலை சமாதிக்குள்ளே
நலமாகத் தன்னையனு சந்தானித்துத்
தாளப்பா சஞ்சரிக்கில் திரிசானு வித்தை"
- கொங்கணவர் -

உயர்வான இந்த சவிகற்ப சமாதியானது
நேற்றைய பதிவில் நாம் பார்த்த தத்துவலய
சமாதி நிலையின் மற்றொரு வடிவாகக்
கூறுகிறார். இந்த சுவிகற்பச் சமாதி இரண்டு
வகைகளாக கூறப் படுகிறது. அவையாவன
“சத்தானு சமாதி” , “திரைய சமாதி” என்கிறார்
கொங்கணவர்.

தத்துவலய சமாதி நிலையில் இருக்கும்
போது தன்னுள்ளே பட்சியின் ஓசை
எழும்புவதை உணர்ந்து அதில்
லயப்பட்டிருப்பதே சத்தானு சமாதி
எனப்படுமாம்.
தத்துவலய சமாதி நிலையில் தன்னைத்
தானே அனுசந்தானம் செய்து நிற்றலே திரைய
சமாதி என்கிறார்.

நிருவிகற்ப சமாதி..
------------------------------
நிருவிகற்ப சமாதி குறித்து கொங்கணவர் பின்
வருமாறு கூறுகிறார்...

"பேரான நிருவிகற்ப சமாதிகேளு
பெருத்து நின்ற தத்துவலய சமாதிமுத்தி
தாரான சத்தானு வித்தை முத்தி
தனைமறந்து தூக்கமுற்ற மயக்கம்போல
வாரான சத்தமொன்றுங் காதிற்கேட்கா
மருவியிந்த பூரணத்தே சித்தமப்பா
நேரான சைதன்ய மாகப்போனால்
நிருவிகற்ப சமாதியென்ற நேர்மையாச்சே"
- கொங்கணவர் -

"ஆச்சப்பா சமாதிவிட்டுச் சஞ்சரிக்கி
லடவாகச் சமாதியிலே யிருக்கும்போது
காச்சப்பா காலமென்ற திரயத்தினுள்ளுங்
கண்டிருந்த பிரபஞ்சமெல்லாம் பொய்
யென்றெண்ணு
வீச்சப்பா விவகாரத் தாலே தோன்றி
விரிந்துநின்ற பிரபஞ்சத்தின் பாசந்தள்ளி
ஒச்சப்பா நிருவிகற்ப மாகி நின்றா
லுத்தமனே நிருவிகற்ப மிதுவே யாச்சே."
- கொங்கணவர் -

தத்துவலய சமாதியம், சத்தானு சமாதியும்
முழுமையாக சித்தியாகி விட்டால், தன்னை
மறந்த துக்கத்தைப் போல் ஒரு மயக்க நிலை
ஏற்படுமாம்.இந்நிலையில் எந்த ஒரு சத்தமும்
அவர்களுக்கு கேட்காதாம். சுத்தமானது
பூரணத்துடன் சேர்ந்து சுத்த சைதந்ய
நிலையை அடைந்துவிடும் என்கிறார். இந்
நிலைக்கே நிருவிகற்ப சமாதி பெயர்.

மேலும்,சமாதியை விட்டு எழுந்த பிறகும்,
சமாதியிலிருக்கும் பொழுதும்
காலத்திற்குட்பட்டு இயங்கும் இப்
பிரபஞ்சமெல்லாம் பொய் என்றும், இவை
யாவும் மாயா விகாரத்தால் தோன்றியது என
எண்ணி இவற்றின் மேலுள்ள பாசத்தை நீக்கி
எதையும் நினைக்காமல் இருத்தலே
முழுமையான நிருவிகற்ப சாமாதியாகும்
என்கிறார் கொங்கணவர்.

அகண்டவிர்த்தி சமாதி..
--------------------------------------
சமாதி வகைகளில் நாண்காவது நிலையான
அகண்டவிர்த்தி சமாதி பற்றி கொங்கணவர் பின்
வருமாறு கூறுகிறார்.

"நன்றான வகண்டவிர்த்தி யாவதப்பா
நலம்பெரிய காற்றில்லா விளக்குப் போல
அன்றான வலைச்சலற்றுத் தண்ணீருமுப்பு
மடங்கிநின்ற வாறதுபோன் முத்தி நிற்குந்
தன்றான பிறமனதி னுருத்தான் கெட்டுத்
தனிப்பெறவே வேற்றுருவாய்ப் பிரமந்தானாய்
பன்றான விப்படிதான்கடிகையொன்று
பருவமுடன் சமாதியற்றார் பலத்தைக் கேளே"
- கொங்கணவர் -

"பலன்கேளு அசுவமேத யாகங்கோடி
பண்ணினதற் கொக்கு மொக்கும் பரிந்துகூடு
நிலன்கேளு யிப்படிதான் சமாதி மூட்டில்
நிலையாகச் சுழுத்தியென்றேயெண்ண வேண்
தலன்கேளு சுழுத்திக்குச் சித்தந்தானுந்
தயங்கிநின்று நின்றுற்று நசித்துப் போகும்
புலன்கேளு சமாதிக்கு நாம் பிரமமென்று
புடவாக வதிலிருந்து யிருக்கும் பாரே"
- கொங்கணவர் -

இந்த அகண்டவிர்த்தி சமாதி நிலையானது
எப்படி இருக்குமென்றால் காற்றில்லாத
இல்லத்தில் வைக்கப்பட்ட ஒரு விளக்கின்
சுடரைப்போலவும், தண்ணீரில் கரைக்கப்பட்ட
உப்பைப் போலவும் யோகத்தில் மனமானது
முதிர்ந்து நிற்க்குமாம். இந்த ஆனந்த
நிலையில் ஒரு கடிகை நேரம் லயித்தாலும்
கிடைக்கும் பலன்கள் அதிகம் என்கிறார். அந்த
பலன்களை பின் வருமாறு பட்டியலிடுகிறார்
கொங்கணவர்.

கோடி அஸ்வமேத யாகம் செய்த பலன்
கிடைக்குமாம். மேற் சொன்னவாறு தினமும்
பழகி வந்தால் மனமானது சுழித்தியில்
அடங்குமாம். இதை வெறும் சுழித்தீ தானே
என்று எண்ணி கைவிட்டு விடாமல் சரியாக
தொடர்ந்து செய்து வந்தால் அனைத்துமே
சித்தத்தில் அடங்குமாம் அப்படி சித்தத்தில்
அடங்கி பின் சித்தமும் பிரம்மத்தில்
அடங்குமாம். அப்போது நீயே பிரம்மம்
என்பதை அறிவாய் என்கிறார். இதுவே
அகண்டவிர்த்தி சமாதி யாகும்.

சஞ்சார சமாதி..
------------------------
கொங்கணவர் அருளிய ஆறு வகையான சமாதி
நிலைகளில் இன்று ஐந்தாவது வகையான
“சஞ்சார சமாதி” பற்றி பார்ப்போம். இதனை
பின் வருமாறு கூறுகிறார் கொங்கணவர்.

"இருக்கிற தாகையினால் ரெண்டுக்கும் பேத
மியல்பான வகண்டவிர்த்தி சமாதி மார்க்கந்
தருக்கிறதோர் சஞ்சார சமாதி கேளு
சார்ந்து நின்ற வகண்டவிர்த்தி விட்டேயப்பா
வருக்கிறதா யெழுந்திருந்து பிரபஞ்சத்தைப்
பார்த்தே
யடைவாக விவகரிக்குங் காலமெல்லா
மருக்கிறதோர் பிரபஞ்ச மெல்லாஞ் சமுத்திரத்
தலைபோல்
மருவிநின்ற நுரைபோல மாயந்தானே"
- கொங்கணவர் -

மாயமுற்றுச் சிலந்தியி
னல்வலையைப்போல
மயங்கிநின்ற கூர்மத்தி னங்கம்போலத்
தோயமுற்ற வாகாச மேகம்போலச்
சொப்பனமாம் பிரபஞ்சத்தி லறிவைப் போல
வாயமுற்று நம்மிடத்தே யுண்டாச்சப்பா
வாச்சரிய நம்மிடத்தே யிருந்துகொண்டு
காயமுற்று அறிவழிந்து போறதாலே
கலந்து நம்மை விடவொன்றுங் கண்டிலேனே"
- கொங்கணவர் -

அகண்டவிர்த்தி சமாதியை விட்டு எழுந்து
வெளியுலகமான பிரபஞ்சத்தில் உலாவும்
போதும், பிரபஞ்சத்தில் கடமைகள் மற்றும்
வேலைகளில் ஈடுபடும் பொழுதும் சமுத்திர
அலையால் உண்டான கடல் நுரையைப் போல
அனைத்துமே மாயை என்பதை நினைவில்
கொள்ளல் வேண்டும்.

சிலந்திப் பூச்சியானது தான் உருவாக்கும்
ஒருவகையான பசைத்தன்மை கொண்ட
பொருளால் வலையை உண்டாக்கிக் கொண்டு
அதில் தானே அதில் வசிப்பதை போலவும்,
கூர்மம் என்று அழைக்கப்படும் ஆமையானது
தன்னுடன் தோன்றிய ஓட்டினுள் தன்னை
அடக்கிக் கொள்வது போலவும், கனவு
போன்ற இந்த பூலோகவாழ்கை அழிவடையும்
தன்மை உடையது என்றும் உணர்ந்து, என்னை
தவிர வேறொன்றும் இல்லை என்பதை
நினைவில் நிறுத்தி பூலோக வாழ்வியல்
விவகாரங்களில் ஈடுபடும்போது எதுவும்
உன்னை சலனப்படுத்தாது என்பதை
உணர்ந்திருக்கும் நிலையே சஞ்சார சமாதி
என்கிறார்.

ஆருட சமாதி...
------------------------
கொங்கணவர் அருளிய ஆறு வகையான சமாதி
நிலைகளில் இன்று இறுதி நிலையாக கூறப்
பட்டுள்ள “ஆரூட சமாதி” பற்றி பார்ப்போம்.

இந்த நிலையினை பின்வருமாறு விவரிக்கிறார்
கொங்கணவர்...

"அணைந்து முன்னே தேவதைகள்
வந்தாலுந்தான்
அதைச்சட்டை பண்ணாதே யகண்டமாய் நில்
லணைந்து நின்ற வத்துவித நெறியிற்கூடி
யப்பனே சஞ்சார சமாதிக்குள்ளு
மணைந்து நின்று திடப்பட்டாற் பின்புகேளு
அப்பனே சகலத்தி லசத்தியம் போக்கி
யணைந்துநின்று சுட்டசட்டி விட்டாற் போலே
யாச்சரியந் தேவதைக ளசத்தாய்க் காணே"
- கொங்கணவர் -

"அசத்ததாகக்தேவதையை மனதிலெண்ணி
யசையாத மலைபோலே யசைவுமற்று
நிசத்தான காற்றுப்போல் தேவதைக ளென்று
நிச்சயித்து நன்றாக நில்லு நில்லு
பசத்தான வத்துவித நிலைநாமென்று
பாராகத் திடப்பட்டு நில்லுநில்லே
உசத்தாகச் சாதகத்தி நிலையைக் கூட்டி
யுத்தமனே யாரூட சமாதியாச்சே"
- கொங்கணவர் -

உலகில் இருக்கும் அனைத்துப் பொருட்களும்
என்னிடம் இருந்தே உண்டாயிற்று, நான் தான்
அனைத்து பொருட்களிலும்
நிறைந்திருக்கிறேன் என்பதாக உணர்வதுடன்,
தானே பிரம்மம், தானே அனைத்திற்க்கும்
ஆதாரமானவன் என்ற உயரிய நிலையில்
இருந்துகொண்டு, உன் முன்னால் தேவதைகள்
தோன்றினாலும் கூட அவற்றை பொருட்
படுத்தாமல் நீயே பிரம்மமாய் இருக்கும்
நிலையான சஞ்சார சமாதியில் எல்லாம்
மாயை என்பதை தெளிந்த பின்னர் மேலான
தேவதைகள் முதல் வேறு எவரும் உன்
முன்னால் வந்து நின்றாலும் அவற்றை
காற்றைப் போல் நினைத்து அவை
அனைத்துமே உன்னிடம் இருந்து தோன்றியதே
என்ற உண்மையை உணர்ந்து மலை போல
அசைந்து கொடுக்காது நீயே பிரம்மம் என்ற
நிலையில் இருத்தல் ஆருட சமாதி எனப்படும்.
இதுவே இறுதி முடிவான நிலையும் ஆகும்
என்கிறார் கொங்கணவர்.

யோகத்தின் மிக உயரிய நிலையில் கூட
இத்தனை படி நிலைகள் இருக்கின்றன என்பது
ஆச்சர்யமான தகவல்தானே... என் வயதிற்கு
இதெல்லாம் மிகப் பெரிய விஷயங்கள்.
இவற்றை முழுதாய் உணர்ந்து எழுதிடும்
மனப் பக்குவம் எனக்கு இன்னமும்
வரவில்லை. அதற்கான பயணம் மிக நீண்டது.

உண்மையில் இது உங்களுக்கு ஆச்சர்யமான
தகவல்தானே.....

சிவ சிவ சிவ சிவ நமசிவாய.............

No comments:

Post a Comment