Saturday 30 January 2016

தீட்சைகள்

தீட்சைகள் :-

காய சித்தி என்னும் உடல் தூய்மையடைய பத்துவிதமான தீட்சைகள் கூறப்படுகின்றன. சுத்தி முறைகளே தீட்சை என்று கூறப்படுகிறது.

1.   மயிர்க்கால் வழியே துர்நீர்களைக் கழியச் செய்தல்

2.   வாத, பித்த, ஐய குற்றங்களை நீக்குதல்

3.   கெட்ட குருதியைக் கசியச் செய்தல்

4.   உடல் சட்டையைக் கழட்டுதல்

5.   மயிர் கறுத்தல்,பஞ்சபூதம் வசமாதல்

6.   சுழுமுனை திறந்து தூர திருட்டி வசமாதல்

7.   உடல் சோதி வடிவமாகிப் பிரகாசித்தல்

8.   உடல் காற்றாக மிதத்தல், கூடுவிட்டுக் கூடு பாய்தல்

9.   எட்டு சித்திகள் அடைதல்

10. உடல் ஒளிவடிவமாதல்.

மேற்கண்ட பத்துவிதமான சுத்திகளையும் அடையச் செய்யும் மருந்துகள் மூன்று.

அந்த மருந்தே வீர மருந்து, விண்ணோர் மருந்து, நாரிமருந்து என்னும் கற்பங்களாகும். அவை முறையே கற்பம், யோக கற்பம், ஞான கற்பம் என்பனவாகும்.

ஞான கற்பம் :-

சித்தர்கள் யோக முறையில் சாகா நிலையை அடைய மனவழி பயிலும் யோக முத்திரைகள் ஞான கற்பம் எனப்படும்.

ஞான முத்தி பெறும் நிலை சாகாநிலையைத்தரும். ஞானம் என்பது அறிவு, முத்தி என்பது முதிர்வைக் குறிக்கும். அறிவின் முதிர்வே ஞானமுத்தியாகும். இந்நிலையை அடைய பன்னிரண்டு ஆண்டுகள் யோக முறையில் ஞானகற்பம் என்னும் முத்திரைப் பயிற்சியை மேற் கொள்ள வேண்டும். இம்முறைகள் வழிவழியாக அறிப்படுவன. இவை மறை மொழி என்னும் குறியீட்டு முறையால் உரைக்கப்படும். ஞான கற்பம் இரண்டு வகை. ஒன்று வாலைபூசை, மற்றொன்று கற்பம். இரண்டும் சேர்ந்தது ஞானகற்பம். பூசை என்பது புசித்தல், உண்ணல் எனப் பொருள்தரும். வாலை என்பது, மூலாதாரத்துக்கும் தலையின் உச்சிக்கும் உள்ள வாயுத் தொடர்பு.

கற்பங்களின் வகை :-

ஞான கற்பம் நான்கு வகைப்படும். அவை, அகரம், உகரம், மகரம், சிகரம் என்பன.

கற்பம் உண்ணும் காலம் :-

யோக முறையில் உண்ணப்படும் நால்வகைக் கற்பங்களை காலை மாலை ஆகிய இரண்டு வேளை உண்ண வேண்டும்.

கற்பம் தோன்றுமிடம் :-

கற்பம் இருக்குமிடம் அல்லது அறியுமிடத்தைக் கற்ப நேர்மை என்பர். உடல் அடி, நடு, முடி என்னும் மூன்று இடங்களைப் பெற்றிருக்கும். அடி என்பது மூலாதாரம், முடி என்பது தலையின் உச்சி, நடு என்பது இரண்டு புருவத்துக்கும் நடுவிடமாகிய மூக்கின் அடிப்பகுதி. இந்த நடுவிடமே கற்பம் அறியுமிடம் என்று கூறப்படும். இவ்விடமே கற்ப நேர்மையாகும்.

இந்தக் கற்பங்களை உண்டவர்கள் சித்தர்கள் எனப் படுவர். இந்த நிலையை அடைந்தவர்கள் சிவநிலையை அடைந்ததாகவும் கூறுவர். ‘சிவனும் நானும் ஒன்றானோம்’ என்று திருமூலர் கூறுவார். சிவன் என்பதும் சித்தநிலை அல்லது சித்தரைக் குறிக்கும். இம்முறையைப் பன்னிரண்டு ஆண்டுகள் இடை விடாமல் தொடர்ந்து செய்யவேண்டும். இப்பயிற்சியின் போது ஏற்படுகின்ற உடல் மாற்றம், மனமாற்றம், துன்பங்கள், மருந்து, உணவு முறை போன்ற பல தகவல் களுடன், ஒவ்வொறு மாதமும் என்னென்ன நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை ஒரு அனுபவத்தின் அறிக்கை யாகக் கருதலாம்.

கற்பம் உண்ணும் போது ஏற்படும் விளைவுகள் :-

முதல் மாதம் : மேல் கால்கள் வலிக்கும்;

2ம் மாதம்: சூடுண்டாகும். மலங்கழியும். பேதியாகும்;

3ம் மாதம்: வாய்வேகும். அபானம் வரை சூடுண்டாகும்.;

4ம் மாதம் : கால், கை நோகும்;

5ம் மாதம் : வயிறு புண்ணாகும். ஆசனம் வேகும். பெண் மாய்கை அதிகமாகும். சிறுநீர் கடுத்து விழும். விந்து விழும். நினைவு மாறும் இடங்கள் வெந்து போகும். வெயில் படாதிருக்க வேண்டும் ;

6ம் மாதம் : பசியுண்டாகும். புளியேப்பம் மிகும். உடல் நோகும். நடைகள் ஓயும். காரசாரம் சேர்க்கவும். புளியும் கொள்க;

7ம் மாதம் : திமிரேரும். அசதி கொள்ளும். உடல் வெளுக்கும். புளியேப்பம் மிகும். பெண்ணாசை ஏற்படும். சிறுவாசல் வயிறு நோகும்;

8ம் மாதம் : உடலில் ஒளியுண்டாகும். எலும்பிலுள்ள மூளை போகும். எலும்பின் வழி சுவாசம் போகும். புளியதனைக் கொள்ளவேண்டும். குய்யம் வேகும். தொடை விருவிருக்கும்;

9ம் மாதம் : வயிறு நோகும். குண்டலியின் முறப்பதாகும். உடல் மினுமினுக்கும். அசதி காணும். தங்கம் போல் உடலிருக்கும். பசும் பால் அருந்துக;

10ம் மாதம் : ஆகாரம் வேண்டாதாகும். உண்பது பாலாக பேதியாகும். பொருமல் அசதி காணும் மனம் புத்தி அகங்காரம் ஒடுங்கும். உடல் அதிக சூடுண்டாகும். உடலில் நெய் போல அருகும்;

11ம் மாதம் : மண்டையிடிக்கும். புளியதனை உண்டால் கூத்தன் அணுக மாட்டான். திருவாகத் தனஞ்செயனும் எழுந் திருப்பான் சிறப்பாக பரைபூசை விடாமற் செய்க;

12ம் மாதம் : மகத்தான சந்து வலிவரும். சீதம் விழும். கை கால் அசதி. பூரணத்தைக் கைக் கொண்டால் வெகு சுளுவாய் வியாதி பறக்கும். பின்பு ஆதவன் போல் உடலிருக்கம். இன்னும் பல ஆச்சரியங்கள் உண்டாகும்;

1ம் ஆண்டு : புளியுண்ண வேறு எதிலும் மனது முடிய நாடா. எமன் ஓடிப் போவான். அருணன் போல் எந்நாளும் இருக்கலாம். அவரைச் சித்தரெனச் சொல்வார்கள்;

2ம் ஆண்டு : சூட்சாதி சூட்சமெல்லாம் தெரிந்து முடிய கொள்ளலாம். எமனை வெல்லலாம். ஞானியாகலாம். மெய்ஞ்ஞானி யென்னும் பெயருண்டாகும். கல்லாக உடல் இருகும். எலும்புகளில் வாசி ஏறும்; நரம்பு வலுக்கும். வாலை பேசும்;

3ம் ஆண்டு : புகழுண்டாகும். பிணம் போல் முடிய வாழ்வான். குற்றமில்லா திருப்பான். ஒருவரோடும் தூஷணமாக ஒரு நாளும் பேசான். சிறப்பில்லா செயலை எண்ணான். அருமையொடு வாய்திறந்து பேசான்;

4ம் ஆண்டு : தினமும் யோக நிலையிலிருப்பான்; முடிய அய்யம் நீங்கும் உடல் நோகும்; வெய்யலில் போகான்;

5ம் ஆண்டு : உண்மையுடன் நடந்து கொள்வான். முடிய உயர்வான காரியத்தைச் செய்து பார்ப்பான். வகார முதல் எல்லாஞ் செய்வான். தனித்திருப்பான். நரைதிரை அற்றுப் போகும். மலைவாசியாவான். கண்ணுக்குத் தோணமாட்டான்;

6ம் ஆண்டு : மலசலம் பேதிக்கும். கெவுனத்திற்கு முடிய உறுதியாகும் அமுதமது பெருகிக் காணும். தினமும் அமுதம் உண்டு, பூரணத்தைப் பணிய உலகமெங்கும் புகழ் கொண்ட சித்தனாவான்;

7ம் ஆண்டு : சிறுபிள்ளை போன்றும் மதளை முடிய போன்றுமிருப்பார்;

8ம் ஆண்டு : தனியாகக் குகையிலிருப்பான். முடிய ஆசைகள் அறும் அமுதத்துடன் பால் விட்டுண்பான். சீவனுக்குச் சீவனாக இருப்பான்;

9ம் ஆண்டு : ஒருவரையும் சட்டை செய்யான். முடிய ஒடுங்கிப் போவான். வாய்மை தவறமாட்டான். விரும்பியொரு காரியத்தைச் செய்யான். காதவழி நடப்பான். வாசி வசமாகும்;

10ம் ஆண்டு : அமுரி பழுக்கும். உடல் சட்டை முடிய வாங்கும். உடல் பொன்போலாகும். தேக உப்பு மாறிப் போகும்;

11ம் ஆண்டு : வாய்ச்சொல் பலிக்கும். அறுசுவை முடிய வேண்டாதாகும். உயர்ஞான கேசரங்கள் தெரிவான். யாவரையும் சரிசமமாய் நினைப்பான். உற்றாரோடு வாஞ்சை நீக்கி உம்பர்களோடு இணங்கி வாழ்வான்.;

12ம் ஆண்டு : எப்பொழுதும் அழியாத தேகமாகும். முடிய உடலெங்கும் சவ்வாது மணம் பொருந்தியிருக்கும். நரை மயிர் கருத்துப் போகும். குழந்தைபோல் வயது பதினாறுமாகும். மண மாப்பிளை போலழகுண்டாகும்.

இவ்வாறு பன்னிரண்டாண்டு கற்பமுண்ட வாழ்வு முடிந்தால், ஒரு வயது என்று கணக்கிடப்படும். இருபத்து நான்காண்டு நிறைவடைந்தால், இரண்டு வயதென்று கணக்கிடப்படும். பன்னிரண்டு ஆண்டை ஒரு வயதென்று எண்ணிக் கொள்க. நூறு வயதாகும் போது கூடுவிட்டுக் கூடு பாய்வான். மூன்று உலகமும் போய்வருவான். அஷ்டகர்மத் தொழில் களையும், அறுபத்து நான்கு சித்துகளுக்கும் அவனே ஆவான். புகழான பேருபெற்று வாழ்வான்.

# பத்தியம் :

கற்பம் உண்ணுங்காலங்களில், பசுவின் பால் பாசிப்பயிறு சோறு இரண்டும் சிற்றுணவு. மாமிசம், மீன், கடுகு, நல்லெண்ணெய் ஆகா. முழுகுதற்குத் தேங்காய் சேர்க்கவும். இப்பத்தியம் கடுமையாகக் காக்க வேண்டும்.

# கற்பம் உண்ண வயது :-

இருபது வயதுக்கு மேல் நன்று. முப்பதுக்குள் மிகவும் நன்று. நாற் பத்துக்குள் உண்டால் பலிக்கும். ஐம்பதுக்குள் இன்னல் வராது. அறுபத்துக்குள் என்றால் உடல் பொன்னாகும். எழுபதுக்குமேல் பலிதமிராது.

# காய சித்தியும் மூலப்புளியும் :-

சித்தர்களின் ஞானக் கோட்பாட்டின் படி காயம் சித்தியானால் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம். காயம் சித்தி பெற கற்பம் வேண்டும். காய சித்திக்குக் கற்பமாக அமைவது மூலப்புளி.

மூலப்புளி என்பது என்னவென்று அறிந்து கொண்டு அதை முறைப்படுத்தி உண்டுவந்தால் எந்த நோயும் குணமாகும். எந்த நோயாலும் உடல் பாதிக்காது என்பர். மூலப்புளி என்பதே சித்தர் நெறியின்மூலப் பொருள். அதைக் கண்டு கொண்டால் எல்லாரும் சித்த நிலையை அடையலாம். இதுவே, சித்தர்கள் மேற்கொண்ட மறை பொருளின் இறுதி நிலையாகத் தோன்றும்

      பறந்து போம் மூலப்புளி தின்றா யானால்
      பசிக்கையிலே அன்னமுண்டு பசிதீர்ந்தாப் போலே
      சிறந்து போம் தன்னுடலே காய சித்தி

பசித்த போது உணவை உண்டால் பசி தீர்ந்து போவதைப் போல மூலப் புளியைப் புசித்தவுடன் உடலிலுள்ள குற்ற மெல்லாம் நீங்கி காயம் சித்தியாகும்.

      பத்தி யொடு மூலப்புளி உண்ட பேர்க்குப்
      பரிவாகத் தேகமெங்கும் பொன்னதாகும்

      இருப்பார்கள் மூலப்புளி உண்ட பேர்கள்
      இயல்பாக ஒருவருக்கும் தெரியா தையா

மூலப்புளியை உண்டவர்கள் உடல் பொன்னிறமாக மாற்ற மடையும். அவ்வாறு உண்டவர்கள் இயல்பாகவே எல்லாரையும் போலவே இருப்பார்கள். அவர்களின் நடவடிக்கையில் ஒரு மாற்றமும் இருக்காது எனத் தெரிகிறது.

# மூலப்புளியின் இருப்பிடம் :-

மூலப்புளியை உண்பதால் காய சித்தி உண்டாகும். மரணமில்லை. உடல் பொன்னிறமாகத் தோன்றும் என்று கூறியவர்கள், மூலப்புளியின் இருப்பிடத்தை உரைக்கின்றார்கள்.

      கற்பம் இருப்பதும் உந்தனுள்ளேகலை
      நாலும் இருப்பதும் உந்தனுள்ளே

      மாயாத கற்பமது உன்னுக்குள்தான்
      வளர்ந்திருக்கு தென்றறியார் மடையர் தாமும்

என்றும் உரைப்பதிலிருந்து மூலப்புளி என்னும் கற்பம் உடலிலேயே வளர்ந்து இருப்பது தெரியவரும்.

      கற்பம் இருப்பதும் உந்தனுள்ளேகலை
      நாலும் இருப்பதும் உந்தனுள்ளே

      மாயாத கற்பமது உன்னுக்குள்தான்
      வளர்ந்திருக்கு தென்றறியார் மடையர் தாமும்
      மூலப்புளிதனைப் பன்றிநாய் தின்றது

என்று, மூலப்புளி என்ன வென்று கூறாமல் குறிப்பினால் உரைக்கப்பட்டது. பன்றியும் நாயும் தின்றது என்றால் அது, மனிதக் கழிவுப் பொருள் என்றே கருத நேரிடுகிறது. மனிதக் கழிவு கற்பப் பொருளா? என்ற ஐயம் மேலிடுகிறது. என்றாலும், பன்றி நாய் என்பதும் மறைபொருள் சொல்லாக இருந்து விட்டால், எவ்வாறு கண்டறிவது?

      ஆவதுவும் ஆதிபுளி உப்பி னாலே
      அழிவதுவும் சுகபோகத் தாசை யாலே

ஆக்கத்திற்கு உரிய பொருளாக ஆதி உப்பும் ஆதிப்புளியும் பயன்படுவதாகக் கூறப்பட்டது. அவை, சுகபோகத்தினால் அழியக் கூடியது என்றும் தெரிவதால், பன்றியும் நாயும் தின்றது என்பதன் பொருள் வேறாக இருக்கிறது. ‘சிந்தையை உள்ளடக்கிச் சுழுமுனை தன்னை நோக்கித் தியானித்தால் ‘ஆகாய கற்பம்’ தானே கிடைக்கும். இந்த ஆகாய கற்பத்தை நாளும் உண்டு வந்தால் ‘மரணமில்லாப் பெருவாழ்வு’ கொள்ளலாம்.

யோக முறையை விரைவாகப் பெற ‘மாமூலி மருந்தை‘ உட்கொள்ள வேண்டும். ‘ஆதி கரு நெல்லி’யைக் கொண்டு வந்து குற்றங்களைப் போக்கித் தினமும் இருவேளை உண்டு வந்தால் யோகத்தின் ‘ஆறு நிலை‘களும் தானாகத் தோன்றிவிடும். ‘வான மழை‘ பொழியத் தொடங்கும். அம்மழை நீரே ஆகாய கற்பமாகும். (பாணியென்ற தெய்வமதைக் கண்டதுண்டோ என்றது இதைத்தான் போலும்.)  இம்முறையில் மூலப்புளியை அருந்த முனைந்தார்க்கு அனைத்து சுகமும் கிடைக்கப் பெறும் என வரும் திருவள்ளுவரின் கருத்தின்படி மாமூலி ஆதிகருநெல்லி மூலப்புளி என்பவை ஒரே பொருளை உரைக்கும் வெவ்வேறு பெயர்களாகக் கருதலாம்.

      பாதாள மூலியடி பாடாணம் தான் சேர்ந்து
      வேதாளம் கூட்டியல்லோ வெண்டாரை நெய்யூற்றிச்
      செந்தூர மையடியோ செகமெல்லாம் தான் மிரட்டித்
      தந்த மருந்தாலே என் கண்ணம்மா
      தனலாக வேகுறண்டி

என்று அழுகணிச் சித்தர் குறிப்பிடுவார். பாதாளமூலி பூநீர்; பாடாணம்; பிரம்மராச்சசி என்னும் வேதாளம் ரயில் கற்றாழை; வெண்டாரை இரசம்; நெய்சிறுநீர் இவை சேர்த்து செய்த செந்தூரம் உண்டால் காயசித்தி உண்டாகும் என்பது பொருள். இப்பாடலில் வரும் பாதாள மூலிபூநீரைக் குறிப்பதாக இருப்பதால் மூலப்புளி என்பது பூநீரைக் குறிக்கும் சொல் எனலாம்.

      சிவந்திருக்கும் மூலிகைதான் செடிதானல்ல
      வீட்டிலே யிருக்குமடா அந்த மூலி
      விளையுமடா காயோடே விரையில்லாதே
      நில்லாத நிழல் சேர்ந்த தண்ணி ரோரம்
      நிழலருகே முளைத்திருக்கும் மூன்று மூலி
      கோவானூர் பொட்டலிலே
      குண்டுமேனி அம்மன் கோயிலிலே
      சாகா மூலி முளைத்திருக்கு ஞானப் பெண்ணே

என்று கற்பப் பொருள் மறைபொருளாகக் கூறப்பட்டுள்ளது. என்றாலும் இது, மரணத்தை வெல்லக் கூடிய பொருள் என்பதால் சிறப்புக் கவனத்துடன் ஆராய்ந்தால் பயன் தரும். நில்லாத நிழலருகே முளைத்திருக்கும் மூன்று மூலி என்று குறிப்பால் உரைக்கப் பட்டிருக்கும் கற்பப் பொருள் அகரம் உகரம் மகரம் ஆகிய மூன்றும் ஒன்று சேர்ந்ததே. அது ஓம் என்னும் பிரணவப் பொருளாகும்.

      பாரடா சிவமூலி சகஸ்திரட் தெட்டின்
      பாலிருக்கும் நாற்சரக்கைக் காணமாட்டார்

என்று கற்பப் பொருளில் நான்கு பொருள்கள் கலந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்நான்காவது, கெந்தகம், பாதரசம், உப்பு, நஞ்சு என்பன. இந்நான்கில் கலந்துள்ள நஞ்சை நீக்கிச் சுத்தி செய்து முறைப்படி உண்பது கற்பமாகும். இதுவே உயிரின் மூலப்பொருள் எனச் சித்தர் வேதம் உரைக்கின்ற பிரணவம் ஆகும். இந்த பிரணவக் கற்பம் ஆற்றல்மிக்கது. எல்லாவகை நோயையும் போக்கக் கூடியது. நரை, திரை, மூப்பு என்னும் மூன்றையும் போக்கி உடலைக் காப்பது என்பர்.

      விண்கொள்ளாச் சுண்ணத்தை யென்ன சொல்வேன்
      வியாதி யென்றால் கடுகளவு கொடுத்துப் பாரு
      எள்ளளவு நாவுமேல் இட்டுப் பாரு
      தாகமென்ற பசிபோச்சு தன்மை யாச்சே
      பேச்சேது கற்பமுண்டால் திரேகந் தானும்
      பிலத்ததடா நரைதிரையும் ஓடிப் போகும்

என்று கற்பத்தின் சிறப்பு உரைக்கப்பட்டது. வியாதி என்றால் கடுகளவு கொடுத்துப் பாரு என்று கூறப்படுவதிலிருந்து இந்த கற்பத்தின் சிறப்பு என்ன வென்று உணர முடியும்.

சித்தர்கள், தாங்கள் உண்டு வந்த கற்பப் பொருளில் கெந்தகம், பாதரசம், உப்பு என்னும் மூன்றுபொருள்களை மூலப்பொருளாகக் கொண்டு பிரணவக் கற்பத்தைத் தயாரித்திருக்கின்றார்கள் எனத் தெரிய வருவதால், இம்மூன்றையும் இணைத்தால் வேதியல் முறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்தால், சித்தர்கள் பெற்ற பயன்கள் மனிதர்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ததாக இருக்கும்.

No comments:

Post a Comment