Sunday 17 January 2016

ஐம்புலன்களையும் கட்டி மேய்ப்பது

ஐம்புலன்களையும் கட்டி மேய்ப்பது

நமது ஐம்புலன்களே நமது இச்சைகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் அடிப்படை.

ஐம்புலன்களையும் அடக்க முடியாது. ஆனால் பக்குவப்படுத்தி- கூர்மைப்படுத்தி நமது கட்டுப்பாட்டுக்குள் அவற்றைக் கொண்டு வந்தால் மட்டுமே மாயையின் கட்டுகள் அறுந்து போகும்; ஞானப் பயணம் எளிதாகும். இது குறித்து திருமந்திரத்திலிருந்து மேலும் சில பாடல்களைக் காணலாம்.

"புலம் ஐந்து புள் ஐந்து புள்சென்று மேயும்
நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து
குலம் ஒன்று கோல் கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலமந்து போம்வழி ஒன்பது தானே.'
-திருமந்திரப் பாடல் எண்: 2001.

இப்பாடல் முழுக்க முழுக்க ஒட்டணியில் அமைந்த ஒன்று. சொல்ல வந்த கருத்தை நேரடி யாகக் கூறாமல், அனைத்தையும் உருவகங்களாகவே இப்பாடலில் கூறி இருக்கிறார் திருமூலர்.

உடலிலுள்ள ஐம்புலன் களைப் பறவைகளாகவும், உடலை அந்தப் பறவைகள் மேயும் இடமாகவும், ஆன்மாவை அந்த ஐந்து பறவைகளையும்  கண்காணிக் கும் மேய்ப்பனாகவும் உருவகப் படுத்தியுள்ளார். இனி இப்பாட லின் விரிவான விளக்கத்தை யும், மறைந்து நிற்கும் சூட்சுமங்களையும் காணலாம்.

"புலம் ஐந்து' என்பது நமது உடலில் ஐம்பொறிகளும் அமைந்துள்ள இடங்களைக் குறிக்கிறது.

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவையே ஐம்புலன்களாகும்.

அடுத்ததாக வரும் "புள் ஐந்து' என்பது இந்த ஐம்புலன்களின் செயல்பாடுகளைக் குறிப்பதாகும்.

மெய்- உணர்தல்.
வாய்- சுவைத்தல்.
கண்- பார்த்தல்.
மூக்கு- நுகர்தல்.
செவி- கேட்டல்.

இந்த ஐம்புலன்களின் செயல்பாடுகளே ஐந்து பறவைகளாக உருவகப்படுத்தப் பட்டுள்ளன.
"நிலம் ஐந்து' என்பது இந்த ஐம்புலன் களின் நுகர்வு நிலைகளைக் குறிக்கின்றது.

மெய்- உணர்தல்- ஊறு.
வாய்- சுவைத்தல்- சுவை.
கண்- பார்த்தல்- ஒளி.
மூக்கு- நுகர்தல்- நாற்றம்.
செவி- கேட்டல்- ஓசை.

"நீர் ஐந்து, நீர்மையும் ஐந்து' என்பது, இந்த ஐந்து புலன்களின் வழியே செல்லும் மனிதன் அடையும் இன்ப- துன்பங்களைக் குறிக்கிறது. புலன் இச்சைகளே நமது இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணமாக அமைகின்றன. புலன்கள் நம்மை ஆளும்போது துன்பங்களே மிகும். மாயையின் கட்டுகள் இறுகும். ஆசாபாசங்கள் என்ற கடலில் மூழ்கி கரையேற முடியாமல் தவிக்க நேரிடும்.

புலன்களை நமது வழிக்குக் கொண்டு வந்துவிட்டால் (தந்திர யோகப் பயிற்சிகளின் மூலம்) அவை நமது இச்சைக்கு உட்பட்டு இயங்கும். இன்பங்கள் பெருகும்.

"குலம் ஒன்று கோல் கொண்டு மேய்ப்பான் ஒருவன்.'

"குலம்' என்பது உடலைக் குறிக்கிறது. இந்த ஐந்து புலன்களும் தங்கியிருக்கும் உடல் (குலம்) ஒன்றுதான். இந்தப் புலன்களைக் கோல் கொண்டு மேய்ப்பவன் ஒருவன். அது நமது மனம் அல்லது ஆன்மா. ஐம்புலன் களையும் நமது ஆன்மாவே ஆட்சி செய்கிறது- கண்காணிக்கிறது. ஆன்மா நலமாக இருந்தால் புலன்களும் நல்வழியில் சென்று மேயும். ஆன்மா கறை படிந்ததாக இருந்தால் ஐம்புலன்களும் தறிகெட்டு ஓடும்.

அவ்வாறு ஐம்புலன்களும் தறிகெட்டு- தீய வழியில் சென்று துன்பங்களைக் கொண்டு வர உடலில் ஒன்பது வழிகள் (துளைகள்) உள்ளனவாம்.

"உலமந்து போம்வழி ஒன்பதுதானே.'

"உலமந்து' என்ற சொல்லுக்கு வருந்தி அல்லது கழன்று என்று பொருள். ஐம்புலன் களின் இச்சையால் வருந்தி இந்தத் துளைகளின் வழியே நுகர்வுகள் உருவாகும் என்பது பொருள்.

இந்தப் பாடலில் ஒரு அருமையான சூட்சுமம் ஒளிந்துள்ளது. ஆடு மேய்த்தல், மாடு மேய்த்தல் என்று கேள்விப்பட்டி ருக்கிறோம். ஆனால் இப்பாடலில் ஆன்மா ஐம்புலன்கள் என்ற ஐந்து பறவைகளை மேய்த்துக் கொண்டிருப்பதாக திருமூலர் குறிப்பிடுகிறார். "புள்' என்ற சொல் குருவி போன்ற சிறிய பறவைகளைக் குறிக்கும் சொல்லாகும்.

குருவிகளை எவராவது மேய்க்க முடியுமா? ஆடு, மாடுகள் ஓடினால்கூட எட்டிப் பிடித்து விடலாம். ஆனால் சிட்டுக் குருவிகள் நம் கைக்கு அகப்படாமல் சிட்டாகப் பறந்து விடும். சிட்டுக் குருவிகளை மேய்ப்பது என்பது மிக மிகச் சிரமமான செயல். அதுபோன்றே இந்த ஐம்புலன்களையும் கட்டி மேய்ப்பதும் ஆன்மாவுக்கு மிகவும் சிரமமான ஒரு காரியம் என்பதை உணர்த் தவே ஐம்புலன்களை புள்ளுக்கு ஒப்பிட்டுள் ளார் திருமூலர்! இனி ஐம்புலன்கள் குறித்துப் பேசும் மற்றொரு பாடலைக் காணலாம்.

"அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும் போய் மேய்ந்துதம் அஞ்சு அகமே
                புகும்
அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால்
எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே.'
-திருமந்திரப் பாடல் எண்: 2002.

இதுவும் ஒட்டணியில் அமைந்த ஒரு பாடலே. இப்பாடலில்  நமது ஐம்புலன்களை ஐந்து சிங்கங்களாகவும், நமது உடலை அவை மேயும் காடாகவும் (அடவி) உருவகம் செய்துள்ளார் திருமூலர்.

நமது உடலாகிய காட்டில்  ஐந்து சிங்கங்கள் (புலன்கள்) உள்ளனவாம். இவை சுதந்திரமாகக் காட்டில் திரிந்து வேட்டை யாடி வயிறார உண்டபின் மீண்டும் தத்தம் இருப்பிடம் வந்து சேர்ந்துவிடுமாம். இந்தச் சிங்கங்களின் நகங்களையும் பற்களையும் அறுத்து விட்டால் (உகிரும் எயிறும் அறுத்திட்டால்) இறைவனது திருவடிகளைச் சென்றடையத் தடை எதுவும் இராது என்பதே இப்பாடலின் பொருளாகும்.

இப்பாடலில் பல அருமையான சூட்சுமங்கள் ஒளிந்து கிடக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.

இதற்கு முந்தைய பாடலில் ஐம்புலன்களை மேய்ப்பது மிகவும் கடினமான வேலை என்பதை உணர்த்த ஐம்புலன்களைப் பறவைக்கு ஒப்பிட்டார் திருமூலர். இந்தப் பாடலில் ஐம்புலன்களை ஐந்து சிங்கங் களுக்கு ஒப்பிடுகிறார்.

விலங்குகளிலேயே மிகவும் வலிமை வாய்ந்ததாகக் கருதப்படுவது சிங்கம். நமது புலன்களும் மிகமிக வலிமை வாய்ந்தவை. எத்தனை பலசாலியான மனிதனாக இருந் தாலும், புலன் இச்சைகளில் எளிதில் அவன் வீழ்ந்துவிடக் கூடும். தபசிகளில் மிகப் பெரிய தபசியாகக் கருதப்படும் விசுவாமித்திரர்கூட ஊர்வசியிடம் வீழ்ந்து போனது புலன் இச்சைகளால்தானே? எனவேதான் புலன் களை சிங்கங்கள் என்று இப்பாடலில் குறிப் பிடுகிறார் திருமூலர்.

நமது உடலை இந்த சிங்கங்கள் மேயும் காடாக உருவகப்படுத்தியிருப்பதிலும் ஒரு சூட்சுமம் உண்டு. காட்டுக்கு அரசனாக சிங்கத்தையே கூறுவார்கள். நமது உடலாகிய காட்டை ஆளும் அரசர்கள் இந்த ஐம்புலன்களே என்பதை உணர்த்தவே உடலைக் காடாகவும், புலன்களை அதற்கு அரசனாகிய சிங்கங்களாகவும் உருவ கப்படுத்தியிருக்கிறார்.

ஐம்புலன்களின் ஆட்சியில் இருக்கும் வரையில் நமது உடல் விலங்குகள் வாழும் காடாகவே இருக்கும். இந்தச் சிங்கங்களை அடக்கி னால் மட்டுமே அது இறைவன் உறையும் வீடாக மாறும்.

"அஞ்சும் போய் மேய்ந்துதம் அகமே புகும்.'

இந்த ஐந்து சிங்கங்களும் தமது விருப்பப் படி இன்பங்களை நுகர்ந்து (மேய்ந்து) பின் தமது இருப்பிடங்களை வந்து அடையும் என்பது இந்த இரண்டாவது வரியின் நேரடியான அர்த்தமாகும். இதிலும் ஒரு நுட்பமான சூட்சுமம் உள்ளது.

சிங்கம், புலி, மலைப் பாம்பு போன்ற காட்டு விலங்குகளுக்கு ஒரு இயல்பு உண்டு. அவை ஒருமுறை வயிறார உண்டுவிட்டால், அது செரிமானம் ஆகும் வரையில் வேறு இரை தேடாது. ஒரு இடத்தில் அமைதியாகப் படுத்து ஓய்வெடுக்கும். அந்தத் தருணத்தில் மான் போன்ற இரைகள் அருகில் வந்தாலும் கூட அவற்றை சட்டை செய்யாது.

நமது புலன்களும் அப்படித்தான். தமது இச்சைக்கு அவை அலைந்து திரியும். அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும். போதும், போதும் என்ற அளவிற்கு அனுபவித்து முடித்தபின்னர் புலன்கள் அமைதியாகிவிடும். அதன் பின்னர் அந்த இச்சைகளின்மேல் நாட்டம் செல்லாது.

எனவேதான் பண்டைய காலத்தில் ஒருவன் இல்லற வாழ்க்கையில் இருந்து அனைத்து உலக இன்பங்களையும் அனுபவித்து, தனது கடமைகளை எல்லாம் முடித்த பின்னர் (புலன்கள் அடங்கிய நிலையில்) வயதான காலத்தில் துறவறம் செல்வதை மரபாகக் கொண்டிருந்தனர்.

உலக வாழ்க்கையை நிறைவாக அனுபவித்து முடித்தவர்களே நிறை குடங்கள் ஆகின்றனர். அவர்கள் தளும்ப மாட்டார்கள். அதை முழுமையாக அனுபவித்து முடிக்காத வரையில் அவர்கள் குறை குடங்களாகத் தளும்பிக் கொண்டே  இருப்பார்கள். திருப்தியடையாத புலன் இச்சைகள் அவர்களை வாட்டி வதைத்துக் கொண்டே இருக்கும். ஞானப் பயணம் அவர்களுக்குக் கைகூடாது. இறைவனது திருவடிகளை அடைய ஐம்புலன்களின் ஆரவாரம் அடங்க வேண்டும். அவை நம் வசப்பட வேண்டும். அதற்கு வழியாகத் திருமூலர் கூறுவது-

"அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால்
எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே.'

இந்த வரிகளும் சில சூட்சும ரகசியங்களை உணர்த்துகின்றன. புலன்கள் என்பது சிங்கங்கள். இறைவனது திருவடிகளை அடைய இந்தப் புலன்களின் துணை அவசி யம். எனவே இந்தச் சிங்கங் களைக் கொல்வது கூடாது. ஒரு மனிதன் இறக்கும் போதுதான் புலன்களும் முழுமையாக அடங்கும். அதுவரையில் புலன்கள் அவனுடன்தான் இருக்கும்.

சிங்கங்களின் நகங்களும் பற்களுமே அவற்றின் பலம். அவையே அந்த சிங்கங்களைக் கொடூரமான விலங்குகளாக மாற்றுகின்றன. புலன்களின் கட்டுக்கடங்காத இச்சை களையே இங்கே நகங்களுக்கும் பற்களுக்கும் ஒப்பிடுகிறார் திருமூலர்.

நகங்களும் பற்களும் மிக உறுதியானவை. அவற்றை மிகவும் சிரமப்பட்டே பிடுங்க வேண்டும். வலி உயிர் போகும். புலன் இச்சை களை அடக்குவதும் மிகவும் சிரமமான- வலிநிறைந்த ஒரு செயலே. தந்திர யோகத்தின் துணை இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

ஐம்புலன்களால் மனிதன் படும் பாடு குறித்துப் பேசும் மற்றொரு திருமந்திரப் பாடலையும் காணலாம்.

"ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள்
ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர்
ஐவரும் ஐந்து சினத்தோடே நின்றிடில்
ஐவர்க்கு இறை இறுத்து ஆற்றகிலோமே.'
-திருமந்திரப் பாடல் எண்: 2003.

இப்பாடலில் ஐம்புலன்களை ஐந்து அமைச்சர்களுக்கு ஒப்பிடுகிறார் திருமூலர். இந்த ஐந்து அமைச்சர்களுக்கு உதவியாக உடலிலுள்ள 96 (தொண்ணூற்று அறுவர்கள்) தத்துவங்களும் உள்ளனவாம்.

நமது உடல்தான் அரசன் என்பது இங்கே மறைந்து நிற்கும் உண்மை. அரசனுக்கு ஆலோ சனை கூறி அவனை நல்வழியில் நடத்துவதே அமைச்சர்களின் கடமையாகும். அமைச்சர் களும் அவர்களது உதவியாளர்களும் அரச னுக்கு அடங்கி நடக்க வேண்டியவர்கள்.

ஆனால், அரசன் வலிமையற்றவனாக இருந்தால் அமைச்சர்கள் அவனை ஆட்டி வைக்கத் துவங்குவார்கள். அரசன் மிகவும் வலிமை குன்றியவனாக இருந்தால் அமைச்சர்கள் மட்டுமின்றி, அவர்களது பிள்ளைகளும்கூட அதிகாரம் செய்ய முற்படு வார்கள். இதையே பாடலின் இரண்டாவது வரியில்,

"ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர்'

என்கிறார் திருமூலர்.

ஐம்புலன்கள் அமைச்சர் கள் சரி; யார் அவர்களது பிள்ளைகள்? தகப்பனிடமிருந்து உருவாகிறவர்களே பிள்ளைகள். அதுபோன்றே ஐம்புலன்களிலிருந்து உருவாகும் இச்சைகளே இங்கே பிள்ளை களாக உருவகம் செய்யப் படுகின்றன.

மனவலிமை இல்லாத அரசனை அமைச் சர்களும் அவனது பிள்ளைகளும் ஆள முற்படுவது போன்று, மனவலிமையும் ஆன்ம பலமும் இல்லாத மனிதனைப் புலன்களும், அவற்றிலிருந்து உருவாகும் இச்சைகளுமே ஆளத் துவங்கும்.

"ஐவரும் ஐந்து சினத்தோடே நின்றிடில்
ஐவர்க்கு இறை இறுத்து ஆற்றகிலோமே'.

நமது ஐந்து புலன்களும் நமக்குப் பகை யாக நின்று தன்னிச்சையாகச் செயல்படத் துவங்கினால் (சினத்தோடே நின்றிடில்) இந்த ஐவருக்கும் கப்பம் கட்டி மாளாது (இறை இறுத்து ஆற்றுகிலோமே) என்று மனிதனின்  இயலாமை நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார் திருமூலர்.

No comments:

Post a Comment