Friday, 29 January 2016

ராகு-கேது பரிகார தலங்கள்.

ராகு-கேது பரிகார தலங்கள்.

ராகு -கேது அருளைப்பெற பச்சை கற்பூரம் கலந்த பன்னீர் அபிஷேகம் செய்யலாம். நவக்கிரகங்களில் உள்ள ராகு-கேதுவுக்கும் செய்யலாம். நாகநாதர் என்ற பெயருடைய சிவனுக்கும் செய்யலாம். காளஹஸ்தியில் காளஹஸ்தீஸ்வரருக்கு பச்சைக் கற்பூரம் கலந்த பன்னீர் அபிஷேகம்தான் செய்வார்கள். ஆதிசேஷனை படுக்கையாக கொண்ட பெருமாளை வணங்கி ராகு-கேது அருளைப் பெறலாம்.

* சிதம்பரம் அருகில் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டு மன்னார்குடி தலத்தில் ஸ்ரீசவுந்தரநாயகி உடனாகிய ஸ்ரீஅனந்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலய இறைவனை அஷ்டநாகங்களும் அவர்களின் தலைவனான அனந்தனும் வழிபட்டு இறைவனருள் பெற்றதாக ஐதீகம். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட ஸ்ரீஅனந்தீஸ்வரரை ராகு-கேது பெயர்ச்சியின்போது வழிபடலாம்.

* காரைக்குடியில் செஞ்சை பகுதியில் நடராஜ் தியேட்டர் கீழ்புறம் ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீநாகநாத சுவாமி கோவில் இருக்கிறது. இங்கு நாக விநாயகர் சந்நிதியும் உண்டு வரப்பிரசாதியான மூர்த்திகள் இங்கு சென்று அபிஷேகம் அர்ச்சனை செய்யலாம்.

* பரமக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் நயினார்கோவில் என்ற ஊரில் ஸ்ரீசவுந்தரநாயகி சமேத ஸ்ரீநாகநாத சுவாமி சந்நிதி உண்டு. இங்கு வழிபடலாம்.

* திருச்சி தெப்பக்குளம் கிழக்கு வீதியில் (மலைக்கோட்டை அடிவாரம்) நாகநாதர் திருக்கோவில் உள்ளது. இங்கு ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அபிஷேகம் செய்யலாம்.

* சீர்காழியில் சிரபுரம் பகுதியிலுள்ள பொன்நாகவள்ளி உடனுறை நாகேஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இங்கும் வழிபடலாம்.

* செம்மங்குடியில் உள்ள கேதுபுரம் கேது ஸ்தலம் ஆகும். இங்கு வழிப்படலாம்.

* தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்- திருச்செந்தூர் பாதையில் உள்ள தொலைவில்லிமங்கலம் சென்று வணங்கலாம்.

* ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா காஞ்சிக்கோவில் (வழி) தண்ணீர்பந்தல் பாளையம் போஸ்ட், தங்கமேடு தம்பிக்கலை ஐயன் சுவாமி திருக்கோவில் ராகு- கேதுவுக்குரிய பரிகார தலம் ஆகும்.

* மன்னார்குடி அருகில் பாமினியில் உள்ள சிவாலயம் ஆதிசேஷன் வழிபட்ட ஸ்தலம் உள்ளது.

* திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், ராதாபுரம் அருகில் உள்ள விஜயாபதி- விசுவாமித்திரர் தவம் இருந்த பூமி தில்லைக்காளியும் உண்டு.

* நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் (ஆதிசேஷன் வழிபட்ட ஸ்தலம்)

* மயிலாடுதுறை - பேரளம் அருகில் திருமீயச்சூரில் உள்ள ஸ்ரீலலிதாம்பிகை கோவில் பிரகாரத்தில் பன்னிரு நாகர் உள்ளன. இதற்கு பாலாபிஷேகம் செய்யலாம்.

* கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவில் என்ற ஊரில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலில் கல் கருடன் உள்ளது. அவர் உடலில் ஒன்பது இடத்தில் நாகர் உருவம் அமைந்துள்ளது. ஏழு வியாழக்கிழமை தொடர் அர்ச்சனைக்கும் பணம் கட்டினால் பிரசாதம் அனுப்பி வைப்பார்கள்.

* கோவை -அவினாசி பாதையில் மோகனூர் அருகில் வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. ராகு-கேது பரிகார ஸ்தலம், பிரார்த்தனை ஸ்தலம்.

* ராகு- கேது பெயர்ச்சி நல்ல இடங்களில் ஏற்பட்டாலும் சரி, கெட்ட இடங்களில் மாறினாலும் சரி- அதற்காக பயப்படத் தேவையில்லை. குண்டலினி சக்தியை தன்னுள் கொண்டு ஜீவ ஜோதியான சித்தர்களின் ஜீவ சமாதிகளில்சென்று வழிபட்டால் போதும், ராகு- கேதுப் பெயர்ச்சி பலனை உங்களுக்கு இனிய பெயர்ச்சியாக மாற்றுவார்கள்.

* சோளிங்கரிலிருந்து 12 கி.மீ.ë தொலைவில் உள்ள பெத்த நாகபுடியில் நாகவல்லி சமேத நாக நாதேஸ்வரரை தரிசிக்கலாம்.

*கொடு முடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ளது ஊஞ்சலூர். இத்தலத்தில் நாகேஸ்வரர் மூலவர்.

* காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகேயுள்ள தலத்தில், மாகாளன் எனும் நாகம் காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூஜித்தது. மூலவர் மகாகாளேஸ்வரர். இது, ராகு-கேது பூஜித்த தலமும் ஆகும்.

* ஆதிசேஷன் பூஜித்து அருள் பெற்ற தலம் சென்னை திருவொற்றியூர். இங்குள்ள ஸ்ரீவடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீபடம்பக்கநாதர் மற்றும் ஸ்ரீமானிக்கதியாகேஸ்வரை வணங்குங்கள். ராகு-கேதுவால் உண்டான தோஷம் விலகும்.

* கும்பகோணம்-மயிலாடுதுறை இடையே உள்ளது கதிராமங்கலம். நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை அம்மனை வழிபடுங்கள் ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.

* சிவகங்கை அருகில் உள்ள காளையார் கோவிலுக்கு சென்று கொண்டின்ய மகிரிஷி மற்றும் நாகங்களின் அரசன் வழிபட்ட ஸ்ரீமகமாயி அம்மன், ஸ்ரீகானக்காளையீஸ்வரரை வழிபடுங்கள் ராகு மற்றும் கேதுவால் உண்டான தோஷம் விலகும்.

* நன்னிலம்- குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நீராடி, நாகநாத சுவாமியையும், நாக ராஜரையும் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.

* விருத்தாசலத்திற்கு தெற்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் நாகேந்திரபட்டினம் எனும் ஊரில் நீலமலர் கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேஸ்வரை வணங்குங்கள். ராகு மற்றும் கேதுவினால் உண்டான தோஷங்கள் விலகும்.

* சென்னை, மைலாப்பூரில் உள்ள முண்டகக்கன்னி அம்மனை மனம் உருக வணங்கி வழிபட்டுவர ராகு- கேதுவினால் ஏற்பட்ட தடைகள் விலகும்.

* திருச்சி மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவரை வணங்கி வாருங்கள் உங்கள் வாழ்வில் ராகு-கேது சிக்கல் விலகி சுபீட்சம் காண்பீர்கள்.

* திருவாலங்காடு சென்று முஞ்சிகேசமுனிவரும், கார்கோடகனும் வழிபட்ட வண்டார் குழலம்மை உடனுறை ஊர்துவதாண்டவரை வணங்கி வர ராகு, கேது தோஷம் நீங்கி வளம் பெருகும்.

* மயிலாடுதுறை- காரைக்கால் சாலையில் செம்மாங்குடிக்கு அருகில் திருச்சிறுபுலியூர் உள்ளது. இங்கு அருள் பாலிக்கும் கிருபாசமுத்திர பெருமாளையும், ஸ்ரீதயாநாயகி தாயரையும் வணங்கினால் வழக்கில் வெற்றி, பூர்வீக சொத்து பிரச்சினை தீருதல், செல்வம் சேருதல் ஆகியன கிட்டும்.

* புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது பேரையூர். இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீபிரகதாம்பாள் உடனுறை ஸ்ரீநாக நாதரை நாகலோகத்தில் இருந்த பாம்புகள் யாவும் வணங்கி அருள் பெற்றதாக தல வரலாறு கூறுகின்றது. இன்றும் பக்தர்கள் பலர் தங்களது நாகதோஷம் நீங்க ஆயிரக்கணக்கில் நாகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின்றனர். இங்குள்ள 5 தலை நாகரை வணங்குவதும் நாகதீர்த்தத்தில் குளிப்பதும் விசேஷம்.

* திருவாரூர்- கும்பகோணம் பாதையில் பட்டீஸ்வரத்திற்கு அருகில் உள்ள தலம் மணக்கால். இங்கு கோவில் கொண்டுள்ள ஸ்ரீசேஷபுரீஸ்வரரை வணங்கி ஸ்ரீஆதிசேஷன் விஷேச பூஜைகள் செய்து கடும் தவம் புரிந்து சாபம் நீங்கப் பெற்றான். இங்குள்ள சிவலிங்கத்தில் பாம்பு ஊர்ந்த தழும்பை இன்றும் காணலாம். ஸ்ரீசேஷபுரீஸ்வரரை வணங்கினால் அரசு தொடர்பான வேலைகள் வெற்றி அடையும், நல்ல வேலை கிடைக்கும்.

* நாகர்களுக்கு எதிரான யாகங்கள் நடந்தபோது லட்சக்கணக்கான நாகங்கள் யாக நெருப்பில் விழுந்து மடிந்தன. இதனை காப்பாற்ற நினைத்து நாகராஜனான ஆதிசேஷன் சிவபெருமானை பூஜை செய்து அருள்பெற்ற திருத்தலமே நாகூர். இங்கு கோவில் பிரகாரத்தில் ஸ்ரீஆதிகேஷன் சிவபெருமானை பூஜை செய்ததற்கான சாட்சிகள் உள்ளன. இங்குள்ள ஈசனை வணங்கினால் ராகு, கேது தோஷங்கள் விலகி பெரிய பதவிகள் கிடைக்கும்.

* தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் அமைந்துள்ள திருத்தலம் கத்தரிநத்தம். இத்தலத்தில் இறைவனாக காளகஸ்தீஸ்வரரும், இறைவியாக ஞானாம்பிகையும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இத்தலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்திக்கு இணையான தலமாக போற்றப்படுகிறது.

இத்தலம் ராகு, கேது பரிகார ஸ்தலம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. ராகு கேது தோஷம் உள்ளவர்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ராகு கால வேளையில் இங்கு வந்து, நாகலிங்கப் பூ, வில்வம் மற்றும் வன்னி பத்ரம் (இலை) ஆகியவை சார்த்தி, ஸ்தல விருட்சமான குரா மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி மனதாரப் பிரார்த்தனை செய்தால், ராகு கேது தோஷம் யாவும் விலகும்.

* குன்றத்தூரில் சேக்கிழார் பெருமான் ஏற்படுத்திய திருத்தலம் சுமார் 850 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இக்கோயில் ராகு பகவானுக்கு பரிகாரத்தலமாக அமைந்துள்ளது.கால சர்ப்ப தோசம் என்பது ஜாதகத்தில் முக்கிய தோசம் ஆகும். ராகுகேது பிடிக்குள் மற்ற ஏழு கிரகங்களும் அகப்பட்டு தன் பலத்தை இழக்கும் பெரிய தோசம் அது. இத்தோசம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து ராகுகால பூஜையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்தால் தோச நிவர்த்தியடைந்து நன்மையடையலாம்.

* ராகு, கேது தோஷ முள்ளவர்கள் ரமேசுவரம் கோவிலில் உள்ள நடராஜர் சன்னதியில் அமைந்திருக்கும் பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதியில் எரியும் விளக்கில் நெய்விட்டு வழிபட்டால் தோஷம் நீங்கி விடுகிறது.

* மயிலாடுதுறைக்கு அருகே அமைந்துள்ள இலுப்பட்டு தலம் நாக வழிபாட்டில் சிறப்பு வாய்ந்தது. நளமகராஜன் விஷக்கடியில் நிறமாறியிருந்தான். அந்த நிறம் மாறி தன் இயல்பான வடிவை அங்கே தான் அடைந்தான் என்று அத்தல வரலாறு பேசும். சிவபெருமானே தமது கண்டத்தில் விஷமருந்திய இறையைக் காட்டி அருளியபதியும் அதுவே தான்.

* கும்பகோணம் நாகநாதர், திருநாகேசுவரம் நாகநாதர், திருமருதூரில் குடிகொண்டுள்ள நாகநாதர், கொழுவூர் நாகநாதர், திருப்பத்தூர் திருத்தணிநாதர், நாகை நாகதாதர், திருப்பாரம்பரம், திருப்பாமணி, திருக்காளகத்தி, திருக்களர், திருப்பேரை, நாகர்கோயில் நாகமலை என்னும் திருச்செங்கோடு, திருத்தென்குடி திட்டை, திருவகீந்திரபுரம் என்று பாம்பரசர்களோடு தொடர்புடையதான தலங்களை எவ்வளவு விவரித்தாலும் தகும்.

* ஐந்தலை நாகம் குடைப்பிடிக்க விநாயகப் பெருமான் வீற்றிருக்கும் தலங்களுள் நாகப்பட்டினமும், தஞ்சை பாபநாசமும் சிறப்புக்குரிய தலங்களாகும்.

* திருபுவனம் திருக்கோவிலில் எல்லா காலமும் சரபமூர்த்தி வழிபாடு அருள் நலம் பொலிய நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும், வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் சரப மூர்த்தியை வழிபாடு செய்வதன் வாயிலாக ராகு-கேதுக்களைப் பிரீதி செய்வதுடன் நடுக்கம் தீர்த்த பெருமான், அறம் வளர்த்த நாயகி, சரபர் இவர்களது அருளுக்கும் பாத்திரர் ஆகலாம்.

* தமிழ்நாட்டில் ராகு கால பூஜை முதன் முதலில் தொடங்கிய பெருமை குடந்தை அருள்மிகு காளிகா பரமேஸ்வரி காமாட்சி அம்மன் கோவிலில் தான் எனப்படுகிறது. இங்கே நாள் தோறும் ராகு கால பூஜை நடைபெற்று வருவது சிறப்பு.

* காமதேனுவின் கால் பதிந்த தலம் தான் மாடம்பாக்கம். இங்கு தேனுபுரீசுவரர் கோவிலுக்குள் சென்றதும் முன் மண்டபமும் மண்டபத்துக்கு இடப்புறம் காணப்பெறும் தூண் ஒன்றில் சரப மூர்த்தியின் உருவம் ஒன்றும் காணப்படுகிறது. ஆர்த்தெழுந்த சரபத்தைக் கண்டு நரசிம்மன் அஞ்சி ஓடியிருப்பார்.

சரபப் பறவையும் விடாமல் நரசிம்மத்தை தாவி பிடித்திருக்கும். அவ்விதம் தாவும் தகைமையைத்தான் சிற்பி கற்தூணில் இங்கு நிலை பெறச் செய்திருக்கிறார். ஞாயிறு தோறும் ராகு காலத்தில் மக்கள் பெருமளவில் வந்து இந்த சரப மூர்த்தியை வழிபட்டு செல்கிறார்கள்.

மேலும், நவகிரஹா ப்ரீத்தி அல்லது எந்த ஒரு பரிகாரம் செய்யும் முன் அது சம்பந்தப் பட்டவர்களிடம் ஆலோசனைப் பெற்று செய்வது உச்சிதம்.

No comments:

Post a Comment