Wednesday, 13 January 2016

பயனுள்ள சில ஆன்மிக ரகசியங்கள்

பயனுள்ள சில ஆன்மிக  ரகசியங்கள்

* செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்? செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.

*  திருமணஞ்சேரியில் வேண்டிக் கொண்ட பிரார்த்தனை மாலை தொலைந்து விட்டது. மீண்டும் மாலை செலுத்த விரும்புகிறேன். பரிகாரம் என்ன? அறியாமல் செய்த தவறு தானே! இதற்காகக் குழம்பிக் கொள்ள வேண்டாம். மீண்டும் திருமணஞ்சேரி சென்று புதுமாலை வாங்கி சேர்த்து விடுங்கள். தவறைப் பொறுக்குமாறு கல்யாணசுந்தர சுவாமியிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

* சஞ்சீவிமலையைத் தூக்கி வரும் அனுமனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார்களே, ஏன்?
சஞ்சீவி என்பது உயிர் காக்கும் மூலிகை. இந்த அனுமனை வழிபட்டால் கவலை நம்மை தீண்டாது. இவரை வழிபட நோயில்லாத நல்வாழ்வு உண்டாகும்.

* கனவில் பாம்பு அடிக்கடி வருகிறது. அதைத் தவிர்க்க ஏதாவது பரிகாரம் உண்டா? பொதுவாக கனவில் பாம்பு வந்தால் பணம் வரும் என்பார்கள். மற்றபடி பயப்பட ஏதுமில்லை. முருகனுக்கு அர்ச்சனை செய்து பயத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.

* பூஜை, விரதம் போன்றவற்றை பெண்கள் மட்டுமே கடை பிடிக்க வேண்டுமா, ஆண்கள் கடைபிடிக்கக் கூடாதா? இவற்றில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. வீடு, குழந்தைகள் நலன் விஷயங்களில் பெண்களே அதிகம் அக்கறை கொண்டவர்களாக இருப்பதால் பூஜை, விரதங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். மற்றபடி ஆண்கள் பூஜை, விரதம் போன்றவற்றைச் செய்யாமல் இல்லை.

* மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வதன் காரணம் என்ன? சாப்பிடுவது, தூங்குவது, நகம் வெட்டுவது போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் தான் செய்ய வேண்டும். காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனம் ஆகிய இரு வேளைகளும் சந்தியா காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரு வேளைகளிலும் தெய்வ வழிபாட்டை தவிர மேற்படி விஷயங்களை செய்யக்கூடாது. மகாலட்சுமி நம் வீட்டிற்கு வரும் வேளையில் விளக்கேற்றி வரவேற்க வேண்டுமே தவிர மற்றதைச் செய்யக்கூடாது.

* திருஷ்டி கழிக்க ஏற்ற முறையும், அதற்கான நாளும் எது என்று சொல்லுங்கள். சாம்பிராணி புகை போட்டும், தேங்காயில் சூடம் கொளுத்தி வைத்தும், மிளகாய் வத்தல், காலடி மண்ணைச் சுற்றி நெருப்பில் போட்டும் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து திருஷ்டி கழிக்கலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஏற்ற நாட்கள்.

* கோயிலில் நவக்ரஹ வழிபாட்டை கடைசியாகத்தான் செய்ய வேண்டுமா? முதலில் பிரதான மூலவரை தரிசித்து வலம் வரவேண்டும். அடுத்து அம்பாள் மற்றும் பரிவாரங்களை தரிசித்து வலம் வரவேண்டும். மூன்றாவது நவக்ரஹம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரை தரிசித்து வலம் வரவேண்டும்.

* சிவன் கோயிலில் சுவாமிக்கும் நந்திக்கும் இடையில் செல்லக்கூடாது என்பது ஏன்? நந்திதேவர் தமது மூச்சுக் காற்றின் வாயிலாக சுவாமிக்கு சாமரம் வீசி வழிபட்டுக் கொண்டே இருக்கிறார். அது தடைபடாமல் இருக்க நாம் இடையில் செல்லாமல் இருக்க வேண்டும். பொதுவாக சுவாமி - நந்தி, கணவன் - மனைவி, பெற்றோர் - குழந்தை, குரு -சிஷ்யன், பசு - கன்று ஆகியோரது குறுக்கே செல்லக்கூடாது என்பது சாஸ்திர நியதி.

* நரசிம்மர் கோயிலில் பிரதோஷ விழா நடப்பது ஏன்? பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். நரசிம்மரை வழிபடுவதற்கு உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

* பஞ்சாங்கத்தில் நட்சத்திரம், திதி போன்றவை மதியம் ஆரம்பித்து மறுநாள் மதியம் வரை இருப்பதாக பார்க்கிறோம். விரதம், வழிபாட்டை எப்போது செய்ய வேண்டும்? விரதம், வழிபாடு மேற்கொள்வதிற்கு இரவில் திதி வியாபித்து இருக்கவேண்டும் என்பது நியதி. அதனால், முதல்நாளிலேயே விரதத்தை மேற்கொள்ளுங்கள். திதி கொடுப்பது, தர்ப்பணம் செய்வது போன்றவற்றிற்கு இது பொருந்தாது.

* விளக்கேற்றக் கூடிய திசைகள் யாவை? கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளில் ஏற்றலாம். தெற்கில் மட்டும் ஏற்றக்கூடாது.

* நம்முடைய இஷ்டதெய்வத்தின் உருவச்சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா? இஷ்டதெய்வ சிலையை வைத்து வழிபடலாம். வழிபாட்டின் போது காலை, மாலை வேளைகளில் பால், பழம் பிரசாதமாக வைத்து பூஜை செய்யுங்கள்.

* பிரதோஷம் என்றால் என்ன? அத்தருணத்தில் இறைவனை வழிபட்டால் என்ன பலன் உண்டாகும்?
தோஷம் என்றால் குற்றம். ப்ர என்றால் பொறுத்துக்கொள்வது. இறைவன் நமது பாவத்தை எல்லாம் மன்னித்து அருள்தரும் காலமே பிரதோஷம். இந்த நேரத்தில் இறைவனை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.

* புனிதமான கோயில் கோபுர சிற்பங்களில் ஆபாச சிலைகள் வடித்திருப்பதன் காரணம் என்ன?

இந்த உலக வாழ்க்கையில் உள்ள எல்லா விஷயங்களுமே புனிதமானவை தான். எதையும் தவறாகச் செய்யும் போது அதன் புனிதம் போய் ஆபாசமாகி விடுகிறது. உதாரணமாக, நல்ல விஷயங்களைப் பேசினால் அது அர்த்தமுள்ள பேச்சு. தீய வார்த்தைகளை உபயோகித்துப் பேசினால் அதுவே ஆபாச பேச்சாகி விடுகிறது. புனிதமான தாம்பத்ய உறவு இல்லையென்றால் குழந்தைகள் எப்படிப் பிறக்கும்? உலக இயக்கம் எப்படி நடக்கும்? உலக வாழ்க்கையில் மனிதன், மிருகம், செடி, கொடி, மரம்.. இப்படி உயிருள்ள எல்லாமே இனப்பெருக்கம் செய்ய வேண்டியது அவசியம். இந்த நோக்கில் பார்த்தால் தாம்பத்ய உறவு என்பது திருக்கோயில் சிலையாக வடிக்கக் கூடிய அளவிற்குப் புனிதத்தன்மை வாய்ந்தது. சினிமா, நாடகம், "டிவி' போன்றவை வந்து இந்தப்புனிதத்தை ஆபாசமாக்குவதற்கு முன்பு, கோயில் சிற்பங்களில், இதனைக் கண்டு புனிதமாக வாழும் நெறியை மனிதஇனம் உணர்ந்து கொள்ளவே இப்படிப்பட்ட சிற்பங்களை வடித்தார்கள். மேற்கொண்டு ஆராய்ந்து இதனை ஆபாசமாக்க கூடாது.
சிவலிங்க வழிபாட்டை வீட்டிலேயே செய்வது சரியா? என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? ஆண்டாண்டு காலமாக நமது முன்னோர் வழி நின்று நம் எல்லார் இல்லங்களிலும் சிவலிங்கம் வைத்து சிவபூஜை செய்தலும் மற்றும் அவரவர் குல வழக்கப்படி தெய்வ விக்ரகங்களை பூஜை செய்வதும் நடந்து கொண்டு தானே இருக்கிறது. இதற்கு ஆன்மார்த்த பூஜை என்று பெயர். கோயில்களில் செய்யப்படுவது பொது நலனுக்காகச் செய்யப்படும் பரார்த்த பூஜை. இரண்டும் சரியாக நடந்தால் தான் நாமும் நாடும் சுபிட்சமாய் இருப்போம்.

* பிதுர்தோஷம் ஏன் ஏற்படுகிறது. அதைப் போக்கும் வழி என்ன? காலம் சென்ற முன்னோருக்கு பித்ருக்கள் என்று பெயர். இவர்கள் தெய்வத்துக்கு சமமானவர்கள். ஒவ்வொரு மனிதனும் நல்ல முறையில் வாழ ஒவ்வொரு தெய்வ வழிபாட்டை ஏற்றுக் கொள்வது போன்று ஒவ்வொரு மனிதனுடைய சந்ததி தழைக்க அவரவர்களது முன்னோர் வழிபாடு எனும் பிதுர் காரியத்தை அவசியம் செய்ய வேண்டும். ஆண்டு தோறும் திதி கொடுத்தல், அமாவாசை தர்ப்பணம் செய்தல் போன்றவை பிதுர் காரியங்களாகும். இவற்றைச் சரியாக செய்யாதவர்களுக்கு பிதுர் தோஷம் ஏற்பட்டு குடும்ப வாழ்க்கையில் குறைபாடு, குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனைப் போக்கிக் கொள்ள ராமேஸ்வரம், திருவாஞ்சியம், திருவெண்காடு ஆகிய தலங்கள் ஏதாவது ஒன்றில் தில ஹோமம் செய்ய வேண்டும். இதன் பிறகும், பிதுர் காரியங்களாகிய முன்னோர் வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் பிதுர்தோஷம் நீங்கி நல்ல குடும்ப வாழ்க்கையும் வம்ச விருத்தியும் உண்டாகும்.

* திருமணத்திற்குப் பின் பெண்கள் பிறந்த வீட்டு குல தெய்வத்தை வழிபடலாமா? புகுந்த வீட்டுக் குல தெய்வம் தான் உங்களின் குலதெய்வமும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், தாய்வீட்டு குலதெய்வத்தை ஒதுக்க வேண்டும் என்பதில்லை. உங்கள் குழந்தைகளுக்கு, தாய் வீட்டுக் குல தெய்வக் கோயில்களில் முடிகாணிக்கை செலுத்துவது உள்ளிட்டவற்றைச் செய்யலாம். இது விசேஷமானதும் கூட.

* ஸ்ரீராமஜெயம் எழுதிய நோட்டை நதியில் விட்டுவிடலாமா? ஸ்ரீராமஜெயம் நோட்டில் எழுதுவதற்கு லிகிதநாமஜெபம் என்று பெயர். எழுதிய நோட்டை பூஜையறையில் வைப்பது சிறப்பு. இயலாவிட்டால் ராமநாம வங்கிகளுக்கு அனுப்ப முயற்சி செய்யுங்கள்.

* வீட்டிலிருந்து கிளம்பும்போது மூன்று பேராகச் செல்லக்கூடாது என்பது உண்மைதானா?
சுபநிகழ்ச்சிகள் தொடர்பாக பேசச் செல்லும் போது மட்டும் மூன்று பேராகச் செல்லக்கூடாது. மற்ற நிகழ்ச்சிகளுக்கு பிரச்னையில்லை.

* வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவி பாவபுண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா? விளக்கம் தேவை. முற்பிறவி பாவ புண்ணிய பலன்களின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது. அதற்கான பலனைத் தரும் அதிகாரம் நவக்கிரகங்களின் கையில் உள்ளது. இதனால் தான் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம்.

* அசுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விபூதி குங்குமம் அணிந்து செல்லக் கூடாது என்கிறார்களே, சரிதானா? எந்த இடத்திற்குச் சென்றாலும் விபூதி அணிந்து செல்லத்தடையில்லை. குங்குமம் கூடாது. நகை அணிந்து செல்லக்கூடாது. திருமணமான பெண்கள் மேற்படி இடத்திற்குச் செல்லும் பொழுது, ஒரு மஞ்சள் கிழங்கை முந்தானையில் முடிந்து செல்ல வேண்டும்.

* செவ்வாய் தோஷ நிவர்த்திக்கான எளிய பரிகாரத்தைச் சொல்லுங்கள். செவ்வாய் கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செவ்வாய் ஹோரை வேளையில், செவ்வாய் கிரகத்திற்கு தீபம் ஏற்றி, சிவப்பு மலர் சாத்தி வழிபடுங்கள்.

* சுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையை தேர்ந்தெடுப்பது ஏன்? நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனே நம் மனதை இயக்குபவர். வளர்பிறையில் சந்திரன் ஆற்றலோடு திகழ்வார். அந்நாட்களில் நிலவின் அமுத கிரணங்கள் பூமியில் விழுவதால், மனம் உற்சாகத்துடன் இருக்கும். உற்சாகமாக இருக்கும்போது, சுபநிகழ்ச்சிகள் குறைவின்றி சிறப்பாக நடந்தேறும் என்பதற்காகவே வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

* அறுபது வயதடைந்த அனைவரும் 60ம் கல்யாணம் கட்டாயம் நடத்த வேண்டுமா? நாம் பிறந்த வருடம், மாதம், நட்சத்திரம் மூன்றையும் சேர்த்துப் பார்ப்பது அறுபதாவது பிறந்த நாளில் தான். மறுமுறை பார்ப்பது நூற்று இருபதாவது வயதில்! அந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. எனவே ஒரு மனிதனின் வாழ்வில் அறுபது வயது பூர்த்தி என்பது மிக விசேஷமான நாள். அன்றைய தினம் ஆயுள்ஹோமம் செய்து, திருமாங்கல்ய தாரணமும் செய்ய வேண்டும். அன்றைய தினம் முதல் மறுபிறவி எடுத்ததாக எண்ணி, அது முதல் அந்த தம்பதிகள் நோய் நொடிகள் இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ்வார்கள். இதனை "ஷஷ்டியப்தபூர்த்தி சாந்தி' என சாஸ்திரங்கள் சொல்கின்றன.

எனவே கட்டாயமாக செய்து தான் ஆக வேண்டும். ஆடம்பரமாகச் செய்ய வேண்டும் என்பதில்லை. எளிமையாக நடத்திக் கொள்ளலாம்.

* ஒரே வீட்டில் இரு திருமணங்களைச் சேர்த்து நடத்தலாமா? நடத்தலாம், முகூர்த்த நேரத்தை மட்டும் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். கண் திருஷ்டிக்குப் பயந்துதான் சிலர் இதை செய்ய யோசிக்கிறார்கள். தேங்காய் உடைத்து பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்து விடுங்கள். தம்பதிகள் அமோகமாக இருப்பார்கள்.

*ஜாதகத்தில் பெண் சாபம் இருந்தால் நிவர்த்தி செய்வது எப்படி? இன்றைக்குத் திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஆண்களுக்குப் பெண்கள் கிடைப்பது, குதிரைக் கொம்பாகிவிட்டது. பெண் குழந்தை வேண்டாம் என்று பல பெற்றோர்கள் செய்த பாவம், இன்றைக்கு பெண்களே இல்லையோ என பயப்படத் தோன்றுகிறது. இதற்குப்பரிகாரம் பிறக்கின்ற பெண் குழந்தைகளையாவது பாராட்டி சீராட்டி வளர்ப்பது தான்! பெண் குழந்தை பெற்றெடுப்பவர்களுக்குப் பரிசளிக்க வேண்டும். ஜாதகப்படி பெண் சாபம் இருந்தால் சுமங்கலி பூஜை செய்யுங்கள்.

* பெரியவர்களை சந்திக்கும் பொழுது எலுமிச்சம்பழம் கொடுப்பது ஏன்? எலுமிச்சம் பழம் தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. பெரியவர்கள், குழந்தைகள், ஆசிரியர், தெய்வம் இவர்களைப் பார்க்கச் செல்லும் பொழுது வெறும் கையுடன் செல்லக்கூடாது. அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்கள், பழங்கள், கோயிலுக்கு என்றால் புஷ்பம் இப்படி எதாவது எடுத்துச் சென்று கொடுக்க வேண்டும்.

* கோயிலில் பிறரால் ஏற்றப்பட்டு அணைந்து போன விளக்கை மீண்டும் ஏற்றி வைப்பது நல்லதா? நாம் புதிய தீபம் ஏற்றுவதைவிட உயர்ந்தது பிறர் ஏற்றி அணைந்த தீபத்தை மீண்டும் ஏற்றுவது. சுவாமி, சந்நிதியில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுடர் விழுந்து அணையும் தருவாயில் இருந்த அந்த விளக்கில் எண்ணெய் குடிப்பதற்காகச் சென்ற எலி ஒன்று, தாம் அறியாமலேயே தீபத்தைத் தூண்டிவிட்டது. அறியாமல் செய்தாலும் கூட இச்செயல் மிகப் பெரிய புண்ணியமாக எலிக்குக் கிடைத்து மறு பிறவியில் மிகப் பெரிய அரச குடும்பத்தில் பிறக்கும் பாக்கியம் பெற்றது. எனவே சந்நிதியில், அணைந்துள்ள தீபங்களை எந்த குழப்பமும் இல்லாமல் செய்யுங்கள். அடுத்த பிறவியில் நீங்கள் தான் பிரதமர்.

* பிறந்த குழந்தையை கோயில் தரிசனத்திற்கு எவ்வளவு நாள் கழித்து அழைத்துச் செல்ல வேண்டும்?
குழந்தை பிறந்து 22 நாள் வரை தாய்க்கும் சேய்க்கும் தீட்டு உண்டு. எனவே அதன் பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

* தற்காலத்தில் புத்திர காமேஷ்டி யாகம் செய்கிறார்களா? விரும்புபவர்கள் எந்த தலத்திற்குச் செல்ல வேண்டும்? புத்திர பாக்கியம் வேண்டி செய்யப்படுகிற இந்த யாகத்தை, பலர் தங்கள் இல்லங்களிலேயே செய்து கொள்கிறார்கள். நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை புத்திர காமேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயம் (நவக்கிரக புதன் ஸ்தலம்) ஆகியவை சிறப்புடையவை.

* கோயிலில் அரசமரம், வேப்ப மரம் இரண்டையும் சேர்த்து பக்தர்கள் வலம் வருகிறார்கள். இதன் முக்கியத்துவம் என்ன? அரசமரம் விஷ்ணுவின் வடிவம். இதனை "அசுவத்த நாராயணர்' என்பர். இதன் அருகில் வேப்பமரம் வைத்து மகாலட்சுமியாக எண்ணி, "அ”வத்த விவாஹம்' எனப்படும் அரசவேம்பு கல்யாணம் செய்ய வேண்டும் என சாத்திரங்கள் கூறுகின்றன. இவற்றை வலம் வந்தால், ஸ்ரீ லட்சுமி நாராயணரை வலம் வந்த பலன் கிடைக்கும். திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்கி இனிய இல்லறமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

* மந்திரங்களின் வலிமையை அறிந்து கொள்ளும் வழி முறையைக் கூறுங்கள்.இது கடையில் வாங்கும் மருந்தல்ல! சாப்பிட்டுப் பார்த்து வலிமையை அறிந்து கொள்ள! அல்லது அறிந்து கொண்டு பிரார்த்தனையைத் துவங்க! குருநாதரிடத்தில் அவர் கூறும் மந்திரத்தை உபதேசமாகப் பெற்று, அவரவர் நலனுக்காக நம்பிக்கையுடன் ஜபம் செய்தால் பலன் கிடைக்கும். இது விஷயத்தில் ஆராய்ச்சி வேண்டாம்.

* வழிபாட்டில் இருந்த விளக்கு உடைந்து விட்டது. அதை அகற்ற மனமில்லை. மீண்டும் பயன்படுத்தலாமா? பயன்படுத்தக் கூடிய நிலையில் இருந்தால், தாராளமாக உபயோகிக்கலாம். தோஷம் எதுவும் கிடையாது. நல்ல பலனே ஏற்படும்

* யாகத்தீயில் பட்டு வஸ்திரம், பழவகைகள், நாணயம் இவைகளை இடுவதால் என்ன பயன்? இந்தப் பொருட்கள் ஆகுதிப் புகையாக சூரியனைச் சென்றடைந்து மேகமாக மாறி மழையாக நமக்குக் கிடைக்கிறது. யாகத்தில் இட்ட பொருட்கள் பல்லாயிரம் மடங்காக விளைகிறது என்கிறது தர்ம சாஸ்திர ஸ்லோகம்.
""அக்னௌ ப்ரஸ்தாகுதி: ஸம்யக் ஆதித்யம் உபதிஷ்டதி
ஆதித்யாத் ஜாயதே விருஷ்டி: வ்ருஷ் டேரன்னம் தத:ப்ரஜா:''
யாகத்தீயில் பொருட்களை இடுவதால் நல்ல மழை பெய்யும். சுவையான நீர் கிடைக்கும். காற்று மண்டலம் சுத்தமாகும். விளைச்சல் அதிகமாகும். விளைபொருட்களை ஏராளமாகப் பெறலாம். செல்வ அபிவிருத்தி கிடைக்கும்.

* கிரகண வேளையில் கோயில் நடை சாத்துகிறார்கள். அந்நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாமா? அந்நேரத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்றே சாத்திரங்கள் கூறுகிறது. அந்நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி ஜபம் செய்தால் மிக விசேஷம். ஒரு ஜபம் ஆயிரம் மடங்கு ஜபம் செய்வதற்குச் சமம்.

* கடவுளின் படம் அல்லது சிலை.. எது வழிபாட்டிற்கு உகந்தது? மனதில் இறைவனை நிறுத்தி வழிபடுவது மிக உயர்ந்தது. இரண்டாவது சிலை, அடுத்தது படம். முதலில் கூறியதற்கு மன ஒருநிலைப்பாடு அவசியம். உலக வாழ்க்கையை வெறுத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாத ஞானிகளுக்கு மட்டுமே இது சாத்தியம். உருவச்சிலை வழிபாட்டில் அபிஷேகம், நைவேத்யம் ஆகிய கிரியைகள் அதிகம். அவசரமான காலகதியில் எல்லோருக்கும் இயலாது. பட வழிபாடு எளிமையானது. தினமும் புஷ்பம் சாத்தி, பழம், பால், கற்கண்டு நிவேதனம் செய்தால் போதும். எது உயர்ந்தது என்று கவலைப்படுவதை விட, எது இயன்றது என்று முடிவெடுத்து, அதை விடாமல் செய்வது தான் உயர்ந்தது.

*ரோகிணி நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்பது உண்மைதானா?
சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களால் வீட்டில் சிலருக்கு ஆகாது என்பது ஜோதிட சாஸ்திரப்படி உண்மைதான். அதற்காகப் பயந்து கொண்டு குழந்தைகளை வெறுக்கக் கூடாது. சாந்தி ரத்னாகரம், சாந்தி குஸூமாகரம் போன்ற நூல்களில் இவற்றிற்கான பரிகாரம் கூறப்பட்டுள்ளது. இதன்படி தக்க பரிகாரம் செய்து கொண்டால் தீயவையும் நல்லதாகிவிடும். விஷத்தையே மருந்தாக மாற்றும் நாம், ஏன் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும்?

*வீட்டில் வழிபாட்டிற்காக இருக்கும் துளசிச் செடியின் இலைகளை மருந்துக்காகப் பறிக்கலாமா? வீட்டில் துளசிச் செடி வழிபாட்டில் இருப்பதே பெரிய மருந்து தான். இதன் இலைகளைப் பறிக்கக் கூடாது. வேறு துளசிச் செடிகளை வளர்த்து மருந்துக்கு உபயோகிக்கலாம்.

* ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்துவது ஏன்? மற்ற தெய்வங்களுக்கு சந்தனக் காப்பு சாத்துவது போல் ஆஞ்சநேயருக்குப் பிரியமான வெண்ணெயினால் சாத்துபடி செய்வது சிறப்பு. அவரது வாலில் தீ வைக்கப்பட்டதால், உஷ்ணத்தைத் தணிக்க பக்தர்கள் அன்புடன் வெண்ணெய் சாத்துகின்றனர்.

* சுமங்கலிகளை வழியனுப்பும்போது குங்குமம் கொடுக்க வேண்டுமா? அவசியம் கொடுக்க வேண்டும். இதில் இரு விஷயங்கள் உள்ளன. சுமங்கலிகள் நம் வீட்டிற்கு வந்தால் அம்பாளே வந்திருப்பதாக எண்ண வேண்டும். குங்குமம், ரவிக்கைத்துணி, வெற்றிலைபாக்கு, மஞ்சள் கிழங்கு ஆகியவற்றை வழியனுப்பும்போது கொடுத்தால் அம்பாளின் அருள் கிடைக்கும். மற்றொன்று வந்திருப்பவர் நம்மை விட வயதில் சிறியவராக இருந்தால் வாழ்த்தியும், பெரியவராக இருந்தால் வாழ்த்துப் பெற்றும் குங்குமம் கொடுக்க வேண்டும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்ட இதனைச் செய்வது வழக்கில் உள்ளது.

* நோய்க்கு மருந்தாவான்: காலையில் படுக்கையை விட்டு, ஹரி ஹரி என்று ஏழுமுறை சொல்ல வேண்டும்.பணிக்கு கிளம்பும் போதும், வீட்டில் இருக்கும் பெண்கள் காலையில் காபி போடுவதற்கு முன்பும் கேசவாய நம என ஏழுமுறை சொல்ல வேண்டும்.
சாப்பிடும் முன்பு கோவிந்தனை (திருப்பதி ஏழுமலையான்) நினைக்க வேண்டும். இரவில் உறங்கச்செல்லும் போது மாதவா... மாதவா என ஏழுமுறை சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment