மஹாலக்ஷ்மி அஷ்டோத்திரம்
"நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுர பூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே."
வணக்கத்திற்கு உரியவளாகி சகலருடைய சித்தத்தையும் கவர்ந்து விருப்பங்களில் செலுத்தும் மஹா மாயை ஆனவள். ஸ்ரீ பீடத்தில் நிலைத்து வசிப்பவள். தேவர்களால் வழிபடப்படுபவளும் சங்கு சக்கரம் கதை இவற்றைத் திருக்கரங்களில் தாங்கியிருப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.
"நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே."
கருடவாகனத்தில் ஆரோகணித்து வருபவள். கோலாசுரன் என்னும் கொடியவனுக்கு பயங்கரியாகி, அவனை அழித்தவள். எல்லா பாவங்களையும் அழிப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.
"சர்வக்ஞே சர்வ வரதே சர்வதுஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே."
உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவள். அனைத்து வரங்களையும் அளிப்பவள். எல்லா தீமைகளுக்கும் பயங்கரியாக விளங்குபவளும் எல்லா துக்கங்களையும் தீர்ப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.
"சித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே."
அறிவும் சிந்தனையும் தேர்ந்து எய்தும், தெய்வீக வெற்றியினை அருள்பவள். மோக்ஷத்திற்கான நல்ல ஞானத்தை அளிப்பவளும் மந்த்ரங்களின் வடிவாகத் திகழ்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.
"ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி
யோகஜே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே."
முதலும் முடிவும் அற்ற தேவியானவள். பிரபஞ்சத்தின் முதல் சக்தியான மகேஸ்வரியாக விளங்குபவள். யோக நிலையில் தோன்றியவளும் யோக வடிவாகத் திகழ்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.
"ஸ்தூல சூக்ஷ்ம மஹா ரெளத்ரே மகாசக்தி மகோதரே
மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே."
பூவுலகில் காணும் வடிவங்களாக விளங்குபவள். எளிதில் உணரப்பட முடியாதவள். (பிழைகளைக் காணுங்கால்) எல்லையற்ற கோபம் உடையவள். அளவிடற்கரிய பெரும் சக்தி என விளங்குபவளும் பெரும் பாவங்களைத் தொலைப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.
"பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே."
"பத்மாசனத்தில் அமர்ந்தவள். பரப்ரம்மத்தின் வடிவாகத் திகழ்பவள். பரமேஸ்வரி என விளங்குபவளும் அகில உயிர்களுக்கும் அன்னை என ஆனவளும் ஆகிய - மஹாலக்ஷ்மியே!.. உன்னை வணங்குகின்றேன்.
"ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகஸ்திதே ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே."
தூய வெண்ணிற ஆடையுடன் இலங்குபவள். பலவிதமான அலங்காரங்கள் கொண்டு திகழ்பவள். பூவுலகெங்கும் வியாபித்திருப்பவளும் அகில உலகங்களுக்கும் அன்னை என ஆனவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.
"மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமாந் நர:
ஸர்வஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா:"
மஹாலக்ஷ்மி அஷ்டகத்தினைச் சொல்லி மனப்பூர்வமாகத் துதிப்பவர் எல்லா இடர்களையும் வென்று மனோராஜ்யங்களை அடைந்தவராகி இருப்பர்.
"ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம்
த்வி காலம் ய: படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித:
திரி காலம் ய: படேந் நித்யம் மஹா சத்ரு விநாஸனம்
மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா. "
தினமும் ஒரு முறை சொல்லி வழிபடுபவரின் பெரும் பாப வினைகள் அழியும். தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில் தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும். தினமும் மூன்று முறை சொல்லி வழிபடுபவர் (ஐம்புலன் எனும்) எதிரிகளை எளிதாக வெல்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பேரருளைப் பெற்று உய்வர்.
ஸ்ரீமஹாலக்ஷ்மி அவர் நெஞ்சகத்தில் நிலைத்து நிற்பால்.
No comments:
Post a Comment