Wednesday, 13 January 2016

பெண்கள் ருது ஆன கால நேரத்தின் பலனும் , பரிகாரங்களும். – 2.

பெண்கள் ருது ஆன கால நேரத்தின் பலனும் , பரிகாரங்களும். – 2.
      
பெண்களுக்கு ஜனன காலத்தைப் போலவே முதல் ருது காலமும் மிக முக்கியமானதென ஜோதிஷ சாஸ்திரத்தில் கருதப்படுகிறது. அப்பொழுதே அவள்     “ பெண் ” – என  அழைக்கப்படும் பெண்மைக்கு உரியவள் ஆகையால் முதல் ருது கால ஜாதகமும் முக்கியமானதாகிறது.

இந்தக் கட்டுரையின் முதல் பகுதியில், சென்ற மாதம், -- மாத, வார, திதிகளில் ருதுவான பெண்களுக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்களைப் பற்றி பார்த்தோம்.

இனி, தொடர்ந்து நட்சத்திர பலன், தரிசன பலன், கால பலன், நாழிகை, ஜாமபலன், யோகபலன், கரண பலன் ஆகியவற்றைப் பற்றி பார்ப்போம்.  நண்பர்களே!
      
அமாவாசை திதியில் ருதுவான பெண்ணுக்குத் தோஷ பரிகாரம் – பெண் ருதுவான 11 ஆம் தினம் நவக்கிரக சாந்தி செய்து, ஒரு வேண்கலப் பாத்திரத்தில் எள் – நெய்  ஊற்றி அதில் அந்தப் பெண்ணின் முகம் பாரக்கச் சொல்லி, அந்தப் பாத்திரத்தை, தாம்பூல நட்சிணையோடு தானம் செய்தல் வேண்டும். அன்றைய தினம் முதல் 9 நாள் நவக்கிரக பூஜை செய்து விரதம் இருந்து, ஒன்பதாம் நாளில் அன்னதானம் செய்தால், ஜாதகி சுக, சந்தோஷத்துடன், தன குடுப்பத்தைப் பராமரித்து, கணவனோடும் குழந்தைகளோடும் களிப்புடன் வாழ்வாள்.
      
ருதுவான நட்சத்திர பொதுவான பலன்

அஸ்வனி – வைதவ்யம்,
பரணி – அந்நிய வீடுகளில் திரிவாள், கார்த்திகை – மிக்க தரித்திரமாய் இருப்பாள்.
ரோகிணி – புத்திர சம்பத்துடன் திகழ்வாள். 
மிருகசிரீடம் – சுசிகரமாய் இருப்பாள். திருவாதிரை – அபாக்கியவதியாய் இருப்பாள்,
புனர்பூசம் – பதிவிரதையாய் இருப்பாள், 
பூசம் – பதியுடன் இருப்பாள்.
மகம் – புத்திர நாசம் உடையவள்.
பூரம் – கர்ப்ப சிதைவு ஏற்படலாம். உத்திரம் – தனதான்யம் உடையவளாய் இருப்பாள். 
ஆயில்யம் – கபடத்தனம் செய்பவளாயிருப்பாள்.
ஹஸ்தம் – உறவுகளை பாதுகாப்பாள், சித்திரை - பதிவிரதையாய் இருப்பாள்,   சுவாதி – பல பிள்ளைகளை உடையவளாய் இருப்பாள்.
விசாகம் – சுத்தமற்றவளாய் இருப்பாள். அனுஷம் – கணவனிடம் பாசமாய் இருப்பாள்.
கேட்டை – சிறையில் இருப்பாள். 
மூலம் – புத்திரர்கள் உண்டாயிருப்பாள். பூராடம் – கவலையோடு இருப்பாள். உத்திராடம் – சம்பத்துடனே இருப்பாள். திருவோணம் – பாக்கியம் மிகுந்தவளாய் இருப்பாள்.
அவிட்டம் – பிள்ளைகள் உடையவளாய் இருப்பாள்.
சதயம் – பூர்ண ஆயுள் உடையவள். பூரட்டாதி – நோயுற்ற கணவனை உடையவளாயிருப்பாள்.
ரேவதி – சகல சம்பத்தும் உடையவளாய் இருப்பாள்.

பெண்கள் ருதுவான நட்சத்திர பலனும், ஆகாத நட்சத்திரங்களுக்குத் தோஷ பரிகாரமும்.

அஸ்வினி – விதவை –
      
இதற்கு ருதுவான பெண், திங்கட்கிழமையன்று சிவ பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்தும், சோமவார விரதம் இருந்தும் வரவேண்டும்.

பரணி – புத்திர பாக்கியம் உடையவள். ஆனால் கோபம் , லோபம், குரோதம், பொறாமை முதலிய துர்க்குணங்களை உடையவளாய் இருப்பாள்.
      
இதற்கு நவக்கிரக சாந்தி செய்வதுடன், நவகிரகங்களை 27 முறை வலம் வந்து வணங்குதல் வேண்டும்.

கார்த்திகை -  வறுமையால் கலங்கி, உண்ண உணவும் உடுக்க உடையும் இன்றி கஷ்டத்துக்கு ஆளாவாள்.
      
இதற்கு, ருதுவான பெண் முருகக் கடவுளை , தேனும், தினையும் கலந்த மாவிளக்கில் பசும் நெய் விட்டு, தாமரைத் தண்டு திரி போட்டு திருவிளக்கேற்றி, முருகனை 27 முறை வலம் வந்து வணங்குதல் வேண்டும். அஷட்டோத்திர சத நாமங்களால் அர்ச்சனை செய்து, நெய்வேத்தியம் செய்ய வேண்டும். கிருத்திகை, சஷ்டி விரதங்கள் அனுஷ்டித்து, சாதுக்களுக்கு உணவிட்டு உபசரிக்க வேண்டும். இதனால், ஜாதகி, வறுமை நீங்கி, புத்திரப் பேறு பெற்று சுகமாக ஜீவித்து இருப்பாள்.

ரோகிணி – அடக்கம், சாந்தம், பொறுமை, சமத்துவ குணம் பொருந்தி எல்லோருக்கும் நன்மை செய்பவள்.

மிருகசிரீஷம் – கணவனோடு மிகவும் அன்னியோன்யமாக நகமும், சதையும் போல், பூவும் மணமும் போல் இனிய சொற்கள் பேசி இன்பமாக வாழ்வாள்.

திருவாதிரை – அனைவரையும் வெறுத்து நிர்பாக்கியவதியாய் இருப்பாள்.
    
இதற்கு, மனைவி மைந்தர்களோடு வாழும் ஒரு பெரியவருக்கு, ஸ்னானம் செய்வித்து, சோடசோபசாரத்துடன் (16 உபசாரங்கள்) உணவளித்து புத்தாடை, சந்தனம், குங்குமம், மஞ்சள், புஷ்பம், தாம்பூல தட்சிணை கொடுத்து, அப் பெரியவரை மூன்றுமுறை வலம்வந்து வணங்கி அவரின் ஆசிகளைப் பெற்றால், இந்த தோஷம் விலகி, குடும்பத்துடன் ஒற்றுமையாக, சந்தோஷமாக வாழ்ந்து சுக ஜீவியாய் இருப்பாள்.

புனர்பூசம் – எல்லாவித சுகத்தையும் அடைவாள்.

பூசம் – பிறந்த வீட்டில் சீரும் சிறப்புமாய் வாழ்ந்து, புகுந்த வீட்டிலும் எல்லோருக்கும் நல்லவளாய், சகல சௌபாக்கிங்களோடு வாழ்வாள்.

ஆயில்யம் – மனக்கிலேசமும், கபடத் தன்மையும் உடையவள். பலராலும் இகழ்ச்சி அடையக் கூடியவள்.
    
இதற்கு, நவக்கிரக சாந்தி செய்வதோடு, சிறுபிள்ளைகளுக்கு பழ வர்க்கங்களைக் கொடுத்து, அவர்களை சந்தோஷப்படுத்தியும், அன்னதானம் செய்தால் ஜாதகி குடும்பத்தில் கணவன் முதல் குடும்பத்தினர் அனைவரும் இவள் மீது பற்றும், பாசமும் கொண்டு, மகிழ்ச்சியை வைத்திருப்பர்.

மகம் – கணவனுக்கு நல்லவளாய் இருந்தாலும், பெற்ற பிள்ளைகள் நாசமடைவர். இதனால் அவள் எந்த நேரத்திலும் மனக் கவலையுடனும், மனக் குழப்பத்துடனும் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
    
இதற்கு, பாம்புப் புற்றுக்கு, 45 நாட்கள் பால் ஊற்றி, அரசமரத்தை வலம் வந்து, கிராம தேவதைகளுக்கு பாற்பொங்கலிட்டு, மாவிளக்கு ஏற்றி, அபிஷேக, அலங்கார, அர்ச்சனை, ஆராதனைகள் செய்தால், ஜாதகிக்குப் புத்திர, புத்திரிகள் பிறந்து, கணவனுடன் சுகமாக வாழ்வாள்.

பூரம் -   கர்ப்பச் சிதைவு ஏற்பட்டு மலடியாக இருப்பாள்.    
    
இதற்கு, ருதுவான மறு மாதத்தில், வீட்டுக் குலதெய்வத்துக்கும், பூவாடைக்காரிக்கும், மாவிளக்கு ஏற்றி, அபிஷேக, அலங்கார, அர்ச்சனை, ஆராதனைகள் செய்து, மூன்றாவது மாதத்தில் நவக்கிரக சாந்தி செய்தும், பாம்புப் புற்றுக்கு 45 நாட்கள் பால் ஊற்றி, அரசமரத்தை வலம் வந்து பூஜித்தால், ஜாதகி சந்தோஷமாய்ப் புருஷனோடு கூடி, ஆண், பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்து சுகமாக, சந்தோஷமாக வாழ்வாள்.

உத்திரம் – நற்குணமும், நற்செய்கைகளையும் உடைய குணவதியாகத் திகழ்வாள்.

ஹஸ்தம் – எக்காலத்திலும்  கஷ்ட, நஷ்டங்களை அனுபவிப்பவளாகவும், வறுமையில் உழன்று, உடலில் நோய் ஏற்பட்டு விரக்தி மிக்க வாழ்க்கையை வாழ்வாள்.
    
இதற்கு, நவ கலசங்களை ஆவாகனம் செய்து, 9 நாட்களுக்கு சாஸ்திர முறைப்படி பூஜித்து, அத்துடன், ஒரு தர்ப்பையில் செய்த பதுமையை வைத்து, அதை 7 ஆம் நாள் அக்கினியில் இட்டு சாம்பலாக்கி அந்த சாம்பலை தினமும் நெற்றியில் அணிந்து வருதல் வேண்டும். இது தவிர ஆயிரத்து எட்டு வில்வ இலைகள், அதே அளவு வெண்தாமரை மலர்கள் இவற்றால் சிவபெருமானுக்குப் பூஜை செய்து, பிறகு நவக்கிரக சாந்தி செய்து அன்னதானம் செய்தல் வேண்டும். இதனால், ஜாதகி, நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெற்ற, புத்திர பாக்கியத் தோடு, தன, தான்ய விருத்தியோடும், சுகமாக வாழ்ந்திருப்பாள்.

சித்திரை -      வறுமை, சஞ்சலம், திகில் பொருந்தி, தன் வாழ்வு குலைந்து, ஏழ்மை நிலை அடைவாள்.
    
இதற்கு, சோமவார விரதம், சனிக்கிழமை விரதம் ஆகியவற்றை அனுஷ்டித்து, சிவபெருமானையும், ஶ்ரீ மகாவிஷ்ணுவையும் பூஜித்து, 1000 செந்தாமரை – வெண்தாமரை மலர்களால், 108 செந்தாழம் பூவினாலும் அர்ச்சனை செய்தல் வேண்டும்.   அத்துடன் நெல்லி மரத்தின் கீழ் நவகலசம் நிறுவி, நவக்கிரக பூஜை செய்து, பிராமண சம்பாவனை, சாதுக்களுக்கு அன்னதானம் செய்தல் ஆகியவற்றால் ஜாதகி, தன தான்ய சம்பத்தோடு, சுகமாய் வாழ்வாள்.

சுவாதி – பெரிய கவுரவமான குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டுச் சுக ஜீவியாய் இருப்பாள்.

விசாகம் – அழுக்கடைந்த சரீரம், கிழிந்த புடவையோடு நாகரீகம் இல்லாமல், தலைவிரி கோலமாய், மந்த புத்தி, சோம்பல் – தூக்கம் நிறைந்து விளங்குவாள்.
    
இதற்கு, 9 துவாரம் செய்த மண் பாத்திரத்தில் நீர் ஊற்றி, தம்பதிகளை, மந்திர பூர்வமாய்  அமரவைத்து, அவர்கள் தலைமேல் பானையிலுள்ள நீரை ஊற்றி, அட்சதை தூவி, புத்தாடை உடுத்தி, நவக்கிரக சாந்தி செய்து, ஹோமம், அக்னி காரியம் முறைப்படி நடத்தி, பூஜை செய்து, அன்னதானம் அளித்தால், ஜாதகி நாகரீகத்தோடு கணவனுக்கு இனியவளாய், குழந்தைகளைப் பெற்றெடுத்து, தன-தான்ய சம்பத்தோடு வாழ்வாள்.

அனுஷம் – நோய் உடையவள்.
இப் பெண் மங்களவாரம் விரதம் இருந்து, முருகப் பெருமானை பூஜித்து, கிருத்திகை, ஷஷ்டி விரதங்களையும் அனுஷ்டித்து வரவேண்டும்.

கேட்டை – விகார புத்தி, மனக்கவலை கொண்டு கணவனை விட்டுப் பிரிந்து, உண்ண உணவும், உடுக்க உடையும் இன்றி வேதனையுடன் அலைவாள்.
    
இப் பெண் 45 நாட்கள் அரசமரத்துக்குப் பூஜை செய்து, தினமும் 108 முறை வலம் வந்து வணங்கி, கடைசி தினம் நவக்கிரக சாந்தி, ஹோமம் நிகழ்த்தி, குலதெய்வத்துக்குப் பொங்கலிட்டு, அபிஷேக, அலங்கார ஆராதனைகள் செய்து, சாது, பரதேசிகளுக்கு அன்னதானம் செய்தால், ஜாதகி, தன் கணவனோடு சரஸ சல்லாபமாய் இருந்து, நல்ல பிள்ளைகளைப் பெற்றெடுத்து, தன-தான்ய சம்பத்தோடு கௌரவமாய் வாழ்வாள்.

மூலம் – பால் பாக்கியம் பெற்று, கணவனோடு சந்தோஷமாய் கூடி வாழ்வாள்.

பூராடம் – எப்போதும் மனத்துயர் அடைந்து பிறர்க்கு அடிமையாக வாழ்வாள்.
    
இப் பெண் திங்கட்கிழமை, சிவாலயத்தில் 108 தீபத்தில், தாமரை நூல் திரியிட்டு, பசும் நெய் ஊற்றி விளக்கேற்றி, பூஜை செய்தால், அவள் புகுந்த வீட்டுக்கு எஜமானியாய் கணவனோடு இனிதே வாழ்வாள்.

உத்திராடம் – தர்ம குணம் நிறைந்தவள், எல்லோரிடமும்  அன்பும், ஜீவகாருண்யமும் உடையவளாய் இருப்பாள்.

திருவோணம் – சகல பாக்கியமும் பெற்று கணவனுக்கு இனியவளாய், குடும்பத்தை மேன்மையாக நடத்துபவளாய் இருப்பாள்.

அவிட்டம் – பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் செல்வம் நிறைந்தவளாய், நல்ல குணமுடையவளாய் இருப்பாள்.

சதயம் – சகல செல்வாக்கு உடையவளாய் இருந்தாலும் பொருள் அழியும்.
     
இதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும், வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமி பூஜை செய்து வர வேண்டும்.

பூரட்டாதி – நோயுள்ள கணவனை மணந்து, எப்போதும் மனக் கவலையுடன், புத்திர பாக்கியமின்றி வருந்தி, மணமான 3 வது வருடத்தில் விதவையாவாள்.
    
இதற்கு ருதுவான மூன்றாம் மாதத்தில், அமாவாசை தினத்தன்று, ஆற்று மணலைக் கொண்டு வந்து, தரையில் பரப்பி, அதன் மீது நவக்கிரக பீஜாட்சரங்களைப் போட்டு, அதன் மீது நவதானியங்களை விதைத்து, அதன் மீது நவகலசங்களை ஆவாகனம் செய்து, ஹோமம் செய்து, அன்று முதல் பவுர்ணமி வரையும், நவக்கிரக பூஜை செய்து, கடைசி நாளன்று, நவக்கிரக கலச நீரால் அப் பெண்ணை நீராட்டி, புத்தாடை உடுத்தி, சாது, பரதேசிகளுக்கு அன்னமளித்து, தாம்பூல, தட்சிணை கொடுத்து உபசரித்து, அன்று இரவு, நவகிரகங்களுக்கு அஷ்டோத்திர சத நாமங்களால் அர்ச்சனை செய்து வந்தால், ஜாதகி வாட்டசாட்டமான கணவனை மணந்து, நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்து, மேன்மையாகவும், தீர்க்க சுமங்கலியாகவும் வாழ்வாள்.

உத்திரட்டாதி – தரித்திர முடையவள்.
    
வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமி பூஜை செய்து வரவேண்டும்.
ரேவதி – ரோகங்களினால் கஷ்டப்படுவாள்.

கிருத்திகை – சஷ்டி ஆகிய நாட்களில் விரதம் இருந்து முருகனுக்கு பூஜை செய்து வருதல் வேண்டும். செவ்வாய்க் கிழமை அன்று கிரிவலம் வரவேண்டும்.
ருதுவான பெண்ணுக்கு ஏற்படும் நல்ல – தீயபலன்.
    
உத்தம பலன் – சுபக்கிரகங்களின் அஷ்ட வர்கங்களிலே ருதுவானாலும், ருது இலக்னத்துக்குக் கேந்திர – திரிகோணம், 2 ஆம் இடம், 11 ஆம் இடங்களில் சுபக் கிரகங்கள் இருக்கவும், 6 ஆம் இடத்தில் அசுபக்கிரகம் இருந்தாலும் அது உத்தமமான காலமாகும்.
    
அதம பலன் – கிரகண காலத்தில், சங்கராந்தியில், பாபக் கிராந்தத்தில், 7 ஆம் இடத்தில் பாபக்கிரகம் இருக்கவும், குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் சூரியன் சஞ்சரிக்கும் காலங்களிலும், கணவனுக்கு சந்திராஷ்டமம் உள்ள காலத்திலும்  ருதுவானால் அதமம் என்பர். (அந்தக் காலத்தில் ருதுவுக்கு முன்னரே திருமணம் ஆகிவிடும்)
தரிசன பலாபலன்.
    
ருதுவான போது அந்தப் பெண்ணே பார்த்தால் துன்பமும், கன்னிப் பெண் காண்கில் புண்ணியமும், கைம்பெண் கண்டால் விதவையாவாள், நோயாளியால் பார்க்கப்பட்டால் நோய் உள்ளவளாவாள். விபசாரியால் பார்க்கப்பட்டால் போக பாக்கியம் ஏற்படும். சுமங்கலி பார்த்தால் சுமங்கலியாய் இருப்பாள்.  தலையில் எண்ணை வைத்தவர் கண்டால் தரித்திரமும், கணவன் கண்டால் துக்கமும் ஏற்படும்.
கால பலாபலன்.
    
பிரதாக் காலம் – சுபம்,
முற்பகல் – தீர்த்த யாத்திரை, மத்தியானம் – புத்திர சம்பத்தும், பிற்பகல் – சோரம் போவாள், சாயங்காலம் எனில் அதிக புத்திரர்கள் உண்டு.
அஸ்தமன காலம் – விபசாரி ஆவாள், முன்னிரவு  எனில் – தீர்க்காயுள் உண்டு,
நடுயிரவு – விதவை,
பின்னிரவு – கஷ்டம், தரித்திரம் ஆகும். அந்தி – சந்தி வேளைகளில் பாக்கியம் அற்றவளாக இருப்பான்.

நாழிகை பலாபலன்.
    
10 நாழிகைக்குள் – உத்தமம் , 20 நாழிகைக்குள் – மத்திமம், 30 நாழிகைக்குள் – அதமம்.
தோஷ பலன்
    
1 வது நாழிகை – கணவனுக்கு ஆகாது, 2 வது நாழிகை – திரவிய நாசம்,
3 வது நாழிகை – எல்லாமும் நாசம்.
4 வது நாழிகை – தரித்திரம்.

நிஷேத காலம்.
    
பரணியில் ருதுவானல் 10 மாதம், பூராடம் – 8 மாதம், மகம் – 12 மாதம், உத்திரம் – 5 மாதம். இந்த அளவுக்கு மேல் ருதுவான பெண்ணைக் கணவன் பார்த்தால் தோஷமில்லை.

ருதுவான பெண்கள் நித்ய யோக தோஷ பரிகாரங்கள்.
    
விஷ்கம்பம் - யோகத்தில் ருதுவான பெண் மனோவேதனையுடனேயே இருப்பாள்.
    
இதற்கு, ருதுவான 13 ஆம் நாள், பெரியோர்களாகிய உறவுகள் வர்க்கத்தாருக்கு, சோடசோபசாரத்தோடு விருந்து செய்து, சந்தனம் – புஷ்பம் – தாம்பூலம் கொடுத்து, அவர்களது ஆசீர்வாதம் பெற வேண்டும். அன்றிரவு, நவக்கிரகங்களுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்தும், பசுவுக்கு நவதான்யங்கள் கொடுத்தும் வந்தால், ஜாதகி தன் கணவனோடு சந்தோஷமாய் வாழ்ந்து, புத்திரர்களைப் பெற்றுச் சுக ஜீவியாய் இருப்பாள்.
    
அதிகண்டம் -  இந்த நித்ய யோகத்தில் ருதுவானவள் பெரியோர், சிறியோர் என எண்ணாமல், எல்லோரையும் அலட்சியமாய் மதிப்பின்றிச் சீறி, சினந்து, கோபமும், குரோதமும் உடையவளாய், மகா பாவியாகவும் இருப்பாள்.
    
ஜாதகி ருதுவான மூன்றாம் மாதத்தில், சுமங்கலிகளுக்கு, காதோலை, கருகுமணி, வளையல், முகம் பார்க்கும் கண்ணாடி, குங்குமம், மஞ்சள், தாம்பூல தட்சிணையுடன் அன்னமிட்டு மரியாதை செய்து, அன்று இரவு நவக்கிரகங்களுக்கும் அர்ச்சனை செய்தால், அவளுக்கு அடக்கம், பொறுமை, சாந்தம், சமத்துவம், காருண்யம் ஆகிய நற்குணங்கள் ஏற்பட்டு, பொரியோர்களை நேசித்து, அவர்களின் பூர்ண ஆசீர்வாதங்களைப் பெற்று, எல்லோருக்கும் நல்லவளாய், சுகமாக வாழ்வாள்.
    
சூல யோகம் – இந்ந யோகத்தில் ருதுவான பெண், எக்காலத்துக்கும் சஞ்சல மனதினளாய், கொடுமைப்படுத்தும் கணவனிடம் அகப்பட்டு, திகைத்து, வம்பு வழக்கு, சண்டை சச்சரவுகளுக்கு உள்ளாகி மனம் இளைத்து, துர்மரணத்துக்கு ஆளாவாள்.
    
சோமவார விரம் இருந்து, சிவாலயத்தில் நெய் விளக்கேற்றி, உமாதேவி சமேத சிவபெருமானை தினசரி பூஜித்து, சுமங்கலிகளுக்கு சகல உபசாரங்களோடு அன்னமளித்து வந்தால், ஜாதகி கணவனுக்கு இனியவளாய், அறிவுள்ள அழகிய குழந்தைகளைப் பெற்றெடுத்து சுகமாக, சந்தோஷமாக வாழ்ந்திருப்பாள்.

கண்ட யோகம் – இந்த யோகத்தில் புஷ்பவதியானவள், பல பாவங்களைச் செய்து, எல்லோருக்கும் விரோதியாய் இருப்பாள்.
    
உத்தம குணமுள்ள கற்பு வழுவாத தம்பதிகளுக்கு, புனித நீரால் நீராட்டி, புது வஸ்திரங்கள் கொடுத்து, சந்தனம் – தாம்பூலம் – மஞ்சள் – குங்குமம் – கதம்பம் பொடி – காதோலை கருகுமணி – கண்ணாடி முதலியன கொடுத்து உபசரித்து அன்னமளித்து, வணங்கி அந்த தம்பதிகளது ஆசிர்வாதத்தைப் பெற்று, அன்றிரவு சிவாலயத்தில் நெய் விளக்கேற்றி, உமாதேவி சமேத சிவபெருமானை தினசரி பூஜித்து, நவக்கிரகங்களுக்கும் அர்ச்சனை செய்து வந்தால், ஜாதகி கணவனுக்கு இனியவளாய், அறிவுள்ள அழகிய குழந்தைகளைப் பெற்றெடுத்து சுகமாக, சந்தோஷமாக வாழ்ந்திருப்பாள்.

வியாகத யோகம் – இந்த யோகத்தில் புஷ்பவதியான பெண் இளமையில் விதவையாவாள்.
    
ஜாதகி ருதுவான மூன்றாம் மாதத்தில், நவக்கிரகங்களுக்கும் சாந்தி செய்து, சாதுக்களுக்கு அன்னமளித்து, சஷ்டி விரதம் அனுஷ்டித்து முருகனைப் பூஜித்து வந்தால், உத்தமமான கணவனை மணந்து, நல்ல மழலைச் செல்வங்களை ஈன்றெடுத்து, தீர்க்க சுமங்கலியாய் சுகமே ஜீவித்திருப்பாள்.
வியதிபாத யோகம் – இந்த யோகத்தில் ருதுவான பெண், எக்காலத்தும் கொடிய மனதினளாய், வாயில் வரக்கூடாத வார்த்தைகளைப் பேசி அனைவரையும் வம்புக்கு இழுப்பவளாய் இருப்பாள்.
    
அவள், சிவாலயத்தில் 45 நாட்கள் ,நெய் விளக்கேற்றி, உமாதேவி சமேத சிவபெருமானை வலம் வந்து அர்சனைகளைச் செய்து தினசரி பூஜித்து, விரதம் இருந்து, கடைசி நாளன்று பார்வதி சமேத பரமேஸ்வரனுக்கு சாஸ்திர விதிகளின் படி அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனைகள் செய்து பூஜித்தால், ஜாதகி, இளகிய மனதினளாய் அனைவரிடத்தும், அன்பும், பாசமும் கொண்டு கணவனே கண்கண்ட தெய்வமென எண்ணி, நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்து சுகமாக, சந்தோஷமாக அனைத்து செல்வங்களும் பெற்று வளமாக வாழ்வாள்.

ருதுவான பெண்களுக்குக் கரண தோஷ பரிகாரங்கள்.

கரசை கரணத்தில் – ருதுவான மங்கை விதவையாவாள்.
    
அமாவாசையில் நவகலசம் அமைத்து, அதில் நவக்கிரகங்களை ஆவாகனம் செய்து, அன்று முதல் பௌர்ணமி நாள் வரையும், தினமும், மந்திர பூர்வமாய், ஹோமாதி கிரியைகளோடு, நவகிரகங்களையும் பூஜித்து, கடைசி நாள் கலச பூஜை பூர்த்தி செய்து, சாதுக்களுக்கு அன்னம் இட்டு உபசரித்து, சுமங்கலிப் பெண்களுக்கு சந்தனம் – தாம்பூலம் – மஞ்சள் – குங்குமம் – கதம்பம் பொடி – காதோலை கருகுமணி – கண்ணாடி முதலியன கொடுத்து உபசரித்து அன்னமளித்தால் ஜாதகி தீர்க்க சுமங்கலியாய், சத்புத்திரர்களைப் பெற்றெடுத்து சந்தோஷமாய் சகல சௌபாக்கியங்களோடு ஜீவித்திருப்பாள்.

சகுனி கரணத்தில் – ருதுவான பெண் விபசாரியாய் இருப்பாள்.
    
அமாவாசையில் நவகலசம் அமைத்து, அதில் நவக்கிரகங்களை ஆவாகனம் செய்து, அன்று முதல் பௌர்ணமி நாள் வரையும், தினமும், மந்திர பூர்வமாய், ஹோமாதி கிரியைகளோடு, நவகிரகங்களையும் பூஜித்து, கடைசி நாள் கலச பூர்த்தி செய்து, அன்னதானம் செய்தால், அவளுக்கு அடக்கம், பொறுமை, சாந்தம், சமத்துவம், காருண்யம் ஆகிய நற்குணங்கள் ஏற்பட்டு, கணவனை நேசித்து, கற்பு நிலை தவறாது கூடி வாழ்ந்து, பெரியோர்களின்  பூர்ண ஆசீர்வாதங்களைப் பெற்று, எல்லோருக்கும் நல்லவளாய், சுகமாக வாழ்வாள்.

சதுஷ்பாத கரணத்தில் – ருதுவான பெண்ணானவள் – கோபம் , குரோதம், விசனம், துன்பம் ஆகியவற்றால் கஷ்டப்பட்டு எக்காலத்தும் மன கலக்கத்தோடு வாழ்ந்து இருப்பாள்.
    
ஒன்பது கிரகங்களுக்கும், தினமும் ஒரு கிரகத்திற்கு அர்ச்சனை செய்து வந்து பத்தாவது நாளன்று, நவக்கிரகங்களுக்கும் குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்து, அலங்கரித்து, அர்ச்சனைகள் செய்து, சகல விதத்திலும் இராஜ உபசாரங்கள் செய்து ஆராதித்து அன்ன விரயம் செய்தால் ஜாதகி, சிரித்த முகத்தோடு, ஆனந்தமாக, எல்லோருக்கும் நல்லவளாய், கணவனுக்கு இனியவளாய், நன்மக்களைப் பெற்றெடுத்து, சகல சம்பத்தோடு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வாள்.

1 comment:

  1. theva illama pesathinga police complaint paniruvom by mahat@azhagesan

    ReplyDelete