|| இந்துதர்ம வரலாறு
பாரத மண்ணில் தோன்றிய எல்லாவகையான நம்பிக்கைகளும் ‘இந்து’ என்ற பெயரின் கீழ் அடங்கும். பாரதமண்ணின் பண்டைய நாகரீகம் தோன்றிய இடம் ‘சிந்துவெளி’ ஆகும். இந்த நாகரீகம் சிந்துநதியையும் சரஸ்வதி நதியையும் மையப்படுத்தி துவங்கியது. இதற்கான குறிப்புகள் ரிக்வேதத்தில் உள்ளன. சரஸ்வதி நதி முற்றிலும் வற்றிப்போய் விட்டது. எனினும் அறிவியலாளர்கள் தற்போது அது இருந்த இடத்தையும் ஆதாரத்தையும் உணர்ந்துள்ளனர். ஆதலால், பாரதம் ”சிந்து” என்றே அழைக்கப்பட்டது. கிரேக்கர்களும் பார்ஸிகளும் சிந்து நதிக்கு அப்பாலிருக்கும் தேசத்தைப் சிந்துஸ் என்றும் ஹிந்துஸ் என்றும் குறிப்பிட்டனர். (டரியுஸ் கல்வெட்டு கி.மு. 550-486)
நாளடைவில் பாரத தேசத்தின் பெயர் “இந்துஸ்தானம்” ஆகியது. (ஸ்தானம் என்றால் இடம் எனப் பொருள்படும்.) இந்துஸ்தானத்தில் வாழும் மக்கள் யாவரும் “இந்துக்கள்” ஆகினர். அப்போது அந்நிய மதங்கள் பாரதமண்ணில் இல்லை. எல்லோரும் “இந்துக்கள்” என்றே அழைக்கப்பட்டனர். ஆனால், உண்மையில் பாரதமண்ணில் பல மார்கங்கள் பரந்துவிரிந்து நிறைந்துள்ளன. அவை அனைத்தையும் ‘சனாதன தர்மம்’ என்றே ஞானிகள் குறித்தனர். சனாதன தர்மம் என்றால் ஆதிஅந்தமற்ற அறநெறி. ஒவ்வொரு மார்கங்களும் அடிப்படையில் ஒன்றே என்றாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்கள் உடையவர்களுக்கென தோன்றின. கடலில் கலக்கும் நதிகள் பெயர்களால் வேறுபட்டாலும், அவை சென்றுமுடியும் இடம் கடல் தானே?
சனாதன தர்மத்தின் பாதைகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை: பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம். இந்த நால்வகை யோகங்கள் பற்றி முந்தைய பதிவில் ஆழமாக விளக்கப்பட்டுள்ளது. இவற்றுள் பக்தியோகம் மிகவும் புகழ்ப்பெற்றது. அதேவேளை இன்று மேலைநாடுகளில் சனாதன தர்மத்தின் ராஜயோகம் மற்றும் ஞானயோகம் பிரபலமடைகின்றது.
|| நான்கு முக்கிய மார்கங்கள்
பக்தியோகத்தின் கீழ் பல மார்கங்கள் தோன்றின. அவற்றுள் நான்கு மார்கங்கள் முக்கியமானவை. அவை: சைவம், வைணவம், சாக்தம், ஸ்மார்த்தம். இவை பக்தியோகத்தை அடிப்படையாக கொண்டிருந்தாலும், ஞான, கர்ம, ராஜ யோகங்களையும் கொண்டுள்ளன. சனாதன தர்மத்திற்கு வேதங்கள் அடிப்படையாக உள்ளன. வேதங்கள் பொதுவானவை. அதேவேளை சனாதன தர்மத்தின் சைவமார்கத்துக்கு சைவ ஆகமம், வைணவ மார்கத்துக்கு வைணவ ஆகமம் என உள்ளன. ஆகமங்கள் பக்திமுறை வழிபாட்டை ஆழமாக போதிக்கின்றன.
|| சைவம்-வைணவம்-சாக்தம்-ஸ்மார்த்தம்
சைவர்கள் சிவபெருமானை வழிபடுகின்றனர். சைவ கோவில்களில் சைவ ஆகமத்தின் படி பூஜைகள் நடைபெறுகின்றன. வைணவர்கள் விஷ்ணுபெருமானையும் அவரின் முக்கிய அவதாரங்களையும் (கிருஷ்ணபகவான் பூரண அவதாரம்) வழிபடுகின்றனர். வைணவ கோவில்களில் வைணவ ஆகமத்தின் படி பூஜைகள் நடைபெறுகின்றன. சாக்தர்கள் சக்தியை அம்மன், தேவி போன்ற பல்வேறு வடிவங்களில் வழிபடுகின்றனர். சாக்த மரபினர், ஆதிபராசக்தியை பரம்பொருளாக கொள்வர். ஸ்மார்த்தர்கள் சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், கணேசர் ஆகிய தெய்வங்களில் தங்களுக்கு இஷ்டமான ஒரு தெய்வத்தை முதற்கடவுளாக வழிபடுகின்றனர். பரம்பொருளான ஈஸ்வரன் பரமாத்மனாக எல்லோரின் இருதய கமலத்திலும், சிவபெருமானாக கைலாயத்திலும், விஷ்ணுபெருமானாக வைகுண்டத்திலும் வீற்றிருக்கின்றர்.
|| ஏகதெய்வ வழிபாடு அவசியம்
ஏகதெய்வ வழிபாடு இந்துதர்மத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். ஒருவர் மற்ற தெய்வங்களை போற்றி வணங்கினாலும், வழிபாட்டுக்குரியது ஒரு தெய்வமாக தான் இருக்கவேண்டும். ஆதலால் இந்துக்கள் குலதெய்வங்கள், காவல்தெய்வங்கள், கிராமதேவதைகள் போன்ற பல தெய்வங்களை வணங்கினாலும் ஒரு முதற்கடவுளை வழிபாட்டுக்கு ஏற்கவேண்டும். ஒருவன் ஒரே நேரத்தில் பல படகுகளில் பயணம் செய்யலாகாது. முக்திக்கான பயணமும் அத்தகையதே. ஏனென்றால், முதற்கடவுளால் தான் முக்திக்கான வழியைக் காட்ட இயலும். பிறப்பின் நோக்கமே முக்தி தானே?
|| வணக்கம் – வேண்டுதல் - வழிபாடு
வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் வேறுபாடு உண்டு. கையெடுத்து மனதார வணங்குவது வணக்கம். எதையாவது வேண்டி பிரார்த்தனை செய்வது வேண்டுதல். பல்வேறு தெய்வங்களைப் பல்வேறு காரணங்களுக்கு வணங்கலாம்; வேண்டலாம். பூஜை செய்தல், துதி பாடுதல், மூர்த்தி ஆராதனை செய்தல், அபிஷேகம், நாமஜபம், விரதமிருத்தல், பாதநமஸ்காரம் போன்றவை வழிபாடு ஆகும். எந்தவொரு எதிர்ப்பார்ப்புமின்றி, ஈஸ்வரனுக்கு சேவை செய்வதே வழிபாடு. ஒருவர் தன்னை பரம்பொருளிடம் முழுமையாக ஒப்படைக்கவேண்டும். வணக்கமும் வேண்டுதலும் நமக்கு வேண்டிய பொருளை தரும்; வழிபாடு நமக்கு மெய்யான அறிவை அடைய உறுதுணையாக இருக்கும்.
|| சகுணபிரம்மம்
பரம்பொருள் பிரகிருதியில் நிலைபெற்று, சகுணபிரம்ம நிலை எய்துகிறது. அதாவது இயற்கையின் துணையோடு உருவமேற்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் மண்ணில் தோன்றி பின் மறைவது அவதாரங்கள் எனவும், எப்போதுமே நிலைத்திருக்கும் தோற்றங்கள் சகுணபிரம்மம் என்றும் அறியபடுகின்றன. சிவபெருமான், விஷ்ணுபெருமான், பராசக்தி, முருகபெருமான், கணேசபெருமான் – பரம்பொருளின் முக்கிய சில பரிணாமங்கள். எந்த குறிப்பிட்ட காலத்திலும் தோன்றாத, எந்த குறிப்பிட்ட காலத்திலும் இல்லாமல் போய்விடாததே பரம்பொருள். படைக்கும் தெய்வமான பிரம்மன் கூட 100 கல்பங்கள் மட்டுமே நிலைத்திருப்பார். அவருக்கும் ஆதிஅந்தம் உண்டு. ஆகவே, பிரம்மன் பரம்பொருளாக கருதப்படமாட்டார். ஆதலால் தான் பிரம்மன் வழிபாட்டுக்குரியவர் அல்ல என்று இந்துதர்மம் வகுத்தது. உபநிஷத்துக்கள் சகுணபிரம்மத்தை “ஈஸ்வரன்” என்று குறிக்கின்றன. ஆகவே, ஈஸ்வரன் எனும் சொல் பரம்பொருளைக் குறிக்கும் சொல். ஆதிசங்கரர் பரம்பொருளை ஈஸ்வரன் என்று பொதுவாகவும், சிவன், விஷ்ணு என்றும் குறிப்பிடுகிறார். ராஜயோக (அஷ்டாங்க யோகம்) இந்துக்கள் பரம்பொருளை ஈஸ்வரன் என்று குறிப்பிடுவர்.
இந்துதர்மம் பரம்பொருள் ஒன்றுதான் என்று கூறினாலும், தெய்வங்களின் இருப்பை ஒருபோதும் மறுக்கவில்லை. பரம்பொருளின் சக்தியில் உருவாகினவர்களே தெய்வங்கள். தெய்வங்கள் பல்வேறு காரணங்களுக்காக தோன்றியவை. வேதங்களின் சம்ஹிதைகளில் 33 பெருந்தெய்வங்கள் போற்றப்படுகின்றனர். பின்னர், உபநிஷத்துகளில் பரம்பொருள் தத்துவம் பேசப்படுகிறது. பரம்பொருள் தத்துவத்தை சொற்களால் விளக்கிவிட இயலாது. இதற்காக பல உபநிஷத்துகள் உள்ளன. உபநிஷத்துகளைக் குருவின் துணையோடு கற்றுத் தேர்ந்து ஞானம் எய்திய ஒருவரால் மட்டுமே பரம்பொருள் தத்துவத்தை விளங்கி கொள்ள இயலும்.
|| குலதெய்வங்கள்-காவல் தெய்வங்கள்-கிராம தெய்வங்கள்
குலதெய்வங்கள் என்பவர்கள் ஒருவரின் குலத்தைக் காக்கும் தெய்வம். குலத்தைக் காக்கவும், மரியாதை செலுத்தும் வகையிலும் குலதெய்வங்களை வணங்குகின்றனர். இன்று குலதெய்வ வணக்கம் அருகிவிட்டது. குலதெய்வங்கள் எல்லாம் பரம்பொருளுக்குக் கட்டுப்பட்டவர்கள்.
காவல்தெய்வங்கள் என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட ஊரைக் காக்கும் தெய்வம். தீயவர்களிடம் இருந்து ஊரைக் காப்பதற்காக காவல் தெய்வங்களை வணங்குவர். இன்றும் கிராமபுரங்களில் காவல் தெய்வங்கள் வணங்கப்படுகின்றனர். காவல்தெய்வங்கள் பரம்பொருளுக்குக் கட்டுப்பட்டவர்கள்.
கிராமதெய்வங்கள் என்பவர்கள் கிராமபுரங்களில் மரபுவழி தோன்றிய தெய்வங்கள். மழையை வேண்டி, கடுமையான நோயில் இருந்து மீள, பேரிடர்களில் இருந்து ஊரைக் காக்க போன்ற காரணங்களுக்காக கிராமதெய்வங்களை வழிபடுவர். கிராமதெய்வங்களும் பரம்பொருளுக்குக் கட்டுப்பட்டவர்கள்.
|| நவகிரக வழிபாடு தவறானது
நவகிரக வழிபாடு முறையற்றதாகும். அக்காலத்திலே ”கோள் என்செயும், நாள் என்செயும்” என பாடியுள்ளனர். சில கோவில்களில் நவகிரக சன்னிதிகள் அமைத்தது அவற்றை வழிபட அல்ல. அவற்றிற்கு மரியாதை செலுத்தவே. மரியாதை செலுத்துவதற்கும் வழிபாட்டிற்கும் வேறுபாடு உள்ளது. வாழிபாட்டுக்கு உரியவர் ஈஸ்வரன் மட்டுமேயன்றி நவகிரகங்கள் அல்ல.
பிரார்த்தனை, ஆராதனை, பூஜை போன்றவை பரம்பொருளுக்கு உரித்தானவை. நவகிரகங்களின் அதிபதியான சூரியனை வழிபடும் வழக்கம் பாரதமண்ணில் இருந்துள்ளது. ஆனால் தற்போது அந்த மரபு வழக்கொழிந்து விட்டது. நவகிரகங்களின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள பரம்பொருளின் பல முக்கிய வடிவங்களை ஒன்றினை அனுஷ்டித்து, அடைக்கலம் புகவேண்டும். இதுவே முறையான செயலாகும். ஈஸ்வரனுக்கு கட்டுப்பட்ட நவகிரகங்களுக்கு சுய அதிகாரம் கிடையாது, அவை எப்போதும் தங்கள் கடமைகளைத் தான் செய்யும். ஆதலால், அவற்றின் தாக்கம் நம்மீது படாமலிருக்க ஈஸ்வரனை வழிபடுதலே சிறந்தது.
பக்தியோகத்தை தேர்ந்தெடுக்கும் இந்துக்கள், தங்களுக்குப் பொருத்தமான மார்கத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனைய தெய்வங்களை வணங்கினாலும், வழிபாட்டிற்கு பரம்பொருளின் முக்கிய வடிவங்களில் ஒன்றை உபாசிக்கவேண்டும். பரம்பொருளின் லோகத்தை அடைந்து முக்திபெறுதல் பக்தியோகத்தின் முக்திவகையாகும்.
No comments:
Post a Comment