அறுவை சிகிச்சைக்கான, அனுகூலமான முகூர்த்தம்.
கடவுளின் புகழ் இந்த பிரபஞ்சத்தில், சூரியக் குடும்பத்தின் மூலமாகப் பிரதிபலிக்கப்படுகிறது. மனித வாழ்க்கை மீதான, சூரியன், அதன் உபக்கிரகங்கள், கிரகங்கள் மற்றும் நட்சத்திரக் கூட்டங்களின் கண்காணிப்பில், அவற்றின் அசைவுகள் மற்றும் தாக்கங்கள் மூலமாக, இறைவன் நடத்தும் நாடகமே மிக மாயா வினோதமானது.
மனித குலத்தின் நன்மைக்காக, உலகத்தில் எவராலும் நம்பமுடியாத, தங்களின் ஞான திருஷ்டியால் உணர்ந்த பிரபஞ்ச சக்தியை, நமது முன்னோர்களாகிய, முனிவர்கள், ஜோதிடம் என்னும் பேரறிவின் மூலமாக உலகுக்கு அளித்தார்கள்.
நாளடைவில், அவர்களால் அளிக்கப்பட்ட இப் பொக்கிஷங்கள், காலப்போக்கில் சிறிது சிறிதாகக் காணாமல் போயிருந்தாலும், பல துல்லியமான தகவல்கள், இந்த ஜோதிடக் கலையில் மிக்க ஆர்வம் உள்ளவர்களாலும் மற்றும் அதன் காரண காரிங்களை அலசி ஆராய முற்பட்டவர்களாலும் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டது என்றால் மிகையாகாது.
இந்தக் கட்டுரையில் நாம், வெற்றிகரமாக அறுவை சிகிச்சைகள் முடிந்து, ஆரோக்கிய வாழ்க்கையை அடைவதற்கான, சரியான நல்ல நேரத்தை, சிறந்த முகூர்த்தத்தை அறியும் நுணுக்கங்களைப் பற்றிய, தகவல்களை அலசுவோம்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவதற்கான முகூர்த்தத்தைக் குறித்துத் தருவதோடு மட்டுமன்றி, அவர்கள் விரைந்து குணமாவதற்குத் தேவையான பரிகார முறைகளையும் கூறுவது ஜோதிடரின் கடைமையாகிறது.
முதலில், நாம் ஒருவன் ஆரோக்கியத்தைப் பாதிக்கக் கூடிய, கிரக நிலைகள் என்ன ? அதற்கான காரணிகள் என்ன ?, அது அறுவை சிகிச்சை வரைக் கொண்டு செல்லுமா ? – என்பதை எல்லாம் ஆராய வேண்டும். ஒரு நோயாளியைக் குணப்படுத்த சாதாரணமாக வேறு வழியின்றிப் போகும் போது, கடைசியாக எடுக்கப்படுவதே அறுவை சிகிச்சைக்கான முடிவாகும்.
ஒருவருக்கு வரக்கூடிய நோயின் தன்மை மற்றும் அதன் பாதிப்புகள் அனைத்தும், எந்த அளவுக்கு அவரின் ஜாதகத்தில் உள்ள குறிப்பிட்ட இராசி அல்லது இராசிகள் மற்றும் அதிலுள்ள கிரகங்கள் பாதிப்பு அடைந்துள்ளன என்பதைப் பொருத்தே அமைகிறது.
“ பிரஹத் ஜாதகத்தில் ” ஒளிக்கிரகங்களான, சூரிய, சந்திரர்களில் இருந்து 7 ஆம் வீட்டை எப்போது, செவ்வாயும், சனியும் அலங்கரிக்கிறார்களோ அப்போது ஜாதகருக்கு நோயால் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த இரு அசுபக் கிரகங்களும், ஒளிக்கிரகங்கள் மீது தங்கள் தாக்கத்தை அதிகரிக்கும் போது, அத்தகைய ஜாதகருக்கு, இறப்பு விரைவிலேயே நிகழும்—எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலக்னத்தின் மீதான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அசுபக் கிரகங்களின் ஒன்றிணைந்த, அவற்றின் இணைவு அல்லது பார்வைகள் மூலமான தாக்கம் காரணமாக, ஜாதகரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோயை உற்பத்தி செய்யக்கூடிய தன்மை அதிகரிக்கிறது.
இலக்னத்தில் இருந்து ஆறாம் வீடு, முக்கியமாக ஜாதகரின் ஆரோக்கிய நிலையை குறிகாட்டுகிறது. கிரகங்களின் இயற்கைத் தன்மை மற்றும் இராசியிலும், நவாம்சத்திலும் அது இடம்பெற்றுள்ள நிலை, ஆகியவையே, ஜாதகரின் நோயின் வகை, அளவு மற்றும் அதைக் குணப்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கின்றன. மேலும், துல்லியமாக அறிய, அவற்றின் தசா, புத்தி மற்றும் கோசார நிலைகளின் தொடர்பு ஆராயப்பட வேண்டும்.
இத்தகைய விம்சோத்ரி தசா,புத்தி மற்றும் கோசார ஆய்வு, ஜாதகருக்கு, அறுவை சிகிச்சை தேவைப்படுமா ? அதன் பிறகு அவரின் ஆரோக்கியம் சீராகி, உடல்தேறி நல் வாழ்வு வாழ்வாரா ? – என்பதற்கான அறிகுறிகளைத் தெளிவுபடுத்தும்.
இலக்னத்தோடு இணைந்த, பார்த்த மற்றும் தொடர்புடைய அசுபக் கிரகங்கள், ஜாதகருக்கு நோய் மட்டுமன்றி, விபத்து மற்றும் அதன் காரணமாக வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவுகள் தரும், தீவிர மன உளைச்சல் ஆகியவற்றையும் தருகிறது. இந்த மன உளைச்சல்கள் அனைந்தும் ஓன்றிணைந்து, அவரின் நோயை அதிகரிக்கச் செய்கிறது. ஏனெனில், மனமே நம் முழு உடலையும், கண்காணித்துக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு அறையாகும்.
முக்கியமாக, அசுப இராசிகளில் இடம்பெற்றுள்ள அசுபக் கிரகங்களின், கெடுதல் செய்யும் தசாக் காலங்கள், ஜாதகருக்கு இன்னல்களை அளித்து, வைத்தியச் செலவுக்கான, பொருள் இழப்பையும் ஏற்படுத்துகிறது. செவ்வாய், சனி மற்றும் இராகு போன்ற தற்காலிக அசுபக் கிரகங்களே நோயை உருவாக்கும் மையங்களாகின்றன. 7½ சனி மற்றும் அஷ்டமச் சனி போன்ற காலங்களில் அறுவை சிகிச்சைக்கு வாய்ப்பு ஏற்படலாம் என்று பலன் காணலாம்.
மேலே சொல்லப்பட்ட அசுபக்கிரகங்களின், ஒரு இராசியின் மீதான இணைந்த தாக்கங்கள் ட்யூமரை ஏற்படுத்துவதோடு, அது கடைசியில் தீவிரமாகும் போது புற்றுநோயாக மாறி, அந்தக் கட்டிகளை அகற்ற, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலைக்குக் கொண்டு செல்கிறது.
இராகு மற்றும் செவ்வாய் போன்ற அசுபக் கிரகங்களின் தசா அல்லது புத்தி நடைபெறும் காலங்களில், அறுவை சிகிச்சைக்கான வாய்ப்புக்கள் உருவாகின்றன. சந்திரன் மற்றும் சுக்கிரனின் தீவிர பாதிப்புக்கள், பெண்களுக்கு கற்ப சம்பந்தமான பிரச்சனைகள், ரத்தப் போக்கு போன்ற பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சைக்கான நிலையை ஏற்படுத்தலாம்.
இரண்டாம் வீடு பாதிப்பு அடையும் போது முகத் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட, ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.
சில நேரங்களில் 12 மற்றும் 6 ஆம் பாவங்களில் அமர்ந்த கிரக தசா ஆரம்பமாகும் போது, ஏற்படும் மருத்துவச் செலவு போன்ற விரயச் செலவுகள் ஏற்படும் முன், ஜாதகரை வீடு வாங்குதல் அல்லது கட்டுதல் போன்ற செலவுகளை செய்யச் சொல்லி, ஆலோசனை அளித்து, ஜோதிடர்கள் அவர்களைக் காக்கலாம்.
செவ்வாய் மற்றும் சுக்கிரனின் ஈடுபாடு, சில நேரங்களில் விபத்தைத் தந்து அதன் காரணமாக பாதிக்கப் பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையை உருவாக்கலாம். இது போன்ற அவசர சூழ்நிலைகளில், அறுவை சிகிச்சைக்கான நல்ல நேரத்தைத் தீர்மானிக்க இயலாது. முன்னரே ஜாதகத்தைக் காட்டி ஆலோசனை கேட்டிருந்தால், விபத்து ஏற்படும் நிலையைக் கூறி எச்சரித்து இருக்க முடியும்.
இராகு திசை அல்லது மாரக கிரக திசைகளில் கோசார இராகு, சனி மற்றும் செவ்வாய் ஆகிய இவற்றின், ஒன்றிணைந்த ஜனன ஜாதகப் பாதக நிலையில் இருந்து அவரைக் காப்பாற்ற அல்லது கஷ்டங்களைக் குறைக்க அறுவை சிகிச்சைக்கான சூழலை உருவாக்கி விடுகிறது.
மற்றபடி சாதாரண காலங்களில், அறுவை சிகைச்சை வெற்றி பெறுவதற்கான நல்ல முகூர்த்தத்தை மருத்துவரின் ஆலோசனைப் படியும் குறிப்பது நல்லது. சில மருத்துவர்கள், பாதிக்கப்பட்டவரையே அறுவை சிகைச்சைக்கான அனுகூலமான நேரத்தைக் குறித்து வரக் கேட்டுக் கொள்வதும் உண்டு.
அப்படிக் கேட்கப்படும் போது நல்லநேரம் குறிக்கப் பார்க்க வேண்டிய, அடிப்படை விஷயங்களாவன ----
1. ஜன்ம நட்சத்திரத்திற்கும், அன்றைய நட்சத்திரத்திற்கும் உரிய தாராபலம் பார்க்க வேண்டும்.
2. சந்திர பலம் பார்க்க வேண்டும்.
3. பஞ்சகம் – பார்க்கப்பட வேண்டும்.
4. அறுவை சிகிச்சைக்கு முக்கியமாக மிருத்தியு பஞ்சகம் மற்றும் ரோக பஞ்சகம் கூடாது. ஏனெனில் இந்த நேரங்கள் மரணத்தைத் தரவோ அல்லது சிகிச்சைக்குப் பிறகு சுகம் பெறக் காலதாமதத்தையும் ஏற்படுத்தலாம்.
5. திதி – பௌர்ணமி திதி கூடாது. ஏனெனில் அன்று இரத்த ஓட்டம் அதிகரிப்பதன் காரணமாக, இரத்த விரயம் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால் மேலை நாட்டவர்கள் இந்த நாளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்துக்கள் அமாவாசை நாளை நல்ல நாளாகக் கருதுவது இல்லை.
6. ஆயுதங்களையும், அறுவை சிகிச்சை நிபுணரையும் குறிக்கும் செவ்வாய் மற்றும் திறமையாக நோயைக் கண்டு கொள்ளும் திறன், தகவல் தொடர்பு ஆகியவற்றைக் குறிக்கும் புதன், இருவரும் வக்கிர நிலை அடையும் போது அறுவை சிகிச்சை செய்வதை தவிர்க்க வேண்டும்.
7. பௌர்ணமி – பிரதமை, அமாவாசை – பிரதமை மற்றும் துவாதசி – ஏகாதசி ஆகிய திதிகளுக்கு இடையேயான இரண்டு விநாழிகைகள், அபாயத்தையும், மிகுந்த கெடுதலையும் தரும் காலம் ஆகும்.
8. சிசேரியன் மூலமான பிரசவத்திற்கு, ஜோதிடரிடம் நேரம் குறித்துக் கேட்கும் போது அவர் எப்படிப்பட்ட பிரசவம் ஏற்படும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். “ஜாதக தத்துவா” எனும் நூலில், இலக்னத்தில் இருந்தோ அல்லது சந்திரா இலக்னத்தில் இருந்தோ 4 மற்றும் 7 ஆம் பாவங்களில், அசுபக் கிரகங்கள் இடம்பெற, ஜாதகிக்கு சுகமான பிரசவம் ஏற்படாது – எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
9. பிரசவத்தின் போது, 4 ஆம் வீட்டில் செவ்வாயின் அமர்வு பாதிப்பதால், இரு உயிர்களுக்கும் கண்டம் ஏற்படலாம். ஆனால் இலக்னத்துக்கும், சந்திரனுக்கும் சுபர் தொடர்பு இருந்தால் பிரச்சனை இல்லை.
10. தாய்க்கு நீண்ட ஆயுள் இருந்தாலும், பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்று இருந்தாலும், இராகு 11 இல் இருந்தாலும் தாய்க்கும், குழந்தைக்கும் உயிர் பயம் நீங்கும்.
தாயின் ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் இருந்து, கரப்பம் தரிப்பதற்கு முன் அதற்கு பரிகாரம் செய்யாவிடில், குழந்தைக்கு மரண ஆபத்து ஏற்படலாம்.
கணவன் அல்லது மனைவியின், இலக்னத்துக்கு அல்லது சந்திரனுக்கு 5 ஆம் வீட்டின் மீது, செவ்வாய், சனி மற்றும் இராகு ஆகியோரின் தாக்கம் இருக்க, பிரசவத்தின் போது தாய்க்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மேலும் இக் கிரகங்களின் தசா புத்திகள் நடந்தால் கேட்கவே வேண்டாம்
பிரசவ நேரத்தில், சந்திரன் மிருத்யு பாகைகளில் இருந்தால் அது குழந்தையை பாதிக்கும். ( ஜாதக பாரிஜாதத்தின் படி மேஷத்திலிருந்து – மீனம் வரையிலான மிருத்யு பாகைகள் முறையே 8° 25° 22° 22° 21° 1° 4° 23° 18° 20° 20° 20° ஆகும் ) ஆனால் சந்திரன் புஷ்கராம்சத்தில் இருக்க அந்த நேரத்தில் பிரசவத்தை வைத்துக் கொள்வது மிகுந்த அனுகூலமான நேரமாகக் கருதப்படுகிறது. ( புஷ்கராம்சப் பாகைகள் மேஷம் – மீனம் முறையே 21° 14° 18° 8° 19° 9° 24° 11° 23° 14° 19° 9° ஆகும்.)
“பிரஹத் ஜாதகத்” தின் படி, மேஷ இராசி முதல் மீன இராசி வரை காலபுருஷ தத்துவத்தின்படி ஒவ்வொரு இராசிக்கும், உடலின் ஒவ்வொரு பாகம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அவை முறையே தலை, முகம், மார்பு, இதயம், வயிறு, இடுப்பு, அடி வயிறு, ரகசிய உறுப்புக்கள், தொடைகள், முழங்கால், பட்டக்ஸ் மற்றும் பாதம் ஆகும்.
உதாரணமாக, சந்திரன் மேஷத்தில் இருக்கும் போது மிக்க அவசியம் ஏற்பட்டாலன்றி, மூளை சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்யக் கூடாது. அதுவே கோசாரச் சந்திரன், ஜனனச் சந்திரனைச் சந்திக்கும் போது, அபாயத்தின் அளவு அதிகமானதாக இருக்கும். இதே போன்று அந்தந்த பாகத்தை குறிக்கும் இராசிகளில் சந்திரன் இருக்க, அப் பாகத்தில் அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
தலை - கார்த்திகை, விசாகம், அனுஷம்,பரணி. சனிக்கிழமை
கண்கள் - ரோஹிணி, சுவாதி, கேட்டை, அஸ்வினி
வெள்ளிக்கிழமை
கழுத்து - மிருகசிரீடம், சித்திரை, மூலம், ரேவதி.
வியாழக்கிழமை
தோள்ப்பட்டை - திருவாதிரை, ஹஸ்தம், பூராடம், உத்திரட்டாதி - புதன் கிழமை
கைகள் - புனர்பூசம்,உத்திரம், உத்திராடம்,பூரட்டாதி,
செவ்வாய்கிழமை
வயிறு - பூசம், பூரம், அபிஜித், சதயம்.
திங்கள்க் கிழமை
பாதம் - ஆயில்யம், மகம், திருவோணம், அவிட்டம்
ஞாயிற்றுக்கிழமை
மேற்கண்ட அட்டவணைப்படி உள்ள நட்சத்திரத்தன்று, ஜன்ம நட்சத்திரம் வந்தால் அந்த நாளில், அந்த உடல் பாகத்தில் ஆப்ரேஷன் செய்யக் கூடாது.
அதே போன்று, உடலின் பாகத்திற்கு உரிய நட்சத்திரம், ஜாதகரின் ஜன்ம நட்சத்திரத்தைத் தொடும் அந்த நாளில் அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தைத் தரும். உதாரணமாக, ஜாதகரின் ஜன்ம நட்சத்திரம் பூசம் ஆனால், திங்கள்க் கிழமையன்று வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அன்று செய்யும் ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடியாது.
இலக்னம் , இராசி மற்றும் நட்சத்திர சந்திகளில், அறுவை சிகிச்சை செய்யக் கூடிய இலக்ன நேரம் அமையக்கூடாது. ( கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய இராசி சந்திகள், ரிக்ஷசந்தி எனப்படும். ( ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி ஆகிய நட்சத்திரத்தின் 4 ஆம் பாதம் ரிக்ஷசந்தி ஆகும். ) இந்த நேரத்தில் பிறந்த குழந்தை உயிர் இழக்கும். ஆனால் இலக்னத்துக்கு சுபர் தொடர்பு இருக்கப் பிழைத்துக் கொள்ளும்.
அடுத்து கண்டாந்த நேரத்திலும் பிரசவத்தை வைத்துக் கொள்ளக் கூடாது. ( நீர் இராசியின் கடைசி 5° யும், நெருப்பு இராசியின் முதல் 5° யும் கண்டாந்தமாகும். கண்டாந்த காலத்தில் ஆப்ரேஷன் செய்வதும் ஆபத்தாகும்.
இலக்ன சந்தி, இராசி சந்தி மற்றும் நட்சத்திர சந்தி ஆகிய காலங்களில் பிரசவத்தை வைத்துக் கொள்ளக் கூடாது. அதுவும் குரு நீசமாக அல்லது செவ்வாயின் இராசியில் அவர் இடம் பெற்றிருக்கக் கூடாது – என “சர்வார்த்த சிந்தாமணி” குறிப்பிடுகிறது.
சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரம் முன்பும், அஸ்தமனத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பும் பிறக்கும் குழந்தையின் இலக்னத்துக்கு 8 இல் அசுபக் கிரக பாதிப்பு இருந்தால் குழந்தை மரணிக்கும்.
கிழமைகளில், வெற்றிகளைத் தரும் அனுகூலமான நட்சத்திரங்கள் -- கிழமை
ஞாயிறு
அஸ்வினி, பூசம், உத்திரம், ஹஸ்தம், மூலம், உத்ராடம், உத்திரட்டாதி.
திங்கள்
திருவோணம், பூசம், ரோஹிணி, மிருகசிரீடம்.
செவ்வாய்
அஸ்வினி, ஆயில்யம், கார்த்திகை, உத்திரட்டாதி
புதன்
ரோஹிணி, ஹஸ்தம், மிருகசிரீடம், கார்த்திகை, அனுஷம்.
வியாழன்
அஸ்வினி, பூசம், ரேவதி, புனர்பூசம், அனுஷம்.
வெள்ளி
அஸ்வினி, ரேவதி, புனர்பூசம், அனுஷம்.
சனி
திருவோணம், ரோஹிணி, சுவாதி.
“ஜாதக பாரிஜாதம்” சொல்வது என்ன ?
1. சந்திரன் பாதிப்பு மற்றும் இலக்னத்துக்கு 8 இல் அசுபக் கிரகங்கள் இருக்க தாய், மகவு இருவருக்கும் மரணம்.
2. இலக்னத்துக்கு சுபர் தொடர்பு மற்றும் இயற்கை சுபர்கள் கேந்திரங்களில் இடம்பெற அந்த நாள், நேரம் மிகவும் சிறப்பானது ஆகும்.
3. ஜனன ஜாதகம் அவரின் உடல் (அக) நிலையையும், கோசார நிலையானது புற நிலையையும் குறிகாட்டுகின்றன. மெதுவாகச் செல்லும் கிரகங்களின் தாக்கத்தால் அது குறிக்கும் உறுப்புக்கான ஆப்ரேஷன் மருத்துவர் இல்லாதது மற்றும் பல காரணங்களால், தள்ளிப் போகலாம், தாமதம் ஆகலாம்.
முகூர்த்தங்களுக்கு உண்டான தோஷங்களுக்கு ஒரு முடிவில்லை. எந்த ஒரு குறையுமின்றி ஒரு நல்ல நேரத்தை தேர்ந்தெடுப்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்றாகும். எனவே, இலக்னமானது இயற்கை சுபர்களான சுக்கிரன், குரு மற்றும் புதன் ஆகியோரின் தொடர்புடன் இருந்தால், பல இலட்சம் தோஷங்கள் மறைத்துவிடும் எனப் பழைய நூல்களில் சொல்லப் பட்டுள்ளது. சூரியனின் 11 ஆம் இட அமர்வு அனைத்து தோஷங்களையும் அகற்றிவிடுகிறது.
No comments:
Post a Comment