Wednesday, 13 January 2016

பெண்கள் ருது ஆன கால நேரத்தின் பலனும் , பரிகாரங்களும்.

பெண்கள் ருது ஆன கால நேரத்தின் பலனும் , பரிகாரங்களும்.

பெண்களுக்கு ஜனன காலத்தைப் போலவே முதல் ருது காலமும் மிக முக்கியமானதென ஜோதிஷ சாஸ்திரத்தில் கருதப்படுகிறது. அப்பொழுதே அவள்     “ பெண் ” – என  அழைக்கப்படும் பெண்மைக்கு உரியவள் ஆகையால் முதல் ருது கால ஜாதகமும் முக்கியமானதாகிறது.
பெண்கள் ருதுவான மாத பலன்.
      
சித்திரை மாதம் ருதுவானால் – கணவனுக்கு ஆகாது. வைகாசி – சுகமாக இருப்பாள். ஆனி மாதமானால் – புத்திர பாக்கியத்தோடு திகழ்வாள். ஆடி மாதமானால் – பல ஆண்களமீது ஆசை கொள்வாள். ஆவணி – நல்ல குழந்தைகளைப் பெற்று மகிழ்வாள். புரட்டாசி எனில் – விருத்தி புத்தி உடையவள். ஐப்பசி மாதமாகில் – பிள்ளைகளைப் பெற்றபின் விதவையாவாள். கார்த்திகை மாதம் – பலரையும் தூஷிப்பாள். மார்கழி – நல்ல குழந்தைகளைப் பெறுவாள். தை மாதமானால் புண்ணியம் செய்தவள் ஆவாள். மாசி எனில் செல்வ வளம் பெற்று வாழ்வாள். பங்குனி மாதமாகில் -  பல குழந்தைகளுக்குத் தாயாவாள்.
      
இனி தோஷமுள்ள மாதங்களுக்கு மட்டும் என்ன நிவர்த்தி என்று பார்ப்போம்.
      
சித்திரை மாதம் ஒரு பெண் ருதுவானால் அவளின் கணவனுக்கு ஆகாது என்று பார்த்தோம். கணவன் பலவித துன்பங்களுக்கு ஆளாவான்.

சித்திரை மாதத்தில் ருதுவான தோஷம் விலக –
      
இதற்கு சாந்தி பரிகாரம் என்னவெனில் – கணவனும் மனைவியும் புத்தாடை உடுத்தி, நவ கலசங்களை வைத்து, அதில் நவகிரகங்களை ஆவாஹனம் செய்து, ஹோமங்கள் செய்து பூஜிக்க வேண்டும். பிறகு ஆயிரம் ஓட்டைகள் இடப்பட்ட மண்பாத்திரத்தை அவர்கள் தலைக்கு மீது பிடித்து, நவ கலச நீரால் அவர்களுக்கு அபிஷேகம் செய்வித்து, பின் புத்தாடைகளைக் களைந்து, ஒரு சுமங்கலிக்குக் கொடுத்து, ஏழைகளுக்கு வயிறார அன்னமிட்டு உபசரித்தால், சித்திரை மாதம் ருதுவான தோஷம் நீங்கி, இருவரும் உறவுகள் அவர்களைக் கண்டு மகிழ அனைத்து செல்வங்களும் பெற்று ஜாடிக்கு ஏத்த மூடி போல் நல்ல பிள்ளைச் செல்வங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்வர்.

ஆடி மாதத்தில் ருதுவான தோஷம் விலக –
      
ஆடி மாதத்தில் பூப்பெய்தும் போது களத்திர பாவத்தில் சுக்கிரன் இருக்கவும், 7 ஆம் பாவதிபதி  மறைவு ஸ்தானங்களில் இருக்க, இலக்னாதிபதி பகையும் பெற்றிருந்தால், ஜாதகி பல ஆண்களை மோகித்து, அதிக காமத்தோடு அலைந்து, உற்றார் உறவுகள் முன் அவமானம் அடைந்து, பலரையும் விரோதித்துக் கொண்டு, மன சஞ்சலத்தோடு துன்புறுவாள். 
      
இதற்கு சாந்தி பரிகாரம் என்னவெனில் -- ஆடி மாதம் முதல் நாள், நவ கலச ஸ்தாபனம் செய்து, நவகிர பூஜை செய்து 16 நாட்கள் பூஜித்து, 16 நாட்களும் சுமங்கலிகளை அழைத்து மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுத்து, பசுவுக்கு புல் கொடுத்தும், கடைசி நாளில் அன்னதானம் செய்தால் தோஷம் விலகும். அப்படிச் செய்தால் நல்ல பிள்ளைச் செல்வங்களைப் பெற்று, சுமங்கலியாய் மகிழ்வுடன் வாழ்வாள்.

ஐப்பசி மாதத்தில் ருதுவான தோஷம் விலக –
      
ஐப்பசி மாதத்தில் பூப்பெய்தும் போது, துலாராசியில் சூரியனும், களத்திர ஸ்தானாதிபதி எந்த கிரகமாய் இருந்தாலும், ஜாதகி குழந்தைகளைப் பெற்று, கணவனை இழந்து, விதவையாய் வறுமையுடன் வாழ நேரலாம்.
      
இதற்கு சாந்தி பரிகாரம் என்னவெனில் – சுமங்கலிப் பெண்களுக்கு ஸ்னானம் செய்வித்து, சிகப்பு நிற புத்தாடை, மாங்கல்யம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி, தாம்பூல தட்சிணைகள் வைத்து தானம் செய்து, உபசரித்து அனுப்பினால், இத் தோஷம் விலகுவதோடு, நல்ல பிள்ளைச் செல்வங்களைப் பெற்று, சுமங்கலியாய் மகிழ்வுடன் வாழ்வாள்.

கார்த்திகை மாதத்தில் ருதுவான தோஷம் விலக –
       
பெண்கள் கார்த்திகை மாதத்தில் பூப்பெய்தினால், கோபம் உடையவளாகவும், குரோதம், அனைவரையும் வெறுத்து, பகைத்துக் கொண்டு, பெரிய கலகக்காரியாகத் திகழ்வாள். 
      
இதற்கு சாந்தி பரிகாரம் என்னவெனில்  - பெண்கள் சோமவார விரதம் அனுஷ்டிக்க வேண்டும். சிவன் கோவிலில், தாமரை தண்டு திரிபோட்டு, பசு நெய் ஊற்றி திருவிளக்கேற்றி, அர்ச்சனை செய்ய வேண்டும். இதனால், இத் தோஷம் விலகுவதோடு, பெண் சாந்தம் உடையவளாகி, கணவனுக்கு இனியவளாய், எல்லோருக்கும் நல்லவளாய் இருப்பாள்.

பெண்கள் ருதுவான வார (கிழமை) பலனும், பரிகாரங்களும்.
      
ஞாயிறு அன்று  ருதுவானால் – நோயுற்று இருப்பாள். திங்கள் – பதிவிரதையாக இருப்பாள். செவ்வாய் அன்று ருதுவானால் – இடுக்கண் உண்டாயிருப்பாள். புதனானால் – புத்திர பாக்கியமும், செல்வமும் உடையவளாய் இருப்பாள். வியாழன் அன்று ருதுவானால் – பாக்கியவதியாய் இருப்பாள். வெள்ளி அன்று ருதுவானால் – கணவனை தெய்வமாக வணங்கி, பதிபக்தியோடு திகழ்வாள். சனியானால் – விபத்தில் சிக்க நேரலாம்.

இனி தோஷமுள்ள கிழமைகளுக்கு மட்டும் என்ன நிவர்த்தி என்று பார்ப்போம்.

ஞாயிறு அன்று ருதுவான தோஷம் விலக –
     
தோஷமுள்ள பெண் ஞாயிறன்று அதிகாலை எழுந்து, நீராடி, பக்தியுடன் சூரியனை வணங்கி, சூரிய பூஜை செய்து  சுமங்கலிப் பெண்ணுக்கு கோதுமை தானம் செய்து, இல்லாதவருக்கு அன்னதானம் செய்து, உபசரித்து அனுப்பி, இரவில் சூரியனுக்கு அர்ச்சனை செய்துவந்தால் இத் தோஷம் விலகி நோயில்லாது ஆரோக்கியத்தோடு மகிழ்வுடன் வாழ்வாள்.

செவ்வாய் அன்று ருதுவான தோஷம் விலக –
      
தென்னங்கீற்றால் அல்லது பனை ஓலையால் வேய்ந்த குடிசைக்குள், பூப்பெய்திய பூவையைப் படுக்க வைத்து, குடிசையின் வாயிலை அடைத்து குடிசையின் ஒரு பக்கத்தில் தீயிட்டுக் கொளுத்தி, பெண்ணை வேறு வழியாக வெளியில் அழைத்து வந்து நீராட்டி, சுமங்கலிப் பெண்ணுக்கும் ஸ்னானம் செய்வித்து, சிகப்பு நிற புத்தாடை, மாங்கல்யம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி, தாம்பூல தட்சிணைகள் வைத்து தானம் செய்து, இல்லாதவருக்கு அன்னதானம் செய்து உபசரித்து அனுப்பினால், இத் தோஷம் விலகுவதோடு, நல்ல பிள்ளைச் செல்வங்களோடு, அனைத்துச் செல்வங்களையும் பெற்று சுகமாய் மகிழ்வுடன் வாழ்வாள்.

சனிக் கிழமையன்று ருதுவான தோஷம் விலக –
      
ஒரு வெண்கலப் பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, அந்த எண்ணையில் அவளின் முகம் பார்க்கும்படிச் செய்து, மறுபடியும் வேறொரு கலச பாத்திரத்தில் பாலுடன் தானம் கொடுத்தால் தோஷம் நீங்கி ஜாதகி அனைத்துச் செல்வங்களும் குறைவில்லாது பெற்று வளமாக வாழ்வாள்.

பெண்கள் ருதுவான திதி பலனும், பரிகாரங்களும்.
      
பெண் ருதுவானது பிரதமை திதியானால் – அந்தக் கன்னி தீய குணமுடையவளாகவும், அதிகம் படுத்துபவளாகவும் இருப்பாள். துவிதியை – அழகுடையவள். திரிதியை – இன்பம் உடையவள். சதுர்த்தி – பல புருஷர்கள் மீது ஆசைவைப்பாள். கணவனுக்கே எதிரியாவாள். பஞ்சமி – புத்திரப் பேறு உடையவள். சஷ்டி – ஆசார முடையவள். சப்தமி – புத்திர பாக்கியம் உடையவள். அஷ்டமி – புத்திரர்களைப் பெற்றெடுத்து இழப்பாள், நவமி – துக்கம் உடையவள்.  தசமி தர்ம சிந்தனை உடையவள். ஏகாதசி – துன்பம் அடைவாள். துவாதசி – பலம் உடையவள். திரயோதசி – கோபம் உடையவள். சதுர்த்தசி – சோரம் போவாள். அமாவாசை அல்லது பௌர்ணமி – பாட்டுப் பாடுகிறவள்.

பிரதமை திதியில் ருதுவான பெண்களுக்கு தோஷம் விலக –
     
பெண்கள் சோமவார விரதம் அனுஷ்டிக்க வேண்டும். சிவன் கோவிலில்,  பசு நெய் ஊற்றி திருவிளக்கேற்றி, அர்ச்சனை செய்ய வேண்டும். ஏழைகளுக் அன்னதானம் செய்து இதனால், இத் தோஷம் விலகுவதோடு, பெண் திருமணமாகி புத்திர பாக்கியத்தோடு கணவனோடு சுக வாசியாக இன்பம் அனுபவித்து                                                                 கணவனுக்கு இனியவளாய் வாழ்வாள்.

சதுர்த்தி திதியில் ருதுவான பெண்களுக்கு தோஷம் விலக –
     
பெண்கள் சோமவார விரதம் அனுஷ்டிக்க வேண்டும். சிவனடியார்களுக்கு உணவளித்து இரவில் சிவன் கோவிலில்,  தாமரை தண்டு திரிபோட்டு, பசு நெய் ஊற்றி திருவிளக்கேற்றி, சிவபெருமானுக்கு அஷ்டோத்ர சத நாமங்களால் அர்ச்சனை செய்து, தீப தூபங்கள் காட்டி , நிவேதன ஆராதனைகள் செய்து வந்தால், அந்த தோஷம் விலகி, ஜாதகி பயபக்தியோடு, பதிவிரதையாக இருந்து, நல்ல புத்திரர்களைப் பெற்று, அனைத்துச் செல்வங்களையும் பெற்று சுகமாய் வாழ்ந்திருப்பாள்.

சஷ்டி திதியில் ருதுவான பெண்களுக்கு தோஷம் விலக –
      
வார்த்தைகளால் சண்டை சச்சரவுகளில் அந்தப் பெண் ஈடுபடாதிருக்கப் பரிகாரம் – தங்கத்தால் ஆன சிறிய பசுவின் உருவம் செய்து, நவக்கிரக சாந்தி செய்து, அந்த பசுவை ஆசாரம் மிக்க அந்தணருக்கு தானம் செய்து, வயிறார உணவளித்து ஆசிகள் பெற, ஜாதகி இனிய வார்த்தைகளோடு, கணவனோடு இனிதே மகிழ்ந்து வாழ்வாள்.

அஷ்டமி திதியில் ருதுவான பெண்களுக்கு தோஷம் விலக –
     
அரக்கியைப் போல் கடும் வார்த்தைகள் பேசுபவளாதலால், பூப்பெய்திய மூன்றாம் மாதத்தில், நவகிரக சாந்தி செய்து, சிறுபிள்ளைகளுக்குப் பானகம், நீர் மோர் அளித்து, உணவும் அளித்தால் ஜாதகி, நற்குணம் பொருந்தி, அறிவுள்ள புத்திரர்களைப் பெற்று, நல்வாழ்க்கை வாழ்வாள்.

துவாதசி – திரயோதசி இவ்விரண்டு
திதிகளில் ருதுவான பெண்களுக்கு தோஷம் விலக –
     
சிவாலயத்தில் நெய்விளக்கேற்றி, ருத்திர பகவானுக்கு அபிஷேக, அர்ச்சனை, ஆராதனைகள் செய்துவந்தால், ஜாதகி – அடக்கம் – பொறுமை – சாந்தம் – இரக்கம் – சமத்துவம் முதலிய நற்குணங்கள் கொண்டு, எல்லோருக்கும் நல்லவளாக இருந்து இனிதே வாழ்வாள்.

சதுர்த்தசி - திதியில் ருதுவான பெண்களுக்கு தோஷம் விலக –
      
ருதுவான பெண்ணுக்கு நவக்கிரக சாந்தி விதிப்படி செய்து, ஒன்பது நாளைக்கு ஆசார அனுஷ்டானத்தோடு விரதம் இருந்து தினமும் 27 முறை அரசமரத்தை பிரதட்சிணம் செய்ய வேண்டும். ஒன்பதாவது நாளன்று காகத்துக்கு அன்னமிட்டும், 9 பேருக்கு அன்ன உபசாரம் செய்து, அன்றிரவு நவக்கிரகங்களுக்கு அர்ச்சனை, ஆராதனை செய்தல் வேண்டும். இதனால் ஜாதகி நற்குணம், நற்செயல்கள் உடையவளாய், கணவனையே கண்கண்ட தெய்வமாக மதித்து, நல்ல புத்திரர்களைப் பெற்று, சுகமாய் வாழ்வாள். ( அரசமரத்தைக் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே  சுற்ற வேண்டும் )

பௌர்ணமி - திதியில் ருதுவான பெண்களுக்கு தோஷம் விலக –
      
பெண் ருதுவான மூன்றாம் மாதத்தில் வரும் பௌர்ணமி நாளன்று, நவக்கிரக சாந்தி விதிகளின் படி செய்து விரதம் இருந்து, 9 பேருக்குத் தாம்பூல தட்சிணையோடு, உணவு அளித்து, கல்யாணப் பூசணிக்காய் தானம் செய்தால் தோஷம் விலகி, ஜாதகி, நல்ல கணவனோடு, கூடிக் குலாவி, பிள்ளைகளைப் பெற்றெடுத்து, சந்தோஷமாய் வாழ்வாள்.

3 comments:

  1. yellam poi by sedhuraman visalatchi

    ReplyDelete
  2. yellam poi by sedhuraman visalatchi

    ReplyDelete
  3. நட்சத்திரங்களுக்கு உண்டான தோஷங்களும் பரிகாரமும் சொல்லப்படவில்லைேயே?

    ReplyDelete