முன்ஜென்மம் மறுபிறவி
★முதன்முதலில் வெற்று மனதுடன் பிறந்த நாம் பிறகு ஜம்புலன்களாலும் சேகரிக்கப்படும் எண்ணங்களால் மனதை நிரப்புகிறோம். நாம் தீவிரமாக எண்ணும் அனைத்தும் பிரபஞ்ச அணுக்களில் பதிகிறது.
★அவை ஒன்றோடொன்று தொடர்பிலேயே இருக்கும்.அதைதான் நாம் ஆழ்மனம் என்று கூறுகிறோம். மேலோட்டமாக சிந்திக்கும் எவையும் அதில் பதிவதில்லை. அந்த எண்ண பதிவுகள் தான் நாம் என்ற அடையாளம். அவை பிரபஞ்சம் இருக்கும் வரை இருக்கும். நாம் ஆழ்மனத்தில் பதிய வைத்த அந்த எண்ணங்களே வாழ்கையில் அனுபவமாகிறது.
★அவை நல்லவையோ மாறானவையோ அதை அனுபவிக்கும் வரை நாம் பிறவியை தொடர்கிறோம். ஒவ்வொரு பிறவியிலும் புதுப்புது உலக வாசனைகளில் கவனம் குவியும்போது அது அடுத்தடுத்த பிறவிக்கு வழி செய்கிறது. அதுவும் குழுவோடு சேர்ந்தே மறு பிறப்பு எடுக்கிறோம்.
★அதாவது நமக்கு பரிட்சயபட்ட மக்களுடனேயே மீண்டும் பிறக்கிறோம். இந்த பிறவியில் எனக்கு தந்தையாக இருப்பவர் அடுத்த பிறவியில் நணபராகவோ அண்ணனாகவோ மகனாகவோ எப்படி வேண்டுமானாலும் பிறக்கலாம். நான் இப்போது அவரை எப்படி பாவிக்கிறேனோ அப்படி.
★இந்த பிறவியில் உங்கள் சுற்றுவட்டத்தில் உள்ளவர்கள் சில பேர் மீது ஏற்படும் ஈர்ப்புக்கு காரணம் அவர் கடந்த பிறவியில் உங்கள் நெருங்கிய உறவாகக்கூட இருக்கலாம். ஆக பிறவி முடிய வேண்டுமானால் இதுவரை பல பிறவிகளில் நீங்கள் சேர்த்து வைத்துள்ள எண்ணங்களின் தொடர்பில் இருந்து விடுபட வேண்டும்.
★பரப்பிரம்மத்தின் பிம்பமாக பிறப்பெடுத்த நாம் உலக மாயைகளில் சிக்கி கர்ம வினைகளை சேர்த்து மறு பிறவிக்கு வித்திடுகிறோம்.தூய ஆத்மா நாம் செய்யும் பாவ புண்ணியங்களை சுமந்து கொண்டு மறு பிறப்பெடுக்கிறது. நாம் செய்யும் பாவம் இரும்பு விலங்கிட்டு நம்மை மறு பிறவிக்கு கூட்டி செல்லும். நாம் செய்யும் புண்ணியம் பொன் விலங்கிட்டு மறு பிறவிக்கு அழைத்து செல்லும்.
★ உலக பற்று நீங்கும் வரை நமது பிறப்பு தொடர் கதை தான். வினை விதைத்தவன் நிச்சயம் அதை அறுத்தே தீருவான். இதை முன்பே நமக்கு கடவுள் கூறி அனுப்பி இருந்தால் அன்பை மட்டுமே வாழ்க்கை ஆக்கி இருப்போம். உலக பற்றுதலில் இருந்து எப்பொழுது மனம் விடுபடுகிறதோ அதுவே நமக்கு கடைசியாகி நமது இந்த அற்புதமான பிறப்பு ஓரு முடிவுக்கு வருகிறது.
No comments:
Post a Comment