தர்மத்தின் வழி நின்ற யுதிஷ்டிரர்
துரியோதனனின் பகை உணர்வாலும், சகுனியின் சூழ்ச்சி வலையாலும் பாண்டவர்கள் வனவாசத்தில் அகப்பட்டு அல்லல்பட்ட கால கட்டம் அது. ஒரு முறை காட்டின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்த பாண்ட வர்கள், அடர்ந்த காட்டுக்குள் சிக்கிக் கொண்டனர். அந்த இடத்தில் அவர்களுக்கு உண்பதற்கான உணவு கூட கிடைக்கவில்லை. உணவு இல்லாததால் பசியின் தாக்கம் அதிகமாகியது. பல மணி நேரங்களாக காட்டை வலம் வந்தும் உணவு கிடைப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை.
பசியின் கொடுமை ஒருபுறம் என்றால், அலைந்து திரிந்ததால் ஏற்பட்ட தாகத்தின் கொடுமை மறுபுறம் அவர்களை வாட்டியது. சரி.. தண்ணீர் அருந்தியாக தாகத்தையும், பசியையும் ஓரளவு குறைக்கலாம் என்று எண்ணினால், அருகாமையில் நீர் இருக்கும் சுவடுகூட எங்கும் தென் படவில்லை. பாண்டவர்கள் அனைவரும் சோர்வுற்று தளர்ந்துபோய் இருந்தனர்.
பாண்டவர்களில் ஒருவனான நகுலன், ‘அருகில் ஏதாவது குளம் தென்படுகிறதா?’ என்று பார்ப்பதற்காக அங்கிருந்த மரம் ஒன்றில் ஏறினான். சிறிது தூரத்தில் ஒரு மரத்தில் பறவைகள் பல கூடியிருப்பதையும், அதனை சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் பசுமையாக இருப்பதையும் கண்டான். உடனே அவன், ‘நிச்சயமாக அங்கு தண்ணீர் இருக்க வேண்டும்’ என்பதை உறுதி செய்தான். இதனை தன் மூத்த சகோதரரான யுதிஷ்டிரரிடம் தெரிவித்தான்.
அசரீரியின் குரல்
‘அப்படியானால், உடனடியாக அங்கு சென்று நம் அனைவருக்கும் பருகுவதற்கான தண்ணீரை கொண்டு வா!’ என்று யுதிஷ்டிரர் கூறியதும், நகுலன் நீர்நிலை நோக்கிப் புறப்பட்டான். நகுலன் எதிர்பார்த்ததைப் போலவே அந்த இடத்தில் ஒரு பொய்கை இருந்தது.
தாகத்தினால் பெரிதும் தவித்துப் போய் இருந்த நகுலன், தண்ணீரை அள்ளிப்பருகும் நோக்கில் பொய்கை அருகே சென்றான். அப்போது அசரீரியாக வெளிப்பட்ட ஒரு குரல், அவனை தடுத்து நிறுத்தியது.
‘ஏ.. மாத்ரி புத்திரனே! இது என் வசம் இருக்கும் குளம். இதில் நீ தண்ணீர் பருக வேண்டும் என்றால், நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் அன்றி முடியாது. என் கேள்விகளுக்கு பதில் கூறிவிட்டு, தாராளமாக நீ தண்ணீர் பருகலாம்’ என்றது அசரீரி.
உயிரை பறித்த தண்ணீர்
பசி மயக்கத்திலும், தாகத்தின் களைப் பிலும் இருந்த நகுலனுக்கு, அசரீரியின் குரலை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. அவன் அந்த குரலை அசட்டை செய்து விட்டு, ஆவலோடு தண்ணீரை அள்ளி பருகினான். அடுத்த நொடியே வேரோடு வீழ்ந்த மரம் போல் மண்ணில் சாய்ந்தான். ஆம்! அவன் உயிர் பிரிந்திருந்தது.
தண்ணீர் தேடிப் போனவனை காணவில்லை. சகோதரர்கள் இடையே கலக்கம் ஏற்பட்டது. யுதிஷ்டிரர், சகாதேவனை அழைத்து நகுலனை கண்டு வரும்படி கூறினார்.
சகாதேவனும் பொய்கையை நோக்கி புறப்பட்டான். அங்கு கரையில் நகுலன் வீழ்ந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தான். ஆனாலும் அவனுக்கு இருந்த களைப்பும், தாகமும் அவனை செயல்படவிடாமல் தடுமாறச் செய்தது. ‘முதலில் நீர் பருகிவிட்டு, தன் சகோதரனின் நிலையை காணலாம்’ என்று எண்ணியவன், தண்ணீரை பருகச் சென்றான்.
அப்போது மீண்டும் அதே அசரீரி ஒலித்தது. நகுலனிடம் விதித்த அதே நிபந்தனையை விதித்தது. ‘அசரீரியின் கேள்விகளுக்கு பதில் கூறி முடிக்கும் போது, நம் உடலில் உயிர் நிற்காது போல் இருக்கிறதே’ என்று எண்ணிய சகாதேவன், அசரீரியின் குரலை அலட்சியம் செய்து விட்டு தண்ணீரை அள்ளி குடித்தான். மறு நொடியே அவனும் தரையில் வீழ்ந்தான்.
அர்ச்சுனன், பீமன்
அடுத்ததாக அர்ச்சுனன் அங்கு வந்தான். குளத்தின் கரையில் வீழ்ந்து கிடக்கும் தம்பிகளை கண்டு கண்ணீர் விட்டான். ஏற்கனவே இருந்த களைப்பும், அழுகையால் ஏற்பட்ட களைப்பும் சேர்ந்து அவனை துடிக்கச் செய்தது. குளத்தின் தண்ணீரை குடிக்க முயன்றான்.
மீண்டும் அதே குரல், அதே எச்சரிக்கை. அர்ச்சுனன் கோபத்தில் கொதித்தான். ‘ஏ! அசரீரியே! என்னுடன் போரிட்டு விட்டு, அதன் பின் கேள்விகளை கேள்!’ என்று கூறியபடியே, குரல் வந்த திசை நோக்கி அம்புகளை தொடுத்தான். எந்த அம்புக்கும் பலனில்லாமல் போயிற்று. அவை அனைத்தும் மேல் நோக்கி சென்று, கீழ் நோக்கி விழுந்தன.
இதற்கிடையில் தாகத்தால் துவண்டு போன அர்ச்சுனன், குளத்தின் நீரை பருகினான். அவனும் தன் தம்பிகளைப் போலவே மாய்ந்தான்.
அவனை தொடர்ந்து பீமன் அங்கு வந்தான். அவனுக்கு புரிந்து விட்டது. ‘ஏதோ மாய சக்திதான் தன் தம்பிகளை இந்த நிலைக்கு ஆக்கியுள்ளது. முதலில் என் தாகத்தை தணித்துக் கொண்டு, அந்த சக்தியுடன் போரிட்டு வெல்வேன்’ என்று கூறியபடியே, தண்ணீரை அருந்தினான். ஏற்கனவே மூன்று பேர் வீழ்ந்துபோன நிலையில், இவன் மட்டும் விதிவிலக்கா என்ன?. பலம் பொருந்திய பீமன் பரிதாபமாக இறந்து போனான்.
கலங்கடித்த கதறல்
தண்ணீர் தேடிப் போன தம்பிகள் ஒருவர்பின் ஒருவராக மாயமானதால், இறுதியில் யுதிஷ்டிரரே அந்த இடத்திற்கு வந்தார். பொய்கை கரையில் தம்பிகள் அனைவரும் ஜீவனற்று கிடப்பதைக் கண்டார். அவர்களை அள்ளி மடியில் போட்டுக் கொண்டு கதறி அழுதார். அந்த அழுகை கானகத்தையே கலங்கடிக்கும் விதமாக இருந்தது.
‘யுதிஷ்டிரா! உன் தம்பிகள் அனைவரும் என் பேச்சை கேட்காமல் தண்ணீர் அருந்தியதால் மாய்ந்து போனார்கள். நீயாவது, என் கேள்விகளுக்கு பதில் கூறிவிட்டு, அதன்பின் நீரை பருகு’ என்றது அசரீரி.
கேள்விகளை கேட்கும்படி அசரீரியிடம் கூறினார் யுதிஷ்டிரர். கேள்விக்கணைகளை தொடுக்க தொடங்கியது அந்த குரல்.
‘பாத்திரங்களில் பெரியது எது?’
‘எல்லாவற்றையும் தனக்குள் அடக்கி வைத்திருக்கும் பூமியே பெரிய பாத்திரம்.
‘எதனை இழப்பதால் மனிதனுக்கு துன்பம் உண்டாகாது?’
‘கோபம்’
‘பூமியை விட தாங்கும் சக்தி எதற்கு அதிகம்?’
‘தாய்மைக்கு’
‘வீட்டில் இருப்பவனுக்கு தோழன் யார்?’
‘மனைவி’
‘ஆகாயத்தை விட உயர்வானது எது?’
‘பிதா’
‘இறக்கும் தருவாயில் ஒருவனின் நண்பன் யார்?’
‘அவன் செய்த தானம். மரணத்திற்கு பின் தனியாகச் செல்லும் ஒருவனுக்கு அதுவே கூட வரும்’.
இப்படியாக அசரீரி கேட்ட நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளித்தார் தர்ம புத்திரர்.
ஒருவர் உயிரை மட்டும்...
இதனால் மகிழ்ந்து போன அசரீரி, ‘யுதிஷ்டிரா! உன் பதிலால் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆகையால் இறந்து போன உன் சகோதரர்களில் ஒருவரை மட்டும் உயிர்ப்பித்து தருகிறேன். யார் வேண்டும் என்பதை நீயே முடிவு செய்து கூறு’ என்றது.
எந்த தயக்கமும் இன்றி தர்மபுத்திரரிடம் இருந்து, ‘நகுலனை உயிர் பிழைத்து எழச் செய்தால் போதும்!’ என்ற வார்த்தை வந்து விழுந்தது.
அதுவரை அசரீரியாக கேள்விக் கேட்டுக் கொண்டிருந்த அந்த குரலுக்கு சொந்தக்காரர், யுதிஷ்டிரரின் முன்பாக விஸ்வரூபம் எடுத்து நின்றார். அவர் வேறு யாரும் அல்ல.. தர்ம தேவன்தான். அவரது முகத்தில் ஆச்சரியக்குறி தென்பட்டது. அந்த ஆச்சரியத்தை அவரே வார்த்தையாக வெளியிட்டார்.
‘வீரத்தில் சிறந்த பீமனையும், அர்ச்சுனனையும் விட்டு விட்டு, எதற்காக நகுலனின் உயிரைக் கேட்டாய்?.’
தர்ம சிந்தனையுடன்...
அதற்கு யுதிஷ்டிரர், ‘சுவாமி! என்னை காப்பது பீமனோ, அர்ச்சுனனோ இல்லை. தருமமே என்னை காத்து நிற்கிறது. என் தாய் குந்திதேவியைப் போன்று, என் தந்தை பாண்டுவுக்கு மாத்ரியும் ஒரு மனைவியாவார். குந்திதேவி என்னையும், பீமன், அர்ச்சுனனையும் பெற்றார். அதே போல் மாத்ரி தேவியார் நகுலனையும், சகாதேவனையும் பெற்றவர். குந்திதேவி பெற்றெடுத்த பிள்ளைகளில் நான் ஒருவன் உயிருடன் இருக்கிறேன். அதுபோல மாத்ரிதேவி பெற்ற பிள்ளைகளில் ஒருவனை உயிர் பிழைக்கச் செய்வதே தருமமாகும்’ என்று கூறினார்.
இதைக்கேட்ட தர்ம தேவன் மெய்சிலிர்த்துப் போனார். யுதிஷ்டிரரை தழுவிக் கொண்டு ஆனந்தம் அடைந்தார்.
‘தருமத்தை எப்போதும் நிலைநாட்டுபவனே! பாரபட்சம் அறியாத என் புதல்வனே! உன் தரும சிந்தனை என்னை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. நான் உன் தந்தை தருமதேவன் என்பதை அறிவாயாக!. உன் தரும சிந்தனையை சோதிக்கவே இந்த பரீட்சை நடத்தப்பட்டது. உன் அனைத்து சகோதரர்களும் உயிர்பெற்று வருவார்கள்’ என்று ஆசி கூறி அங்கிருந்து மறைந்தார். இளைய சகோதரர்கள் நால்வரும், தூக்கத்தில் இருந்து எழுந்தது போல் எழுந்து நின்றனர்.
உலகை இயக்கும் தர்மம்
ஒருவரை காத்து நிற்பது அவரது வீரமோ, விவேகமோ, பணமோ, பாசமோ இல்லை. நியாய தர்மப்படி நடந்து கொண்டு ஒருவர் செய்யும் காரியங்களே அவரை காத்து நிற்கிறது. 10 ஆயிரம் யானைகளின் பலம் ஒருங்கே பெற்ற பீமனையோ, வில் வித்தையில் சிறந்தவனான அர்ச்சுனனையோ உயிருடன் கேட்டுப் பெற்றிருந்தால், யுதிஷ்டிரருக்கு எவ்வளவு பாதுகாப்பாக அவர்கள் இருந்திருப்பார்கள். ஆனால் தன் தாய் குந்திக்கு, தான் ஒருவன் உயிரோடு இருப்பது போல், மற்றொரு தாயான மாத்ரியின் பிள்ளையில் ஒருவரும் உயிருடன் இருக்க வேண்டும் என்று எண்ணிய, தரும சிந்தனையே அவரது அனைத்து சகோதரர் களையும் உயிர்ப்பிழைக்கச் செய்தது. ஏனெனில் உலகம் என்ற சக்கரம், தருமம் என்ற அச்சில் தான் சுழன்று கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment