Tuesday, 24 November 2015

சிவ வாக்கியரின் வரலாறு:

சிவ_வாக்கியரின் வரலாறு:

இவர் சித்தர்களுள் தலை சிறந்தவர். பிறக்கும்போதே “சிவ சிவ” என்று சொல்லிக்கொண்டே பிறந்ததால் ‘சிவவாக்கியர்’ என்று பெயர் பெற்றார்.

இளம் வயதிலேயே ஒரு குருவை நாடி வேதங்களைப் பயின்றார். இந்நிலையில் காசியைப் பற்றி கேள்வியுற்று அதனை தரிசிக்கப் புறப்பட்டார். அக்காலத்தில் காசியில் ஒரு சித்தர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். சிவவாக்கியர் அவரை தரிசித்தார். சிவவாக்கியரை அந்த சித்தர் இனிமையாக வரவேற்றார். அவரை சோதிக்க எண்ணிய சித்தர் “சிவவாக்கியா செருப்பு தொழில் செய்த காசு என்னிடம் உள்ளது. இதைக் கொண்டு போய், என் தங்கையான கங்காதேவியிடம் கொடுத்து விடு அப்படியே இந்த கசப்பாக உள்ள பேய்ச் சுரைக்காயின் கசப்பையும் கழுவிக் கொண்டு வா” என்றார். சித்தர் கொடுத்த காசுகளையும் சுரைக்காயையும் எடுத்துக் கொண்டு கங்கைக்குச் சென்றார். கங்கையில் இறங்கி தண்ணீரைத் தொட்டார். அடுத்த நிமிடம் கங்கையிலிருந்து வளையல் அணிந்த மென்மையான கை ஒன்று வெளியில் வந்து அவரிடம் கையை நீட்டியது. சிவவாக்கியார் காசுகளை அந்தக் கையில் வைத்தார். உடனே, வளையோசையுடன் அந்தக்கை தண்ணீரிலே மறைந்தது.

அதனைக் கண்ட சிவவாக்கியர் சிறிதும் ஆச்சரியப்படாமல், பேய்ச்சுரைக்காயை நீரில் அலம்பிக்கொண்டு திரும்பி வந்து சித்தரை வணங்கினார். சித்தர், சிவ வாக்கியரை மீண்டும் சோதிக்க எண்ணி, “சிவவாக்கியா இதோ இந்த தோல் பை தண்ணீரிலும் கங்கை தோன்றுவாள். நீ அங்கே கொடுத்த காசுகளைக் கேள். அவள் கொடுப்பாள்” என்றார். அதன்படியே சிவவாக்கியரும் கேட்டார். சித்தர் செருப்பு தொழிலுக்காக வைத்திருந்த தோல் பையிலிருந்து ஒரு கை வெளியே வந்து சிவவாக்கியர் கைகளில் காசைக் கொடுத்து விட்டு மறைந்தது. சிவவாக்கியர் அப்போதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ படவில்லை. சிவவாக்கியரின் பரிபக்குவ நிலையை கண்ட சித்தர், அவரை அன்போடு தழுவினார். “அப்பா! சிவவாக்கியா! முக்தி சித்திக்கும் வரை நீ இல்லறத்தில் இரு” என்று சொல்லி கொஞ்சம் மணலும், பேய்ச்சுரைக்காயையும் கொடுத்து “இவற்றை சமைத்துத் தரும் பெண்ணை மணந்துகொள்” என்று கட்டளையிட்டார்.

சிவவாக்கியர் குருவை வணங்கி, அவர் தந்த பொருட்களோடு அங்கிருந்து புறப்பட்டார். ஒருநாள் பகல் வேளையில் சிவ வாக்கியர் நரிக்குறவர்கள் கூடாரம் அமைத்திருந்த பகுதி வழியாகச் சென்றார். அப்போது வெளியில் வந்த கன்னிப்பெண் ஒருத்தி சிவவாக்கியரைப் பார்த்தாள். உள்ளுணர்வு தூண்ட அவரை வணங்கி, “சுவாமி! தங்களுக்கு வேண்டியதைத் தர சித்தமாயிருக்கிறேன்” என்றாள். சிவவாக்கியர், “என்னிடம் உள்ள இம்மணலையும் பேய்ச்சுரைக்காயையும் சமைத்து எனக்கு உணவு தரமுடியுமா?” என்றார். குறப்பெண்ணும் ஒப்புக்கொண்டு அவரிடமிருந்து வாங்கி சமைக்கத் தொடங்கினாள். என்ன ஆச்சரியம்! மணல் அருமையான சாதமாகவும், பேய்ச்சுரைக்காய் கறி உணவாகவும் சமைந்தது. சமையலை இனிதே முடித்த அவள், சிவவாக்கியருக்கு பரிவோடு பரிமாறினாள் குருநாதர் குறிப்பிட்ட பெண் இவள்தான் என்று நினைத்த அவர் மகிழ்வோடு அவள் இட்ட உணவை உண்டார். காட்டிற்குச் சென்றிருந்த அப்பெண்ணின் உறவினர்கள் வந்தனர். அவர்கள் இவரை வணங்கி “குருசாமி! தங்களின் பாதம் பட இந்த குடிசை என்ன தவம் செய்ததோ?” என்று சொல்லி வணங்கி நின்றனர். “தவம் செய்யும் எனக்குத் துணையாக ஒரு பெண்ணைத் தேடினேன். பொறுமையில் சிறந்தவளான உங்கள் குலப்பெண்ணை என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்றார். “சுவாமி நீங்கள் எங்களுடனே தங்குவதாயிருந்தால் எங்கள் குலப்பெண்ணைக் கொடுக்கிறோம்” என்றனர் குறவர்கள்.

சிவவாக்கியர் சம்மதித்தார். இல்லறத்தில் இருந்தாலும் தவத்தைக் கைவிடவில்லை. அதே சமயம் குறவர் குலத்தொழிலையும் கற்றுக்கொண்டார். ஒருநாள், சிவவாக்கியர் காட்டிற்குள் சென்று ஒரு பருத்த மூங்கிலை வெட்டினார். வெட்டப்பட்ட இடத்திலிருந்து தங்கத் துகள்கள் சிதறி ஒழுக ஆரம்பித்தது. சிவவாக்கியர் திடுக்கிட்டார். சிவபெருமானே! என்ன இது நான் உன்னிடம் முக்தியை அல்லவா கேட்டுக்கொண்டிருக்கிறேன். இப்படி பொருளாசையை உண்டாக்கலாமா? செல்வம் அதிகமானால் கவலைகளும் அதிகமாகுமே என்று பயந்து ஓடிப்போய் தூரத்தில் நின்றுகொண்டு அங்கு வந்த நரிக்குறவர்களிடம் அதோ அந்த மூங்கிலிலிருந்து எமன் வெளிவருகிறான் என்று சொல்லி துகள்கள் உதிர்வதை சுட்டிக்காட்டினார். குறவர்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அங்கிருந்த தங்கத்தையெல்லாம் மூட்டையாக கட்டிக்கொண்டு புறப்பட்டனர். ஆனால் இருட்டிவிட அங்கேயே தங்கிவிட முடிவு செய்தனர். இருவர் காவல் காக்க இருவர் அருகில் உள்ள கிராமத்திற்குச் சென்று உணவு உண்டார்கள். அதன் பின் தங்கம் நிறைய உள்ளது, நாம் இருவர் மட்டுமே அதனை பங்கு போட்டுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழலாமே என்று திட்டமிட்டு மற்ற இருவருக்காக வாங்கிய் உணவில் விஷத்தைக் கலந்து கொண்டு கிளம்பினர். உணவுடன் வந்த அவர்களை பார்த்ததும் மூட்டைக்கு காவலாக இருந்த இருவரும் அதோ எதிரில் இருந்த கிணற்றில் தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று வேண்டினர்.

வந்தவர்கள் இருவரும் உணவு பொட்டலங்களைக் கொடுத்துவிட்டு தண்ணீர் கொண்டு வருவதற்காக சென்றனர். மூட்டைக்கு காவலாக இருந்த இருவரும் அவர்களை பின் தொடர்ந்து சென்று அவர்கள் கிணற்றுக்கு அருகில் சென்றவுடன் காலை வாரிவிட்டு கிணற்றுக்குள் தள்ளிவிட்டு சென்றனர். “இனி இந்த தங்க மூட்டை நம் இருவருக்கும் தான்” என்று மகிழ்ந்து உணவு உண்டனர். உணவில் விஷம் கலந்திருப்பதால் இருவரும் அங்கேயே விழுந்து மாண்டனர். மறுநாள் பொழுது விடிந்தது. வழக்கம் போல் காட்டிற்கு வந்த சிவவாக்கியர் நான்கு பிணங்களையும் கண்டு ஐயோ இந்த எமன் இவர்களை கொன்று போட்டுவிட்டதே என்று வருந்தினார்.

சிவவாக்கியர் ஒருநாள் வானவீதி வழியே சென்று கொண்டிருந்த கொங்கண சித்தரை கண்டார். கொங்கணரும் சிவவாக்கியரைப் பார்க்க இருவரும் நட்புகொண்டு சந்தித்து மகிழ்ந்தனர்.

அன்றிலிருந்து இருவரும் அடிக்கடி சந்தித்தனர். சிவவாக்கியர் மூங்கிலைப் பிளந்து கூடைகள் பின்னி விற்பதைக் கண்டார் கொங்கணர். இந்த மகான் தங்கம் செய்யும் வித்தை அறிந்திருந்தும் இப்படி வறுமையில் வாழ்கிறாரே என்று வருந்தினார்.

சிவவாக்கியர் இல்லாத சமயமாக பார்த்து, அவர் வீட்டிற்குச் சென்று அவர் மனைவியை சந்தித்து சில பழைய இரும்புத்துண்டுகளை வாங்கி அவற்றை தங்கமாக மாற்றிக் கொடுத்துவிட்டு சென்றார். சிவவாக்கியர் வீடு திரும்பியதும் அவர் மனைவி கொங்கணர் வந்ததையும், நடந்த விவரங்களையும் சொல்லி தங்கத்தை கணவர் முன் வைத்தார்.

சிவவாக்கியர் இவைகளைக் கொண்டுபோய் கிணற்றில் போட்டுவிட்டு வா என்று கூற அவளும் அப்படியே செய்தாள். சிவவாக்கியர் மனைவியை அழைத்து உனக்கு தங்கத்தின் மீது ஆசையா என்று கேட்டார். அதற்கு அவள் சுவாமி! தங்களுடைய மாறாத அன்பு இருந்தாலே போதும், எனக்கு தங்கம் தேவையில்லை என்று கூறிவிட்டாள்.

சிவவாக்கியர் மனமகிழ்ந்து மனைவியைப் பாராட்டினார். இல்லறம் நல்லறமாக நடந்தது.

ஒருநாள் சிவவாக்கியரை சில சிவ பக்தர்கள் சந்தித்தனர். “சுவாமி எங்களது பாவங்களை போக்கிக் கொள்ள சித்தர்களை தரிசனம் செய்ய வேண்டும், கொஞ்சம் ஏற்பாடு செய்யுங்கள்” என்று வேண்டினர். சிவவாக்கியர் சற்று யோசித்தார். “அவர்களை ஏன் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் “சித்தர்கள் செய்யும் சித்து விளையாட்டுகள் மூலம் தங்கம் செய்து அதனால் உலகில் உள்ள வறுமையை ஒழிக்க போகிறோம்” என்றனர். அதற்கு சிவவாக்கியர் கடகடவென சிரித்து “அன்பர்களே! உங்களின் பொருளாசையை ஒழியுங்கள் சித்தத்தை சிவனிடம் வையுங்கள். பிறகு நீங்களே தங்கமாக ஆவீர்கள். இதுதான் எல்லோரும் தங்கத்தை அடைய எளிய வழி” என்று உபதேசித்து அவர்களை அனுப்பி வைத்தார். தங்கள் தவற்றை உணர்ந்த அன்பர்கள் உண்மையை உணர்ந்து சென்றார்கள்.

சிவவாக்கியர் தியானத்தில் ஆழ்ந்தார். இறைவா மக்களுக்கு தூய்மையான எண்ணம் உருவாவதற்கு நீதான் கருணை புரிய வேண்டும் என்று வேண்டினார். இவர் தன் அனுபவங்களை பாடல்களாக எழுதினார்.

இவரால் இயற்றப்பட்ட பாடல் ‘சிவவாகியம்’ என்று அழைக்கப்படுகிறது. இவருடைய பாடல்களில் சிவ என்னும் சொல்லும் அதிகமாக உள்ளது. இவர் ஒரு சமரச் ஞானி. இவர் பாடலில் இராமஜெபமும் உண்டு. சிவவாக்கியர் முதலில் நாத்திகராக இருந்தார். பிறகு சைவராக மாறி சிவவாக்கியர் ஆனார்.

அதன்பிறகு வீரவைணவரானார். இவர் நாடிப் பரீட்சை என்னும் நூலை எழுதினார். சிவவாக்கியர் கும்பகோணத்தில் சித்தியடைந்ததாக கூறப்படுகிறது. இன்றும் பௌர்ணமி நாட்களில் கும்பகோணத்தில் இவருக்கு சமாதி பூசை நடைபெற்று வருகிறது.

தியானச் செய்யுள்

சிவனில் சிந்தை வைத்து
ஜீவனில் சித்து வைத்து
அவனியைக் காக்க வந்தா அழகர் பெருமானே…
அபாயம் நீக்கி சிவாயம் காட்டும்
தங்கள் தங்கத் தாமரைத் திருவடிகள் காப்பு.

சிவவாக்கியர் பூசை முறைகள்

தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, உதல் சித்தராகப் போற்றப்படும் இந்த சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள், குங்கும திலமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபமேற்ற வேண்டும். முதலில் இந்த சித்தருக்காக குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை மனமுருக பாடி சங்கு புஷ்பம், அல்லது தும்பைப் புஷ்பம் அல்லது வில்வத்தால் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்

1. பாவங்களைப் போக்குபவரே போற்றி!
2. எங்கும் வியாபித்திருப்பவரே போற்றி!
3. சிவ பெருமானின் அவதாரமே போற்றி!
4. ஜீவராசிகளை காப்பவரே போற்றி!
5. ருத்ரனின் அவதாரமே போற்றி!
6. தீமைகளை அழிப்பவரே போற்றி!
7. சர்வ வல்லமை படைத்தவரே போற்றி!
8. ஐஸ்வர்யங்களை அளிப்பவரே போற்றி!
9. தேவர்களுக்கெல்லாம் தேவரே போற்றி!
10. சிவனின் அருள் பெற்றவரே போற்றி!
11. சிவசக்தி உருவமாகத் தோன்றுபவரே போற்றி!
12. கலைகளுக்கு அதிபதியே போற்றி!
13. காருண்ய மூர்த்தியே போற்றி!
14. மன நிம்மதி அளிப்பவரே போற்றி!
15. மங்களங்கள் தருபவரே போற்றி!
16. மகிமைகள் உடைய சிவவாக்கிய சித்தர் பெருமானே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பின் மூலமந்திரமான “ ஓம் ஸ்ரீ சிவவாக்கிய சித்தர் பெருமானே போற்றி! “ என்று 108 முறை ஜபிக்கவேண்டும். பின்பு நிவேதனமாக பழங்கள், சுத்தமான விபூதி, தண்ணீர் வைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருக கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.

சிவவாக்கியரின் பூசா காரிய சித்திகள்
இவர் சந்திர கிரகத்தினை பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷங்களை நீக்குபவர். மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டும் என்றால் மனோன்மணி சக்தி பெருக வேண்டுமென்றால் சந்திரனின் அருள் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் இவரை பூசிக்க வேண்டும். மேலும் இவரை வழிபட்டால்..
1. மனவியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும்.
2. எதிலும் முடிவெடுக்க முடியாமல் திணறும் நிலை மாறும்.
3. சஞ்சல புத்தி நீங்கும்.
4. படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை நீங்கும்.
5. தாயார் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், தாய், மகன், மகள் பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து திங்கட்கிழமையன்று பூசித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

No comments:

Post a Comment