குரு என்ன செய்வார் தெரியுமா?
ஜென்ம ராசிக்குள் குரு வந்தால் என்ன செய்வார்? ‘‘ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்...’’ என்றொரு ஜோதிட பழமொழி உண்டு. எனவே, ஜென்ம ராசியில் குரு வந்து அமர்ந்தால் சட்டென்று வாழ்க்கையே மாறிப்போகும். அதனால், எதிலும் அவசரம் கூடாது. தன்னைக் குறித்து அடிக்கடி தாழ்வு மனப்பான்மையும், தன்னைக் குறித்து அதீத நம்பிக்கையும் மாறிமாறி ஏற்படும். திடீரென்று எல்லோருடனும் அதிகமாகப் பேசுவது. இல்லையெனில் முகம் கொடுத்துக் கூட பேசாமலேயே இருப்பது போன்ற மனோபாவத்தையெல்லாம் கொடுப்பார். மிக முக்கியமாக கடந்த கால தோல்விகள், கடந்தகால ஏமாற்றங்கள், பழைய கசப்பான சம்பவங்கள் அடிக்கடி நினைவுக்கு வந்து படுத்தும். திரும்பவும் அந்தமாதிரி வாழ்க்கை போயிடுமோ என்றெல்லாம் பயத்தை கொடுக்கும். எனவே, அவற்றையெல்லாம் நிராகரித்து அடுத்தது என்ன என்று நகர்ந்து விட வேண்டும்.
உடல்நிலை சரியில்லையெனில் எதையும் அசட்டை செய்யாமல் ஒன்றுக்கு இரண்டும் நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது. செரிமானக் கோளாறு மற்றும் மஞ்சள் காமாலை போன்றவை குறித்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே கவனிக்கவேண்டும். மற்றபடி வேறெந்த தொந்தரவும் தராது. மூன்றில் குரு முட குரு என்கிறார்களே? ‘‘தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்...’’ என்று சொல்லியிருக்கிறார்கள். எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் இந்த நேரத்தில் பிரகாசிக்க முடியாது. எப்போதுமே உணர்ச்சிப் பூர்வமாக நடந்து கொள்வார்கள். அறிவு பூர்வமாக முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் எமோஷனலாக முடிவெடுப்பார்கள். பேச்சால் எதிரிகளை சம்பாதிப்பீர்கள். அதிகமான காமமும், முறையற்ற தொடர்புகளும் ஏற்படும். எனவே, எச்சரிக்கை தேவை. பணத்தை எவரிடமாவது கொடுத்து ஏமாறுவார்கள்.
மேன்மையான நடத்தை தவறக்கூடும். அதனால், சேர்க்கை சரியாக இருக்க வேண்டியது அவசியமாகும். மனதில் குறுகிய சிந்தனைகள் எழக்கூடும். நியம, நிஷ்டைகளெல்லாம் எதற்கு என்று பேசுவார்கள். தாமதப்படுத்தி காரியத்தை முடிப்பார்கள். எதற்கெடுத்தாலும் தள்ளிப் போட வைக்கும் குணம் வரும். அதனால், எதையுமே சட்டென்று எந்த காரியத்தை முடிப்பதும் நல்லது. பொதுவாகவே, எதையுமே முதல் முயற்சியில் முடிக்க வைக்காது இரண்டாவது முயற்சியில் முடிக்க வைக்கும் காலகட்டமாகவே இது இருக்கும். சாதாரணமாக நியாயம் கிடைக்க வேண்டிய விஷயத்திற்குக் கூட போராடித்தான் பெற வேண்டியிருக்கும். வீண், ஆடம்பரம் தேவையற்ற வாக்குறுதிகளை இந்த காலகட்டத்தில் தவிர்க்க வேண்டும். ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்பதையும் அறிந்தால் மூன்றில் குருவை எளிதாக எதிர்கொள்ளலாம்.
நான்காமிடத்து குரு நல்லது செய்யுமா?
‘‘தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் படி போனதும்...’’ என்று சொல்வார்கள். நான்கு என்றாலே வனவாச குரு என்பார்கள். வனவாசமெனில் வேறொன்றுமில்லை. இடமாற்றமும், ஸ்தான மாற்றமும் நிகழும். ‘நல்ல கம்பெனி. நல்ல மேனேஜர், நிம்மதியான வாழ்க்கை’ என்று இருக்கும்போது சட்டென்று இடமாற்றம் வந்துவிடும். சிலருக்கு வெளிமாநில, வெளிநாடுகளுக்கு சென்று செட்டில் ஆகக் கூடிய வாய்ப்புகள் வரும். அதேபோல சில கெட்ட பழக்கங்கள் வரக்கூடும். வாகனத்தில் செல்லும்போது தேவையில்லாமல் அலட்சியமாகவும், வேகமாகவும் செல்லக் கூடாது. அதேபோல வீடு, மனை வாங்கும்போது எச்சரிக்கை தேவை. தாயா, தாரமா என்கிற குழப்பமும் பிரச்னைகளும் தலைதூக்கும். இதை தவிர்த்தால் மற்றபடிக்கு நன்மையில் ஒருகுறையும் வராது.
ஆறில் வரும் சகடை குரு சங்கடத்தை கொடுக்குமா?
‘‘சத்திய மாமுனி ஆறிலே குரு காலிலே வளை பூண்டதும்...’’ என்று கூறுவார்கள். ஆறிலே குரு என்றாலே அலைச்சல் இருக்கும் காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். பனைமரத்தின் கீழ் அமர்ந்து பால் குடித்தாலும் கள் குடித்தான் என்பதுபோல வீண்பழி வரும். இந்த இடத்தில் எச்சரிக்கையோடு இருந்தால் போதும். ஹிரண்யா போன்ற நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால் சரியான மருத்துவரை பார்த்து சிகிச்சை செய்வது நல்லது. சட்டத்தை மீறி எங்கும், எதிலும் நடந்து கொள்ள வேண்டாம். இந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருந்தால் சங்கடங்கள் விலகிவிடும்.
எட்டில் குரு எட்டிக் காயாக கசக்குமா?
எட்டினில் குரு என்கிற அஷ்டமத்து குருவின்போது, ‘‘வாலி பட்டமிழந்து போம்படி ஆனதும்...’’ என்றொரு ஜோதிடமொழி உண்டு. எட்டில் குரு இருந்தால் நல்லதும், கெட்டதும் மாறிமாறி வந்துபோகும். ஒரு சொத்தை விற்று வேறொன்றை வாங்க வைக்கும். ஒரு இழப்பை கொடுத்து வேறொரு ஏற்றத்தை அளிக்கும். சமூகத்தில் கௌரவமாக உள்ளவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இல்லையெனில், கௌரவப் பதவிகளுக்கு ஆபத்து வரும். அதனால் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை வீட்டிற்கு அழைத்து வரக்கூடாது. குடும்பத்தினர் மீது சிறிய கண்காணிப்பு எப்போதும் வேண்டும். ஏனெனில், உங்களை மீறி தவறு செய்வார்கள். மேலே சொன்ன விஷயங்களை தவிர்த்தால் எட்டினில் குரு இனிக்கத்தான் செய்யும்?
பத்தில் குரு வந்தால் பதற வைக்குமாமே?
‘‘ஈசன் ஒரு பத்திலே தலை ஓட்டிலே இரந்துண்டதும்...’’ என்றொரு ஜோதிட பழமொழி உண்டு. பொதுவாகவே பத்தில் குரு வந்தால் அதுவரையிலும் தனக்கிருந்த கம்பீரமும், கௌரவமும் குறையும். எந்தப் பதவியிலிருந்தாலும் கௌரவத்தை சிதைத்து வதந்திகளில் சிக்கிக் கொள்ள வைக்கும். இவர்களுக்குக் கீழே இருப்பவர்களுக்கு மேன்மையான உயர்பதவிகளைக் கொடுத்து தரத்தை குறைத்து வைப்பார்கள். சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கியபடி இருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் பொறுமையோடு செயல்பட்டால் இந்த சூழலை எளிதாக எதிர்கொள்ளலாம். இந்த நேரத்தில்தான் நீங்கள் இடைத்தரகர்களை நம்பவே கூடாது. யாருக்கும் எதற்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்து போடக் கூடாது. பணம் வாங்கித் தருவதிலும், திருமணத்தை நடத்தி வைக்கும் விஷயத்திலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ‘‘பெண்ணுக்கும், புடவைக்கும் குறுக்கே நிற்கக் கூடாது’’ என்பார்களே அதுபோல இருக்க வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர்களை வி.ஐ.பிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கும்போது வி.ஐ.பிகளுக்கு ஏதேனும் சங்கடங்கள் உருவாகுமா என்று யோசித்துச் செய்யுங்கள்.
பன்னிரண்டாமிட குரு பாதிப்பை ஏற்படுத்துமா?
‘‘வன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரெண்டினில் வீழ்ந்ததும்...’’ என்று ஜோதிட பழமொழி உண்டு. ஐந்து ரூபாயில் முடிக்க வேண்டியதை ஐநூறு ரூபாயில் முடிப்பார்கள். எதைப் பிரதானமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அதை இழக்க வேண்டிய சூழல் வரும். இது நட்பு வட்டம், உங்களின் நலன் விரும்பி போன்ற எல்லா விஷயத்திற்கும் பொருந்தும். அதனால், பேச்சில் கவனம் வேண்டும். தவறான பாதையை காட்டும் நபர்களிடமிருந்து தள்ளியே இருங்கள். பேராசைக் காட்டி மோசம் செய்யும் நபர்களை அடையாளம் கண்டு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியினால் அங்கீகரிக்கப்படாத நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்தல் கூடாது. குருவி போல சேர்த்த பணமெல்லாம் இப்படி போச்சே என்று புலம்ப நேரிடும். புண்ணிய தலங்களுக்கு அதிகமாகச் செல்வார்கள். மெல்லிய சந்நியாச மனோபாவத்தை இந்த அமைப்பு கொடுக்கும். மேலே சொன்ன விஷயங்களில் ஜாக்கிரதையாக இருந்தால் பாதிப்பு ஏற்படாது.
No comments:
Post a Comment