Thursday 19 November 2015

30 soups for good health

30 soups for good health

தக்காளி சூப்

தேவையானவை தக்காளி – 4, வெங்காயம் – 1, பீட்ரூட், கேரட், பீன்ஸ் – தலா 50 கிராம். பச்சை மிளகாய் – 1, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 2 பல், புதினா – சிறிதளவு, நன்றாகக் கழுவிய கொத்தமல்லி வேர் – 3 துண்டு, மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு, வெண்ணெய் – தேவை யான அளவு.

செய்முறை தக்காளி, வெங்காயம், பீட்ரூட், கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நசுக்கவும். குக்கரில் வெண்ணெயைப் போட்டு உருக்கி, காய்கறிகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். அதில் புதினா, கொத்தமல்லி வேர், மிளகுத்தூள், உப்பு, 5 கப் தண்ணீர் சேர்த்து 4-5 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் திறந்து காய்கறிகளை வடிகட்டி, மிக்ஸியில் அரைக்கவும். அதை, வடிகட்டிய சூப்புடன் சேர்த்து மீண்டும் சூடுபடுத்தி பரிமாறவும்.

கேரட் சூப்

தேவையானவை கேரட் – 2, வெங்காயம் – 1, பூண்டு – 2 பல், நன்றாகக் கழுவிய கொத்தமல்லி வேர் – ஒரு கைப்பிடி அளவு, மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் – அரை கப், பட்டை – ஒரு துண்டு, வெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை கேரட்டை தோல் சீவி நறுக்கவும். வெங்காயம், பூண்டு இரண்டையும் தோலுரித்து நறுக்கவும். குக்கரில் வெண்ணெயைப் போட்டு உருக்கி… பட்டை, வெங்காயம், பூண்டு சேர்த்து 3 நிமிடம் வதக்கி, கேரட்டை சேர்க்கவும். 2 நிமிடம் வதக்கியதும், கொத்தமல்லி வேர், 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் வடிகட்டி பட்டை, கொத்தமல்லி வேரை தனியே எடுத்துவிட்டு, மீதமுள்ளவற்றை அரைக்கவும். அரைத்ததை வடிகட்டிய நீரில் சேர்த்து, அதனுடன் பாலையும் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

தக்காளி சூப்

தேவையானவை வெங்காயம் – 2, தக்காளி – 4, தேங்காய்ப்பால் – அரை கப், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு – 4 பல், சோம்பு – கால் டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். வெறும் கடாயில் சோம்பு, தனியா, மிளகு, சீரகத்தை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெயை விட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கி, தக்காளி, உப்பு சேர்க்கவும். நான்கு கப் தண்ணீர் சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கவும். தயாராக இருக்கும் பொடியைச் சேர்த்து, 4 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் வடிகட்டி, அதில் தேங்காய்ப்பால், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

காய்கறி சூப்மி

தேவையானவை அவரைக்காய் – 3, கொத்தவரங்காய் – 10, காராமணி – 6, புடலங்காய், முள்ளங்கி, பூசணி – சிறு துண்டுகள் (தலா ஒன்று), சீரகம் – அரை டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – 1, இஞ்சி-பூண்டு விழுது – ஒன்றரை டீஸ்பூன், தேங்காய்ப்பால் – அரை டீஸ்பூன், மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, கார்ன்ஃப்ளார் – 2 டீஸ்பூன். நெய் அல்லது எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் (அ) எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, வெங்காயத்தைப் போட்டு வதக்கி, காய்கறிகளைச் சேர்க்கவும். அதில் இஞ்சி – பூண்டு விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும். கால் கப் தண்ணீரில் கார்ன்ஃப்ளாரை கரைத்து, அதனுடன் சேர்க்கவும். 2 நிமிடம் கொதித்ததும் இறக்கி மிளகுத்தூள், கொத்தமல்லி, தேங்காய்ப்பால் சேர்த்துப் பரிமாறவும்.

காய்கறி சூப்

தேவையானவை பொடியாக நறுக்கிய கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிஃப்ளவர் எல்லாம் சேர்த்து – 2 கப், நறுக்கிய வெங்காயம் – 1, கார்ன்ஃப்ளார் – ஒரு டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் – 2 டீஸ்பூன், வெங்காயத்தாள் – சிறிதளவு, சர்க்கரை – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பூண்டு – 2 பல், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை காய்ந்த மிளகாய், பூண்டு இரண்டையும் சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். அதில் வெங்காயம், காய்கறிகளைப் போட்டு 5 நிமிடம் நன்கு வதக்கி, 5 கப் தண்ணீர் விடவும். கொதிக்கும்போது சர்க்கரை, சோயா சாஸ், உப்பு, சேர்க்கவும். காய்கறி அரைப்பதம் வேகும் வரை வேக விடவும். கால் கப் தண்ணீரில் கார்ன்ஃப்ளாரைக் கரைத்து அதில் சேர்த்து, கொதித்ததும் வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.

காலிஃப்ளவர் சூப்

தேவையானவை காலிஃப்ளவர் – 1 (சிறியது), வெங்காயம் – 1, தக்காளி – 3, துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர் – 3 கப், காய்ச்சி ஆற வைத்த பால் – அரை கப், பூண்டு (நசுக்கியது) – 8 பல், சோம்பு – கால் டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், பட்டை – ஒரு துண்டு, லவங்கம் – 2. எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை காலிஃப்ளவரை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கவும். பாதியளவு காலிஃப்ளவரை உப்பு போட்டு முக்கால் பதம் வேக வைத்து தனியே வைக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, மிளகு, பட்டை, லவங்கம் தாளிக்கவும். அதில் வெங்காயம், தக்காளி, மீதியிருக்கும் காலிஃப்ளவர், பூண்டு போட்டு நன்கு வதக்கி, பருப்புத் தண்ணீர், உப்புச் சேர்க்கவும். மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டவும். வடிகட்டிய நீரில், வேக வைத்த காலிஃப்ளவர் துண்டுகள், பால், மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

பாதாம் சூப்

தேவையானவை காலிஃப்ளவர் துண்டுகள் – ஒரு கப், பாதாம் – 15, வெங்காயம் – 1, பூண்டு – 4 பல், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் – ஒரு கப், வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், பிரிஞ்சி இலை – ஒரு துண்டு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை கொதிக்கும் நீரில் பாதாம் பருப்புகளை 5 நிமிடம் ஊற வைத்து தோலுரிக்கவும். வெங்காயம், பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும். கடாயில் வெண்ணெயை உருக்கி பிரிஞ்சி இலை, வெங்காயம், பூண்டு, காலிஃப்ளவர் போட்டு வதக்கி, 3 கப் தண்ணீர் சேர்க்கவும். அத்துடன் பாதாம் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். ஆறியதும் வடிகட்டி, பிரிஞ்சி இலையை எடுத்துவிட்டு மீதமுள்ளவற்றை அரைக்கவும். கிடைக்கும் விழுதை வடிகட்டிய தண்ணீரில் போட்டுக் கொதித்ததும், பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

மஷ்ரூம் சூப்

தேவையானவை மஷ்ரூம் – 12, வெங்காயம், உருளைக்கிழங்கு – தலா 1, பூண்டு – 4 பல், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் – ஒரு கப். வெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை மஷ்ரூமை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், உருளைக்கிழங்கு, பூண்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். குக்கரில் வெங்காயம், உருளைக்கிழங்கு, 8 மஷ்ரூம், 4 கப் தண்ணீர் சேர்த்து 3-4 விசில் வந்ததும் இறக்கவும். ஆறவிட்டு, வடிகட்டி மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டிய தண்ணீருடன் அரைத்த விழுதைச் சேர்த்துக் கலக்கவும். மீதமுள்ள மஷ்ரூமை மெல்லியதாக நறுக்கவும். கடாயில் வெண்ணெய் விட்டு உருக்கி, பூண்டு போட்டு வதக்கி, அதில் மஷ்ரூம் சேர்த்து மேலும் வதக்கவும். அதில் சூப்பை சேர்த்து கூடவே பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்துப் பரிமாறவும்.

நூடுல்ஸ் சூப்

தேவையானவை பொடியாக நறுக்கிய கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், காலிஃப்ளவர் எல்லாம் சேர்த்து – 2 கப், வேக வைத்த சைனீஸ் நூடுல்ஸ் – அரை கப், இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – 1, சோயா சாஸ் – 2 டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, வெங்காயத்தாள் – சிறிதளவு, சர்க்கரை – அரை டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் – 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை பாத்திரத்தில் 4 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் காய்கறிகள், இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், சர்க்கரை, உப்பு, ஆகியவற்றைப் போட்டு, அரைப் பதம் வரை கொதிக்க விடவும். அரை கப் தண்ணீரில் கார்ன்ஃப்ளாரைக் கரைத்து அதில் சேர்த்து, ஒரு நிமிடம் கொதித்ததும் இறக்கிவிடவும். பிறகு, சோயா சாஸ், நூடுல்ஸ், மிளகுத்தூள், கொத்தமல்லி, வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.

பட்டாணி சூப்

தேவையானவை பச்சைப் பட்டாணி – ஒரு கப், உருளைக்கிழங்கு – 1, புதினா – 15 இலைகள், கொத்தமல்லி – கைப்பிடி அளவு, இஞ்சி – ஒரு துண்டு, பச்சை மிளகாய் – 1, காய்ச்சி ஆற வைத்த பால் – அரை கப், வெண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை பட்டாணியைக் கைப்பிடியளவு தனியே வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக்கவும். குக்கரில் 2 டீஸ்பூன் வெண்ணெய் விட்டு உருக்கி இஞ்சி, பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு மீதமுள்ள பட்டாணி, புதினா, கொத்தமல்லி போட்டு வதக்கி, 4 கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் வடிகட்டி மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டிய தண்ணீரில் அரைத்த விழுதைப் போட்டு, அதில் உப்பு, பால் சேர்த்துக் கொதிக்க விடவும். கடாயில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் விட்டு உருக்கி தனியே எடுத்து வைத்த பட்டாணியைப் போட்டு வதக்கி (படபடவென இது பொரியும்) சூப்புடன் சேர்த்துப் பரிமாறவும்.

சன்னா சூப்

தேவையானவை வெள்ளை சன்னா – அரை கப், வெங்காயம் – 1, தக்காளி – 4, பூண்டு – 5 பல், இஞ்சி – ஒரு துண்டு, மஞ்சள்தூள், சோம்பு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

பொடிக்க சோம்பு, சீரகம், தனியா, மிளகு – தலா அரை டீஸ்பூன். காய்ந்த மிளகாய் – 1 (எல்லாவற்றையும் வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்).

தாளிக்க எண்ணெய் – ஒரு டீஸ்பூன், பட்டை – ஒரு துண்டு.

செய்முறை சன்னாவை 6-8 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். வெந்ததும் கொஞ்சம் தனியே எடுத்து வைக்கவும். அந்தத் தண்ணீரிலேயே, மீதமுள்ள சன்னாவுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, நசுக்கிய பூண்டு, இஞ்சி, சோம்பு, சீரகம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 4-5 விசில் வரை வேக வைக்கவும். வெந்ததும் அரைத்து வடிகட்டினால் சூப் ரெடி. இதில் தயாராக இருக்கும் பொடி, எடுத்து வைத்த சன்னாவை சேர்த்துக் கொதிக்க விட்டு, பட்டையை எண்ணெயில் தாளித்துப் போட்டுப் பரிமாறவும்.

கடலைப்பருப்பு சூப்

தேவையானவை கடலைப்பருப்பு – அரை கப், வெங்காயம் – 1, தக்காளி – 3, பூண்டு – 3 பல், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை கடலைப்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பூண்டை நசுக்கவும். வேக வைத்த கடலைப்பருப்பில் பாதியளவு தனியே எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி, மீதி கடலைப்பருப்பை சேர்க்கவும். அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து வெங்காயம் வேகும்வரை கொதிக்க விட்டு இறக்கி, ஆறியதும் அரைத்து வடிகட்டவும். எடுத்து வைத்துள்ள கடலைப்பருப்பை வடிகட்டிய சூப்பில் சேர்த்து, கொதிக்க விடவும். கடாயில் நெய் விட்டு சீரகம் தாளித்து அதில் கொட்டி, எலுமிச்சைச் சாறு, கறிவேப்பிலை, கொத்தமல்லி கலந்து பரிமாறவும்.

முட்டைகோஸ் சூப்

தேவையானவை பொடியாக நறுக்கிய கோஸ் – 2 கப், வெள்ளை பூசணி (நறுக்கியது) – ஒரு கப், நறுக்கிய வெங்காயம் – 1, மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் – ஒரு கப், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், மைதா – 2 டீஸ்பூன், பூண்டு – 5 பல், உப்பு – தேவையான அளவு.

செய்முறை முட்டைகோஸ், பூசணி துண்டுகளை சுத்தம் செய்து கொள்ளவும். குக்கரில் கோஸ், பூசணி, வெங்காயம், 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், வடிகட்டி அரைக்கவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு உருக்கி, பொடியாக நறுக்கிய பூண்டைப் போட்டு வதக்கி அதில் மைதா சேர்க்கவும். ஒரு நிமிடம் அதை வதக்கி, பாலை சிறிது சிறிதாக விட்டு கட்டித் தட்டாமல் கிளறி, கொதிக்கும்போது வடிகட்டி வைத்திருக்கும் சூப்பை சேர்க்கவும். மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

லெமன் சூப்

தேவையானவை வேக வைத்த பருப்புத் தண்ணீர் – 3 கப், பச்சை மிளகாய் – 1, தக்காளிச் சாறு – அரை கப், எலுமிச்சைச் சாறு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், பாசுமதி அரிசி சாதம் – கால் கப். பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

தாளிக்க நெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன்.

பொடிக்க துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகாய் – 1 (வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்).

செய்முறை பருப்புத் தண்ணீருடன், தக்காளிச் சாறு, பெருங்காயத்தூள், உப்பு, பொடித்த பொடி, கீறிய பச்சை மிளகாய், அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் நெய் விட்டு கடுகு தாளித்து, அதில் பருப்புத் தண்ணீர் கரைசலை சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நன்கு பொங்கி வரும்போது இறக்கி வடிகட்டி, அதில் எலுமிச்சைச் சாறு, பாசுமதி சாதம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

பாகற்காய் சூப்

தேவையானவை பொடியாக நறுக்கிய பாகற்காய் – ஒரு கப், சின்ன வெங்காயம் (நறுக்கியது) – அரை கப், பூண்டு – 6 பல், அரிசி கழுவிய நீர் – 3 கப், தேங்காய்ப்பால் – ஒரு கப், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன். உப்பு – தேவையான அளவு.

செய்முறை கடாயில் எண் ணெய் விட்டு பாகற்காயைப் போட்டு, மிதமான தீயில் 10 நிமிடம் வதக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும். அதில் அரிசி கழுவிய நீரை விட்டு, 15 நிமிடம் கொதிக்க வைத்து, தேங்காய்ப்பால் சேர்த்துப் பரிமாறவும்.

தூதுவளை சூப்

தேவையானவை தூதுவளைக் கீரை – ஒரு கப், வெங்காயம் – 1, பூண்டு – 5 பல், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், தேங்காய்ப்பால் – அரை கப், எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை தூதுவளைக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்யவும். வெங்காயம், பூண்டை தோலுரித்து நசுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, தூதுவளைக் கீரையைப் போட்டு வதக்கி, 3 கப் தண்ணீர் விடவும். அதில் உப்பு சேர்த்து, நன்கு கொதிக்கவிட்டு, தூதுவளைக் கீரை வெந்ததும் இறக்கவும். மிளகுத்தூள், சீரகத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துப் பரிமாறவும்.

பசலைக்கீரை சூப்

தேவையானவை பசலைக்கீரை – ஒரு கட்டு, வெங்காயம் – 1, முளைப்பயறு – ஒரு கைப்பிடியளவு, பூண்டு – 4 பல், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் – ஒரு கப், பூண்டு (நசுக்கி யது) – 4 பல், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை பசலைக்கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கவும். குக்கரில் கீரை, வெங்காயம், பயறைப் போட்டு, 3 கப் தண்ணீர் ஊற்றி, 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், வடிகட்டி மிக்ஸியில் அரைத்து, அந்த விழுதை வடிகட்டிய சூப்பில் சேர்க்கவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு உருக்கி, பூண்டு போட்டு வதக்கி, சூப்புடன் சேர்த்து, உப்பு, மிளகுத்தூள், பால் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து, இறக்கிப் பரிமாறவும்.

புதினா – வெங்காய சூப்

தேவையானவை புதினா – அரைக் கட்டு, சின்ன வெங்காயம் (நறுக்கி யது) – அரை கப், தக்காளி – 3, பூண்டு – 5 பல், கொத்தமல்லி – ஒரு கைப் பிடியளவு, கார்ன்ஃப்ளார் – 2 டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் – அரை கப், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

பொடிக்க மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன் (வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்).

பொரிக்க பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – கால் கப், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன். (சிவக்கப் பொரித்துக் கொள்ளவும்)

செய்முறை புதினா, கொத்தமல்லியை ஆய்ந்து தண்ணீரில் அலசவும். பூண்டை தோலுரிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு நன்கு வதக்கி, புதினா, கொத்தமல்லி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி அரைக்கவும். வடிகட்டிய தண்ணீருடன் அரைத்த விழுதைச் சேர்த்து கொதிக்கவிட்டு, பின்பு பாலில் கார்ன்ஃப்ளாரைக் கரைத்துச் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். அதில் மிளகு-சீரகப்பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும். சிவக்கப் பொரித்த சின்ன வெங்காயத்தை சூப்பின் மேல் தூவி பரிமாறவும்.

கலர்ஃபுல் கார்ன் சூப்

தேவையானவை ஸ்வீட்கார்ன் – அரை கப், கேரட், குடமிளகாய், வெங்காயம் – தலா 1, கார்ன்ஃப்ளார் – 2 டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 2, வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை கேரட், வெங்காயம், குடமிளகாயை பொடியாக நறுக்கவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு உருக்கி, காய்கறிகளைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். அதில் 3 கப் தண்ணீர், ஸ்வீட்கார்ன், உப்பு சேர்த்து காயை வேகவிடவும். வெறும் கடாயில் மிளகாயை வறுத்துப் பொடித்துச் சேர்க்கவும். பாலில் கார்ன்ஃப்ளாரை கரைத்து அதனுடன் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் கலந்து இறக்கிப் பரிமாறவும்.

வல்லாரை சூப்

தேவையானவை வல்லாரைக்கீரை – ஒரு கப், சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 4 பல், தக்காளி – 3, மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, வடித்த சாதம் – கால் கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு,

செய்முறை கீரையை சுத்தம் செய்யவும் பூண்டு, வெங்காயத்தை தோலுரிக்கவும். தக்காளியை நறுக்கவும். கடாயில் நெய் (அ) எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி அதில் கீரையைப் போடவும். நன்கு வதங்கியதும் 3 கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும். வெந்ததும்… சாதம், உப்பு போட்டு கலந்து இறக்கவும். வடிகட்டி அரைக்கவும். வடிகட்டிய சூப்புடன் அரைத்த விழுதைச் சேர்த்து மீண்டும் வடிகட்டவும். பிறகு, கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு கலந்து கொதிக்க விட்டுப் பரிமாறவும்.

தாய்லாந்து சூப்

தேவையானவை காலிஃப்ளவர் துண்டுகள் – 10, மஷ்ரூம் – 6, பச்சை மிளகாய் – 2, லெமன் க்ராஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)- ஒரு துண்டு, நாரத்தை இலை – 2, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி வேர் – ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை பாத்திரத்தில் 4 கப் தண்ணீரைக் கொதிக்க விடவும். அதில் கழுவி நறுக்கிய காலிஃப்ளவர் துண்டுகள், மஷ்ரூம், சுத்தப்படுத்தி நசுக்கிய கொத்தமல்லி வேர், லெமன் க்ராஸ், பச்சை மிளகாய், இரண் டாகக் கிழித்த நாரத்தை இலை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். பிறகு உப்பு, எலுமிச்சைச் சாறு, எண்ணெய் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

முருங்கைக்காய் சூப்

தேவையானவை முருங்கைக்காய் – 2, வெங்காயம் – 1, பூண்டு – 5 பல், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பாசுமதி அரிசி சாதம் – கால் கப், தேங்காய்ப்பால் – அரை கப், தனியா – 3 டீஸ்பூன், மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை முருங்கைக்காயை வேக வைத்து உள்ளிருக்கும் சதையை வழித்தெடுத்து. வேக வைத்த தண்ணீரில் சேர்க்கவும். சாதத்தை மிக்ஸியில் அரைத்து அதில் சேர்க்கவும். வெங்காயம், பூண்டை தோலுரித்து பொடியாக நறுக்கவும். தனியா, மிளகு, சீரகத்தை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பூண்டைப் போட்டு, பொரிந்ததும் வெங்காயம் சேர்க்கவும். வதக்கிய வெங்காயத்துடன் தனியா-மிளகு-சீரகம் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். அதில் 3 கப் தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு போட்டு, கொதிக்கும்போது அரைத்த சாதம், முருங்கை கலவையை தண்ணீருடன் சேர்த்து ஊற்றவும். நன்கு கொதித்ததும் இறக்கி தேங்காய்ப்பால் கலந்து பரிமாறவும்.

பெப்பர் சூப்

தேவையானவை துவரம்பருப்பு – அரை கப், வெங்காயம் – 1, தக்காளி – 4, பச்சை மிளகாய் – 1, தனியாத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, சில்லி சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் – ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு – 5 பல், எண்ணெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன். உப்பு – தேவையான அளவு.

செய்முறை துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேக வைக்கவும். தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும், வேக வைத்த துவரம்பருப்பு, தனியாத்தூள், கறிவேப்பிலை, உப்பு, 4 கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் நன்கு வேக விடவும். அதனை இறக்கி வடிகட்டி, அதில் மிளகுத்தூள், சாஸ் சேர்த்து கொதிக்க வைத்து, அரை கப் தண்ணீரில் கரைத்த கார்ன்ஃப்ளாரை கலந்து கொதிக்க விட்டு இறக்கவும்.

ராஜ்மா சூப்

தேவையானவை ராஜ்மா பீன்ஸ்- ஒரு கப், வெங்காயம் – 1, தக்காளி – 3, பூண்டு – 5, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, பட்டை – ஒரு துண்டு, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலா – ஒரு சிட்டிகை, வெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை ராஜ்மாவை 6-8 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் ராஜ்மாவுடன் உப்புச் சேர்த்து 5-6 விசில் வந்ததும் இறக்கவும். பாதியளவு ராஜ்மாவை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெ யைப் போட்டு உருக்கி, பட்டை சேர்த்து, நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். அதில் நறுக்கிய தக்காளி, மிளகாய்த் தூள், உப்புச் சேர்த்து தக்காளி நன்கு கரையும் வரை வதக்கவும். அதனுடன் பாதியளவு ராஜ்மா மற்றும் அதை வேக வைத்த தண்ணீர் ஆகிய வற்றைச் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். ஆறியவுடன், பட்டையை நீக்கி மீதமுள்ள கலவையை மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்த ராஜ்மா, உப்பு சேர்க்கவும். வேக வைத்த தண்ணீர் குறைவாக இருந்தால் 3 கப் தண்ணீர் செர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு, கொத்தமல்லி, கரம் மசாலா, எலுமிச்சைச் சாறு, சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

சீஸ் சூப்

தேவையானவை உருளைக்கிழங்கு – 3, வெங்காயம் – 1, காய்ச்சி ஆற வைத்த பால் – 2 கப், பிரிஞ்சி இலை – ஒரு துண்டு, பூண்டு – 4 பல், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், சீஸ் துருவல் – கால் கப், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன். உப்பு – தேவையான அளவு.

செய்முறை வெங்காயத்தை நறுக்கவும், உருளைக்கிழங்கைத் தோல் சீவி துண்டுகளாக்கவும். இரண்டையும் குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு வேக வைத்து இறக்கவும். ஆறியதும், வடிகட்டி மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு உருக்கி, பிரிஞ்சி இலை, பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கி, அரைத்த கலவையை சேர்க்கவும். அதனுடன் வடிகட்டிய சூப், பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, கொதித்ததும் இறக்கி, சீஸ் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

அகத்திக்கீரை சூப்

தேவையானவை அகத்திக்கீரை – 2 கப், பாசிப்பருப்பு – கால் கப், வெங்காயம் – 1, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 1, இஞ்சி – ஒரு துண்டு, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு – 3 பல், சோம்பு – ஒரு சிட்டிகை, மிளகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், கொத்தமல்லி – ஒரு கைப்பிடியளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய்ப்பால் – அரை கப், கறிவேப்பிலை – சிறிதளவு. உப்பு – தேவையான அளவு. நெய் – 2 டீஸ்பூன் (தேவைப்பட்டால் சேர்க்கலாம்).

செய்முறை அகத்திக்கீரையை சுத்தம் செய்யவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் நசுக்கவும். குக்கரில் தேங்காய்ப்பால், எலுமிச்சைச் சாறு நீங்கலாக மற்ற பொருட்களை ஒன்றாகப் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி 4-5 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் வடிகட்டி அரைக்கவும். மீண்டும் வடிகட்டவும். அதை 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி தேங்காய்ப்பால், எலுமிச்சைச் சாறு, நெய் சேர்த்துப் பரிமாறவும்.

மக்ரோனி சூப்

தேவையானவை மக்ரோனி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – ஒரு கப், வெங்காயம் – 1, தக்காளி – 3, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் – 3 கப், மைதா – 3 டீஸ்பூன், சீஸ் துருவல் – கால் கப். வெண்ணெய் – 3 டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை 4 கப் கொதிக்கும் நீரில் மக்ரோனியை சேர்த்து மிதமான தீயில் நன்கு வேக விடவும். வெந்ததும் வடிகட்டி அலசி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, 3 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விட்டு இறக்கி, ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு உருக்கி, மைதா சேர்த்து மிதமான தீயில் வறுத்து, பாலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கட்டியில்லாமல் கிளறவும். அதில் தக்காளி – வெங்காய கலவையைப் போட்டு, மக்ரோனி, சீஸ், உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

பேபிகார்ன் சூப்

தேவையானவை பேபிகார்ன் – 5, மசூர் பருப்பு – அரை கப், வெங்காயம் – 1, தக்காளி – 2, பட்டை – ஒரு துண்டு, லவங்கம் – 2, கொத்தமல்லி – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் – 3 டீஸ்பூன். உப்பு – தேவையான அளவு.

செய்முறை பேபிகார்னை மெல்லியதாக நறுக்கவும். பருப்பைக் குழைய வேக வைக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கவும். கடாயில் நெய் (அ) எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் தாளித்து, வெங்காயம், தக்காளி, பேபிகார்ன் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி, அதில் 3 கப் தண்ணீர் சேர்க்கவும். அதனுடன் வேக வைத்த பருப்பு, கொத்தமல்லி சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

பீர்க்கங்காய் சூப்

தேவையானவை பீர்க்கங்காய் – கால் கிலோ, வெங்காயம், பச்சை மிளகாய், வெங்காயத்தாள் – தலா 1, சோயா சாஸ் – 2 டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, நல்லெண்ணெய் – அரை டீஸ்பூன், சர்க்கரை – அரை டீஸ்பூன். உப்பு – தேவையான அளவு,

செய்முறை பீர்க்கங்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பாத்திரத்தில் 4 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் நறுக்கிய காய்களைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். அதனுடன் உப்பு, சர்க்கரை, சோயா சாஸ், கொத்தமல்லி, நல்லெண்ணெய் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

புரோக்கோலி சூப்

தேவையானவை புரோக்கோலி (காலிஃப்ளவர் போன்றதொரு பூ வகை காய்), உருளைக்கிழங்கு, வெங்காயம் – தலா 1, காய்ச்சி ஆற வைத்த பால் – ஒரு கப், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், சீவிய பாதாம் – ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, வெண்ணெய் – 2 டீஸ்பூன். உப்பு – தேவையான அளவு.

செய்முறை புரோக்கோலியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கவும். குக்கரில் 2 கப் தண்ணீரில் வெங்காயம், உருளைக்கிழங்கைப் போட்டு 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் அதில் புரோக்கோலி சேர்த்து மீண்டும் 3 நிமிடம் கொதிக்க வைக்கவும். வெந்ததும் இறக்கி, பாதியளவு புரோக்கோலி துண்டுகளை தனியே வைக்கவும். மீதமுள்ளவற்றை ஆறவிட்டு, நன்கு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, அதில் பால் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு உருக்கி பாதாமை சிவக்க வறுத்து, சூப்புடன் பாதாம், எடுத்து வைத்துள்ள புரோக்கோலித் துண்டுகள், உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி கலந்து பரிமாறவும்

No comments:

Post a Comment