ஏழரைச் சனி
இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும் என்பதை பார்க்கலாம்...
மற்ற கிரகங்களையும்விட சனி கிரகம் பலமான- சக்தி பெற்ற கிரகம் மட்டுமல்ல; ஒரு ராசியில் அதிக காலம்- இரண்டரை வருடம் தங்கிப் பலன் செய்யும் கிரகம். அதனால் அவருக்கு மந்தன் என்றும் முடவன் என்றும் பல பெயர்கள் உண்டு. ஒரு ராசியில் இரண்டரை வருடம் என்ற விகிதத்தில் 12 ராசி களையும் ஒருமுறை சுற்றி வருவதற்கு 30வருடங்கள் ஆகும். அந்த முப்பது ஆண்டுகளில் பொதுவாக மனித வாழ்க்கையிலும் நாட்டிலும் தொழில்துறை என எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுவது இயல்பு. அதனால்தான் முப்பது வருடத்துக்குமேல் சேர்ந்தாற்போல் யோகத்திலே திளைத்தவர்களும் இல்லை; கஷ்டத்திலேயே இளைத்தவர்களும் இல்லை என்பார்கள்.
அவரவர் ராசிக்கு (சந்திரன் நிற்கும் இடம் ராசி எனப்படும். அதற்கு) 12-ஆம் இடத்தில் சனி வரும்போது ஏழரைச் சனி ஆரம்பம். அது முதல் கட்டச் சனி. அங்கு இரண்டரை வருடம் இருக்கும் சனி விரயச் சனிஎனப்படும். அடுத்து ஜென்ம ராசிக்கு மாறும் சனி (2-ஆம் கட்டம்) ஜென்ம ராசியில் இரண்டரை வருடம் இருக்கும். அது ஜென்மச் சனிஎனப்படும்.
அதைவிட்டு விலகி ஜென்ம ராசிக்கு 2-ஆமிடத்தில் சனி வரும்போது (மூன்றாம் கட்டச் சனி) இரண்டரை வருடம் பாதச் சனி, குடும்பச் சனி,வாக்குச் சனி எனப்படும். இப்படி மூன்று கட்ட மாக வரும் சனியின் மொத்த காலம்தான் ஏழரைச் சனியின் காலம் எனப்படும். ஜாதகரீதியாக ஒருவருக்கு வரக்கூடிய சனி தசை என்பது வேறு;கோட்சாரரீதியாக வரும் ஏழரைச் சனி என்பது வேறு.
சிறு வயதில் வரும் முதல் சுற்றை (7.5 ஆண்டு) மங்கு சனி என்றும்,வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை (7.5ஆண்டு) பொங்கு சனி என்றும், கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை (7.5 ஆண்டு) அந்திம சனி என்றும் அழைப்பர்.
பிறந்ததிலிருந்து முப்பது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கத்தை மிகத் தெளிவாகக் காணலாம். சனியின் முழுத் திறனும் தெரியும். முதல் சுற்று முடக்கி முயற்சியை தூண்டும். ‘படிப்பில் கவனம் செலுத்தவில்லை, காதல், கவன சிதறல், உறவினர்கள் மரணம், வேலையில்லா திண்டாட்டம்’ என்பதுபோல பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும்.
பன்னிரெண்டு வயதிற்கு மேல் சனிப்பிடித்தால் குழந்தையின் கவனம் சிதறும். சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது. Drop out from School கேசாகிவிடும். பத்து, ப்ளஸ் டூ வகுப்பில் பெயிலாகும் குழந்தைகளில் பெரும்பாலோனருக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கும்.. சிலருக்கு படிப்பு, மற்றும் வித்தைக்குரிய கிரகமான புதன் ஜாதகத்தில் பலவீனமாக இருந்து அதனால் அவர்கள் தோல்வியுற நேரலாம். அவை விதிவிலக்கு.
கணவன் - மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். குடும்பத்திற்கு வழக்கமில்லாத உணவு வகைகளை குழந்தைகள் எடுத்துக் கொள்வார்கள். மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள். ஏழரை சனியில் பெறும் அனுபவங்களும், அவமானங்களும்,காயங்களும், வடுக்களும் வாழ்க்கை முழுதும் மறக்காதபடி இருக்கும்.‘‘ரெண்டு மார்க் அதிகமா எடுத்திருந்தா தலையெழுத்தே மாறியிருக்கும். இன்னும் கொஞ்சம் பொறுப்பா படிச்சுருக்கலாமே’’ என்று ரிசல்ட் வந்தபிறகு புலம்ப வைப்பார். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார், சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும்.
2வது சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள். அவருடைய வேலையே இதுதான். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் இவர் வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு,மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் 2வது சனியாக பொங்கு சனி கொடுப்பார். அதனால் தைரியமாக வாங்கலாம்.
முப்பது வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர். பறித்தல், பாதுகாத்தல், பலமடங்காக பெருக்கித் தருதல். இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவானம் போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் கெடுக்கும். அதனால், கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. , இந்த இரண்டாவது சுற்றின்போது சிலர்,மிதமிஞ்சிய செல்வ வளத்தால் பிரச்னைகளை உருவாக்குவார்கள்.‘‘நான் யார் தெரியுமா?’’ என்று செல்வாக்கை நிரூபிக்கத் துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று தன்னடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமே, ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார் சனி. பழைய நிலைக்கே கொண்டு செல்லத் திட்டமிடுவார். ஆகவே, கவனமாக இருங்கள். பேச்சிலோ, செயலிலோ கர்வக் கொம்பு முளைத்தால் கொடுத்ததைப் பிடுங்க தயங்க மாட்டார். சனி பகவான் வந்தால்தான் நம் அறிவுக்கும், சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன என்பதை உணர்வோம். ‘‘நம்ம கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். ஏழரைச் சனியின்போது முடிந்தவரை கோர்ட், கேஸ் என்று போகக் கூடாது. பத்து லட்ச ரூபாய் பொருளுக்காக காக்கிக்கும், கறுப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவு செய்வீர்கள். வசதி வரும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருங்கள். கூழ் கிடைத்தாலும் குடியுங்கள். இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும். அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம்.‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டிப்பு வருமானம்’’ என்றொரு வாக்கியம் உள்ளது. ஆனால் பாதை மாறினால், அதலபாதாளம்தான். இன்னொரு விஷயம்... நம்பிக்கை துரோகம் செய்தவர்களை பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்கியம் பாதிக்கும். ஏழரை சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும், அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது பூர்வஜென்மத் தொடர்பு என்பதாகவே எடுத்துக் கொள்ளுங்கள்.
சனி பகவானுக்கு சூரிய சந்திரர்கள் என்றாலே ஆகாது. ஏழரைச் சனி நடப்பில் இருக்கும் போது சூரிய திசையோ, சந்திர திசையோ நடக்குமானால் சனியின் கடுமை இன்னும் அதிகமாக இருக்கும். கவனமுடன் இருக்க வேண்டும்.
ராகு தசை நடக்கும் போதும் ஏழரைச் சனி நடைபெற்றால் சற்று மோசமான பலன்களே நடைபெறுகின்றன. துலாம் சனிக்கு உச்ச ராசியாகும். அதனால் பாதிப்பு அதிகம் தரமாட்டார் என்றாலும் ஜென்மத்தில் பகை வீட்டிலோ... கோளாறான இடத்திலோ இருந்தால் தன்னை மறந்து ஒரு பிடிபிடித்து விடுவார். ஒருவருடைய ஜாதகத்தில் சனி உச்சம் பெற்றுறிருந்தால் 71/2 சனி பாதிப்பு குறையும். ஒருவரது ஜாதகத்தில் சனி மகரம் அல்லது கும்பத்தில் ஆட்சி பெற்றாலும், 71/2 சனி கெடுதல் செய்யாது . ஜனன காலத்தில் ஜன்ம லக்னத்திற்கு 3,6,10,11-ல் சனி அமர்ந்தாலும் 71/2 சனி கெடுதல் குறையும். மகரம் அல்லது கும்ப லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு சனியும் லக்னத்தில் இருந்தால் 71/2 சனியும் கெடுதல் குறையும் , தவிர அவருக்கு சுகமான வாழ்வு கிட்டும் . சனி உச்சம் பெற்று துலா ராசியில் இருந்தால் அது கேந்திரம் அல்லது திரிகோணம் என்று இருந்தால் அவருக்கு கெடுதல் குறையும்
அவருடைய தொல்லைகளில் இருந்து தப்பிக்க
அந்த மூன்று ராசிகளிலும் அஷ்டவர்க்கப் பரல்கள் 30ற்குமேல் இருந்தால்,
அவருடைய தொல்லைகள் தடுக்கப்பெற்றுவிடும். அந்த மூன்று ராசிகள் என்றில்லை. அவற்றில் ஒன்றில் 30 பரல்கள் இருந்தால் கூட அந்தப் பகுதிக்கு உரிய இரண்டரை வருடங்கள் ஜாதகன் நிம்மதியாக இருக்கலாம்.
திருநள்ளாறு தலத்திலும், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள திருக்கொள்ளிக்காடு தலத்திலும் பேரருள் புரிகிறார். இந்த தலங்களுக்கு சென்று வாருங்கள். பிரச்னைகளெல்லாம் எப்படித் தீர்கிறது என்று பாருங்கள்.
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி தொல்லைகளில் இருந்து விடுவிக்கும்படி மனமுருக வேண்டி வழிபடலாம்.
சனி பகவானை திருப்தி படுத்த மாற்றுத் திறனாளிகள், (குறிப்பாக பார்வை இழந்தவர்கள், நடக்க இயலாதவர்கள்)வயதானவர்,ஆதரவற்றவர்களுக்கு உதவலாம்.
சனி வரலாறு
நவகிரகங்களில் முதன்மையான ஆதிகிரகம் சூரியன். துவஷ்டாவின் மகள் சஞ்ஞிகை என்பவள் (உஷா என்றும் ஒரு பெயர்) சூரியனை விரும்பித் திருமணம் செய்துகொண்டாள். வைவஸ்வதமநு, யமன் (மகன்கள்); யமுனை (மகள்) என்ற மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். இருந்தும் சூரியனுடைய வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள். அதனால் சூரியனுக்குத் தெரியாமல் தன்னுடைய நிழலையே தன் மாதிரி பெண்ணாக்கி சூரியனுடன் குடும்பம் நடத்தும்படி கூறி விட்டுத் தன் தகப்பனார் வீட்டுக்குப் போய்விட்டாள். அப்படி உருவாக்கப்பட்டவளே சாயாதேவி. பிரத்யுஷா என்றும் இன்னொரு பெயர். சஞ்ஞிகையின் வேண்டுகோளின்படிதான் வேறு ஒருத்தி என்ற ரகசியத்தை வெளியிடாமல் சூரியனுடன் அவன் முதல் மனைவி போலவே வாழ்ந்தாள் சாயாதேவி அவளும் மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். சாவர்ணீமனு என்ற ஆண் மகனும், அடுத்து சனி பகவா னும் பிறகு பத்திரை என்ற பெண் மகளும் பிறந்தனர். சாயாதேவிக்கு குழந்தைகள் பிறந்ததும் சஞ்ஞிகையின் குழந்தைகளை சக்களத்திப் பிள்ளைகளாகக் கருதி கொடுமைப்படுத்த ஆரம்பித்தாள். இதை அறிந்த சூரியனின் மூத்த தாரத்து இளைய குமாரன் யமன் (தர்ம ராஜன்) சாயாதேவியை மிரட்டி அடிக்கப் போனான். சனி தன் தாய்க்குப் பரிந்து கொண்டு சஞ்ஞிகையை "ஓடிப்போனவள்' என்று உதாசீனமாகப் பேசவே, யமன் கோபங்கொண்டு தன்னுடைய தண்டத்தால் சனியின் முழங்காலில் அடித்தான். அதனால் சனி பகவானின் வலதுகால் ஊனமானது
No comments:
Post a Comment