Sunday, 29 November 2015

கேதார கவுரி விரதம் தோன்றிய கதை

கேதார கவுரி விரதம் தோன்றிய கதை சுவாரசியமானது....

‘கேதாரம்’ என்றால் ‘வயல்’ என்று பொருள். இமயமலையில் உள்ள வயலில் சிவபெருமான் சுயம்புலிங்கமாக தோன்றினார். ஆதலால் அவருக்கு ‘கேதரநாதர்’ என்ற பெயர் ஏற்பட்டது. அம்பிகையின் பல நாமங்களில் ‘கவுரி’ என்பது ஒன்றாகும். அம்பாளை நினைத்து இருக்கும் இந்த விரதத்துக்கு ‘கேதார கவுரி விரதம்’ என்று பெயர் ஏற்பட்டது.

ஆதி கயிலாயத்தில் சிவனும், பார்வதியும் தனித் தனியே வீற்றிருந்தனர். மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன், முப்பது முக்கோடி தேவர்களும் சிவனையும், பார்வதியையும் தனித்தனியாக வலம் வந்து வணங்கி அருளாசி பெற்றுச் சென்றனர். பிருங்கி முனிவர் என்பவர், சிவனை மட்டுமே வணங்கிச் சென்றார். அவர் சக்தியை வணங்குவதில்லை.

தினமும் அவர் இவ்வாறு செய்வதை பார்த்த உமாதேவி வருத்தப்பட்டு அதற்கான காரணத்தை சிவபெருமானிடம் கேட்டார். ‘பிருங்கி முனிவர் மோட்சத்தை மட்டுமே கோரி வருவதால், என்னை மட்டுமே வணங்குகிறார்’ என்று சிவன் கூறினார். இதையடுத்து சிவனும், பார்வதியும் பிருங்கி முனிவர் வழிபட வரும்போது சேர்ந்து அமர்ந்தனர்.

அப்போது பிருங்கி முனிவர் ஒரு வண்டின் உருவம் எடுத்து சிவனை மட்டும் சுற்றி வந்து வணங்கிச் சென்றார். இதனால் கோபம் கொண்ட உமாதேவி, பிருங்கி முனி வருக்கு சாபம் கொடுத்தார். ‘முனிவரே, சக்தியின்றி சிவம் இல்லை என்பதை நீர் உணரவில்லை. ஆகையால் இன்று முதல் நீர் சக்தியற்று போகக்கடவீர். உன் உடல் மாமிசங்கள் அற்று விழக்கடவது’ என்றார்.

உடனே பிருங்கி முனிவர் உடலில் உள்ள சதைகள் எல்லாம் உதிர்ந்து விழ, எலும்புடன் சக்தியற்று பூமியில் விழுந்து கிடந்தார். அதைப்பார்த்த சிவன், பிருங்கி முனிவருக்கு ஒரு ஊன்று கோல் கொடுத்தார். அக்கோலை ஊன்றிக்கொண்டு முனிவர் ஆசிரமத்துக்கு போய் சேர்ந்தார். அப்போதும் அம்பாளின் வருத்தம் தீரவில்லை. நாமும் ஈஸ்வரனும் தனித்தனியாக இருப்பதால் அல்லவா? இவ்வாறு பிருங்கி முனிவர் செய்தார்.

இருவரும் ஒன்றாகி விட்டால் இந்தப் பிரச்சினையே இல்லை. அவரது இடப்பாகத்தில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். இதற்காக கேதாரம் சென்று கவுதம முனிவரை சந்தித்து தனது எண்ணத்தை தெரிவித்தார். அதைக்கேட்ட அவர் அம்பிகையிடம், ‘தேவி! கேதார கவுரி விரதம் என்ற ஒரு விரதம் இருக்கிறது. அந்த விரதத்தை தாங்கள் மேற்கொண்டால் ஈஸ்வரன் தங்களுக்கு இடப்பாகம் கொடுப்பார்’ என்றார்.

அவரது ஆலோசனையை ஏற்றுக் கொண்டு புரட்டாசி மாதம் வளர்பிறை பத்தாம் நாள் (விஜயதசமி) முதல், ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி தீபாவளி வரை உண்ணாமல் விரதம் இருந்து இறைவனை பூஜித்தார். இவரது விரதத்தை கண்டு மகிழ்ந்த ஈசன், தனது உடலின் இடது பாதியை தேவிக்கு அளித்தார். இதனால் ‘தோடுடைய சிவன், மாதொருபாகன்’ என்றும் அழைக்கப்பட்டார்.

அர்த்தநாரீஸ்வரர், கவுரிசங்கர் என்று பக்தர்கள் அழைத்து பயபக்தியுடன் வழிபட்டனர். இறைவனின் இடப்பாகம் வேண்டி அம்பிகை விரதம் இருந்த இடம் திருவண்ணாமலை என்றும், அங்கேதான் சிவபெருமான் உமையம்மைக்கு இடப்பாகம் அளித்ததாகவும் அருணாசலேஸ்வரர் கோவில் தல புராணம் கூறுகிறது.

No comments:

Post a Comment