Thursday 26 November 2015

கும்பமேளா, கோதாவரி புஷ்கரம் - விஞ்ஞானப் பின்னணி என்ன? - சத்குரு

கும்பமேளா, கோதாவரி புஷ்கரம் - விஞ்ஞானப் பின்னணி என்ன?
- சத்குரு

இந்தியா... இமாலயம் துவங்கி இந்து மகாசமுத்திரம் வரை பரந்துவிரிந்திருக்கும் நாடு. பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வந்திருக்கும் மனிதர்களுக்கு வாழ்வில் ஒரே நோக்கம் - ‘முக்தி’. வாழ்வில் எதைச் செய்தாலும், அது தொழிலோ, துறவோ, முக்தி மட்டுமே நோக்கம். இப்படி உள்நிலை சார்ந்தே வளர்ந்த ஒப்பற்ற கலாச்சாரம், நம் பாரதம்.

நம் கிராமங்களில் எழுதப் படிக்கத் தெரியாத குடியானவனும் கேட்கும் தனிப்பட்ட விஷயம் 'கடவுளோ சொர்க்கமோ' அல்ல - முக்தி. முக்தியை அடைவதற்கு இரு வழிகள் உண்டு. ஒன்று முழுமூச்சாய் துறவறத்தில் ஈடுபடுவது, மற்றொன்று, இயற்கை வழங்கும் ஒவ்வொரு சிறு உதவியையும் ஏற்று, அவ்வழியே வளர்வது. நம் ஞானிகளும், முனிவர்களும் இயற்கையை கவனித்து, அதில் இருக்கும் இதுபோன்ற சிறப்பு அம்சங்களை உணர்ந்து, அதை நம் நலனிற்கு பயன்படுத்திக் கொள்ள பல வழிகளை வகுத்தனர்.

பூமியும் நாமும் வெவ்வேறல்லஇந்த பூமியில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பூமி என்று சொல்லும்போது, அதில் ஒவ்வொரு மனிதனும் அடக்கம். நீங்கள் இந்தப் பூமியின் ஒரு சிறு பகுதியல்லவா? உங்கள் உடல் பூமியுடன் பிணைக்கப்படாமல் தனியாய் நடக்கிறது என்பதால், நீங்கள் தனிப்பட்டவர் என நினைக்க வேண்டாம். தற்சமயம் 'தனி'யாக பிரிந்திருப்பது போல் இருந்தாலும், மீண்டும் இம்மண்ணோடு கலந்துவிடுவீர்கள். எனவே, இந்தப் பூமியில் என்ன நடந்து கொண்டிருந்தாலும், ஏதோ ஒரு வகையில் அது உங்களுக்குள்ளும் நடந்து கொண்டிருக்கிறது. கொஞ்சம் நுணுக்கமாய் உணரும் திறன் உங்களுக்கு இருந்தால், உங்களால் அதை உணர முடியும்.

பூமியின் செயல்பாடுகளை நம் வளர்ச்சிக்குப் பயன்படுத்தல்...

இப்பூமியில் நிகழும் சின்னஞ்சிறிய மாற்றங்களையும் அறிந்து, இவற்றை மக்கள் தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள நம் கலாச்சாரத்தில் வழிசெய்தார்கள். இப்படித்தான், 'இந்தநாள், இந்த நேரம், இந்த இடத்தில்' இருந்தால் இன்னது நடக்கும் என்பதனை அறிந்தனர். அதனால் அவ்விடத்தில் மக்கள் குழுமுவது நடைமுறை வழக்கமானது. இதுபோல் பல இடங்கள் நம் நாட்டில் உள்ளது. பூமத்திய ரேகை நம் நாட்டின் வழியே செல்லவில்லை என்றாலும், பூமியின் காந்த மையக்கோடு நம் நாட்டின் வழியே செல்கிறது. பூமியின் காந்த மையம் எங்கிருக்கிறது என்று சரியாய் அறிந்து, அதில் பல கோவில்களை நிறுவினார்கள். புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் சரியாய் இந்த காந்த மையக்கோட்டில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த பூமி ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கும்போது, இவ்விடத்தில் இருப்பது மக்களுக்கு நற்பலன்களைக் வழங்குகிறது.

பூதசுத்தி - உங்கள் தலையெழுத்தை நீங்களே நிர்ணயுங்கள்கும்பமேளா, கோதாவரி புஷ்கரம் போன்ற வைபவங்களும் இப்படித்தான் உருவாக்கப்பட்டன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இரண்டோ அதற்கும் மேற்பட்ட ஆறுகளோ கூடும் இடத்தில், வருடத்தின் குறிப்பிட்ட நேரத்தில் சென்று மூழ்கி எழுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இவ்வுடல், இவ்வுலகம் இரண்டுமே 70% நீரினால் ஆனது. ஒரு கிரகத்தில் உயிர் வாழ்கிறதா என்பதைக் கண்டறிய அங்கு நீர் இருக்கிறதா என்று பார்ப்பதே முக்கியமான சோதனை. ஒரு துளி நீர் உயிரின் அடையாளம். நீரினால் ஆன 70% போக, நம் உடலில் 12% நிலம், 6% காற்று, 4% நெருப்பு, மற்றும் ஆகாயம் உள்ளது. வெறும் இந்த ஐந்தே அம்சங்களால் ஆனதுதான் நம் உடல். நம் உடல் மட்டுமல்ல, இவ்வுலகம், இப்படைப்பு, இப்பிரபஞ்சம் அனைத்துமே இந்தப் பஞ்சபூதங்களால் ஆனதுதான். வெறும் ஐந்தே அம்சங்கள் எத்தனை எத்தனை விதங்களாக வெளிப்பட்டிருக்கின்றன!

யோகத்தின் ஒரு அடிப்படை அம்சம் பூதசுத்தி. பூதசுத்தி என்றால் நம்முடல் சுமுகமாய் செயல்பட, நம் உடலை உருவாக்கியிருக்கும் பஞ்சபூதங்களை சுத்திகரிக்கும் ஒரு செயல்முறை. இந்தப் பஞ்சபூதங்களும் ஒரு நல்லிணக்கத்தோடு ஒன்றாய் செயல்படும்போது, உங்கள் உணரும் திறன் வெறும் கேட்பது, நுகர்வது போலில்லாமல், முழு உடலுமே உணர்ந்தறியக் கூடிய சிறப்பான ஒரு கருவியாகிவிடும். அப்போது, ஆரோக்கியம், நல்வாழ்வு, ஆன்மீக வளர்ச்சி அனைத்தும் நிகழும். இந்தப் பஞ்சபூதங்களின் மீது நீங்கள் முழுமையான ஆளுமை பெற்றுவிட்டால், அந்நிலையை 'பூதசித்தி' என்பர். முழுமையான ஆளுமை பெறாவிட்டாலும், ஓரளவிற்கு ஆளுமை அடைந்துவிட்டாலுமே, உங்கள் வாழ்க்கை பிறர் கட்டுப்பாட்டில் இல்லாமல் உங்கள் கைகளுக்கு வந்துவிடும். உங்கள் தலையெழுத்தை நீங்களே நிர்ணயிக்கலாம். கும்பமேளா என்பது இந்த 'பூதசுத்தி' செயல்முறையின் ஒரு வடிவம்.

கும்பமேளா, கோதாவரி புஷ்கரம் - விஞ்ஞானப் பின்னணி யோகத்தில் சூரியனைச் சார்ந்து உங்கள் உடல்-மன-சக்தி அமைப்பை மாற்றிக்கொள்ள பல ஆயிரம் வழிகள் உண்டு. மிகச் சாதாரண முறைகளில் துவங்கி, மிகக் கடினமானது வரை பற்பல வழிகள் உள்ளன. கும்பமேளா போல் குறிப்பிட்ட நீர்நிலைகளுக்கு குறிப்பிட்ட நேரங்களில் செல்வதும் இதில் ஒன்று. கும்பமேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத்தில் த்ரிவேணி சங்கமத்தில் நிகழும் வைபவம். இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வது ஏன்? சூரியனின் ஒரு முழு சுழற்சி 12 1/4 வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்கிறது. இதனாலேயே, 'கும்ப்' என்பதும் 12 1/4 வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்கிறது.

எதேச்சையாய் ஏதோ ஒரு நீர்நிலையில் இதனை அவர்கள் நிர்ணயிக்கவில்லை. நீர்சுழி உள்ள இடங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் நீர்நிலைகள் பொங்கி வரும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். அந்நேரங்களில் சமுத்திரம் மேலெழும்ப முயற்சி செய்கிறது. இப்படிப்பட்ட சக்தி இப்பூமியில் செயல்படும்போது, அதை நம் நலனிற்கு எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று நம் முன்னோர்கள் கவனித்து அறிந்தார்கள். அதேபோல் நம் பூமியின் 24 மணி நேர சுழற்சியில் உண்டாகும் மையவிலக்கு விசையின் தாக்கம், பூமியின் பூமத்தியரேகை துவங்கி, 33 டிகிரி அட்சரேகை வரை உச்சத்தில் இருக்கும். அதனால் இந்த நிலப்பரப்பில், அதிலும் இரண்டோ அல்லது அதற்கும் மேற்பட்ட நீர்நிலைகளோ, ஆறுகளோ சந்திக்கும் இடங்களில் நீர்சுழியும் உருவாவதால், மிக அதிகமான தாக்கம் உண்டாகும். எனவே, இதுபோன்ற இடங்களை தேர்வு செய்தார்கள். இதுபோன்ற இடங்களில் சூரியனின் சுழற்சியை ஒட்டி கணக்கீடுகள் செய்து எந்நேரங்களில் அந்த நீர்நிலைகளில் மூழ்கி எழுவது அதிக பலன் தரும் என்பதையும் நிர்ணயம் செய்தார்கள்.

48 நாட்கள் ஒருசில யோகிகள் துவங்கிய இந்தச் செயல்முறையை இன்று லட்சக்கணக்கான மக்கள் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். முன்காலத்தில், இதை ஒரே ஒரு தினமாக இல்லாமல் 48 நாட்கள், அதாவது ஒரு மண்டலம் அங்கேயே தங்கி, தினமும் குறிப்பிட்ட ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபட்டு அந்நீர்நிலையில் சிறிது நேரம் இருந்து வெளிவருவது வழக்கமாயிருந்தது. இவ்வாறு செய்யும்போது, உங்கள் உடல், மனம், சக்தி அமைப்பு முற்றிலும் மாறுபட்டு இயங்குவதோடு, ஆன்மீக வளர்ச்சியும் மிக அதிகமாக நிகழ்ந்திடும்... வெறும் 48 நாட்களிலேயே...! இன்றோ அரை நாள் அங்கு இருந்துவிட்டு, அவசர அவசரமாய் மூழ்கி எழுந்து வெளிவருவது வழக்கமாகி வருகிறது.
இன்றிருக்கும் ஜனத்தொகைக்கு எல்லோரும் அங்கு 48 நாட்கள் தங்கி இதுபோன்ற ஆன்மீக சாதனைகளில் ஈடுபடுவது சாத்தியமில்லைதான், ஆனால் இதற்கு வேறொரு வழி இருக்கிறது. ஒரு ஆன்மீகப் பயிற்சியை குறைந்தது 40 நாட்கள் தினமும் 10-12 நிமிடங்கள் தொடர்ந்து செய்துவிட்டு, அதற்குப்பின் இதுபோன்ற நீர்நிலைகளுக்கு மக்கள் ஒருநாள் சென்று மூழ்கி எழலாம். இது அவர்களுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நிலையில் சக்தி பெருக்கெடுக்கும்போது, அதனைச் சிறப்பாய் உள்வாங்கிக் கொள்ளும் திறன் ஒருவருக்கு இருப்பது மிக மிக அவசியம். உள்வாங்கும் நிலையில் நீங்கள் இல்லாவிட்டால், நீங்கள் எவ்வளவு சக்திவாய்ந்த இடத்திலேயே இருந்தாலும், எந்த நேரத்தில் சென்றாலும், அதனால் எந்தப் பயனும் இருக்காது.

பக்தியின் ஆழம் - கும்பமேளாவின் சாரம் ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபடாத சாதாரண மக்களுக்கும் கூட இதுபோன்ற அம்சங்கள் வேலை செய்யக் காரணம், அவர்களின் எளிமையான மனநிலை. இதுபோன்ற தீர்த்தங்களைத் தேடி வரும் மக்களில் பெரும்பாலானோர், தங்கள் கையிலுள்ள கடைசி ரூபாய் வரை செலவு செய்து இவ்விடத்திற்கு, இரண்டு நாட்கள் தங்கிச்செல்ல குடும்பத்துடன் வருகிறார்கள். அவர்களின் ஏழ்மையில் 100 ரூபாய் என்பது உங்களின் பல லட்சங்களுக்கு சமானம் என்றாலும், இருப்பதையெல்லாம் செலவு செய்து அவர்கள் இங்கு வருகிறார்கள். அத்தனை முக்கியமான ஒரு விஷயமாய் இதனைப் பார்க்கின்றனர். இங்கு மூழ்கி எழுந்தால் முக்தி நிச்சயம் என்று எங்கோ கேள்விப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட உணர்ச்சி பெருக்கில், முழுமையான திறந்தமனதோடு அவர்கள் இதை அணுகும்போது, அவர்களது உள்வாங்கும் திறன் மிக அதிகமாய் இருக்கும்.

இவ்விடத்திற்கு பணமோ, பொருளோ, கடவுளோ வேண்டி அவர்கள் வருவதில்லை, அவர்கள் நாடிவருவதோ... முக்தி. அறிந்தோ அறியாமலோ நம் நாட்டில் இன்றும் கூட 80 கோடிக்கும் மேற்பட்டோர், முக்தி நாடியே வாழ்கிறார்கள். உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இந்த அளவிற்கு இந்த நோக்கில், ஏக்கத்தில் மனிதர்கள் வாழ்வதை நீங்கள் பார்க்கமுடியாது. கும்பமேளாவை 'கூட்டம் கூடும் இடம்' என்று ஒதுக்கிடாமல், ஒருமுறையேனும் ஒருவர் அதனை காணவேண்டும். அக்காட்சியை, அங்கிருக்கும் சூழலை வார்த்தைகளில் விளக்கிவிட முடியாது. இந்திய தேசத்தின் முற்றிலும் மாறுபட்ட ஒரு பரிமாணத்தை இங்கு நீங்கள் காண்பீர்கள். உலக நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க நிகழ்வு என்றால், அது கும்பமேளா என்று சொல்லலாம். எங்குமே காண முடியாத விசித்திரத்திலும் விசித்திரமான மனிதர்களை இங்கு காணலாம்.

பலவிதமான மக்கள் இங்கே திரள்கின்றனர். பற்பல ஊர்களில் இருந்து பற்பல மொழிகளைப் பேசுபவர்கள், சித்திபெற்ற யோகிகள், ஞானிகள், ஆடை அணிந்தவர்கள், ஆடையையும் துறந்த சாதுக்கள்... ஏன், கூட்டத்தை பயன்படுத்தி திருட நினைக்கும் ஆசாமிகள் என, மனித வர்ணங்கள் எத்தனை எத்தனையோ, அத்தனையும் ஒரே இடத்தில், ஒன்றாக, எவ்வித விரிசலும் இன்றி, பெரிதாக காவல் பந்தோபஸ்துகளும் இல்லாமல்... ஆ! அவ்விடத்தை என்னவென்று சொல்வது...! அந்நீர் நிலையில் இறங்குகிறீர்களோ, இல்லையோ கும்பமேளாவை ஒருமுறையேனும் நீங்கள் பார்க்கவேண்டும்.

அதுமட்டுமல்ல, கும்பமேளா என்பது பல்லாயிரம் மக்கள் ஒன்று கூடும் வெறும் சடங்காக அல்லாமல், அந்தச் செயல்முறையின் மூலம் மக்கள் பயன்பெற வேண்டும் என்பது என் ஆசை.

தண்ணீர் - திரவநிலை கணினி நவீன விஞ்ஞானம் தண்ணீரை திரவநிலை கணினி என்று குறிப்பிடுகிறது... ஏனெனில், அதற்கு ஞாபகத்திறன் அதிகமாக இருப்பதோடு, அதன் செயல்பாட்டிலும் ஒரு புத்திசாலித்தனம் தென்படுகிறது. தண்ணீரை நான் ஒருவிதமாகப் பார்த்தால், அதை அது ஞாபகத்தில் பதித்துக் கொண்டு வேறு வகையில் செயல்படுகிறது. அதன் அடிப்படை இரசாயனக் கலவையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. ஆனால், அதன் மூலக்கூறு அமைப்பில் மாற்றம் நிகழ்கிறது. வெறும் ஒரு ஸ்பரிசம், பார்வை, உணர்ச்சி அல்லது எண்ணம் போதும், இப்படியொரு தாக்கத்தை நம்மால் நீரில் உண்டாக்க முடியும்.

பருகும் நீர் ஒரு நல்ல சூழ்நிலையில் இருந்து நம் உடலில் சேரும்போது, அது நம்முள் நல்லவிதமாய் செயல்படுகிறது. இதுவே அந்நீர் சரியான சூழ்நிலையில் இல்லாமல், நம் உடலில் சேர்ந்தால் அது நமக்கு பலவிதமான கேடுகளை உருவாக்கிவிட முடியும். இது சுத்தம் அசுத்தம் பற்றியதல்ல. நீரின் சக்திநிலை பற்றியது. நம் உடலிலுள்ள நீரை நாம் சரியாய் வைத்துக் கொண்டாலே நம் ஆரோக்கியம் நம் கையில் வந்துவிடும். நீரை சரியாய் அமைத்துக் கொண்டதாலேயே நாட்பட்ட நோய்களில் இருந்து வெளிவந்தவர்கள் பலரையும் நான் அறிவேன். நீரின் இந்த குணம் அறிந்திருந்ததால்தான், தென்னிந்தியாவில், நம் கலாச்சாரத்தில், நீரை ஒரு செம்பு, பித்தளை அல்லது மண்பானையில் வைத்து, அதை வணங்கி, அதனையே பருகினர்.

நம்முள் இருக்கும் தண்ணீரை நன்னிலையில் செயல்படச் செய்து நல்வாழ்வை அமைத்துக் கொள்ள, அதையும்விட முக்கியமாக, நாம் முக்தி நோக்கி செல்ல, கும்பமேளாவிற்காக 12 ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டாம். கும்பமேளா வெறும் ஒரு நினைவூட்டுதல்தான். ஒவ்வொருவரும் கொஞ்சம் முயற்சிசெய்யத் தயாராக இருந்தால், தினந்தோறும் நீருடன் நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு தொடர்பையும் கூட பூதசுத்தி செயல்முறையாக மாற்றிக் கொண்டுவிடலாம்.

ஒவ்வொரு நாளும் நீருடன் உங்களுக்கு எவ்விதமான தொடர்பு ஏற்பட்டாலும்... அது பார்வையினாலோ அல்லது ஸ்பரிசத்தினாலோ, குடிப்பதாலோ, குளிப்பதாலோ அல்லது வேறு எப்படியாக இருந்தாலும்... அந்நேரத்தில் புனித கங்கை, கோதாவரியில் தீர்த்தமாட நீங்கள் இறங்கும்போது உங்களுக்குள் ஏற்படும் அதே ஆழமான உணர்வோடு இந்த நீரையும் நோக்குங்கள். உங்கள் கைகளில் வரும் ஒவ்வொரு கோப்பை நீரையும் அதே ஆழமான உணர்வுடன் பருகுங்கள். இதைச் செய்தாலே மருத்துவர்களே ஆச்சரியப்படும் படியாக உங்கள் அடிப்படை மருத்துவ தேவை பெருமளவு குறைந்துவிடும்.

ஆனந்தமாய் வாழ உலகிற்கு வழிகாட்டும் இந்தியா ஆனந்தமாய் வாழ்வதற்கு வழிகள் தேடினால், உலகின் எந்த பகுதியிலுமே இங்கு கிடைக்கும் அளவிற்கு ஆழமான வழிகள் வழங்கப்படுவதில்லை. காரணம், கடந்த எட்டிலிருந்து பத்தாயிரம் ஆண்டுகளாக நம் வாழ்க்கை, சக்தி எல்லாவற்றையும் இது ஒன்றிலேயே நாம் முதலீடு செய்து இந்த ஞானத்தை பெற்றிருக்கிறோம். மனதையும், மூளையையும் கொண்டு நாம் தத்துவமாகவோ, வேதாந்தமாகவோ சித்தரிக்கவில்லை. இயற்கையை கவனித்து, அதைப் புரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் நாம் கருவிகள் உருவாக்கி இருக்கிறோம்.

இந்தக் கும்பமேளா என்பது அவ்வழியில் ஒரு பெரும்படியாக மாறி, இவ்வுலகிற்கு இந்தச் சாத்தியங்கள் கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்பது என் விருப்பம்.

பிற வழிகள் கும்பமேளா மட்டுமல்ல, நம் ஆன்மீக வளர்ச்சிக்கு இன்னும் பல வழிகளை வகுத்திருக்கிறார்கள். முன்பே கூறியது போல், பூமத்திய ரேகையில் துவங்கி 33 டிகிரி அட்சரேகை வரையிலான நிலப்பரப்பில், இப்பூமியின் சுழற்சியால் உண்டாகும் மையவிலக்கு விசை அதிகளவில் செயல்படுகிறது. இதனால், பிற இடங்களை விட இவ்விடத்தில் இயற்கையிலேயே நம் உயிர்சக்தி மேல்நோக்கி பாய்கிறது. அதிலும் சரியாய் 11 டிகிரி அட்சரேகையில் இந்த விசை கிட்டத்தட்ட செங்குத்தாய் செயல்படுவதால், இவ்விடத்தில் ஆன்மீகச் செயல்முறையில் ஈடுபடுவது உங்களுக்கு இன்னும் உதவியாய் இருக்கும்.

இந்தியாவின் பல முக்கியமான யோகக் கோவில்களை இந்த 11 டிகிரி அட்சரேகையில் அமைத்திருக்கிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோவில், கோவையில் நாம் அமைத்திருக்கும் தியானலிங்கம் எல்லாம் சரியாய் இந்த 11 டிகிரியிலேயே அமைந்திருக்கிறது. இதுபோன்ற பல விஷயங்கள் யோகக் கலாச்சாரம் மிக ஆழமாய் செயல்பட்ட நேரங்களில் மக்களின் விழிப்புணர்வில் பதியப்பட்டது. அதன் சுவடுகள்தான் இன்றும் தென்படுகிறது.

நாம் என்ன செய்யலாம்?

கும்பமேளா, கோதாவரி புஷ்கரம் போன்ற வைபவங்களில் இத்தனை பேர் பங்கேற்கும் நேரத்தில், உங்களுக்கு இப்படியொரு மகத்தான நிகழ்வினைக் குறித்து நினைவூட்ட வேண்டிய நிலை இருப்பது துரதிருஷ்டம்தான். இந்த ஆறுகள் பல ஆயிரம் ஆண்டுகளாய் இப்பூமியில் வாழ்ந்திருக்கின்றன. இவற்றை சுத்தமாக பராமரிப்பதும், வரண்டுவிடாமல் பாதுகாப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமை. இனி வரும் தலைமுறைகளுக்கு நாம் இவற்றை விட்டுச் செல்வது நம் பொறுப்பு. காலம்காலமாய் ஓடிய இந்த நதிகள் நம்மோடு மறைந்து விடக்கூடாது. இதற்கு உங்களால் முடிந்த வகையில் நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பேற்கலாமே!

No comments:

Post a Comment