Monday, 30 November 2015

உங்கள் நட்சத்திரங்களின் திருமண வரலாறு

உங்கள் நட்சத்திரங்களின் திருமண வரலாறு.......

மனமே மனிதனை ஆட்டிப் படைக்கிறது. மனதை ஆள்பவர் சந்திர பகவான். சந்திர பகவானுக்குரிய பூஜைகளை, தான தருமங்களை முறையாகச் செய்தால் சஞ்சல மனதை மாற்றி அமைதி அடையச் செய்வார். சந்திரனின் அமிர்த கிரணங்களின் சக்தியை முழுமையாகப் பெறவேண்டும் எனில் பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கிரிவலமே சிறந்தது.

சந்திர பகவான் பதினாறு கலைகளுடன் விளங்குகிறார். அவை அண்ணாமலையாரின் திருமேனியில் பட்டு பிரகாசித்து பிரதிபலித்து நம்முடலை அடைகிறது. பௌர்ணமியன்று அண்ணாமலை கிரிவலம் வந்தால் பதினாறு முக அதிசய தரிசனம் பெறலாம். இதனால் பதினாறு செல்வங்களைப் பெறலாம்.

அத்ரி மகரிஷியின் பத்தினி அனுசுயா தேவி. பிரம்மா, விஷ்ணு, ருத்ரமூர்த்திகளை தன் கணவனுக்காக குழந்தைகளாக்கி அவர்களுக்குப் பாலூட்டி தெய்வமூர்த்திகளுக்கே அன்னை ஆயினள். அந்தத் தெய்வத்தாய் இன்றும் தன் கணவர் அத்ரி மகரிஷியுடன் பௌர்ணமி தினங்களில் மனித ரூபத்தில் கிரிவலம் வருவதாக நம்பப்படுகிறது.

சந்திர பகவானின் திருமண வரலாறு: சந்திரன் முதலில் பதினாறு கலைகளைத்தான் தினந்தோறும் பிரகாசித்தார். நாளெல்லாம் பௌர்ணமியாகத்தான் இருந்தது. தட்சனுடைய சாபத்திற்குப் பின்புதான் வளர்பிறை, தேய்பிறை என்கிற நிலை ஏற்பட்டது.

அஸ்வினி முதல் ரேவதி வரை இருபத்தி ஏழு நட்சத்திர தேவியரையும் சந்திரன் மணம் புரிந்துகொண்டார். மணக்கும் முன் அவர் அரிய தவநெறிகளையும் செயற்கரிய வேள்விகளையும் இறை பணிகளையும் செய்ய வேண்டி இருந்தது. ஒவ்வொரு நட்சத்திரமும் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றி 27 தாரகை தேவியரை மணம் புரிந்தார் சந்திரன்.

அஸ்வினி தேவி: கைலாய பனிமலையை வெறுங்காலோடு அடிப்பிரதட்சணம் செய்து அஸ்வினி தேவியை மணம் புரிந்தார்.

பரணி தேவி: கடும் வெய்யிலில் நீர் அருந்தாமல் இறைவனின் திருப்பாதங்கள் பட்ட இடமெல்லாம் சென்று தான தரும காரியங்கள் செய்து பரணியைக் கைப்பிடித்தார்.

கார்த்திகை தேவி: சந்திரன் தம் தமக்கையான ஸ்ரீ மகாலக்ஷ்மியை மூலப்பிரபுவாக வரிந்து 1008 துவாதசி திதிகளில் பாதபூஜை செய்து கிருத்திகா தேவியைக் கைப்பிடித்தார். லக்ஷ்மியும் நாராயணனும் பல யுகங்களில் கண்காணாத இடத்திற்குத் தவம் செய்ய சென்றுவிட சந்திரன் இத்திருப்பணி செய்ய நிறைய கஷ்டங்களை அனுபவித்தார்.

ரோகிணி தேவி: பௌர்ணமி திதியில் திருவண்ணாமலையில் வலம் வந்து ரோகிணியை மணம் புரிந்தார். இறைவன் பல இடங்களில் தன் பால் நிறத்தையும் மலை ரூபத்தையும் மறைத்துவிட, அந்தந்த இடங்களில் ஆஸ்ரமம் கொண்டிருந்த கௌதமர், துர்வாசர், பரத்வாஜர், அகத்தியர் போன்ற மகரிஷிகளுக்கு சேவை செய்து இறைவனின் பால்வண்ண தரிசனம் பெற்றார்.

மிருகசீரிஷ தேவி: பிரபஞ்சம் எங்கும் இரட்டையாகப் பிறந்தவர்களில் இருவருக்குமே எப்போதும் நல்லெண்ணங்களே தோன்றி நற்காரியம் செய்பவர்களுக்குத் தபோ பலனை அளிக்க வேண்டும் என மிருகசீரிஷ தேவியின் வரத்தைக் கடுமையான இன்னல்களுக்கு இடையே நிறைவேற்றி தேவியை மணம் முடித்தார்.

திருவாதிரை தேவி: சரபேஸ்வரர், நரசிம்மர், உக்ரஹப் பிரத்தியங்ரா மாலினி, சூலினி, காளி போன்றவர்களின் உபாசகர்களுக்கு கடுமையான நியதிகள் உண்டு. கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் நிபந்தனைகளைக் கடந்து கடைபிடித்து தேவியைக் கைப்பிடித்தார்.

புனர்பூச தேவி: கோபம் மிஞ்சினால் விபரீதம் விளையும். குறைந்தால் ஏமாற்றமும் இழப்பும் ஏற்படும். சமநிலை படுத்தி மக்களுக்கு அனுக்கிரகிக்க வேண்டும் என்ற புனர்பூச தேவியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து மணம் புரிந்தார்.

பூசம் தேவி: பூசத்தில் திருமணம் புரிந்திட குடும்பத்தில் அமைதி நிலவும். தயாள குணம், சுமூக நிலை நிலவும். இத்தகைய உத்தம விருப்பத்தை பூர்த்தி செய்திட மணம்புரிந்தார்.

ஆயில்ய தேவி: மாட்டுப்பெண், நாத்தனார் போன்றவர்களிடையே கருத்துவேறுபாடுகள் எழுவது இயல்பு. இவை நீங்கி நிலைக்க புண்ணிய நதிகளில் தாமரை இலைத் தீபங்களை ஏற்றி ஹோமம், தானதருமங்கள் செய்து ஆயில்ய தேவியைத் திருமணம் செய்தார்.

மகம் தேவி: ஒவ்வொருவரும் சனி தசை, புத்தி, அந்தரம், மாரக தசை ஏற்படுகையில் மரணபயம் ஏற்படுவதுண்டு. இதை நிவர்த்திக்க வழிமுறைகளை அளிக்க வேண்டும் என்று மக நட்சத்திர தேவி கேட்க, பூர்த்தி செய்து மணம் புரிந்தார்.

பூரம் தேவி: கூட்டு நாம ஜெபம், நாம சங்கீர்த்தனம், ஹோமம், தானம் செய்து ஜீவன்களிடம் தெய்வீக காரியங்களை தொடரச் செய்து பூரதேவியைக் கைப்பிடித்தார்.

உத்திரம் தேவி: பஞ்சமி திதியில், பராசக்தியானவள், ருத்ர சக்தி, சத்ரு சக்தி, துவார சக்தி, விகல்ப சக்தி ஆகியவற்றை ஒளியாகப் பரப்புகிறாள். பஞ்சமி திதியில் நோன்பை ஏற்று மன அமைதியைத் தந்து சந்திரன் அருள்பாலிக்க வேண்டும் என்ற உத்திர தேவியின் விருப்பத்தை நிறைவேற்றி மணம் புரிந்தார்.

ஹஸ்தம் தேவி: தெய்வாம்சங்களை தியான யோகம், கர்ம யோகம், வேதம் போன்றவற்றின் மூலம் பெறலாம். இவற்றில் சங்கீதம் ஏழுவகைப்பிறப்பிலும் உய்வளிக்கும் சக்தி உடையது. சங்கீதத்தின் ஆத்ம விருத்தி நிலையை பெற்றுத் தரவேண்டும் என்ற ஹஸ்த நட்சத்திர தேவியின் ஆசையை நிறைவேற்றினார்.

சித்திரை தேவி: விசேஷ தினங்களில் கடல் ஸ்நானம் செய்தால் கர்ம வினைகள் ஒழிகின்றன. இதனை சித்திரை தேவி கேட்க, பூர்த்தி செய்து மணம் புரிந்தார். அதனால்தான் சித்திரா பௌர்ணமியன்று கடல் ஸ்நானம் செய்வது நன்மை என்று கூறுகின்றனர்.

சுவாதி தேவி: ஒரே நேரத்தில் பலவிதமான எண்ணங்களில் உழல்வதால் நற்காரியங்கள் பாதியில் தடைபடுகின்றன. ஸ்திர புத்தியை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று சுவாதிதேவி விருப்பப்பட, நிறைவேற்றிக் கைப்பிடித்தார்.

விசாக தேவி: "குருவின் மதிப்பு மாறிடலாகாது' என்று உணர்த்த குரு மண்டலம் சென்று அதற்குரியத் தவங்களை மேற்கொண்டு விசாக தேவியை மணம் புரிந்தார்.

அனுஷ தேவி: இறைபணிகளை சீர் செய்து விதிகளை அமைத்து, அறநிலை பேணுகிற தர்மத்தை வலியுறுத்தி அனுஷ தேவியைக் கைப்பிடித்தார்.

கேட்டை தேவி: அன்னதானம் போல் கன்னிகாதானமும் உயர்ந்தது ஆகும். தக்கப் பருவத்தில் மணமாகி புனிதமான கற்புடன் பெண்கள் வாழ, ஹோமம், யாகம், பூஜைகள் செய்து கேட்டை தேவியைக் கைப்பிடித்தார்.

மூலம் தேவி: அவிக்ர மூலம், சாந்த மூலம், தீர்க்க மூலம், கடாட்ச மூலம் என்ற நால்வகை, மூல நட்சத்திரத்தில் உண்டு. தர்மநெறி தவறாத அரசாங்கம் உலகம் எங்கும் நிலவ வேண்டும் என்ற மூல தேவியின் விருப்பத்தை நிறைவேற்றி மணம் புரிந்தார்.

பூராடம் தேவி: பொருள் இல்லாததால் தடைபடும் திருமணங்கள் அனைத்திற்கும் உதவவேண்டும் என்ற பூராட தேவியின் விருப்பத்தைப் பூர்த்திசெய்து திருமணம் செய்துகொண்டார்.

உத்திராடம் தேவி: அன்னம் கொதிக்கிறபோது ஏற்படும் உலைக்கு பல தெய்வீக சக்திகள் உண்டு. உலை கொதித்தால்தான் நாட்டில் வளம் ஏற்படும். உலை கொதித்தல் சுபீட்ச அட்சய தேவி ஆகும். இந்த மங்கள தேவியின் புகழ் விளங்க செய்ய வேண்டும் என்று உத்திராட தேவியின் வேண்டுகோளின்படி செய்து சந்திரன் தேவியைச் சங்கமித்தார்.

திருவோண தேவி: திருவோண நட்சத்திரத்தன்று மகாவிஷ்ணுவை வணங்கி முறையாக விரதம் மேற்கொள்கிறவர்களுக்கு பலன்கள் அபரிதமாய் பொழியும் சாந்தி பூஜைகள் செய்து உலகத்தாரை உய்விக்க வேண்டும் என்று திருவோணம் தேவி ஆசைப்பட, நிறைவேற்றி மணம்புரிந்தார்.

அவிட்டம் தேவி: தேக பலத்துடன் புத்தியும் யுக்தியும் சேர வேண்டும். ஆயுள் பலத்துடன் நன்மதி சேர வேண்டும் என அவிட்ட தேவி ஆசைப்பட, நிறைவேற்றி மணம் புரிந்தார்.

சதயம் தேவி: சனீஸ்வரனுடைய உக்ர நாளில் சதய நட்சத்திரம் கூடிய நாளில் சந்திரனை வழிபட உக்கிரம் குறையும். சாயா தேவியும் சந்திரனும் ஆறடி உயரம் கொண்ட சிவலிங்கத்திற்கு வழிபாடு செய்து தம்பதி
களாயினர்.

பூரட்டாதி தேவி: பூலோகத்தில் பாகப்பிரிவினையால் குடும்பங்கள் சிதறலாகாது என்று பூரட்டாதி தேவியின் ஆவலைப் பூர்த்தி செய்து மனைவி ஆக்கிக் கொண்டார்.

உத்திரட்டாதி தேவி: கருமித்தனம், உலோபத்தனம் இரண்டுமே இறைநெறிகளுக்கு ஆகாது. இவற்றை ஜீவன்களிடமிருந்து அகற்ற வேண்டும் என்ற உத்திரட்டாதி தேவியின் ஆசையைப் பூர்த்தி செய்து கரம்
பிடித்தார்.

ரேவதி தேவி: சுயநலம், சுயஸ்துதி, சுயப் புராணம் ஆகிய மூன்று வழியில் அகந்தைப் பெருக, பக்தி மங்கும். எனவே இவற்றை அழிக்க வேண்டும் என்று ரேவதி விரும்ப, பூர்த்தி செய்து மனைவி ஆக்கிக் கொண்டார் சந்திரன்.

அவரவர்களுக்குரிய நட்சத்திர தேவியால்தான் அவரவர் வாழ்க்கைச் சீராக அமைகிறது என்பதை உணர்ந்து அவரவர்களுக்குரிய நட்சத்திர லிங்கத்தை தினமும் தியானித்து வழிபட வேண்டும். குறைந்தது மாதம் ஒருமுறையேனும் அவரவர் நட்சத்திர தினத்தன்று திருவண்ணாமலை கிரிவலம் வருதல் நல்லது.

No comments:

Post a Comment