Thursday 19 November 2015

வல்லாரை

வல்லாரை

உடலுக்கு வன்மையையும், அறிவையும் அள்ளித் தரும் மூலிகைதான் வல்லாரை. மருத்துவக் குணங்கள் நிறைந்த இந்த மூலிகை இந்தியாவெங்கும் நீர்நிலைகள் அதாவது ஆறு, கால்வாய், குளம், குட்டை, வயல் வரப்புகளில் வளரும் பூண்டு வகையைச் சார்ந்தது. அரைவட்ட வெட்டுப் பற்களுடன், நீண்ட காம்புகளை உடைய இதய வடிவ இலைகளைக் கொண்டது. இலைகளில் நரம்புகள் இழையோடுவதைக் காணலாம்.

பொதுவாக வல்லாரை உடலின் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியைத் தரும். மூளையின் நரம்புகளைத் தூண்டி நினைவாற்றலைப் பெருக்கும். இம் மூலிகையில் சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, நார்ச்சத்து போன்றவை உள்ளது. இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என முச்சுவையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

வல்லாரை யோசன வல்லி, பிண்டீரி, சண்டசி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.

வல்லாரையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை, மாலை என இருவேளையும் 1 தேக்கரண்டி பொடியில் தேவையான அளவு தேன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

எல்லா வகையான சுரங்களையும் நெருங்க விடாது. சூட்டைத் தணிக்கும். சிரசின் உஷ்ணத்தைக் குறைத்து மூளை நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும்.

வல்லாரையிலையை நிழலில் உலர்த்தி பொடித்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.

வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ மாணவிகளுக்கு உண்டாகும் அறிவுச் சோர்வை நீக்கி ஞாபக மறதியை குணமாக்கும். குறிப்பாக வல்லாரை சட்னியில் புளியை அறவே தவிர்க்க வேண்டும் . உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

வல்லாரையிலையுடன் சம அளவு கீழாநெல்லி இலை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் தீரும்.

குழந்தைகளுக்கு தினமும் 10 வல்லாரை யிலையை பச்சையாக மென்று சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்படும். தொண்டைக் கம்மல் குறையும்.

வல்லாரையின் பயன்கள்

• ஞாபக சக்தியை தூண்டும் இதனை சரஸ்வதி மூலிகை என்றும் அழைக்கின்றனர்.

• இரத்த சோகையை போக்கி இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

• வல்லாரை பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லிலுள்ள கறைகளைப் போக்கும். பல்லீறுகளை பலப்படுத்தும்.

• ஈளை, இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டை போக்கும். காச நோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.

• கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்றவற்றை போக்கி கண் நரம்புகளுக்கு பார்வைத் திறனை அதிகரிக்கும்.

• நீரிழிவு நோயாளிகள் வல்லாரை கீரை உண்பது நல்லது. மலச்சிக்கலைப் போக்கி வயிற்றுப்புண், குடற்புண்ணை ஆற்றுகிறது.

• யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரையிலையை அரைத்து கட்டினால் நோயின் தாக்கம் குறையும். இதுபோல் விரைவீக்கம், வாயுவீக்கம், கட்டிகளின் மேலும் பூசிவந்தால் குணம் கிட்டும்.

வல்லாரை இலையை முறைப்படி எண்ணெய் செய்து தினமும் தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். உடல் எரிச்சல் நீங்கும். —

No comments:

Post a Comment