Friday 13 November 2015

அத்வைதம் என்றால் என்ன?

அத்வைதம் என்றால் என்ன?

பிரம்மம் மட்டுமே உண்மை. ஏனையவை அத்தனையும் மாயை. பரம்பொருள் வாக்குக்கும் உணர்வுக்கும் சொற்களுக்கும் போன்ற எல்லாவற்றுக்கும் அப்பாற்படடது; எச்சில் படாதது. பெயரிட்டு அழைக்க முடியாதது.

எச்சில் படாதது என்றால் எச்சில் இருக்கும் வாயினால் பிரம்மத்தை விளக்கினால் அச்சொல் எச்சில் பட்டுவிடும் அவ்வாறு எச்சில்படாத நிலையில் பிரம்மம் இருப்பதால் அது எச்சில்படாதது எனப்பட்டது.

அப்படியானால் பிரம்மம் என்று சொல்லும் போது அது எச்சில்படுகிறதே? என்னும் ஒரு கேள்வி எழும.
பிரம்மத்தை விளக்க தாழ்ந்த நிலைக்கு வந்து விளக்கியே ஆகவேணடும். எனவே அப்பெயர் விளம்பலாயிற்று.

அடுத்து #துவைதம் என்றால் என்ன?

துவைத நிலையில் உயிர் பிரம்மம் ஆகிய இரண்டும் உண்மையே. அல்லது இறைவன் இவ்வுலகம் இரண்டும் உண்மையே. அத்வைத நிலையில் பிரம்மம் மட்டுமே உண்மை என்பதை மறக்கலாகாது.

துவைத நிலையை உண்மை என்று எண்ணும் கருத்து உடையவர்கள் இறைவனை அடைய முடியும். ஆனால் இறைவன் ஆகமுடியாது என்று உறுதியாகக் கூறுவர்.

அடுத்து #விசிஷ்டாத்வைதம் என்றால் என்ன?
இது ஒரு விஷேஷ அத்வைதம். அதாவது அத்வைதம்
என்னும் கொள்கையோடு ஒரு விஷேஷத் தன்மை
கொண்டது.

இறைவனும் உயிரும் அல்லது இறைவனும் இயற்கை உலகும் இணைந்து மாற்றத்தோடு கூடிய அழிவற்ற நிலையில் உள்ளது.

உதாரணமாக மரமும் கிளையும் போல.
சூரியனும் அதன் கதிர் வீச்சும் போல.

மாமரமும் அதன் பல கிளைகளும் வெவ்வேறாக
இருப்பினும் அதன் பல கிளைகள் அதோடு இணைந்து
ஒரே மரமாகக் காட்சியளிக்கிறது.
அதைப்போன்று,
சூரியனும் அதன் கதிர்களும் வெவ்வேறாகக்
காட்சியளிப்பினும் சூரியனும் அதன் கதிர் வீச்சும்
இணைந்து  ஒரு பொருளாகக் காட்சியளிக்கிறது.

அதைப்போல இறைவனும் நமது உயிரும் தனித்தனியாய்
இருப்பினும் அவை இணைந்து ஒரே பொருளாகக் காட்சியளிக்கும். இதுவே விசிஷ்டாத்வைதம் எனப்படும்.

இதுவரையும் மெய்யானது (உண்மையானது) ஒன்று (அத்வைதம்) என்றும், இரண்டு (துவைதம்) என்றும்,  இரண்டு இணைந்த ஒன்று (விசிஷ்டாத்வைதம்) என்றும் பார்த்தோம்.

அடுத்து #சைவசித்தாந்தத்தைப் பற்றிப் பார்ப்போம்.
சைவ சித்தாந்தத்தில் மூன்று பொருள்கள்
உண்மையானவை ஆகும்.
அவை பதி, பசு, பாசம் ஆகிய மூன்றாகும்.
பதி = சிவன்; பசு = உயிர்; பாசம் = தளை

இறைவன், உயிர், பாசம் ஆகிய மூன்று பொருள்களும் உண்மையானவை. அழியாதவை. ஆத்மா அல்லது உயிர் இறைவனை அடைந்தாலும் அவை இரண்டறக் கலக்க முடியாது. அதைப்போல இறைவனையும் உயிரையும்
பிரித்து வைக்கும் தளைகூட அழிக்க முடியாதது.

இவற்றை ஓர் உதாரணம் மூலம் விளக்குகின்றேன்

பகவான் இராமகிருஷ்ணரைத் தோதாபுரி சந்தித்து உருவமற்ற நிலையாகிய நிர்விகல்ப சமாதியை உபதேசித்தார். காளிதேவியின் உத்தரவுடன் அவரது உபதெசத்தைக் கேட்டு தியானத்தில் இறங்கினார். உருவமற்ற நிலையாகிய நிர்விகல்ப நிலையை அடைய முடியவில்லை. தியானிக்கும் போதெல்லாம் உருவத்தோடு காளிதேவி காட்சியளித்தாள். தோதாபுரியிடம் தமது இயலாமையைத் தெரிவித்தார். தோதாபுரி அருகில் கிடந்த ஒரு குச்சியை எடுத்து புருவ நடுப்பகுதியில் ஒரு இடத்தில் தொட்டுக்காட்டித் தியானிக்கக் கோரினார். பிறகு உபதேசிக்கலானார். ""பிரம்மம் ஒன்றே இருப்பது.அறிவிற்கு எட்டாத மயையைக் கிழித்து எறிந்துவிட்டு சிங்கம்போல் வெளியே வா.ஆத்மாவின் ஆழத்தில் மூழ்கு. ஒன்றுமற்ற சூன்யத்தில் மறைந்து "நான்" என்னும் அகங்காரம் அழிந்து, அண்ட வெளியில் மறைந்து, சத் சித் ஆனந்தமான பிரம்மமும் நீயும் ஒன்றே என்பதை அறிவாய்"" என்று உபதேசித்தார். பகவான் இராமகிருஷ்ணர் தோதாபுரியின் உபதேசத்தின்படி தியானித்த போதும் காளி தோன்றிடவே அவ்வுருவத்தை விவேகம் என்னும் வாளால் வெட்டி வீழ்த்தி நிர்விகல்ப சமாதியை அடைந்தர். மூன்று நாள்கள் உணர்வற்ற நிலையிலேயே இருந்தார். இந்த நிலையில் உணர்வற்று இருந்தால் 21 நாள்களில் உயிர் உடம்பைவிட்டு நீங்கிவிடும். இதை உணர்ந்த தோதோபுரி "ஓம் நமோ நாராயணா" என்னும் மந்திரத்தைக் காதுகளில் ஓதி மிகவும் போராடி உலக நிலைக்கு அவரை மீட்டார். உலக நிலைக்கு மீண்ட பகவான் இராமகிருஷ்ணர் தோதாபுரியின் பாதந்களில் வீழ்ந்து வணங்கி ""அடைந்தேன் பிரம்மத்தை"" எனறு கூறி கண்ணீர் விட்டார்.
பிற்காலத்தில் இயேசு, அனுமன், இராமன் போன்ற எல்லாத் தெய்வங்களையும் தியானித்து பிரம்மத்தை அடைந்து மீண்டார். இவ்வாறு பிரம்மத்தை அடைந்து மீண்டவனே அவதாரப் புருஷன் ஆவான்.

1 comment: