Saturday, 14 November 2015

மாதா ஸ்ரீ அன்னபூரணிதேவி

மாதா ஸ்ரீ அன்னபூரணிதேவி

தேவி, சக்தியின் பல ரூபங்கள் கொண்டு நமக்கு அருள் பாலிக்கிறாள். முப்பெரும் தேவியர்களான துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி தேவிகளாக இருந்து தம்மை வணங்கும் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்கள். அதில் துர்கா தேவியான மலைமகள் ஈசனின் துணைவியாவாள். அந்த தேவியே காளிகாதேவியாக அவதரித்துத் துஷ்ட அசுரர்களை வதம் செய்து, பக்தர்களைத் தீய சக்தியிலிருந்து காப்பாற்றுபவள். அதுபோல், எல்லா உயிர்களுக்குமே உணவு அளித்து வறுமைப்பிணியிலிருந்து காப்பது தன் கடமையாக் கருதும் அவளே “அன்ன பூரணி”யாக அவதரித்துக் காசி மாநகரில் வீற்றிருக்கின்றாள். சாட்சாத் பார்வதி தேவியின் இன்னொரு தோற்றமே அன்னபூரணி.
காசி மாநகரம் பழைமையும், புதுமையும் நிறைந்த புனித நகரமாக விளங்குகிறது. கங்கை நதியின் கிளை நதிகளான வருணா, அசி ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ளதால் வாரணாசி என்று சிறப்புப் பெயர் ஏற்பட்டது. இன்று “பனாரஸ்” என்று நாம் அழைக்கிறோம். காஞ்சிபுரத்தில் காமாட்சியாகவும், மதுரையில் மீனாட்சியாகவும், காசியில் விசாலாட்சியாகவும் தேவி வீற்றிருக்கின்றாள். கயிலையிலிருந்து வந்த சிவபெருமான் காசி விசுவநாதரானார். அம்பிகை பார்வதியோ விசாலாட்சியானாள். காசியில் விசாலாட்சியை விட அன்னபூரணித் தாயாருக்குச் சிறப்பு அதிகம். இதை விளக்கும் ஒரு புராணக் கதையே உள்ளது. எல்லா ஜீவராசிகளுக்கும் அமுதமளிக்கும் உரிமையை, அன்னை உமையவளுக்கு அளித்திருந்தார் சிவ பெருமான். ஒரு சமயம் திருக்கயிலையில் ஈசன் ஈஸ்வரியோடு உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஈசன், “தேவி! அனைத்துயிர்களுக்கும் உணவு அளித்துவிட்டாயா?” என்று கேட்டதும் “ஐயனே நல்ல படியாக முடிந்தது” என்று பதிலளித்தாள் ஈஸ்வரி. அப்போது ஈஸ்வரன் தன் இடுப்பிலிருந்த விபூதி சம்படத்தை எடுத்துத் திறந்து பார்த்தார். அதனுள் ஓர் எறும்பு இருந்தது. அதன் வாயில் அரிசியில் சின்னத்துகள் ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த இறைவன், வியப்பில் ஆழந்தவராக “தேவி, நீ உயிர்களுக்கு உணவளிக்கும் முன்பே நான் இந்த எறும்பைப் பிடித்து விபூதி சம்படத்தில் அடைத்து விட்டேன். அதனுள் அரிசித்துகள் எப்படிச் சென்றது?” என்று கேட்டார். “எல்லாம் திருநீரின் மகிமைதான்!” என்று உமையவள் உரைத்தாள்.

மலையத்துவசனின் மகளான பார்வதி தேவியின் தவத்தைக் கண்டு மகிழ்ந்த ஈசன் இரு நாழி நெல் படியளக்கிறார். அகிலாண்ட நாயகி அனைத்துயிர்களுக்கும் அதை வைத்தே அமுது படைத்து வந்தாள். அன்னை அமுது படைத்த விதம் அற்புதமானது. அந்த நெல்லை வைத்து, உலகத்தை வயலாக்கி, கடலை ஏரியாக்கி, ஈசனின் காளையை உழவுமாடாக்கி, பலராமனின் கலப்பையால் நிலத்தை உழுது அறம் வளர்த்தாள். கருணையினால் யாவருடைய பசிப் பிணியைப் போக்கும் ஈஸ்வரியிடம், அகிலாண்ட நாயகனே பிக்ஷாடனக் கோலத்தில் அமுது வேண்டி நின்றார். காசியில் முன்னொரு சமயம் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அதை நீக்க வந்த அன்னை நிரந்தரமாக அன்னபூரணியாகவே தங்கி விட்டாள். இன்று வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கும், பசியால் வாடித் துடிப்பவர்களுக்கும், பசிப்பிணி போக்கும் மருத்துவராக அன்னை அங்கு வீற்றிருக்கிறாள். அன்றிலிருந்து இன்று வரை பஞ்சமே வந்ததில்லை. அன்னபூரணி அருளாட்சி புரியும் காசியில், எல்லா நாட்களிலும் யாவருக்கும் உணவு கிடைத்து வருகிறது. அதனால்தான் “கதியற்றவர்களுக்குக் காசியே துணை” என்று சொல்லப்படுகிறது.
ஸ்ரீ அன்னபூரணிதேவியை வணங்கி ஸ்ரீ ஆதி சங்கரர் ஸ்லோகங்கள் இயற்றியுள்ளார். அதுவே, அன்னபூர்ணா ஸ்தோத்திரம். அதில் ஒரு ஸ்லோகம்:-
“அன்ன பூர்ணே ஸதாபூர்ணே சங்கரப்ராண வல்லபே|
ஞான வைராக்யஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹிச பார்வதி ||”
(உணவு நிறைந்தவளே; எல்லாவற்றிலும் எப்போதும் நிறைந்தவளே; சங்கரரின் {உயிருக்கு} இனியவளே; பார்வதி தேவியே! ஞானமும் வைராக்கியமும் பெற பிக்ஷையிட்டு - உணவு தந்து அருள்வாயாக)
லோகஜகன் மாதாவாகிய பார்வதியே அன்னபூரணியாகக் காசியில் அருள் பாலிக்கின்றாள். இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னபூரணியிடம் சிவபெருமானே, “பிக்ஷாம் தேஹி” என்று திருவோடு ஏந்தி அன்னம் யாசிக்கிறார். இதன் காரணத்தை விளக்கும் கதை: “ஒரு காலத்தில் பிரம்மாவின் அகங்காரம் அதிகமாகியது. தாமே படைக்கும் கடவுள்; தானே எல்லாம்” என சிவபெருமானையும் அவமதித்தார். இதனால் சினம் கொண்ட சிவன் பிரம்மாவிற்கு இருந்த ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளி எறிய முயன்ற போது, அந்தக் கபாலம் கைகளில் ஒட்டிக் கொண்டது. அதனால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் நீங்க, காசியில் அன்னபூரணியாக வடிவமெடுத்து இருக்கும் ஸ்ரீ அம்பாளிடம் பிக்ஷையாக அன்னம் வாங்கினாலே தீரும் என்று அனைவரும் கூற, விமோசனம் தேடிக் கொள்ள காசிக்கு வந்து அன்னபூரணியைத் தரிசித்தார் என்று கூறப்படுகிறது. இனி இத்தகைய சிறப்புமிக்க அன்னபூரணி தேவி காசியில் எழுந்தருளியிருப்பதன் புராண வரலாற்றை நோக்குவோம்.
கயிலையில் ஒரு சமயம் பார்வதிதேவி மகிழ்ச்சியுடன் இருந்த வேளையில் விளையாட்டாக சிவபெருமானின் கண்களைப் பொத்தினாள். இதனால் உலகமே இருளில் மூழ்கியது. எல்லா இயக்கங்களும் பஞ்ச பூதங்களும் செயல் இழந்து நின்றன. அப்போது முனிவர்கள் ஞானத்தால் உணர்ந்து சிவபெருமானை வேண்டினார்கள். இருளை நீக்கி அருள் புரியுமாறு உள்ளம் கசிந்துருகிப் பிரார்த்தனை செய்தார்கள். நிலையை உணர்ந்த தேவி, பயந்து மறு வினாடியே நீங்கியது. “தேவி! உனது விளையாட்டினால் உலக மக்களும் உயிரினங்களும் எப்படிப் பாதிப்படைந்திருக்கிறார்கள் பார்த்தாயா? கயிலாயத்தில் ஒரு நொடி என்பது உலகில் பல ஆண்டு காலம் என்பது உனக்குத் தெரியாதா?” என்றார் ஈசன். அதற்கு தேவி, “சுவாமி, என் செயலுக்கு வருந்துகிறேன். இந்தப்பாவத்திற்குப் பரிகாரமாக நான் தவம் செய்ய விரும்புகிறேன். தாங்கள் அனுமதியளிக்க வேண்டுகிறேன்” எனக் கூறினாள். அதற்கு ஈசன், “தேவி, நீ உலகத்துக்கெல்லாம் தாயாவாய். அதனால் நீ தவம் செய்ய வேண்டிய அவசியமில்லை” என்று கூறியவுடன் “சுவாமி, நான் செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாக, உங்களை விட்டுப் பிரிந்து சில காலம் தவத்தில் ஈடுபடுவதுதான் நியாயம். என் செயல் உலகத்துக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்” என்று கூறி இறைவனிடம் தவம் புரிய அனுமதி பெற்றாள் இறைவி.
அதே சமயம் பூலோகத்தில் பத்ரிகாச்ரமத்தில் காத்யாயன மகரிஷி, தனக்குப் பார்வதி தேவி மகளாகப் பிறக்க வேண்டும் என்று தவம் செய்து வந்தார். இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு, உமாதேவி அவருக்கு மகளாகப் பிறந்தாள். தேவியின் விருப்பமும் அதே சமயம் நிறைவேறியது. அக்குழந்தைக்கு ‘காத்யாயினி’ என்று பெயர் சூட்டினார் மகரிஷி. குழந்தைப் பருவத்திலேயே, காத்யாயினி எல்லா உயிர்களிடத்தும் கருணை நிறைந்தவளாக வளர்ந்து வந்தாள். அப்போது காசி மாநகரில் கடுமையான பஞ்சம் தலை விரித்தாடியது. அச்செய்தி அறிந்த காத்யாயினி, தந்தையிடம் தான் காசி நகருக்குச் சென்று பசித்துன்பத்திலிருந்து உயிர்களைக் காப்பாற்ற விரும்புகிறேன்” என்று கூறி அனுமதி பெற்றுச் சென்றாள்.

காசி மாநகரை அடைந்தாள் காத்யாயினி, அகிலம் தழைக்க வந்த அன்னை பசியால் வாடும் தம் மக்களைக் கண்டாள். தமது தெய்விக சக்தியால் ஒரு மாளிகையை உருவாக்ககினாள். அள்ள அள்ளக் குறையாத ஒரு அக்ஷய பாத்திரத்தையும் படைத்தாள். அக்ஷய பாத்திரத்துடன் அன்னபூரணியாகக் காட்சி தந்தாள். அங்குள்ள மக்கள் யாவரும் அன்னபூரணியின் மாளிகையை அடைந்து, வயிராற உண்டு, வாழ்த்திச் சென்றனர். இந்தச் செய்தி கேட்ட காசி மன்னன், தேவியிடம் தானியம் கடன் கேட்டு சேவகனை அனுப்பினான். தேவியும், தானியம் கடனாகத் தர இயலாது, எத்தனை பேர் வேண்டுமானாலும் இங்கு உணவு உண்ணலாம என்று கூறினாள். மன்னரும், அமைச்சரும் மாறு வேடத்தில் வந்து சாப்பிட்டார்கள். எடுக்க எடுக்கக் குறையாத அன்னத்தைக் கண்ட அரசன் இந்தப் பெண் தெய்வ சக்தி படைத்தவள் என அறிந்து தேவியை அரண்மனைக்கு வரும்படி வேண்டினான். காத்யாயினியாயிருந்த பார்வதி தேவி தன் சுய ரூபத்தை மன்னனுக்குக் காட்டினாள். பின்னர் மன்னனை நோக்கி, நீ மக்களிடம் காட்டும் அன்பு தூய்மையானது, இனி நாட்டில் மழை பெய்யும், வளம் பெருகும், பஞ்சம் நீங்கும் எனக்கூறினாள். ஆனால் நான் இங்கு இருப்பதற்கில்லை. தவம் செய்ய வேண்டும். நீ முக்தி பெறுவாய் என வாழ்த்தினாள். அதற்கு மன்னன், “தாங்கள் தவம் செய்ய இங்கிருந்து சென்றாலும் தங்களின் தெய்விக சாந்நித்தியம் இங்கேயே நிரந்தரமாக என்றென்றும் காசியில் இருப்பதாகத் தாங்கள் அருள் புரிய வேண்டும்” என்று வேண்டினான். தேவியும் “மன்னா! உன் விருப்பப்படியே நான் அன்னபூரணியாக இருந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை அளித்து காசி மாநகரில் அருள் ஆட்சி புரிந்து வருவேன்” என்று கூறி மறைந்தாள். இன்றும் காசி மாநகரில் அன்ன பூரணியாக இருந்து கோடிக்கணக்கானவர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறாள் என்பது உண்மை அல்லவா?
“சங்கரன் ஆருயிர்க் காதலியே
சந்ததம் நிறை அன்னபூ ரணியே
தங்கருள் பார்வதி! ஞானமருள்!
தக்க வைராக்யப் பிட்சையருள்!
தலைமை பெறு காசிநகர் அன்னபூரணியே!
தன் கருணைப் பற்றருளிப் பிட்சையிடுதாயே!”
என்று பக்தர்கள் துதித்துப் பாடும் அன்னபூரணி தேவியின் கோயிலையும், அன்னை வீற்றிருக்கும் அழகையும் காண்போம்.
காசி விஸ்வநாதர் சந்நிதிக்குச் செல்லும் வழியில் துண்டி விநாயகரைத் தரிசிப்பது முக்கியமானது. அதன் பின்பு சற்று தூரத்தில் ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. அழகிய சித்திர வேலைப்பாடுடன் கூடிய நுழை வாயில் வலது புறத்தில் பாதாள லிங்கம். அதன் முன்பு சிறிய கிணறு. மராட்டியர் கால கட்டட அமைப்பு. நடுவில் சந்நிதிக்கு முன்பு அஷ்டகோண வடிவில் அமைந்த மண்டபத்தைப் பன்னிரெண்டு கற்தூண்கள் தாங்கி நிற்கின்றன. கருவறையில் மூன்று வாயில்கள் உள்ளன. தென்கிழக்கு நோக்கிய வாயிலில் கருவறை தரிசனம் செய்யலாம். மற்ற இரண்டு வாயில்களும் முறையை “தர்மத்துவாரம்” என்றும் “பிட்சத்துவாரம்” என்றும் அழைக்கப்படுகின்றன. அந்த இரு வாயில்களும் மூடப்பட்டிருக்கின்றன. அதன் முன்பு பக்தர்கள் அன்னச் செல்வத்தையும், அருட்கடாட்சத்தையும் அன்னையிடம் வேண்டி நிற்கின்றனர். கருவறை முழுவதும் சலவைக்கல் பரப்பப்பட்டு வண்ணப் பூவேலைப்பாட்டுடன் மிக அழகுடன் காட்சி அளிக்கின்றது.
தீபாவளிப் பண்டிகை நாட்களில் மட்டுமே அன்னையின் முழு திருவுருவத்தையும் நின்ற கோலத்தில் நாம் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் சிலாரூப தரிசனம் இல்லை. திருமுக தரிசனம் மட்டுமே. ஸ்வர்ணகவசம் சாத்தப்பட்ட திருமுக தரிசனம்தான் காண முடியும். மற்ற பகுதிகள் புடவையால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். கருவறை முழுவதும் பலவிதமான லட்டு வகைகள், பால் மூலம் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள், உலர் பழவகைகள் முதலியன தட்டுகளில் அழகாக வைக்கப்படுகின்றன. அன்னை ஸ்வர்ணக் கவசத்துடன் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு சிவபெருமானுக்கு பிட்சையிடும் காட்சியை நாம் தரிசிக்கலாம். அன்னையின் பாதக் கமலத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கர மேரு உள்ளது.
கருவறைக்கு அருகில் உள்ள மாடியில் தங்க அன்னபூரணியின் விக்ரஹம் வைக்கப்பட்டுள்ளது. தீபாவளி சமயம் மூன்று நாட்கள் மட்டும் அன்ன பூரணியின் தங்க விக்ரஹமும், பெரிய விக்ரஹமும் வைக்கப்படுகிறது. மற்ற நாட்களில் தரிசிக்க முடியாது. பசிப்பிண் போக்கும் மருத்துவராக அகிலாண்ட நாயகி சுவர்ண பீடத்தில் தங்கக் கொலு வீற்றிருக்கிறாள். சுத்தப் பொன் விக்ரஹமாதலால் ஒளியில் கண்கள் கூசுகின்றன. திருவுரும் முழுவதும் நகைகளால் அலங்கரிக்கப்பட்டு மிக்க அழகுடன் காட்சியளிக்கின்றாள். இடது திருக்கரத்தில் தங்கக் கிண்ணமும், வலது கரத்தில் தங்க அகப்பையும் கொண்டு, நவரத்னக் கிரீடம் அணிந்து, அதன் மேல் தங்கக் குடையும், சொர்ணப் புடவையும் உடுத்தி, மார்பிலும் கழுத்திலும் நவரத்னங்கள் மின்ன, பத்மாசனத்தில் அமர்ந்து அன்னை அருள் பாலிக்கின்றாள். அவளருகே ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களும் தங்க விக்ரஹங்களாக அமர்ந்திருக்கின்றார்கள். அன்ன பூரணி மக்களின் பசியை நீக்குகிறாள் என்பதை ஆமோதிக்கும் வகையில் இரு தாயார்களும் வலக்கரத்தைத் தூக்கி நம்மை ஆசீர்வதித்து, கட்டியம் கூறுவது போல் அமர்ந்திருக்கின்றனர். ஓர் ஆள் உயரத்தில் வெள்ளி விக்ரஹமாக பிக்ஷாடனரும் திருவோடு தாங்கி அன்னபூரணியிடம் அன்னம் பெறுகிறார். நாகாபரணத்தை அணிந்து, இடுப்பில் புலித் தோலுடன் ஒரு கையில் உடுக்கையும் மறுகையில் பிரம்ம கபாலமும் ஏந்திய திருக்காட்சியைக் கண்டவர் மனம் உருகும். ஓர் அற்புதமான காட்சி. தீபாவளி சமயம் மூன்று நாட்களுக்கு இத்திருக்காட்சியை மக்கள் தரிசிக்கலாம்.
அன்னபூரணி கோயில் தீபாவளி அன்று சிறப்பாக அலங்கரிக்கப்படுகிறது. அன்னம்மலைபோல் குவித்து வைக்கப்படுகிறது. பலகாரங்களும் இனிப்பு வகைகளும் சிறிய சிறிய குன்றுகள் போல் குவித்து வைக்கப்படுகின்றன. அரிசி, பருப்பு, தானிய வகைகள், உப்பு, புளி போன்ற சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருள்களும், பாத்திரங்களிலும், தட்டுகளிலும் அடுக்கி வைக்கப்படும். காய்கறி வகைகளும் பல விதமாகத் தயாரிக்கப்பட்டு வைக்கப்படுகின்றன. இதையடுத்து இரு கட்டில்கள், வெல்வெட் திண்டுகள், மெத்தை போன்றவை இறைவன் - இறைவி துயில் கொள்ள அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், இனிப்பு வகைகளை, பலவித தின்பண்டங்கள், உலர் பழவகைகளும் காணப்படுகின்றன. இது ஓர் அற்புதமான காட்சியாக விளங்குகிறது. பக்தர்கள் யாவருக்கும் பசியாறும் வண்ணம் அன்னமும், இனிப்பு வகைகளும் வாரி வழங்கப்படுகின்றன. பக்தர்கள் அன்ன பூரணிக்குக்காணிக்கையாக ரூபாய் நோட்டுக்களை வாரி வழங்குகின்றனர். ஆகவே, ஆதிசங்கரர் அன்னபூரணியை “நித்தியான்ன தானேஸ்வரி” என்று மிக அழகாக வர்ணித்துப் பாடியுள்ளார்.
தீபாவளி சமயத்தில் லட்டுகளினால் செய்த தேரில் அன்னபூரணி அமர்ந்து, பவனி வருவதைக் காணக் கண் கோடி வேண்டும் என்று சொல்லலாம். பவனி முடிந்ததும் அந்த லட்டுகளே பிரசாதமாக மக்களுக்குத் தரப்படுகிறது. தீபாவளி தினங்களில் சிறப்புப் பூசை வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் காலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை அன்ன பூரணியைத் தரிசிக்க முடிகிறது.
அன்ன பூர்ணாஷ்டகம், அன்ன பூர்ணா பஞ்சரத்னம் போன்ற சுலோகங்களைத் தெரிந்தவர்கள் கூறி வழிபட வேண்டும்.
“காசீ புராதீச்வரி பிக்ஷாம்தேஹி க்ருபா
வலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ”
என்று அன்னபூரணியைப் பக்தர்கள் துதித்து, வழிபட்டால் வறுமை இன்றி சுகவாழ்வு அடைவது திண்ணம்.

No comments:

Post a Comment