முருகன் போர் நடத்திய சூரசம்ஹாரம் நடந்தது எப்படி?
சூரபத்மன் ஆணவமாக, அதர்மமாக நடந்து கொண்டதால் அவனை முருகனை அழித்தார். இதை சூரசம்ஹாரம் என்கிறோம். இந்த சம்ஹாரம் எங்கு நடந்தது? எப்படி நடந்தது? எத்தனை நாட்கள் நடந்தது? என்பன போன்றவற்றை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு நாம் புராண கால நிகழ்வுக்கு செல்ல வேண்டும். அசுரர்களில் நம்பர்-ஒன் அசுரனாக இருந்த சூரபத்மன் வீரமகேந்திரபுரி என்ற நாட்டில் வசித்து வந்தான். அந்த நாடு ஒரு குட்டித்தீவாகும். இலங்கைக்கும் தெற்கே அந்த தீவு இருந்தது. லெமூரியா கண்டம் அழிந்தபோது அந்த தீவும் கடலால் சூழப்பட்டது என்கிறார்கள்.
தற்போது அந்த தீவு கடலுக்குள் மூழ்கி உள்ளது. அந்த தீவுக்கு செல்ல திருச்செந்தூர் ஏற்ற இடமாக இருந்தது. எனவே திருமால், பிரம்மன், இந்திரன் முதலான தேவர்கள் போற்ற முருகப் பெருமான் அத்தலத்தில் எழுந்தருளினார். முதலில் சூரனுடன் பேசிப் பார்ப்போம் என்று வீரவாகுவை முருகன் தூது அனுப்பினார்.
இதுதான் 10 நாள் சூரசம்ஹார நிகழ்வின் தொடக்க நாளாகும். தூதை ஏற்காத சூரன், வீரவாகுதேவரை சிறை பிடிக்க முயன்றான். இதையடுத்து வீரவாகு போர் நடத்தினார். 2-வது நாள் சூரனின் மகன் வச்சிரவாகுவை கொன்றார். 3-வது நாள் அசுரர் கூட்டத்தின் தலைவனான சகத்திரவாகுவை கொன்றார். பிறகு முருகனிடம் திரும்பி வந்து நடந்தவற்றை வீரவாகு விளக்கமாக கூறினார்.
இதையடுத்து 4-வது நாள் முருகனே களத்தில் குதித்தார். அவருக்கும் சூரனுக்கும் திருச்செந்தூர் கடலோரத்தில் 6 நாட்கள் கடும் போர் நடந்தது. அந்த 6 நாட்களும் முருகன் வெற்றிக்காக அனைவரும் விரதம் இருந்தனர். அதனால்தான் இப்போதும் 6 நாட்கள் சஷ்டி விரதம் இருக்கிறார்கள்.இந்த 6 நாள் போர் எப்படி நடந்தது என்பதை பாருங்கள்...
பானுகோபன் வதைப் படலம்:
தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து அழித்துப் பின், தருமகோபன் (சூரனின் மந்திரி), சூரனின் மகன் அக்கினிமுகாசுரன் உள்ளிட்ட மூவாயிரவர் பேர் இறந்தபின் சூரனின் மகனான பானுகோபன் போருக்கு வந்தான்.
பானுகோபன் மாயாஜல வித்தைகள் செய்து போர்செய்யும் வல்லமை படைத்தவன். சிறந்த சிவ பக்தன். பானுகோபன் நன்நீர்க் கடலில் முருகன் சேனையை ஆழ்த்த முருகன் அதை முறியடித்தார். அதன்பிறகு பானுகோபன் முருகன் வேலுக்கு பலியானான்.
சிங்கமுகன் வதை:
பானுகோபன் பலியான தகவல் அறிந்தததும், சூரனின் தம்பி சிங்காசுரன் போருக்கு வந்தான். சிங்கமுகன் ஒரு பெரும் ஞானி. மாபெரும் வீரன். இவன் பல மாய வித்தைகள் செய்தும், பல விதமாக முருகவேளுடன் போர் செய்தான். இவனது தலை விழுந்தால் உடனே அதற்குப் பதிலாக புதிய தலை தோன்றும் வரம் பெற்றவன். அதனால் அவனை முருகப் பெருமான் வேல்கொண்டு கொல்லாமல் குஞ்சபடையால் நெஞ்சைப் பிளந்து சம்காரம் செய்தான்.
சூரன் சம்காரம்:
சூரன் அண்டம் விட்டு அண்டம் பாயும் வரம் பெற்றவன். சிறந்த சிவபக்தன். ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டு அதர்ம வழியில் சென்றான். தன் சொந்தபந்தங்களையும், துணை நின்ற படைச் சேனைகளையும் இழந்து செய்வதறியாது நின்ற சூரனின் ஆணவம் அப்போதும் அடங்கவில்லை.
தானே போருக்கு செல்வதாக முடிவு செய்து முருகப் பெருமான் முன் தோன்றி சரமாரியாக அம்புக்கணைகளைத் தொடுத்தான். அவையாவும் முருகவேளின் கடைக்கண் பார்வையால் அழிந்தன. சூரன் தனது மாயஜாலங்களினால் பலவாறாக தோன்றி போர் செய்தான்.
அப்போது முருகன் சூரனை நோக்கி இப்போதும் நீ உயிர்வாழலாம் தேவர்களை சிறையில் இருந்து விடுவித்து விடு என்று அறிவுறுத்தினார். அப்போதும் அவனின் ஆணவம் அடங்கவில்லை. அதனால் போர் செய்யவே துடித்தான். வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிந்தான் சூரன்.
கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் சூரனுக்கு உதவவில்லை. உதவிசெய்ய இருந்த உற்றமும் சுற்றமும் அழிந்து உறவும் அற்றுப் போனதினால் சூரனும் மயங்கித் தத்தளித்தான். தன்னுடன் போர் செய்ய வந்தது இறைவனே என அறிந்தும், அடிபணிய ஆணவம் விடவில்லை.
முருகன் சூரனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு தன் விஸ்வரூபத்தைக் காட்டினார். எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டினார். சிவனும், அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தினார்.
தன் தன்மை மாறாது போர் செயலானான். சூரன் போர் செய்த ஒவ்வொரு தினமும் தனது ஆயுதங்களை ஒவ்வொன்றாக இழந்தான். அவன் தனக்கு சிவனால் வழங்கப் பெற்ற "இந்திரஞாலம்" என்னும் தேரை அழைத்து முருகனின் படைச் சேனையையும் துக்கிச் சென்று பிரபஞ்ச உச்சியில் வைக்கும்படி கட்டளை இட்டான்.
இந்திரஞாலம் என்ற தேரும் அவன் கட்டளையை நிறைவேற்ற முருகனின்படையை தூக்கி பிரபஞ்ச உச்சிக்கு கொண்டு சென்றது. முருகனின் வேலானது சீறிப்பாய்ந்து தேரைத் தடுத்து நிறுத்தி முருகனிடம் கொண்டு வந்து சேர்த்தது. முருகன் அத்தேரை தம் வசப்படுத்தி தன் உடைமையாக்கிக் கொண்டார்.
இது கண்ட சூரபத்மன் செய்வதறியாது திகைத்தான். அதனால் சிவனால் அவனுக்கு வழங்கப்பெற்ற சூலப்படையை முருகனை அழிக்கும்படி ஏவினான்.சூலப்படை முருகனை நோக்கி வந்தபோது முருகனின் வேல் அதனை மழுங்கச் செய்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சூரன், கடைசியாக தனது அம்புப் படையை முருகனை அழிக்க அனுப்பினான். முருகனின் வேல் அதை பொடிப் பொடியாக்கி செயலிழக்கச் செய்தது. முருகனால் இறப்பது நிச்சயம் என உறுதியாக தெரிந்திருந்தும் தேவர்களை விடுதலை செய்வது மானக் குறைவு என எண்ணிய சூரன் ஆணவ மிகுதியால் தொடர்ந்து போராடினான்.
இது கண்ட முருகப் பெருமான் நிராயுதபாணியாக இருக்கும் எதிரியுடன் ஆயுதம் தாங்கி போர்புரிவது யுத்த தர்மத்திற்கு விரோதமானது என எண்ணினான். எனவே, இந்திரனை மயிலாக உருமாறும்படி கூறி அதன் மீது பறந்து சூரனை தாக்கலானார்.
சூரனும் தனது மாயாஜால வித்தைகளினால் மறைந்து தாக்கி மறைந்தான். தனது படையினரையும், படைக் கலங்களையும் இழந்த சூரன் அண்டங்கள் எல்லாம் மறைந்து ஒழிந்து பதுங்கினான். கடைசியாக முருகப் பெருமான் எய்திய வேலானது அவன் சென்ற இடமெல்லாம் துரத்திச் சென்று கடைசியாக நடுக்கடலுக்கடியில் மாமரமாய் மாறுவேடத்தில் நின்ற சூரனை; நீரினுள் சென்று மாமரத்தை இருகூறாக்கி சூரனை சம்காரம் செய்தது.
ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி முருகனிடம் மன்றாடினான்.அவன்மேல் இரக்கம் கொண்ட முருகன் பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் தன் அருளால் சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார்.
மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக்கொண்டார். வெற்றி வீரத் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்பினார். சூரனுடன் முருகப் பெருமான் போர் புரிந்து அவனது ஆணவத்தினை அடக்கி ஆட்கொண்ட நாளே இறுதி நாளாகிய சஷ்டி தினமாகும்.
சூரனை அழித்த பாவம் தீர, திருச்செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, முருகன் சிவ பூஜை செய்தார். இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காணும் கோலமாகும்.
முருகனின் கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க, சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும். சூரசம்ஹாரம் நடைபெறும் தினத்தில் திருச்செந்தூர் ஆலயக் கடல் நீரானது சம்ஹாரம் நடைபெறுவதற்கு வசதியாக செந்தில் ஆண்டவனின் அருள் கருணையால் உள் முகமாகச் சென்று சூரசம்ஹாரம் முடிந்து செந்தில் ஆண்டவர் இருப்பிடம் திரும்பும் போது கடலானது பழைய நிலைக்கு வருவதை காணலாம்.
கருவறையில் உள்ள மூலவரின் முகத்தில் சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்ட வியர்வைத் துளிகளையும் காணலாம். சூரசம்காரங்கள் முடிந்த பின்னர், இந்திரன் தேவயானையை முருகப் பெருமானிடமே ஒப்படைக்க முடிவு செய்தார்.
முருகனும் சரவணப் பொய்கையில் முன்னர் தாம் அருளிய வாக்கின் படியே, தெய்வானை அம்மையைப் திருப்பரங்குன்றில் திருமணம் செய்துகொண்டார். பின்னர், வள்ளியை திருத்தணியில் திருமணம் புரிந்தார்.
திருச்செந்தூரில் சூரனை வதம் செய்ய முருகர் நடத்திய 6 நாள் போரின் போது அவன் வெற்றிக்காக தேவர்கள் 6 நாட்களும் விரதம் இருந்தனர். அதுதான் கந்தசஷ்டி விரதம் என்று பெயர் பெற்றது.
No comments:
Post a Comment