Sunday, 15 November 2015

அன்னை விசாலாட்சி பீடம்

அன்னையின் உடற்கூறுகள் விழுந்த 51 இடங்களில் ஐந்தாவது சக்தி பீடமாக அன்னை விசாலாட்சி பீடம் விளங்குகிறது. இது உத்திரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசியில் உள்ளது.

தேவியின் திருச்செவிகளிலிருந்து காது குண்டலம் இங்கே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இது மணிகர்ணிகை பீடம் எனப்படுகிறது. இங்கே அன்னை, விசாலாட்சியாக கோயில் கொண்டிருக்கிறாள்.

அன்னையின் இந்தத் திருக்கோயிலின் கருவறை தென்னிந்திய கோயில் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. விசாலாட்சி மட்டுமின்றி அன்னபூரணியும் இங்கே வீற்றிருக்கிறாள். வயிற்றுக்கு உணவிடும் அன்ன பூரணியாகவும், மோட்ச சாதனங்களான ஞானம், வைராக்கியம் ஆகியவற்றைப் பிச்சையிடும் ஞான சக்தியாகவும் அன்னபூரணி விளங்குகிறாள்.

பெருமைகள் பல நிறைந்த சக்தி பீடமாகத் திகழும் காசி தலத்தில், துர்கா குண்ட் என்னும் குளத்தை அடுத்து, சற்று தொலைவில் கெüடிபாய் அம்மையார் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் விஸ்வநாதரின் சகோதரியாக கெüடிபாய் விளங்குகிறாள்.

முன்பொரு காலம் விஸ்வநாதரின் அருகில் இருந்த கெüடிபாய், அவரை பக்தர்கள் தொட்டு வணங்குவதைக் கண்டு மன வருத்தம் அடைந்தாள். இறைவனை பக்தர்கள் கைகளால் தொட்டு வணங்குவது தனக்குப் பிடிக்கவில்லை என்று விஸ்வநாதரிடம் கூறினாள். ஆனால் இதைக் கேட்ட விஸ்வநாதர், "எனக்கு பக்திதான் முக்கியம். பக்தி நிறைந்தவர்கள் என்னைச் சார்ந்தவர்கள். என்னைச் சார்ந்தவர்கள் என்னைத் தொடுவதால் எந்தத் தவறும் இல்லை. அது அவர்களுடைய பக்தியினை மேலும் எடுத்துக் காட்டுவதாகவே இருக்கிறது. என் அருகில் இருந்தும் நீ இந்த உண்மையை அறியவில்லை. என் பக்தர்களை நீ அவமதித்து விட்டாய். அதனால் என்னை விட்டு நீ நீங்கு' என்று சாபம் கொடுத்தார்.

அடியார்களுக்கு அவமதிப்பு நேர்வதைப் பொறுத்துக் கொள்ளாத இறைவன் தனக்கு சாபம் அளித்துவிட்டதை எண்ணித் துயரம் கொண்டார் கெüடிபாய். தன் தவறுக்கு வருந்திய அவர், விஸ்வநாதரிடமே அதற்கான விமோசனத்தைக் கேட்டார். அவர் மீது இரக்கம் கொண்ட ஈசன், "என் தரிசனத்துக்காக வரும் பக்தர்கள் யாத்திரை நிறைவேறும் பொருட்டு உன்னையும் தரிசிக்கட்டும். அப்போது அவர்கள் பெற்ற புண்ணியத்தின் பெரும் பகுதியில் ஒரு சோழி அளவை உனக்குக் கொடுப்பார்கள். அந்தப் புண்ணியத்தின் காரணமாக உன் குற்றங்கள் நீங்கப் பெறும்' என்றார்.

விஸ்வநாதரின் வாக்குப்படி, கெüடிபாய் ஆலயம் விஸ்வநாதர் சந்நிதியை விட்டு விலகி சற்று தொலைவில் அமைந்துள்ளது. பக்தர்கள் இறைவன், இறைவியைத் தரிசித்த பிறகு சோழியுடன் சென்று கெüடிபாய் ஆலயத்தைத் தரிசனம் செய்கிறார்கள். தாங்கள் கொண்டு சென்ற சோழியை அங்கே போட்டு வழிபடுகிறார்கள்.

அன்னையின் காதுக் குண்டலம் விழுந்து சக்தி பீடமாக விளங்கும் இத்தலம், பிறவிப் பிணிகளைத் தீர்க்கும் தலமாகவும், பாவங்களைப் போக்கும் புண்ணியத் தலமாகவும் மணிகர்ணிகா பீடமாக விளங்குகிறது.

No comments:

Post a Comment