Sunday, 15 November 2015

பெற்றோர் பாவம் பிள்ளைகளை சேருமா?

பெற்றோர் பாவம் பிள்ளைகளை சேருமா?

நான் ஏற்கனவே கூறிய படி ஒவ்வொரு உயிரின் பிறப்பும் அவரவரது கர்ம வினைப்படியே ஏற்படுகிறது.

நாம் இந்த கேள்விக்கான விடையை அறிந்து தெளிய வேண்டுமானால் இவ்வுலக வாழ்க்கை மற்றும் நடைமுறைகளை விட்டு விலகி பார்க்க வேண்டும். நாம் பரமாத்மா எனப்படும் இறைவனின் அணுத்துகள்களில் பிரிந்த ஆத்மாக்கள் என கீதையில் உபதேசிக்கப்படுகிறது.

அதுபோல் இவ்வாறான ஆத்மாக்கள் தமது கர்மாவால் பூமியில் அவதரிக்கின்றன. அதற்கு அந்த ஆத்மாக்களே காரணகர்த்தாக்கள் ஆகின்றன.

ஒவ்வொரிவரின் பாவ புண்ணியங்களின் அடிப்படையில் அவரின் பிறப்பு தீர்மானிக்கப் படுகின்றனர். அந்த ஆத்மாவின் பிறக்கும் குடும்பம், வளரும் சூழ்நிலை அனைத்தும் முன்பே தீர்மானிக்கப்பட்டதே, அதுவே அவர் ஜாதக அமைப்பு ஆகும். அவரின் ஜாதக அமைப்பின் மூலம் அவர் தாய், தந்தை, குடும்ப நிலை அனைத்தும் எவ்வாறு தீர்மானிக்கப்பட்டதோ, அவ்வாறே  அவரின் பெற்றோரால் கிடைக்கும் நன்மையும், தீமையும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதே,  அதை உணர்த்துவதே ஜோதிடம் ஆகும்.

சிலரின் கூற்று பெற்றோரின் சொத்தை அனுபவிக்கும் பிள்ளைகள், பெற்றோர் செய்த பாவத்தின் பலனையும் அனுபவிப்பார். இது சாதாரண கண்ணோட்டத்தின் பொழுது சரியாக தோன்றலாம், ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால், அந்த பெற்றோருக்கு பிறந்து அந்த சொத்தை அனுபவிக்க வேண்டும், இல்லை அனுபவிக்க முடியாது என்பதை குறிப்பிட்டவரின் ஜாதகம் தெளிவாக எடுத்துக் காட்டும்.

உதாரணமாக, நாம் அனைவரும் அறிந்த ஒரு குடும்பத்தில் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் இருந்தாலும் மூத்தவர் தன் தந்தையை விட்டு விலகியே இருக்க வேண்டியுள்ளது. இளையவர் எப்போதும் தன் தந்தைக்கு ப்ரியமானவராக, அவரின் அடுத்த வாரிசாக களத்தில் நிற்கிறார். இது போன்று பல குடும்பத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோரால் ஏற்படும் நன்மைகள் , தீமைகள் மாறுபடும். அதை அவரது ஜாதகமும் குறிப்பிட்டு காட்டும். பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளுக்கு என்பது சரியாக பொருந்த வில்லை, அந்த பெற்றோர் பாவம் செய்பவராக இருக்க வேண்டும் என்பதை அந்த தனி மனித கர்மாவும் , ஜாதக அமைப்புமே தீர்மானிக்கும். அனைத்தும் விதிப்படிதான் நடக்கும் என்ற கணியன் பூங்குன்றனார் கூற்று சரியாக இருந்தாலும், இறைவன் சிந்திக்கும் அறிவை மனிதனுக்கு கொடுத்துள்ளான்.

அதனால் சிவார்ப்பணம் அல்லது கிருஷ்ணார்ப்பணம் சொல்லி நன்மையையும், கடைமயையும் செய்வதே கர்ம வினைகளில் இருந்து விடுபட்டு இறைவனடி சேர்வதற்கான வழியாகும். எல்லாம் விதிப்படி நடக்கும் என்பதானால் வேதங்களும், கீதைகளும் எதற்கு? அவை கூடுமானவரை நம் வாழ்க்கையை நெறிப்படுத்தவே, வேதங்களை சற்று ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் பல ஆயிரம் விஞ்ஞான கருத்துக்கள் மறைந்து கிடைக்கின்றன.

மேலும் இயற்பியல் விஞ்ஞானி, மாமேதை ஐன்ஸ்டீன் கூற்றுப்படி "அனைத்தும் முன்பே தீர்மானிக்கப்பட்டவை", உளவியல் அறிஞர் எம்.ஆர் காப்மேயர் கூற்றுப்படி "இவ்வுலக நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை" என்பதை உணருங்கள். மேலும் ஒரு உதாரணம், ஒருவரின் ஜாதகப்படி அவருக்கு விபத்து ஏற்படும் என இருக்கும் பட்சத்தில் விபத்து ஏற்படுகிறது, அந்த விபத்தை ஏற்படுத்தியவர் ஜாதகத்தை பார்த்தால் அவர் விபத்தை  ஏற்படுத்தி சிறைவாசம் அல்லது அதற்குரிய தண்டனை , பிரச்சினைகளை சந்திக்க வேண்டும் என்ற நிலை இருக்கும்.  இதுபோல் இவ்வுலக நிகழ்வுகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் ஒன்றோடு ஒன்று தொடர்பு பெற்றிருக்கும்.

ஆதலால் பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேருமா?  என்பதை விட அவரவர் செய்த , பாவ புண்ணியத்தின் அடிப்படையிலே, ஜாதக அமைப்பின் அடிப்படையிலே பெற்றோர்களோ, பிள்ளைகளோ அமைவர் என்பதே சரியாகும். எல்லாம் நன்மைக்கே, எல்லாம் இறைவன் செயல்...

No comments:

Post a Comment