Sunday, 15 November 2015

நினைத்ததை சாதிக்கும் ஐந்தாம் எண்

நினைத்ததை சாதிக்கும் ஐந்தாம் எண்

5- புதன் ஐந்தாம் எண்.

இந்த எண் மிகவும் புத்திசாலிதனத்தை கொடுக்கக்கூடிய எண். அறிவுக்கும், கல்விக்கும் அதிபதியான புதனின் ஆதிக்கம் கொண்டது. பொது அறிவு அதிகம் தரக்கூடியது. மற்றவர்களை பற்றி நன்கு அறிந்து செயல்படுத்தும் திறன் தரக்கூடிய எண் ஐந்து.    சிந்திக்கும் புத்தி இருந்தால்தான் ஒருவரை அறிவாளி என்போம். அந்த அறிவு எல்லா தேதிகளில் பிறந்தவர்களுக்கும் இருந்தாலும்  புதன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சற்று அதிகமாகவே புத்தி கூர்மை உள்ளவர்கள் எனலாம். மற்றவர்களின் மனநிலையை ஒரளவு யூகிக்கும் திறமை உள்ளவர்கள். அதுபோல, ஏதேனும் ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் இவர்களிடத்தில் அதிகம் காணப்படும். அத்தகைய இந்த அதிர்ஷ்டசாலிகளின் பிறந்த தேதிக்கு உண்டான பலனும், பெயர் எண்ணுக்கான பலனையும் அறிவோம்.

முதலில் பிறந்த தேதிக்கான பலன்களை பார்ப்போம்.

05,14,23, தேதிகளில் பிறந்தவர்கள் 5-ம் தேதியில் பிறந்தவர்கள், நல்ல சுறுசுறுப்புடன் இருப்பார்கள். இவருடன் நட்பு வேண்டும் என்று மற்றவர்கள் விரும்பும் அளவுக்கு நல்ல குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தன்னால் முடிந்த அளவில் மற்றவர்களுக்கு உதவி செய்து, புகழ் பெறுவார்கள்.

14-ம் தேதி பிறந்தவர்கள், முரட்டு சுபாவம் உள்ளவர்கள் போல நடந்து கொள்வார்கள். ஒருவரை பிடித்துவிட்டால் அவர்கள் நல்லவர்களா நல்ல குணம் படைத்தவர்களா என்பதை பற்றி கவலைப்படாமல் பழகுவதால் அவர்களால் சில இழப்புகளை சந்திப்பார்கள். இப்படி நம்பி மோசம் போனாலும் அதை பற்றியும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்வரை ஓய மாட்டார்கள்.

23-ம்தேதி பிறந்தவர்கள், உயர்வான வாழ்க்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இவருக்கு உதவி செய்ய, நான் நீ என்று போட்டி போடும் அளவுக்கு அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். நண்பர்கள் அதிகம். ஜன வசியம் கொண்டவர். வாழ்வில் சந்தோஷம் நிறைந்திருக்கும்.

அடுத்ததாக ஐந்தாம் எண் பெயர் எண்களுக்கான பலனை பற்றி அறியலாம்.

5-ம் எண்ணில் பெயர் அமைந்தால், பொன் – பொருள் சேரும். நல்ல எதிர்காலம் அமையும். சிறு வியபாரம் செய்தாலும் பெரிய முன்னேற்றம் கிடைக்கும்.

14-ம் எண்ணில் பெயர் அமைந்தால், எந்த வேலை செய்வதாக இருந்தாலும் பலமுறை சிந்தித்துதான் செய்வார்கள். மனதில் எப்போதும் சஞ்சலம் இருந்துக்கொண்டே இருக்கும். நற்குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனாலேயே மற்றவர்களின் பேச்சை கேட்டு நடந்து சிக்கலில் மாட்டுவார்கள்.  சொந்த புத்தியை பயன்படுத்தினால் வெற்றியாக அமையும்.

23-ம் எண்ணில் பெயர் அமைந்தால், மக்களின் ஆதரவு பெறுவார்கள். நல்ல சிந்தனையும், அந்த சிந்தனையால் வெற்றியும் கிடைக்கும். நினைத்ததை நினைத்த மாதிரி செய்து முடிக்கும் சக்தி படைத்த எண் இது. ஆனால் தொழில் ஆகட்டும், வேலையாகட்டும் பெரிய அளவில் செய்தால்தான் ராஜபோக வாழ்க்கை அமையும். நல்ல சிந்தனை சக்தியை கொடுக்கும்.

32-ம் எண்ணில் பெயர் அமைந்தால், வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு என்பதுபோல, வல்லமையான திறமை கொண்டவர்கள். இந்த எண் புகழ் தரும். சுயமாக சம்பாதித்து பெரிய புகழ் பெறுவர். செல்வாக்கும், ஆற்றலும் படைத்தவர்களாக இருப்பார்கள். சமயோஜித புத்தி இருந்தாலும் சில நேரத்தில் கேட்பார் பேச்சை கேட்டு மனநிம்மதியை இழக்க நேரும். ஆகவே யார் பேச்சையும் கேட்காமல், சுயமாக சிந்தித்து முடிவு செய்தால் இந்த எண்ணில் பெயர் அமைந்தவர்களை வீழ்த்துவது கடினம். கலை ரசனை அதிகம் காணப்படும்.

41-ம் எண்ணில் பெயர் அமைந்தால், எதற்கும் அஞ்சாமல் தன் சக்திக்கு மேல் பெரிய காரியத்தை செய்ய துணிந்தவர். சில நேரத்தில் இது அவர்களுக்கு சாதகமாகவும் அமையலாம் – பாதகமாகவும் அமையலாம். வெற்றி கனவோடு இருப்பார்கள். அதற்கான விடா முயற்சியும் செய்வார்கள். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தை கொடுக்கும்.  எதையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பார்கள். தோல்வி ஏற்பட்டாலும் மனதைரியத்தை இழக்காமல் போராடும் குணம் கொண்டவர்கள்.

50-ம் எண்ணில் பெயர் அமைந்தால், சாதாரண வாழ்க்கை அமைந்தாலும் சலிப்பு அடையாமல் பொறுமையாக போராடி சாதிக்கும் குணம் தரும் எண். முயற்சி, முயற்சி என பாதி காலம் ஓடிவிடும். இருந்தாலும் எடுக்கும் வேலையை முடிக்காமல் ஓய மாட்டார்கள். வெற்றி கிட்டாத கனியல்ல என்பதை உணர்ந்து செயல்பட்டு வெற்றி பெறுவர். நல்ல கல்வி அறிவு, சாதுரியமாக மற்றவர்களை கையாலும் விதம் போன்ற திறமைகள் இருக்கும்.

59-ம் எண்ணில் பெயர் அமைந்தால், நல்ல வருவாய் – நல்ல நட்பு வட்டம் கொண்டவர்கள். மற்றவர்கள் பொறாமைப்படும் அளவில்  யோகசாலியாக இருப்பார்கள். சமுதாயத்தில் செல்வம் – செல்வாக்கோடு திகழ்வார்கள். ஆடம்பர பிரியராக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யும்  உயர்ந்த குணத்தோடு இருப்பார்கள். வாழ்க்கையே அர்த்தமுள்ளதாக அமையும்.

68-ம் எண்ணில் பெயர் அமைந்தால், நல்ல அறிவு ஆற்றல் இருந்தாலும் எதிர் பார்த்தது போல் வெற்றியாக அமையாது. சந்திரன் எப்படி வளர்ந்த பிறகு தேய்கிறதோ அதுபோல, இவர்களுடைய வாழ்க்கையும் நிரந்தரமாக ஒரே நிலையில் இருக்காது. முன்னேற்றம் தருமா என்பது சந்தேகமே. அவ்வளவு சிறப்பான எண் அல்ல.

77-ம் எண்ணில் பெயர் அமைந்தால், சுய முயற்சியால் முன்னேற்றம் அடைவார்கள். சுய கௌரவம் மிக்கவராக இருப்பார்கள். சிறிய வேலை செய்தாலும் அது மிகபெரிய வெற்றியாக அமையும். பக்தி ஈடுபாடு இருக்கும். புகழ் தரும். மன அமைதியும் – மனசாந்தியும் உண்டாகும். நல்ல எண்.

86-ம் எண்ணில் பெயர் அமைந்தால், வீடு – மனை என்று நல்ல அந்தஸ்தோடு வாழ்க்கை அமையும். உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். நல்ல முன்னேற்றம் தரும். ஆரம்பத்தில் சிரமம் இருந்தாலும் பிற்கால வாழ்க்கை யோகமாக அமையும். உதவிகள் தேடி வரும். முன்னேற்றம் தருகிற எண் இது.

95-ம் எண்ணில் பெயர் அமைந்தால், மற்றவர்களிடம் கைகட்டி வேலை செய்ய பிடிக்காது. தன் சக்திக்கு மிஞ்சின வேலை செய்து புகழ் பெறுவார்கள். வியபாரத்திற்கு ஏற்ற எண். தொழில் துறையில் அதிர்ஷ்டசாலி. வாழ்க்கை உயர்வடையும்.

104 – ம் எண்ணில் பெயர் அமைந்தால், நண்பர்கள் அதிகம் இருந்தாலும் யாராலும் பெரிய லாபம் இல்லை. விரோதியையும் நண்பனாக்கும் திறமை இருக்கும். வீண் விரோதம் தரும். வெற்றி, தோல்வி மாறி மாறி ஏற்படும். ஸ்திரமான நிலை தருவது சந்தேகம். மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு ஏணி படியாக இருப்பார்கள்.

அவரவருக்கு ஏற்ற எண் எது என்பதை கண்டறிந்து, பெயர் அமைய வேண்டும். அதுவே அதிர்ஷ்ட எண் ஆகும். பிறந்த தேதியை உடல் எண் என்றும், பிறந்த தேதி – மாதம் – வருடத்தை ஒன்றாக கூட்டினால் வரும் எண் உயிர் எண் என்றும் அழைக்கப்படுகிறது. ஆகவே  உடல் எண், உயிர் எண் போன்றவற்றை பார்த்துதான் எந்த பெயரும் அமைய வேண்டியது அவசியம் ஜாதகம் இருப்பவர்கள் உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சாதகமாகவும் – யோகமாகவும்  இருக்கிறது? எந்த கிரக நிலைகள் கெடுதலும் – நீச்சமும் பெற்று உள்ளது? என்பதை தெரிந்து கொண்டு பெயர் எண் அமைத்து உபயோகப்படுத்தினால் சரியான பலனை பெற முடியும்!.

No comments:

Post a Comment