Friday, 1 November 2019

கன்னி- குரு பெயர்ச்சிப் பலன்கள்


கன்னி- குரு பெயர்ச்சிப் பலன்கள்

கனவிலும், கற்பனையிலும் மாறிமாறி சஞ்சரிக்கும் நீங்கள் நிஜத்தைத் தேடி அலைவீர்கள். பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சமமாகப் பழகும் நீங்கள், பலரையும் வழிநடத்திச் செல்லும் அளவுக்குப் பட்டறிவு கொண்டவர்கள். விட்டுக்கொடுக்கும் மனம்கொண்ட நீங்கள், எல்லோரையும் அன்பால் அரவணைப்பவர்.

உங்களின் ராசிக்கு 3 - ம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களின் புதிய முயற்சிகளை முடக்கி வைத்து எந்த ஒரு வேலையையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் அலைக்கழித்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 4 - ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொள்வீர்கள்.
உங்களின் பலம் எது, பலவீனம் எது என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. கணவன், மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். 'உன் சொந்தம், என் சொந்தம்' என்று மோதிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போங்கள்.. எதிலும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள்.

வீடு, மனை வாங்கும் போது தாய் பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரிபார்த்து வாங்குங்கள். சொத்து விற்பதாக இருந்தால், ஒரே தவணையில் பணத்தை வாங்கப் பாருங்கள். ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்திக் கொண்டேயிருக்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:
குரு உங்களின் ராசிக்கு 8 - ம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பயணங்களால் பயனுண்டு. மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். குரு உங்கள் உத்தியோகஸ்தானத்தைப் பார்ப்பதால் சிலருக்குப் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். குரு 12 - ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை குருபகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் எதிலும் நாட்டமின்மை, ஏமாற்றங்கள், திடீர் செலவுகள் வரலாம். முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

மகான்கள், சித்தர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் தனம் மற்றும் பாக்யாதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், இக்காலக்கட்டத்தில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். தடைப்பட்ட கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நிகழும்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் விரயாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 - ம் பாதத்தில் செல்வதால் அறிவுப்பூர்வமாக சில முடிவுகள் எடுப்பீர்கள்.
அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

மகரத்தில் குரு பகவான்:
28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 5 வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் மனஇறுக்கங்கள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு கை கூடி வரும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்:
7.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1 - ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். பயணங்களால் உற்சாகமடைவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும்.
31.7.2020 முதல் 10.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால், கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப்போவது நல்லது. கணவன், மனைவிக்குள் வீண்வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. உடல்நலனில் கவன்ம் செலுத்துங்கள். புதியவர்களால் பணவரவு உண்டு.

வியாபாரத்தில் ஏற்றஇறக்கங்கள் இருந்துகொண்டேயிருக்கும். அவ்வப்போது மாறி வரும் சந்தை நிலவரத்துக்கேற்ப முதலீடு செய்து லாபம் ஈட்டப்பாருங்கள். விளம்பர யுக்திகளை கையாளுங்கள். ரியல் எஸ்டேட், உணவு, துணி வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை உடனே செயல்படுத்துங்கள்.கூடுதல் நேரம் ஒதுக்கி நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அடிக்கடி இடமாற்றம் வரும். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாக கிடைக்கும்.

விரும்பிய கல்வி நிறுவனத்தில் விரும்பிய கல்விப் பிரிவில் சேர்வீர்கள். அறிவாற்றல் கூடும். சின்னச் சின்ன தவறுகளைத் திருத்திக்கொள்ளுங்கள். நட்பு வட்டம் விரிவடையும். சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள்

பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். சிலருக்கு வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். உயர்கல்வியிலும் முன்னேற்றம் உண்டு.

மாணவ, மாணவிகள் தொடக்கத்திலிருந்தே படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தின் கல்விப் பிரிவில், சேர அதிகம் செலவு செய்யவேண்டி வரும். பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

கலைத்துறையினரின் கற்பனைத்திறன் வளரும். அவர்களின் படைப்புகளுக்கு காப்புரிமை செய்து கொள்வது நல்லது. மூத்த கலைஞர்களின் ஆதரவு முன்னேற்றம் தரும்.
இந்த குரு மாற்றம் அவ்வப்போது ஏமாற்றங்களையும் இடமாற்றங்களையும் தந்தாலும் கடினஉழைப்பால் முன்னேற வைக்கும்.

பரிகாரம்:
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீதிருவிருந்தவல்லி சமேத ஸ்ரீதிருஊரகப்பெருமாளை புதன்கிழமைகளில் சென்று வணங்குங்கள். சுமை தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள். முயற்சிகள் பலிதமாகும்.


No comments:

Post a Comment