Friday, 1 November 2019

விருச்சிகம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்


விருச்சிகம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

விவேகமான சிந்தனையும், வேடிக்கையான பேச்சும், விநோதப் போக்கும்கொண்ட நீங்கள், சமயோஜிதம் மிக்கவர்கள். தன்மானம், சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் தயவு, தாட்சண்யம் அதிகம் பார்ப்பீர்கள். ஆனால், விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளமாட்டீர்கள். இதுவரையில் உங்களின் ராசியில் ஜன்ம குருவாக அமர்ந்து வாழ்க்கை மீது ஒருவித வெறுப்பையும், சலிப்பையும் தந்திருப்பார்.

குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்களின் ராசியை விட்டு விலகி, தன் சொந்த வீடான 2 - ம் வீட்டில் அமர்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பஸ்தானத்தில் குரு பகவான் அமர்வதால் இனி மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேருவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

உறவினர்கள் வலிய வந்து பேசத் தொடங்குவார்கள். உடல்நலம் சீராகும். சோர்ந்திருந்த நீங்கள் இனி உற்சாகமடைவீர்கள். பெரிய மனிதர்கள், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். நீண்ட நாள்களாகப் போக நினைத்த புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:
குரு உங்களின் ராசிக்கு 6 - ம் வீட்டைப் பார்ப்பதால் கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். குரு 8 - ம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாடு செல்வீர்கள். பங்குச் சந்தையில் பணம் வரும். குரு 10 - ம் வீட்டைப் பார்ப்பதால் பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள், திருப்பித் தருவார்கள். தூரத்து சொந்தங்கள் மற்றும் பால்ய சிநேகிதர்கள் உதவுவார்கள். வாழ்வின் முன்னேற்றத்துக்கு காரணமான ஒருவரைச் சந்திப்பீர்கள்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் விரயாதிபதியும் சப்தமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் திடீர் பயணங்கள், செலவினங்கள் உண்டு. பழைமை வாய்ந்த புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 - ம் பாதத்தில் செல்வதால் உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். கௌரவப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். என்றாலும், வேலைச்சுமையும் இருந்துக்கொண்டேயிருக்கும்.

மகரத்தில் குரு பகவான்:
28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 3 - ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் இனந்தெரியாத சின்னச்சின்ன கவலைகள் வந்து போகும். இளையசகோதர வகையில் மனத்தாங்கல் வரலாம். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்:
7.7.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1 - ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும் தடைப்பட்ட காரியங்கள் முடியும். அதிகாரமுள்ள பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பெற்றோருடன் வீண்வாக்குவாதம் செய்யவேண்டாம்.
31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் சமயோஜித புத்தியால் எதையும் சாதிப்பீர்கள். மனைவிக்குப் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். அவரின் ஆதரவுப் பெருகும். மனைவிவழிச் சொத்து கைக்கு வரும். புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும்.

வியாபாரத்தில் கடந்த ஓராண்டு காலமாக ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்வீர்கள். இரட்டிப்பு லாபம் உண்டு. புது வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். சொந்த இடத்துக்குச் சிலர் கடையை மாற்றி அழகுபடுத்துவீர்கள். சிலர் சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவார்கள். சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். ஹார்டுவேர், இரும்பு, வாகனம், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் இனி, உங்கள் உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். இதுநாள் வரை உங்களை ஒதுக்கியவர்களே முக்கியத்துவம் தருவார்கள். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

மணமாகாத பெண்களுக்கு கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றிபெற்று புதிய வேலையில் அமர்வார்கள். மொழி அறிவுத்திறனை வளர்த்துக்கொள்வீர்கள். பெற்றோரின் அரவணைப்பு உண்டு.

மாணவ மாணவிகளுக்கு நினைவாற்றல் கூடும். படிப்பில் இருந்த அலட்சியப்போக்கு மாறும். கூடுதல் மதிப்பெண்கள் பெறுவீர்கள். வகுப்பறையில் சக மாணவர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள்.

கலைத்துறையினருக்குப் போட்டிகள் குறையும். தடைப்பட்டிருந்த உங்களின் படைப்புகள் வெளியாகும். மக்கள் மத்தியில் பிரபலமடைவீர்கள். வருமானம் உயரும்.
இந்த குரு பெயர்ச்சி தொட்டதையெல்லாம் துலங்க வைப்பதுடன் அடிப்படை வசதிகளையும் அதிகப்படுத்தும்.

பரிகாரம்: உங்களின் இல்லத்துக்கு அருகிலுள்ள குன்றில் இருக்கும் முருகப்பெருமானை கிருத்திகை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோருக்கு உதவுங்கள். வளம் பெருகும்.


No comments:

Post a Comment