Friday, 1 November 2019

கும்பம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்


கும்பம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

என் கடன் பணிசெய்து கிடப்பதே என்று காலநேரம் பாராமல் கடினமாக உழைக்கும் நீங்கள், உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி, ஆனால் உண்மையில் மெழுகுவர்த்தியாய் வாழும் குணமுடையவர்கள். அமைதியை விரும்பும் நீங்கள், போட்டியென வந்துவிட்டால் விஸ்வரூபம் எடுத்து மற்றவர்களை மிரள வைப்பீர்கள்.

உங்களின் ராசிக்கு உத்தியோகஸ்தானமான 10 - ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்கான வேலைச்சுமையையும் மன உளைச்சலையும் தந்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 11 - ம் வீட்டில் அமர்வதால் இனி நீங்கள் வெளிச்சத்துத்துக்கு வருவீர்கள். குடும்பத்திலிருந்த பிரச்னைகளுக்கெல்லாம் இனி லாப ஸ்தான குரு பகவான் நல்ல தீர்வுகளைத் தருவார்.

கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றிபெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் திருப்பித் தருவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். பணப்பற்றாக்குறையால் தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக்கடன் உதவி கிடைக்கும்.

திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். தள்ளிப்போனவர்களுக்கு திருமணம் கூடி வரும்.

புதிய பதவி, பொறுப்புகள் தேடி வரும். தாமதமாகிக்கொண்டிருந்த அரசாங்க விஷயங்களெல்லாம் நல்லவிதத்தில் முடிவடையும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். பங்குச் சந்தையில் பணம் வரத் தொடங்கும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். தாய்மாமன், அத்தை வழியில் இருந்துவந்த மனஸ்தாபங்கள் விலகும்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:
உங்களின் ராசிக்கு 3 - ம் வீட்டை குரு பார்ப்பதால் மனோபலம் கூடும். தன்னிச்சையாக, தைரியமாக முடிவுகள் எடுக்கத்தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள்.

குரு 5 - ம் வீட்டைப் பார்ப்பதால் மனத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. மகளுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல வரன் அமையும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.

பூர்வீக சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். குரு ராசிக்கு 7 - ம் வீட்டைப் பார்ப்பதால் சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். பணவரவு உண்டு. புதிய திட்டங்கள் நிறைவேறும். வி.ஐ.பிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். மனைவி வழியில் ஆதாயமடைவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்துப் போட வேண்டாம்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் சுகஸ்தானாதிபதியும் பாக்யாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் திடீர் யோகம், அதிரடி முன்னேற்றம் உண்டாகும். விலை உயர்ந்த நகைகள், செல்போன், லேப் டாப், டேப் வாங்குவீர்கள். தாயார் மற்றும் தாய்வழியில் இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். விலகியிருந்த மூத்த சகோதரர் விரும்பி வந்து பேசுவார்கள். உங்கள் ரசனைக்கேற்ற வீடு, வாகனம் அமையும்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் சப்தமாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 - ம் பாதத்தில் செல்வதால் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன், மனைவிக்கு நெருக்கம் அதிகரிக்கும். மனைவி வழியில் செல்வாக்கு உயரும். புதிய வேலை கிடைக்கும். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும்.

மகரத்தில் குரு பகவான்:
28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின்ள் ராசிக்கு 12 - ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் திடீர் பயணங்கள் உண்டு. உறவினர்கள், நண்பர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தூக்கம் குறையும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
7.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1 ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் வீடு கட்ட வங்கிகளில் பணம் வாங்கியிருந்தவர்கள் சில தவணைகளைச் செலுத்த முடியாத அளவு பணத்தட்டுப்பாடு ஏற்படும் . முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. சகோதரர் வகை திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். சந்தை நிலவரத்தைத் தெரிந்து கொண்டு குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். பங்குச்சந்தை, ஸ்பெக்குலேஷன், இரும்பு, கட்டிட உதிரிப் பாகங்களால் லாபமடைவீர்கள். இயக்கம், சங்கம் நடத்தும் விழாக்களுக்கு முன்னிலை வகிப்பீர்கள்.

உத்தியோகத்தில் சுமுகமான சூழ்நிலை உருவாகும். அலுவலக சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களை உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். புதிய மூத்த அதிகாரி உங்களைக் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார். சக ஊழியர்களிடையே உங்களின் சிந்தனைக்குப் பாராட்டுகள் கிடைக்கும். தள்ளிப்போன பதவியுயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து அதிக சம்பளத்துடன் கூடிய அழைப்பு வரும்.

மாணவ, மாணவிகள் ஏனோதானோ என்று படிக்காமல் இனி ஆர்வத்துடன் படிப்பீர்கள். நினைவாற்றல் கூடும். போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவீர்கள். மதிப்பெண்கள் உயரும். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். சக மாணவர்களின் அன்பைப் பெறுவீர்கள்.
பெண்
இளம் பெண்களுக்கு கல்யாணம் கூடி வரும். தடைப்பட்ட உயர் கல்வியைத் தொடர்வீர்கள். புதிய இடத்தில் உத்தியோகம் அமையும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.பெற்றோர் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள்.

கலைத்துறையினர் இனி துளிர்த்தெழுந்து வீறுநடை போடுவார்கள். பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களைத் தேடி வரும். பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.
இந்த குருமாற்றம் பதுங்கியிருந்த உங்களைப் பிரபலமாக்குவதுடன், பண வசதியும் சொத்துச் சேர்க்கையையும் அமையும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்படப்பையில் வீற்றிருக்கும் ஸ்ரீசாந்த நாயகி உடனுறை ஸ்ரீவீரட்டேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். மனவளம் குன்றியவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.


No comments:

Post a Comment