தனுசு - குரு பெயர்ச்சிப் பலன்கள்
எல்லோரும் பயந்து பின்வாங்கும் செயல்களைத்
தானாக முன்வந்து தைரியமாகச் செய்யும் ஆற்றலுடைய நீங்கள், தன்னை நாடி
வருபவர்களுக்கு மறுக்காமல் உதவுபவர். எப்போதும் நியாயத்துக்காகப் போராடும் நீங்கள், மனசாட்சியை முக்கிய
சாட்சியாக நினைப்பீர்கள்.
உங்களின் ராசிக்கு 12 - ம் வீட்டில் அமர்ந்து
உங்களுக்கு வீண் அலைச்சல், விரயச் செலவுகளைத் தந்துகொண்டிருந்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்கள்
ராசிக்குள் நுழைந்து ஜன்ம குருவாக ஆட்சி பெற்று அமர்வதால் பொறுப்புகளும், வேலைச்சுமையும்
அதிகரிக்கும். அதிகாரமுள்ள பதவியில் இருப்பவர்கள் ஆதரிப்பார்கள்.
ஜன்ம குருவாக இருப்பதால் அவ்வப்போது
முன்கோபம் வரும். ரத்த அழுத்தம் அதிகமாக வாய்ப்பிருப்பதால், உணவில் உப்பைக்
குறையுங்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
உங்களின் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள்
தலையிட அனுமதிக்காதீர்கள். கணவன், மனைவிக்குள் வீண்வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின்
எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டேப் போகும்.
யாருக்கும் பணம், நகை வாங்கித்
தருவதில் முன்னால் நிற்க வேண்டாம். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில்
ஈடுபடவேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம்.
குருபகவானின் பார்வைப் பலன்கள்:
குரு உங்கள் ராசிக்கு 5 - ம் வீட்டைப்
பார்ப்பதால் குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பூர்வீக சொத்துப்
பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தீரும். சிலர் தங்களின் பங்கை விற்று நகரந்துக்கு
வெளியே இடம் வாங்குவீர்கள்.
தியானம், பொதுச்சேவையில் மனம் ஈடுபாடு கொள்ளும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
குரு 7 - ம் வீட்டைப் பார்ப்பதால் தள்ளிப்போன திருமணம் கை கூடி வரும்.
போட்டிகளில் வெற்றிபெறுவீர்கள். கணவன், மனைவிக்குள் சச்சரவு இருந்தாலும் பாசம் குறையாது.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில்
செல்வதால், வேலைச்சுமை அதிகரிக்கும். உங்களின் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.
எதிர்பார்த்தவை தாமதமானாலும், எதிர்பாராத சில வேலைகள் விரைந்து முடியும்.
சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை
உணர்வீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். யோகா, தியானத்தில் மனம்
லயிக்கும்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் சஷ்டமாதிபதியும் லாபாதிபதியுமான சுக்கிரனின் பூராடம்
நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் உங்களின் செயலில் வேகம் கூடும். எதிரிகளை
வீழ்த்துவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வீடு, வாகன வசதி பெருகும்.
பணப்புழக்கம் அதிமாகும்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்களின் பாக்கியாதிபதியான சூரியனின் நட்சத்திரமான
உத்திராடம் 1 - ம் பாதத்தில் செல்வதால் உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன்
அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. தந்தையின் ஆரோக்கியம் சீராகும்.
மகரத்தில் குரு பகவான்:
28.3.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 2
- ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் திடீர் யோகம், பணவரவு, மகிழ்ச்சியெல்லாம் உண்டாகும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும்.
கட்டட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடனுதவியும் கிட்டும்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
7.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1 - ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் எதிர்பார்ப்புகள்
தடையின்றி நிறைவேறும். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். ஊர் பொது காரியங்களை
முன்னின்று நடத்துவீர்கள்.
31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் கணவன், மனைவிக்குள் வீண்
வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் மறைமுக எதிர்ப்புகள்
அதிகமாகும். புது பதவிகளை யோசித்து ஏற்பது நல்லது.
வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை
விடாதீர்கள். புதிதாக வரும் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல்
திணறுவீர்கள். புதிய முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். கடையை
அவசரப்பட்டு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டாம். இருக்கின்ற இடத்திலேயே தொடர்வது
நல்லது. தெரியாத தொழிலிலும் இறங்க வேண்டாம். கூட்டுத்தொழில் வேண்டாம்.
உத்தியோகத்தில் நாளுக்கு நாள் வேலைச்சுமை
கூடிக்கொண்டே போகும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்லவேண்டாம். உங்களின் திறமையை
பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். குறைகளை நேரடி அதிகாரி சுட்டிக்
காட்டினால் திருத்திக்கொள்ளுங்கள். முறைப்படி தேர்வெழுதி வெற்றிபெற்றும் பதவி
உயர்வு, சலுகைகள், சம்பள உயர்வைப் பெற போராட வேண்டி இருக்கும்.
மாணவ,
மாணவிகள் டி.வி., சினிமாவையெல்லாம் விட்டுவிட்டுப் படிப்பில் முழுகவனம் செலுத்துங்கள்.
மறதியால் மதிப்பெண் குறையும் வாய்ப்புள்ளதால் ஒருமுறைக்கு இருமுறை எழுதிப்
பழகுங்கள். அறிவியல், கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்ப்பது நல்லது.
பெண்கள் யதார்த்தமாகவும், விளையாட்டாகவும்
எதையோ சொல்லப் போய் அதைச் சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. பெற்றோரின்
ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை
உணர்வீர்கள்.
கலைத்துறையினர் விமர்சனங்களை ஏற்று
திருத்திக்கொள்ளுங்கள். உங்களின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.
இந்த குரு மாற்றம் ஆரோக்கிய குறைவையும்
வேலைச்சுமையையும் தந்தாலும் அனுபவ அறிவையும்,
தன்னை தானே உணரும் சக்தியையும் தரும்.
பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகிலுள்ள திருப்புல்லிவனம் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர்
சிவனாலயத்தில் உள்ள குரு பகவானை வியாழக்கிழமையில் சென்று வணங்குங்கள். ஏழை
கர்ப்பிணிப் பெண்ணின் பிரசவச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். வளங்கள் பெருகும்.
No comments:
Post a Comment