Friday, 1 November 2019

ரிஷபம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்


ரிஷபம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

பெருந்தன்மையும், சகிப்புத்தன்மையும் கொண்ட நீங்கள், இதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். 'தன் கையே தனக்குதவி' என்று வாழும் நீங்கள், கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி வாழ்வின் சிகரத்தை எட்டிப் பிடிப்பீர்கள். உங்களின் அஷ்ட, லாபாதிபதியான குரு பகவான் இதுவரை உங்களின் ராசிக்கு 7 - ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு உங்களைச் சாதிக்க வைத்ததுடன், வசதி, வாய்ப்புகளையும் தந்தார்.

இனி குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 8 - ம் வீட்டில் மறைந்தாலும், ஆட்சிபெற்று அமர்வதால் அலைச்சலுடன் ஆதாயத்தையும் சேர்த்துத் தருவார். பயணங்களும், தவிர்க்க முடியாத செலவுகளும் இருந்துகொண்டேயிருந்தாலும் வருமானம் குறையாது. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியத்தையும், மனப்பக்குவத்தையும் தருவார். உங்களிடம் இருக்கும் சில பலவீனங்களையும், பிடிவாதப் போக்கையும் கொஞ்சம் மாற்றிக் கொள்வது நல்லது.

ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட கோணத்தில் தீர்வு காண்பீர்கள். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். வேலைச்சுமையால் தூக்கம் குறையும்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:

குரு பகவான் 2 - ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு கட்ட சி.எம்.டி.ஏ., ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசு வகையில் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்து கைக்கு வரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். குரு உங்களின் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்கியம் சீராகும்.

தாய்வழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களின் படைப்புகள் தொலைக்காட்சி, வானொலி, செய்தித் தாள்களில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்.

குரு 12 - ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொன்று வாங்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகள் இருந்துகொண்டேயிருக்கும். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். சிலர் உங்களுடைய உழைப்பைப் பயன்படுத்தி முன்னேறுவார்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் ராசிநாதனும் சஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் ஓரளவு பணம் வரும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். திருமணம் கூடி வரும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்களின் சுகாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 - ம் பாதத்தில் செல்வதால் எதிர்ப்புகள் குறையும். தாய்வழி உறவினர்களான அத்தை, அம்மான் வகையில் வீண்வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம்.

மகரத்தில் குருபகவான்:
28.3.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 9 - ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் மனஇறுக்கங்கள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும்.
அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு கூடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:
7.7.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1 - ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.
31.7.2020 முதல் 10.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் நீண்ட நாளாகத் தடைப்பட்டு, தள்ளிப்போன காரியங்களெல்லாம் முடிவடையும். விலை உயர்ந்த டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன் வாங்குவீர்கள். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் நீங்கும். அதிக வட்டிக்கடனை பைசல் செய்ய குறைந்த வட்டிக்குக் கடன் கிடைக்கும்.  நல்லவர்களின் நட்பு கிடைக்கும். 

வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்துவிடாத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். தரமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலியுங்கள். கடையை இருக்கின்ற இடத்திலேயே தொடர்வது நல்லது. இரும்பு, கடல் உணவுகள், ஓட்டல் மற்றும் ரசாயன வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். உயரதிகாரிகள் உங்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். அயல்நாட்டு வாய்ப்புகள் சிலருக்கு வரும்.

பெண்கள் சிறிய சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேறுவார்கள். திருமண விஷயத்தைப் பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுவது நல்லது. பள்ளி, கல்லூரி கால தோழியைச் சந்திப்பீர்கள்.

மாணவ, மாணவிகள் கடைசிநேரத்தில் படிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள். உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள். சக மாணவர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.

கலைத்துறையினர் போராடி சின்னச்சின்ன வாய்ப்புகளைப் பெற வேண்டி வரும். மூத்த கலைஞர்களை அரவணைத்துப் போங்கள்.
இந்த குரு பெயர்ச்சி சற்றுப் போராடி புதிய முயற்சிகளை முடிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீதிருப்புலீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். தந்தையால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவுங்கள். மேன்மேலும் வெற்றி பெறுவீர்கள்.


No comments:

Post a Comment