Friday, 1 November 2019

மிதுனம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்


மிதுனம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

எதிலும் புதுமையைப் புகுத்துபவர்களில் வல்லவர்களான நீங்கள், பொது உடைமைச் சிந்தனை அதிகம் உள்ளவர். நிறைகுறைகளை அலசி ஆராய்ந்து மற்றவர்களைத் துல்லியமாக கணிக்கும் நீங்கள் சிரமப்படுபவர்களை கைதூக்கியும் விடுவீர்கள்.
இதுவரை ஆறாம் வீட்டில் அமர்ந்து பல கஷ்ட, நஷ்டங்களைத் தந்து, உங்களைத் திணறடித்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 7 - ம் வீட்டில் அமர்ந்து உங்களின் ராசியை நேருக்கு நேராகப் பார்க்க இருப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள்.

வீண் சண்டை, விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்குக் கூடி வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சிலர் வங்கிக் கடன் உதவி கிடைத்து புது வீடு கட்டி குடிபுகுவார்கள். அரசாங்க விஷயங்கள் நல்லவிதத்தில் முடிவடையும். மனைவி உங்களுடைய புது முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்.

அவரின் ஆரோக்கியம் சீராகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மோதல்களும் விலகும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அவருக்கும் எதிர்பார்த்த குடும்பத்திலிருந்த நல்ல பெண் அமைவார். இளைய சகோதரர் வகையில் மகிழ்ச்சி தங்கும். புது பதவிக்கு உங்களுடைய பெயர் பரீசலிக்கப்படும்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:
குருபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஷேர் மார்க்கெட் மூலமாக பணம் வரும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால், இக்காலக்கட்டத்தில் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் விரயாதிபதியும் பூர்வ புண்ணியாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், பேச்சில் கனிவு பிறக்கும். குழந்தைபாக்கியம் கிடைக்கும்.
மகளுக்கு நல்ல வரன் அமையும். திடீர் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். வேற்றுமதத்தைச் சார்ந்தவர்கள் உதவுவார்கள். பெற்றோருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். சிலர் வீடு மாறுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 - ம் பாதமான தனுசு ராசியில் செல்வதால் நெருக்கடிகளைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும். தைரியம் கூடும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும்.

மகரத்தில் குரு பகவான்:
28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 8 - ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்:
7.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1 - ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் அரசு வகை காரியங்கள் இழுபறியாகும்.
31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் வெளியூர் பயணங்களில் கவனமுடன் சென்று வருவது நல்லது. ஓரளவு பணவரவு உண்டு. முன்னேற்றம் தடைப்படாது.

வியாபாரத்தில் புதிய முதலீடுகளை இப்போது துணிந்து செய்யலாம். இனி சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்களும் உதவுவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி, பதிப்பகம், கட்டட உதிரிப் பாகங்கள், அரிசி மண்டி வகைகளால் நல்ல லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் புதிய உற்சாகம் பிறக்கும். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். அதிகாரிகளுடன் அரவணைத்துப் போகும் மனப்பக்குவம் உண்டாகும். அவர்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமின்றி கிடைக்கும். சிலர் உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவார்கள்.

பெண்கள் கூடுதலாக ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்வார்கள். புதிய இடத்தில் வேலை கிடைக்கும். உயர்கல்வி, மேற்படிப்பு தொடர விரும்புபவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர கடிதம் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும்.

மாணவ மாணவிகளுக்கு அவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். வகுப்பறையில் அமைதி காப்பதுடன், படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விளையாட்டில் பரிசு பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்துக் காத்திருந்த வாய்ப்பு இப்போது கூடி வரும். வருமானம் உயரும். பிரபல கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள்.
இந்த குரு மாற்றம் வாடியிருந்த உங்களை வளமைப்படுத்துவதுடன், வருங்காலத் திட்டங்களையும் நிறைவேற்றுவதாக அமையும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், திருமலைவையாவூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅலர்மேலுமங்கை சமேத ஸ்ரீபிரசன்னவெங்கடேசரை ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். பழைய கல்வி நிறுவனத்தைப் புதுப்பிக்க உதவுங்கள். நல்ல பலன்கள் கூடுதலாகக் கிடைக்கும்.


No comments:

Post a Comment